Published:Updated:

பக்குவமான வருமானம் தரும் பவானி நெல்!

நெல் வயலில் விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் விஸ்வநாதன்

மகசூல்

பக்குவமான வருமானம் தரும் பவானி நெல்!

மகசூல்

Published:Updated:
நெல் வயலில் விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் விஸ்வநாதன்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள திருப்பதி சாரம், ஐ.ஆர்.8, ஏ.டி.டீ, பி.பி.டி நெல் ரகங்கள் விவசாயிகளிடையே பிரபலமாகவும் அதேசமயம் அதிகம் சாகுபடி செய்யக்கூடியதாகவும் உள்ளன. அந்த வரிசையில் பவானி நெல் ரகமும் விவசாயிகளிடையே பிரபலம். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விரும்பிச் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் பவானி நெல் ரகம் அரிதாகிவிட்டது. இந்நிலையில், அதைத் தேடிக் கண்டுபிடித்துச் சாகுபடி செய்திருக் கிறார், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி என்ற கிராமத்தில் உள்ளது இவரது பண்ணை. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள இந்தப் பண்ணையைச் சுற்றிலும் மலர் சாகுபடி நடைபெற்றுக்கொண்டிருக்க, இவருடைய நிலத்தில் மட்டும் பவானி நெற்பயிர் விளைந்து நெல் மணிகள் மின்னிக் கொண்டிருந்தன. வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விஸ்வநாதன், இன்முகத்தோடு வரவேற்றுப் பேசினார். “எனக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான். அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேல செஞ்சிட்டு வர்றேன். இந்த கொரோனா காலத்துல என்னோட ஆசிரிய நண்பர்களெல்லாம் ரியல் எஸ்டேட், டியூஷன்னு போய்ட்டாங்க. ஆனா, எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால, விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். விவசாயத்து மேல இருந்த ஆர்வத்தால ரெண்டரை ஏக்கர், 4 ஏக்கர், மூன்றரை ஏக்கர்னு வெவ்வேறு இடங்கள்ல தனித்தனியா விவசாய நிலங்கள வாங்கிப் போட்டிருந்தேன். ஊரடங்கு தொடங்கின பிறகு கடைசியா வாங்கின இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தைச் சீர்ப்படுத்தி நெல் பயிரிட்டு இருக்கேன். இந்த நிலத்தை வாங்கும்போது மானாவாரி நிலமாகத்தான் இருந்துச்சு. கிணத்தை வெட்டி, ஒரு போர்வெல் போட்டுத் தண்ணி வசதியை ஏற்படுத்தினேன். வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்குச் செல்லும்போது அங்கே பார்த்தால் நிலங்களெல்லாம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும். அப்படி இந்தப் பண்ணையை மாத்தணுங்கற நோக்கத்துல வேலை செஞ்சிட்டு வர்றேன்” என்று முன்கதைச் சொன்னவர் தொடர்ந்தார்.

விஸ்வநாதன்
விஸ்வநாதன்


“இந்தப் பண்ணையில முதல்ல 55 சென்ட்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவும், ஒன்றரை ஏக்கர்ல வெள்ளைப் பொன்னியும் போட்டு அறுவடை செஞ்சிட்டேன். ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்துல பவானி நெல் போட்டிருந்தேன். அது இப்போ வளர்ந்து நிக்குது. எங்கப்பா காலத்துல கமலை ஓட்டி விவசாயம் செஞ்சிட்டு இருந்தோம். அந்தக் காலத்திலே இந்தப் பவானி நெல்ல அதிகம் சாகுபடி செஞ்சிருக்கோம். அப்போ சாப்பிட்ட பவானி அரிசி சோறோட சுவை இன்னும் நினைவில இருக்கு. பிறகு, இந்த நெல் ரகம் எங்கே போச்சுன்னு தெரியல. ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். எஸ்.பி.பெருமாள்ங்கற பாரம்பர்ய விதைச் சேகரிப்பாளரிடம் இத பத்தி சொன்னேன். அவர் தேடி இந்த நெல்லை வரவச்சு கொடுத்தார். இந்த நெல்ல வைகாசி, ஆடி, தைப் பட்டத்தில விதைக்கலாம். ஆனா, நான் பட்டம் பார்த்து விதைக்கல. விதைநெல் கிடைச்சதும் நாத்து விட்டு நடவு செஞ்சிட்டேன். பவானி நெற்பயிர் சீக்கிரத்துல சாயாது. மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்கும். மகசூலும் ஏக்கருக்கு 30 மூட்டை குறையாம கிடைக்கும்.

எங்கப்பா ரசாயன உரம் போடாம விவசாயம் செஞ்சதால, எனக்கும் அந்தப் பழக்கம் அப்படியே தொடருது. எங்ககிட்ட 25 ஆடுகள் இருக்கு. அதுமூலமா கிடைக்கிற எருவையும், விலைக்கு வாங்குற மாட்டு எருவையும் அடியுரமா போடுறோம். இதோட அக்கம்பக்கத்தில கிடைக்கிற இலைதழைகளை வெட்டிப் போடுவோம். நாங்க, எந்தவித ரசாயன உரத்தையும் பயன்படுத்தாம விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். இந்த மண், செம்மண் கலந்த சரளை மண். அதனால குறைவில்லாத விளைச்சல் கிடைச்சிட்டு இருக்கு” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘ஒரு ஏக்கர்ல பவானி நெல் அறுவடை முடிச்சிட்டோம். அதுமூலமா 37 மூட்டை கிடைச்சது.’’

“மொத்தமுள்ள மூன்றரை ஏக்கர்ல ஒன்றரை ஏக்கர்ல வெள்ளைப் பொன்னி போட்டு அறுவடை செஞ்சிட்டோம். ஒன்றரை ஏக்கர் வெள்ளைப் பொன்னில 55 மூட்டை(ஒரு மூட்டை 75 கிலோ) கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் 30 சென்ட்ல பவானி நெல் போட்டிருந்தோம். இதுல ஒரு ஏக்கர்ல அறுவடை பண்ணிட்டோம். அதுமூலமா 37 மூட்டை கிடைச்சது. 10 மூட்டையை ஒரு மூட்டை 3,500 ரூபாய்னு விதைக்காக விற்பனை செஞ்சிட்டேன். 2 மூட்டையை வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டோம். மீதியிருக்கிற 25 மூட்டையையும் ஒரு மூட்டை 3,500 ரூபாய்க்கு விதைக்காகப் பேசி வெச்சிருக்கோம். பவானி நெல்லுல பொரி நல்லா வரும். அதனால, பொரி தயாரிக்கிறவங்க நிறைய பேரு கேட்டிருக்காங்க. இந்த ஒரு ஏக்கர் பவானி நெல் சாகுபடி மூலமா வீட்டுக்கு எடுத்துக்கொண்டதையும் சேர்த்தா 1,29,500 ரூபாய் வருமானம். இதுல உழவு, நடவு, களை, அறுவடைனு 30,000 ரூபாய்ச் செலவாகியிருக்கும். அதுபோக 99,500 ரூபாய் லாபமாக நிக்கும். இந்த வருமானம் நெல் விவசாயத்தைப் பொறுத்த வரை நல்ல வருமானம்தான்” என்றவர் நிறைவாக,

“இந்த கொரோனா காலத்தைப் பொறுப்பான வகையில கழிக்கணும்னு நினைச்சா, அதுக்கு விவசாயம் சரியான தேர்வாக இருக்கும். கொரோனா தொற்றிலிருந்து விலகி இருக்கவும் முடியும். விவசாயம் மூலம் வருமானமும் கிடைக்கும்” என்று சொல்லி மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார்


தொடர்புக்கு, விஸ்வநாதன்,செல்போன்: 86102 20932

வறட்சியான பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பர்ய விதைநெல் சேகரிப்பாளரும், இயற்கை வேளாண் பயிற்சியாளருமான எஸ்.பி.பெருமாளிடம் பேசினோம். “எங்கிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரிச்சு வெச்சிருக்கேன். விதைத் தேவைப்படுறவங்களுக்குக் கொடுக்கிறதோடு, அதை எப்படிச் சாகுபடி செய்யணும்னு சொல்லித் தந்துட்டு இருக்கேன். தருமபுரி மாவட்டத்துக்கென்னு புழுதிக்கார், தருமபுரி கிச்சிலிச்சம்பா வரிசையில் பவானி நெல்லும் இந்த மண்ணில் நன்கு விளையுது. நிறைய விவசாயிகள் இதைப் பாரம்பர்ய நெல் என்றே நினைச்சு சாகுபடி செய்றாங்க. ஆனால், இது 1973-ம் ஆண்டு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் (பவானிசாகர் ஆராய்ச்சி நிலையம்) வெளியிடப்பட்ட ரகம். ஆராய்ச்சி ரகமாக இருந்தாலும் சாகுபடி செய்றதுக்கும், சாகுபடி செய்து நெல்லை நீண்ட நாள்கள் இருப்பு வைக்கிறதுக்கும் ஏற்ற ரகம். மிதமான நீர்ப்பாசனம் உள்ள மாவட்டங்களுக்கு இது ஏற்றது என்று சொல்லப்பட்டாலும் தருமபுரி போன்ற வறட்சி மாவட்டங்களிலும் இதைச் சாகுபடி செய்யலாம்.

எஸ்.பி.பெருமாள்
எஸ்.பி.பெருமாள்

இதன் வயது 140-150 நாள்கள். விவசாயிகள் 90 நாள்கள், 120 நாள்கள் வயது கொண்ட தனியார் நிறுவனங்களோட நெல் ரகங்களையே அதிகம் சாகுபடி செய்ய விரும்புறாங்க. அதற்கு மாற்றா நம் பாரம்பர்ய நெல் ரகங்களையும், பாரம்பர்ய ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி ரகங்களையும் பயன்படுத்தலாம். நீண்ட நாள் சாகுபடி செய்வதனாலோ என்னவோ இந்தப் பவானி நெல்லை நிறைய விவசாயிகள் சாகுபடி செய்யத் தயங்குறாங்க. இந்த நெற்பயிரின் தாள்கள் சுனை மிகுந்தது. அதனால எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகுறதில்ல. நிறைய வைக்கோல் கிடைக்கும். மாடு வைத்திருப்பவங்க இந்த நெல் ரகத்தைத் தாராளமாகச் சாகுபடி செய்யலாம்” என்றார்.


தொடர்புக்கு, எஸ்.பி.பெருமாள், செல்போன்: 79041 74597

இப்படித்தான் பவானி நெல் சாகுபடி

ஒரு ஏக்கரில் பவானி நெல்லைச் சாகுபடி செய்ய விஸ்வநாதன் சொல்லும் தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தைத் தண்ணீர் விட்டு ஒரு சால் உழவு ஓட்டி ஏக்கருக்கு 5 டிராக்டர் எருவைக் கொட்டி பரவி விட வேண்டும். பிறகு வேம்பு, எருக்கு, புங்கன் உள்ளிட்ட இலை தழைகளை 1 டன் அளவுக்குக் கொட்டி பரவி, மீண்டும் உழவு செய்ய வேண்டும். இதை இரண்டு வாரம் மட்க விட வேண்டும். முதல் உழவு ஓட்டும்போதே ஏக்கருக்கு 6 கிலோ விதைநெல்லைத் தண்ணீரில் கொட்டி, மேலே மிதக்கும் பொக்குகளை நீக்க வேண்டும். பிறகு, அடியில் தங்கும் நெல்லை ஈரச் சணல் சாக்கில் மூட்டைப் பிடித்து, மறுநாள் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நாற்றுவிட்ட 15-20 நாள்களில் பறித்து 3-வது உழவு ஓட்டி நடவு செய்ய வேண்டும். பிறகு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.நாற்றுவிட்ட 15 - 20 நாள்களில் பறித்து 3-வது உழவு ஓட்டி நடவு செய்ய வேண்டும். பிறகு, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

நெல் வயலில்
நெல் வயலில்


15-ம் நாளுக்கு மேல் முதல் களை எடுக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் கோரை முளைத்திருந்தால் பிடுங்கி விட வேண்டும். அடியுரமாக எருவும், இலைதழைகளும் கொடுத்திருப்பதால் இடையில் எந்த உரமும் கொடுக்கத் தேவையில்லை. பயிர் வளர்ச்சிக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் பயோ உரங்களைப் பயிர் வளர்ச்சியூக்கியாகக் கொடுக்கலாம். 90-ம் நாளில் கதிர் போட தொடங்கும். அப்போது குலை நோய்த்தாக்க வாய்ப்புண்டு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயோ உரங்களைக் கொடுக்க வேண்டும். புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ரகம். கோடைக்காலங்களில் நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு நெல் வயலில் 3 இன்ச் உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு பராமரித்து வர வேண்டும். 120-ம் நாள்களுக்கு மேல் கதிர் நன்கு முற்றத் தொடங்கும். நெற்பயிர் பச்சை நிறத்திலிருந்து முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறுவதும், நெல்லை உடைத்துப் பார்த்தால் நன்கு அரிசியாக மாறியிருப்பதும் அறுவடை செய்வதற்கான பக்குவம். அதிகபட்சம் 150 நாள்களுக்குள் அறுவடை செய்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism