Published:Updated:

முள் இல்லா மூங்கில்..! - கைவிட்ட அரசு துறைகள்... கைகொடுக்கும் உள்ளூர் சந்தை!

மூங்கில் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
மூங்கில் சாகுபடி

சுவடுகள்

முள் இல்லா மூங்கில்..! - கைவிட்ட அரசு துறைகள்... கைகொடுக்கும் உள்ளூர் சந்தை!

சுவடுகள்

Published:Updated:
மூங்கில் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
மூங்கில் சாகுபடி

டந்த 14 ஆண்டுகளாக, பசுமை விகடனுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத் துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிப் பேசுகிறது இந்தப் பகுதி.

25.4.2007 தேதியிட்ட இதழில், ‘பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டி ருந்தோம்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்திய முள் இல்லா மூங்கிலை, கோட்டூர் காந்தாவனத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் நான்கு ஏக்கரில் சாகுபடி செய்திருந்தார்.

அரசுப் பள்ளியில் வேளாண் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், விவசாயத்திலும் நீண்ட அனுபவம் உள்ளவர். குறிப்பாக, மரம் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவர். முள் இல்லா மூங்கில் குறித்த இவரது அனுபவக் கட்டுரை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான விவசாயிகள் அதைச் சாகுபடி செய்யத் தொடங்கினார்கள். மூங்கில் வளர்ப்பை ஊக்குவித்த வனத்துறை, தொடர் கண்காணிப்பு, ஆலோசனைகள் சொல்லாமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. தற்போது மூங்கில் வளர்ப்புத் தோட்டக்கலைத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதுமான ஆலோசனைகள் இல்லை. இந்நிலையில், விவசாயிகளே அவர்களுக்கான சந்தைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகளே மூங்கிலை வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், முள் இல்லா மூங்கில் சாகுபடியின் தற்போதைய யதார்த்த நிலை என்ன? இப்போது இவரது தோட்டம் எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்துகொள்வதற்காகக் கோட்டூர் காந்தாவனத்தில் உள்ள பாலசுப்ரமணியன் தோட்டத்துக்கு மறுபயணம் மேற்கொண்டோம்.

மூங்கில் தோட்டத்தில் பாலசுப்ரமணியன்
மூங்கில் தோட்டத்தில் பாலசுப்ரமணியன்

சுட்டெரிக்கும் உச்சிவெயிலிலும் மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற பாலசுப்ரமணியன், பேசிக்கொண்டே தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு. வெயிலின் தாக்கம் கொஞ்சம்கூடத் தெரியவில்லை. சிலுசிலுவெனக் குளிர்ச்சியான காற்று. 2007-ம் ஆண்டு இதே தோட்டத்தில் நாம் பார்த்த முள் இல்லா மூங்கில் மரங்களின் வாரிசுகள் தற்போது, நம்மை வரவேற்றன. தோட்டம் முழுவதும் ஆங்காங்கே மூங்கில் கூட்டம். கொஞ்சம்கூடத் தரை தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் மூங்கில் சருகுகள்... தோட்டம் முழுவதும் மெத்தை விரித்ததுபோல், படர்ந்து விரிந்து காட்சி அளித்தது. நடந்து சென்றபோது, பஞ்சுக்குள் கால் வைத்ததுபோல் புதைந்தது. சருகுகளிலிருந்து கிளம்பிய சத்தம், தோட்டம் முழுவதும் வியாபித்தது. ‘‘நான் முன்னாடி நடந்து போறேன்... நிறைய பாம்புகள் இருக்கு. பார்த்துக் கவனமா வாங்க’’ எனப் பாலசுப்ரமணியன் சொன்னதும், நாம் பதறிப்போனோம்.

‘‘தைரியமா வாங்க. பயப்படாதீங்க. எச்சரிக்கையா இருந்தால் எதுவும் ஆகாது. கடந்த பல வருஷமா முள் இல்லா மூங்கில் சாகுபடி செஞ்சிக்கிட்டே இருக்குறதுனால, என்னோட தோட்டத்துல பல்லுயிர் பெருக்கம் ரொம்பவே சிறப்பா இருக்கு. பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியா சருகுகள் உதிர்ந்து, உரமாகிக்கிட்டே இருக்குது. அதனால, மண்ணோட வளம், அபரிமிதமா மாறியிருக்கு. தோட்டம் முழுக்க நிறைய மண்புழுக்கள் உருவாகியிருக்கு. காட்டுல உள்ள மண்ணோட பதம் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இது மாறியிருக்கு’’ என்று சொன்னவர், தான் கடந்து வந்த பாதை குறித்தும், இதில் மற்ற விவசாயிகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பேசினார்.

ஒருமுறை நடவு
100 ஆண்டுகள்வரை மகசூல்

‘‘2007-ம் ஆண்டு பசுமை விகடன்ல என்னோட முள் இல்லா மூங்கில் சாகுபடி அனுபவக் கட்டுரை வெளியானபோது எனக்கு 7 வருஷ அனுபவம். இப்பவும் அதே 4 ஏக்கர்ல இதைத் தொடர்ந்துகிட்டு இருக்கேன். இது விவசாயிகளுக்குப் பல வகையிலயும் உறுதுணையா இருக்கக்கூடியது. இதை நடவு செஞ்ச முதல் 5 வருஷம் வரைக்கும் எரு கொடுக்குறதும், தரமில்லாத சின்ன மூங்கில்களை வெட்டி அப்புறப்படுத்திப் பராமரிக்குறதும் ரொம்ப முக்கியம். பிறகு, எந்தவிதப் பராமரிப்பும் தேவையில்ல. 100 முதல் 150 வருஷம் வரைக்கும் மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கும். நான் வருஷத்துக்கு ஏக்கருக்கு 1,000 மூங்கில்கள் வரைக்கும் வெட்டி விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

2007-ல் பசுமை விகடனில் வெளிவந்த கட்டுரை
2007-ல் பசுமை விகடனில் வெளிவந்த கட்டுரை

சருகில் மண்புழு உரம்

புதுக்கோட்டையில் உள்ள மூங்கில் வியாபாரிகள் வாங்கிக்கிட்டுப் போறாங்க. ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கேன். 4 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. கடந்த 13 வருஷத்துல 20 லட்சம் ரூபாய்க்கு மேல இதுல வருமானம் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் மூங்கில், வருஷத்துக்கு 12 டன்னுக்கு மேல சருகுகளை உதிர்க்குது. 12 டன் சருகுல இருந்து, 6 டன் மண் புழு உரம் தயாரிக்கலாம். என்னோட தோட்டத்துல மண்புழு உரமும் தயார் செஞ்சு விற்பனை செஞ்சிருக்கேன். ஒரு ஏக்கர் மூங்கில் சருகுகளைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை பண்ணினா, வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 60,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம். இந்தச் சருகுகளைப் பயன்படுத்திக் காளான் வளர்த்தோம். மூங்கில் குருத்துல உணவுப் பொருளும் தயாரிக்கலாம். மூங்கில் குருத்தோட தோலைச் சீவி, கொஞ்ச நேரம் தண்ணீர்ல ஊற போட்டு வெச்சோம்னா, அதுல உள்ள நச்சுத்தன்மை நீங்கிடும். அதுக்கு பிறகு சமைக்கலாம்.

எங்க வீட்ல மூங்கில் குருத்துல அல்வா, பொரியல் எல்லாம் தயார் பண்ணி சாப்பிட்டுருக்கோம். இது மிகவும் சத்தான உணவுப்பொருள். வடகிழக்கு மாநிலங்கள்ல உள்ள மக்கள் தங்களோட அன்றாட உணவுப் பொருளாகவே இதைச் சேர்த்துக்குறாங்க. அங்கேயிருந்து வெளிநாடுகளுக்கு மூங்கில் குருத்து ஏற்றுமதி செய்யப்பட்டுக்கிட்டு இருக்கு. ஒரு கிலோ 1,000 ரூபாய்னு விலை போகுது. ஆனால் தமிழ்நாட்டுலதான், இதுக்கான முக்கியத்துவம் கிடைக்காமல் இருக்கு’’ என்றபோது, நிலத்தின் வேலியோரம் வந்திருந்தோம். அங்கிருந்த நிழலில் நின்றுகொண்டே தொடர்ந்த பால சுப்ரமணியன்,

அலட்சிய அரசு

‘‘முள் இல்லா மூங்கில் சாகுபடி செய்றதுனால இன்னும் பலவிதமான நன்மைகள் இருக்கு. காற்றுல இருக்கிற வாகனப் புகை, தூசு போன்றவைகளைச் சுத்திகரிக்குது. அதிகளவு ஆக்சிஜனை வெளியிடுது. கார்பன்-டை-ஆக்ஸடை பெருமளவு உட்கிரக்கிது. முள் இல்லா மூங்கில் சாகுபடியைத் தமிழ்நாடு முழுவதும் அதிகப்படுத்த வேண்டியது தமிழக அரசோட கடமை. இதுக்கான சந்தை வாய்ப்பை அதிகப்படுத்தினால்தான் இது சாத்தியம். தமிழக அரசு இதுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தணும். தமிழக வனத்துறைதான் தமிழ்நாட்டில் முதன் முதலாக, முள் இல்லா மூங்கிலை அறிமுகப்படுத்தியது. பரவலாக விவசாயி களிடம் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினாங்க. அது மூலமாத்தான் எனக்கே இது அறிமுகமாச்சு. ஆனால், இதைச் சாகுபடி செஞ்ச விவசாயிகளைத் தொடர்ந்து கண்காணிச்சு வழி நடத்தாம விட்டுட்டாங்க. இதனால் விவசாயிகளால் தரமான மூங்கில்களை உற்பத்தி செய்ய முடியல. இதுக்கு போதியளவு சந்தை வாய்ப்பு இல்லைனாலும்கூட, தரமான மூங்கில்களை உற்பத்தி செஞ்சிட்டா, ஓரளவுக்கு லாபம் கிடைச்சிடுது. அதுக்கு நானே உதாரணம்’’ என்றவர் உள்ளூர் சந்தை வாய்ப்புபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மூங்கில்
மூங்கில்

5 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடை

‘‘ஒரு கைப்பிடி சுற்றளவு, 30 அடி உயரம் கொண்ட மூங்கில்தான், விற்பனைக்கு ஏற்றத் தரமான மூங்கில். நடவு செஞ்ச முதல் 2 வருஷம் வரைக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 10-12 டன் எரு கொடுக்கணும். பிறகு, வருஷத்துக்கு ஒரு தடவை எரு கொடுத்தால் போதும். தரமில்லாத சின்ன மூங்கில்களை வெட்டி அப்புறப்படுத் திட்டோம்னா, சூரிய வெளிச்சம், காற்றோட்டம் நல்லா கிடைச்சு, மூங்கில் நல்லா பெருத்து, உயரமா தரமா வளரும். 5-6 வருஷத்துக்குப் பிறகு, எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமலே தரமான மூங்கில்கள் கிடைக்கும். இதுதான் விற்பனைக்கு ஏற்றதா இருக்கும். ஆனால், முள் இல்லா மூங்கில் சாகுபடி செஞ்ச பெரும்பாலான விவசாயிகள், நடவு செஞ்ச 3-4 வருஷத்துலயே மூங்கில்களை விற்பனை செய்ய முயற்சி செஞ்சதுனால, அதை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டல. ஒரு சில பகுதிகள்ல அதை வாங்க முன் வந்த வியாபாரிகள் ரொம்பக் குறைவான விலை கொடுத்திருக்காங்க. இதனால் விவசாயிகளுக்கு முள் இல்லா மூங்கில் சாகுபடியில விரக்தியான மனநிலை ஏற்பட்டது.

‘‘ஒரு கைப்பிடி சுற்றளவு, 30 அடி உயரம் கொண்ட மூங்கில்தான், விற்பனைக்கு ஏற்றத் தரமான மூங்கில்.

பொறுமை அவசியம்

பசுமை விகடன்ல என்னோட கட்டுரையைப் பார்த்துட்டு திருவண்ணா மலையைச் சேர்ந்த நடராஜன்ங்கிற விவசாயி, ரொம்ப ஆர்வமா முள் இல்லா மூங்கில் சாகுபடியில் இறங்கினார். நடவு செஞ்ச மூணாவது வருஷம், என்னைப் போன்ல தொடர்புகொண்டு ரொம்ப விரக்தியா பேசினார். ‘மூங்கில் பெருக்கவே இல்லை. வளர்ச்சியே இல்ல’னு சொன்னார். நான் உடனே திருவண்ணாமலை போயி நேரடியா அவரோட தோட்டத்தைப் பார்த்தேன். ‘நிறைய எரு கொடுங்க. ஒவ்வொரு குத்துலயும் தரமான மூங்கில்களை மட்டும் வெச்சிக்கிட்டு, தரமில்லாத சின்ன மூங்கில்களையெல்லாம் வெட்டிடுங்க. நீங்க நடவு பண்ணி மூணு வருஷம்தான் ஆகுது. அடுத்த ரெண்டு வருஷத்துல, மூங்கில்கள் நல்லா பெருத்து வந்துடும். பிறகு விற்பனை செஞ்சிங்கனா, வியாபாரிகள் விரும்பி வாங்குவாங்க’னு சொல்லிட்டு வந்தேன்.

மூங்கில் தோட்டத்தில் பாலசுப்ரமணியன்
மூங்கில் தோட்டத்தில் பாலசுப்ரமணியன்

ரெண்டு வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தொடர்புகொண்ட நடராஜன், ‘மூங்கில் நல்லா பெருத்து, உயரமா வளர்ந்துடுச்சு. பந்தல் காய்கறிச் சாகுபடி செய்றவங்க, மூங்கில் வாங்கிக்கிட்டு போறாங்க. இனிமே இதை நாங்க அழிக்கப்போறதில்ல. எந்தச் செலவும், பராமரிப்பும் இல்லாமலே வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு. இது எந்தப் பயிருமே சரியா விளையாத மண்ணு. ஆனா, மூங்கில் நல்லா செழிப்பா விளைஞ்சி வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு’னு சொன்னார்’’ என்றவர் நிறைவாக,

‘‘தமிழ்நாடு அரசு, இதுல தீவிர கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு வழிகாட்டணும். தொடர்ச்சியா கண்காணிச்சு, ஆலோசனை களை வழங்கணும். இதுக்கான சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்தணும். பெங்களூர்ல, மத்திய அரசுக்குச் சொந்தமான, மூங்கில் பொருள்கள் தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தமிழக அரசு அவங்களோட ஆலோசனைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் இது தொடர்பான திட்டங்களை நடைமுறைப் படுத்தணும். இதையெல்லாம் செஞ்சாலே, முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கான சந்தை விரிவடையும். இதன் சாகுபடியும் வெற்றிகரமா நடக்கும். சுற்றுச்சூழலுக்கும் பெரும் துணையா இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,
பாலசுப்ரமணியன்,
செல்போன்: 94864 08384

சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்!

தோட்டக் கலைத்துறை இயக்குநர் சுப்பையனிடம் பேசினோம். ‘‘முள் இல்லா மூங்கில் சாகுபடியை ஊக்கப்படுவதற்கான ஒரு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம். அரசுக்குச் சொந்தமான நிலங்களில் இதைச் சாகுபடி செய்யவும், விவசாயிகள் விரும்பினால், இவர்களது நிலங்களில் சாகுபடி செய்து கொடுப்பதற்கும் திட்டங்களை வகுத்துள்ளோம். இவை விரைவில் நடைமுறைக்கு வரும். காகிதம் மற்றும் மின் உற்பத்திக்கு மூங்கிலை அதிகமாகப் பயன்படுத்தவும், ஏற்றுமதி கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்தும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதற்கான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.

மூங்கில் தோட்டம்
மூங்கில் தோட்டம்

நடவு முறை

மூங்கில் நடவுமுறை குறித்துப் பேசிய பாலசுப்ரமணியன், ‘‘பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக, டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாகச் செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 108 கன்றுகள் நடவு செய்யலாம். 6 மீட்டர் இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு சதுர கன மீட்டர் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ மண்புழு உரம், 10 கிலோ எரு, தலா 100 கிராம் வேர் பூஞ்சணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 250 மி.லி பஞ்சகவ்யா, தலா 5 கிலோ சாம்பல், தென்னை நார்க் கழிவு ஆகியவற்றைக் கலந்து குழியினை நிரப்ப வேண்டும். குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றைச் சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்’’ என்றார்.

மூங்கில் சந்தையை
உருவாக்க வேண்டும்!

‘‘பந்தல் சாகுபடி, வாழைச் சாகுபடி, வெற்றிலை சாகுபடிக்கெல்லாம், முட்டுக்கால் கொடுக்க மூங்கில் அதிகமா பயன்படுத்தப்படுது. ஆனாலும் இது போதாது. இதுல ஏராளமான கைவினைப் பொருள்கள் செய்யலாம். விதவிதமா வீட்டு உபயோகப் பொருள்கள் செய்யலாம். இதுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களைத் தமிழக அரசு உருவாக்கணும். எல்லா மாவட்டங்கள்லயும் அரசு மூங்கில் சந்தைகளை உருவாக்கணும். மூங்கில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தணும். மூங்கில் குருத்துல இருந்து உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகளை உருவாக்கணும்’’ என்று கோரிக்கை விடுத்தார் பாலசுப்ரமணியன்.

விற்பனையில் வில்லங்கமில்லை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனிடம் பேசினோம். “என்னுடைய தோட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ளது. 2009-ம் வருஷம், 3 ஏக்கர்ல முள்ளில்லா மூங்கில் நடவு செஞ்சேன். 7 வருஷம் கழிச்சு, 2016-ம் வருஷம் முதல் தடவை வெட்டுனேன். முதல் தடவை  அவ்வளவா பயன் இல்ல. 4 வருஷம் கழிச்சு, 2020-ம் வருஷ கடைசியில மறுபடியும் வெட்டுனேன். பந்தல் அமைக்குறவங்க, மொத்த விலைக்குப் பேசி வாங்கிட்டுப் போயிட்டாங்க. மூங்கில் ஒரே இடத்துல தொகுப்பா இருக்குறதை ‘குத்தல்’னு சொல்லுவோம். ஒரு குத்தல்ல 70 முதல் 100 கழிகள் வரைக்கும் இருக்கும். சில குத்தல்ல கூடுதல், குறைச்சலாகவும் இருக்கும். என்னோட தோட்டத்துல இருக்க 3 ஏக்கர்ல 500 குத்தல் இருந்துச்சு. ஒரு குத்தலுக்குச் சராசரியா 720 ரூபாய் விலையில கொடுத்தேன். அது மூலமா 3,60,000 ரூபாய் கிடைச்சது. விற்பனை செய்றதுல எந்த வில்லங்கமும் இல்ல. வெட்டி முடித்த 4 மாசத்திலயே நல்லா வளர்ந்திடுது. வழக்கமா ரெண்டு ஏக்கர் நெல் நடவு செய்வேன். போன வருஷம், தண்ணி பற்றாக்குறையால ஒரு ஏக்கர் மட்டும்தான் நடவு செய்ய முடிஞ்சது. ஆனால், முள்ளில்லா மூங்கில்ல அப்படி இல்ல. தண்ணீர் இருக்கும்போது பாய்ச்சுவோம். தண்ணீர் இல்லனாலும் சமாளிக்க முடியும். மூங்கிலுக்குச் செலவுகளும் குறைவு தான். மத்த பயிர்களுக்கு இது எவ்வளவோ தேவலாம்” என்றார்.

தொடர்புக்கு, நடராஜன், செல்போன்: 94429 45883

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism