Published:Updated:

இலைப்பேன்களை இப்படியும் கட்டுப்படுத்தலாம்!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-12

இலைப்பேன்களை இப்படியும் கட்டுப்படுத்தலாம்!

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-12

Published:Updated:
வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

கென்யா நாடு, செம்பேன்களின் தாக்குதலைச் சமாளித்த விதம் குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, கென்யா இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

இலைப்பேன்கள் பூமொட்டுக்களிலும், பூக்களிலும் அவற்றின் புல்லி இதழ்களுக்கு அடியிலோ, அல்லி இதழ்களுக்கு இடையிலோ மறைந்துகொண்டு, அவற்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எனவே, இரைவிழுங்கிகள் அவற்றை மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே கண்டுபிடித்து உண்ண முடியும். மேலும், இலைப்பேன்களின் முட்டைகள் இலைகள் அல்லது காய்களின் உட்புறத்தில் சொருகி வைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் செடிகளில் உண்டு, சேதத்தை விளைவிக்கும். பிறகு, அவை நிலத்தில் குதித்து, மண்ணுக்குள் மறைந்து கூட்டுப்புழுவாகச் சில நாள்களைக் கழிக்கும்.

அதற்குப் பிறகுதான் வளர்ந்த இலைப் பேன்களாக, மீண்டும் செடிகளுக்கு வந்து தாக்குதலை ஆரம்பிக்கும். எனவே, இரை விழுங்கிகளின் வேட்டைக்கு ஆட்படுபவை, இலைப்பேன்களின் குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும்தான். பச்சை பூஞ்சைகளையோ, ‘பவேரியா பேசியானா’ என்ற வெள்ளைப் பூஞ்சைகளையோ தெளித்தால் அவையும் அரிதாகவே இலைப்பேன்களின் மீது நேரடியாகப்பட்டு, அவற்றுக்கு நோயை உருவாக்கிக் கொல்லும். ஆகவே, பெரும்பாலும் இலைப்பேன்களின் முட்டைகளும், கூட்டுப் புழுக்களும் பாதுகாப்பாகவே தங்களது நிலையைக் கடந்துவிடும். எனவே, இதுவும் அவற்றின் கட்டுப்பாட்டில் பெரும் சவாலைக் கொடுத்தது.

கென்யா
கென்யா


இந்த இடத்தில்தான் விஞ்ஞானிகளின் மூளை சற்றே வித்தியாசமாக யோசித்தது. புல்லி இதழ்களுக்கு அடியிலும், அல்லி இதழ்களுக்கு மத்தியிலும் மறைந்திருக்கும் இலைப்பேன்களை வெளியில் இழுத்து வரும் ஏதாவது ஒரு தந்திரத்தைச் செய்தால், அவற்றைக் கொல்லுகின்ற வேலை எளிதாகி விடும் அல்லவா? அதற்கு என்ன செய்யலாம் என்ற முனைப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொதுவாகவே, இலைப்பேன்கள் நீல நிறத்தால் அதிகம் கவரப்படும். ஆகவே, நீலநிற ஒட்டுப்பொறிகளை (Blue Sticky Traps) இலைப்பேன்களைக் கவர் வதற்காகப் பயன்படுத்துவர். அத்துடன், இலைப்பேன்களைக் கவர்ந்திழுக்கும் வேதிப்பொருள்கள் ஏதேனும் இருக்குமா என்றும் விஞ்ஞான உலகம் தேடியது. இலைப்பேன்கள் பூக்களுக்குள் விரும்பி மறைந்துகொள்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அங்குதான் ஒரு சூட்சுமம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். அதாவது, பூக்களில் இருக்கும் ஒருசில வேதிப்பொருள்கள் இலைப்பேன் களைத் தங்களை நோக்கிக் கவர்ந்திழுப்பதைக் கண்டுகொண்டனர்.

வெள்ளை பூஞ்சையால் கொல்லப்பட்ட இலைப்பேன்கள்
வெள்ளை பூஞ்சையால் கொல்லப்பட்ட இலைப்பேன்கள்


கிளர்ச்சியூட்டிகள்

உடனடியாகச் செயலில் இறங்கிய விஞ்ஞானிகள் அந்த வேதிப்பொருள்களை நீலநிற ஒட்டுப்பொறிகளுடன் சேர்த்து இலைப்பேன்களை அதிகம் கவர்ந்திழுக்க இயலும் என்பதைக் கண்டறிந்து, அதைச் செயல்பாட்டுக்கும் கொண்டுவந்தனர். இந்தச் சூழலில்தான், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் வேகம் எடுக்க ஆரம்பித்திருந்தன.

என்னதான் இரை விழுங்கிகளும், வெள்ளை மற்றும் பச்சை பூஞ்சைகளும் இலைப்பேன்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவற்றை மறைவிடத் திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டுமே? அப்போது அவர்களுக்குக் கைகொடுத் தவைதான் கிளர்ச்சியூட்டிகள் (Exciters).

செடிகளின் பூக்களிலும் இலைகளிலும் இயற்கையாகவே இருக்கும் இந்த வேதிப் பொருள்களைக் கண்டறிந்து, அவற்றை இயற்கைப் பூச்சிக்கொல்லிகளுடன் சேர்த்துத் தெளிக்க ஆரம்பித்தனர். கிளர்ச்சியூட்டிகளால் சுண்டியிழுக்கப்படும் இலைப்பேன்கள் இரைவிழுங்கிகளிடமோ, வெள்ளை மற்றும் பச்சை பூஞ்சைகளால் ஆன இயற்கைப் பூச்சிக்கொல்லிகளிடமோ எளிதாக மாட்டிக் கொள்ளும். முடிவு, மரணம்தான்! இந்தத் தொழில்நுட்பம் மிக நல்ல முறையில் கொய்மலர் விவசாயிகளுக்கும், பீன்ஸ் விவசாயிகளுக்கும் கைகொடுக்க ஆரம்பித்தது. அத்தோடு, ஒருசில இடங்களில், கவர்ச்சிப் பொறிகளில் வெள்ளை மற்றும் பச்சை பூஞ்சணக்கொல்லிகளின் வித்துக்களை வைத்து, உள்ளே வரும் இலைப்பேன்களின் உடலில் அவ்வித்துக்களைப் பரவச் செய்து, மீண்டும் அவற்றைத் தப்பவிடும் முயற்சி யையும் செய்து பார்த்தனர். அப்படித் தப்பவிட்டால், அவை சந்திக்கும் அத்தனை இலைப்பேன்களுக்கும் பூஞ்சணக் கொல்லியைப் பரப்பி, நோயை உருவாக்கி அழிக்கும். இப்படி, கென்யாவின் கொய்மலர் மற்றும் பீன்ஸ் வணிகம் தொய்வின்றி நடைபோட ஆரம்பித்தது.

நீலநிற ஒட்டுப்பொறிகள். மிகச்சிறியதாக கருமை நிறத்தில் தெரியும் நூற்றுக்கணக்கான பூச்சிகளும் இலைப்பேன்களே!
நீலநிற ஒட்டுப்பொறிகள். மிகச்சிறியதாக கருமை நிறத்தில் தெரியும் நூற்றுக்கணக்கான பூச்சிகளும் இலைப்பேன்களே!

வைரஸ் நோய்களைப் பரப்பும் இலைப்பேன்கள்

இதன் மூலம் கென்யாவிலிருந்து ஏற்றுமதியாகும் மலர்களும், காய்கறிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நுகர்வோருக்கு நஞ்சற்றதாகக் கிடைக்கிறது.கென்யாவில், இந்தக் கிளர்ச்சியூட்டிகளுடன்கூடிய இயற்கைப் பூச்சிக்கொல்லிகள் தரமான முறையில் தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப் பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. கென்யாவில் உருவான இந்தத் தொழில்நுட்பம் அனைத்து நாட்டுக்கும் ஏற்றதே!

நம்மூரிலும், இலைப்பேன்கள் தக்காளி, மிளகாய், வெங்காயம் மற்றும் பயறுவகைகள் எனப் பல வகைப்பட்ட பயிர்களிலும் பெருத்த சேதத்தை உருவாக்குகின்றன. நேரடியான சேதத்தை மட்டுமன்றி, ஒருசில வைரஸ் நோய்களையும் இந்த இலைப்பேன்கள் பரப்புகின்றன. எனவே அவற்றையும் இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டு கட்டுப்படுத்த இயலும். அதே போல, செம்பேன்களும் நம்மூரில் வெவ்வேறு காய்கறிப் பயிர்களைத் தாக்கும். குறிப்பாக, வெப்பநிலை அதிகரிக்கும்போதும், காற்றில் ஈரப்பதம் குறைந்து உலர்நிலையை எட்டும் போதும் இவற்றின் தாக்குதல் அதிகரிக்கும். இவற்றையும்கூட, கென்யாவின் வெற்றிக் கதையைப் பின்பற்றி நம்மூரிலும் கட்டுப்படுத்த முடியும்.

சீனிவாசன் ராமசாமி
சீனிவாசன் ராமசாமி

இரண்டு பருவங்களில் எதிர்ப்புத்திறனை உருவாக்கும்

வைரமுதுகு பூச்சி முட்டைக்கோஸ் குடும்பத்தில் இருக்கும் அத்தனை வகையான காய்கறிகளையும், முற்றிலும் அழித்து விவசாயிகளுக்குப் பெரும் நாசத்தை உருவாக்கக்கூடியது. உலகெங்கும் பரவியிருக்கும் இப்பூச்சியால் உருவாகும் இழப்பு 28,000 முதல் 35,000 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால், அதுதான் உண்மை. விஞ்ஞான உலகம் எத்தனையோ விதவிதமான பூச்சிக்கொல்லிகளை உருவாக்கினாலும், ஒன்று அல்லது இரண்டு பருவங்களிலேயே எதிர்ப்புத்திறனை உருவாக்கிக்கொள்ளும். உயிரியல் பூச்சிக்கொல்லிகளுக்குக்கூட எதிர்ப்புத்திறன் கொண்ட பூச்சி இது. பிறகு, மிகச்சாதாரண நுட்பத்தின் மூலம் இந்தப் பூச்சியை வீழ்த்தியது விஞ்ஞான உலகம். அந்த வெற்றிக் கதைகளை ஹவாய், ஆஸ்திரேலியா மற்றும் தைவான் உதாரணங் களுடன் அடுத்தடுத்த இதழ்களில் சொல்கிறேன்.

- வளரும்