Published:Updated:

ஒரு ஏக்கர்... 22 நாள்கள்... 72,200 ரூபாய் இயற்கையில் செழிக்கும் வெற்றிலை... வெற்றிகரமான லாபம்!

வெற்றிலைத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிலைத் தோட்டம்

மகசூல்

ஒரு ஏக்கர்... 22 நாள்கள்... 72,200 ரூபாய் இயற்கையில் செழிக்கும் வெற்றிலை... வெற்றிகரமான லாபம்!

மகசூல்

Published:Updated:
வெற்றிலைத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிலைத் தோட்டம்

மிழ்நாட்டு மக்களின் பண்பாட்டில் மிக முதன்மையான இடம் வகிக்கிறது வெற்றிலை. மருத்துவக் குணங்கள் நிறைந்தவை என்பதால் தான், நம் முன்னோர்கள் வெற்றிலை பயன் படுத்தும் பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். இன்றளவும் அந்தப் பழக்கம் நீடிக்கிறது. ஆனால், சமீபகாலமாக, வெற்றிலைச் சாகுபடி யில் அதிக அளவில் ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்துகிறார்கள்.

‘இது ஒரு சவாலான பயிர்... ரசாயனம் இல்லாமல், இதைச் சாகுபடி செய்வது சாத்தியமே இல்லை என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. குறிப்பாக, வெற்றிலைச் சாகுபடிக்கு புகழ்பெற்ற, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி, திருவளாம்பொழில், மனத்திடல், வளப்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்திதான், வெற்றிலைச் சாகுபடி செய்கிறார்கள்.

வெற்றிலைத் தோட்டத்தில் அற்புதராஜ், ஜெரால்டு
வெற்றிலைத் தோட்டத்தில் அற்புதராஜ், ஜெரால்டு

இவர்களுக்கு மத்தியில், வளப்பக்குடியைச் சேர்ந்த அற்புதராஜ், அவரின் உறவினர் ஜெரால்டு இருவரும் இணைந்து, இயற்கை முறையில் வெற்றிலைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ‘இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக வெற்றிலைச் சாகுபடி செய்ய முடியும்... சொல்லப்போனால், ரசாயன முறையை விடவும் இயற்கை முறையில் சாகுபடி செய்தால்தான், விவசாயிகள் நிம்மதியாக விளைச்சல் எடுக்க முடியும்’ என நிரூபித்துள்ளார்கள்.

ஒரு பகல் பொழுதில் அவர்களுடைய வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றோம். மிகவும் செழிப்பாகக் காட்சி அளித்த வெற்றிலைக் கொடிகள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. வெற்றிலை ஒடித்துக்கொண்டிருந்த அற்புதராஜூம் ஜெரால்டும் நம்மை மகிழ்ச்சி யோடு வரவேற்றார்கள்.

மிகுந்த உற்சாகமாகப் பேசத் தொடங்கிய அற்புதராஜ், ‘‘எங்களோட வெற்றிலையைப் போட்டுப் பாருங்க. இதுதான் வெற்றிலைக் கான இயல்பான சுவை. நல்லா வாசனையாவும் மென்மையாவும் இருக்கும். காரத்தன்மை அதிகமாவும் இல்லாம, குறைவாகவும் இல்லாம, நடுத்தரமா இருக்கும். ஆனா, கடைகள்ல கிடைக்கக்கூடிய வெற்றிலை இந்த மாதிரி இருக்குறதில்ல. அதிகமா ரசாயனம் போட்டு விளைவிக்குறதுனால, அந்த வெற்றிலையில மொடமொடப்புத் தன்மை அதிகமா இருக்கும். வெற்றிலைக்கான இயல்பான வாசனையோ, சுவையோ இருக்குறதில்ல. சீக்கிரத்துல காம்பு அழுகி வதங்கிப் போயிடும். ஆனா, நாங்க இயற்கை முறையில விளைவிக்குற இந்த வெற்றிலை, சீக்கிரத்துல வதங்காது. இதனால்தான் எங்களோட வெற்றிலையை வியாபாரிகள் விரும்பி வாங்குறாங்க. வழக்கமான வெற்றிலையை விடவும் எங்களோட வெற்றிலைக்குக் கூடுதல் விலையும் கிடைக்குது’’ என்றவர், வெற்றிலைச் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வெற்றிலைத் தோட்டம்
வெற்றிலைத் தோட்டம்

‘‘நான், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, முழுமையா விவசாயத்துக்கு வந்துட்டேன். வெற்றிலைச் சாகுபடியில எனக்குப் பல வருட அனுபவம். என்னோட உறவினர் ஜெரால்டு, ‘டிப்ளமோ மெக்கானிக்கல்’ படிச்சிட்டு, அவரும் என்னோட சேர்ந்து வெற்றிலை விவசாயம் பார்த்துகிட்டு இருக்கார். ஒரு ஏக்கர்ல வெற்றிலைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். சுமார் 20 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், எங்க பகுதி விவசாயிகள் எல்லாருமே வெறும் மாட்டு எரு மட்டும் கொடுத்துதான் வெற்றிலைச் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தோம். அதிக செலவில்லாம, நிறைவான லாபம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. அப்ப விளைஞ்ச வெற்றிலை நல்லா சுவையாவும் இருந்துச்சு. ஆனா, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, படிப்படியா பூச்சி, நோய்த்தாக்குதல்கள் அதிகமாகிடுச்சு. அதைக் கட்டுப்படுத்த அதிகம் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிடுச்சு.

விவசாயிகளோட உழைப்புக்கும் முதலீட்டுக் கும் ஏத்த லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டுச்சு. அதைக்கூட நாங்க பெருசா எடுத்துக்கல. உடம்புக்கு நல்லதுனு நம்பி, மக்கள் சாப்பிடக்கூடிய, வெற்றிலையில, ரசாயனத்தைக் கலந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்துறோமேனு, மனசுல குற்ற உணர்வு ஏற்பட்டுச்சு. வெற்றிலை போட்டதுனாலயே சிலருக்கு புற்றுநோய் வந்ததாகவும், அதுக்கு ரசாயன இடுபொருள்களோட தாக்கம்தான் முக்கியக் காரணம்னு கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைஞ்சிட்டோம்.

வெற்றிலை
வெற்றிலை

நாமளும் இதைச் சாப்பிடுறோம்... நம்ம வீட்டு குழந்தைங்களுக்கும் இதைக் கொடுக்குறோமேனு நினைச்சப்ப, மனசுக்கு சங்கடமா இருந்துச்சு. இந்தச் சூழல்லதான் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியைத் தவிர்த்துட்டு, இயற்கை முறையில வெற்றிலைச் சாகுபடி செய்யணும்னு முடிவெடுத்தோம்’’ என்றார் அற்புதராஜ்.

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய ஜெரால்டு, ‘‘பஞ்சகவ்யா, மீன் அமிலம், இ.எம் கரைசல் கொடுத்தாலே போதும்... எந்தப் பயிரா இருந்தாலும் நல்லா ஊக்கமா, நோய் எதிர்ப்பாற்றலோடு, திடகாத்திரமா விளையும்னு திருக்காட்டுப்பள்ளிக்கு பக்கத்துல இருக்க, பூண்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரமேஷ் ஆலோசனை சொன்னார்.

நம்பிக்கையோடு இயற்கை விவசாயத்துல இறங்கினோம். இப்ப, ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில வெற்றிலைச் சாகுபடி செஞ்சிக் கிட்டு இருக்கோம். நாங்க எதிர்பார்த்ததை விடவும், அற்புதமா பலன் கொடுத்துக்கிட்டு இருக்கு. வெற்றிலைச் சாகுபடியைப் பொறுத்த வரைக்கும் செவ்வட்டை நோய்த்தாக்குதலை சமாளிக்குறதுங்கறது மிகப் பெரிய பாடு... இந்த நோய்த்தாக்குதல் ஏற்பட்டால், வெற்றிலையில திட்டுத் திட்டா, சிவப்புப் புள்ளிகள் விழும். இதுமாதிரியான வெற்றிலையை மக்கள் வாங்க மாட்டாங்க. வெற்றிலைச் சாகுபடியில பேன் தாக்குதல் ரொம்பவே சவாலானது... வெற்றிலை சுருங்கி வதங்கிப்போயிடும். சப்பாத்தி பூச்சித் தாக்குதலாலும் வெற்றிலை தரமில்லாமல் போயிடும். மாவு படிஞ்ச மாதிரி ஆயிடுச்சுனா, அந்த வெற்றிலையை யாரும் வாங்க மாட்டாங்க. இதுமாதிரியான பாதிப்புகளால்தான் வெற்றிலை விவசாயிகளுக்கு அதிகமா நஷ்டம் ஏற்படும். இதையெல்லாம் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

கொம்புகளில் படரும் வெற்றிலைக்கொடி
கொம்புகளில் படரும் வெற்றிலைக்கொடி

ஆனா, இயற்கை முறையில அதுமாதிரி யான பூச்சி, நோய்த் தாக்குதல்கள் கொஞ்சம்கூட இல்லை. நாங்க உற்பத்தி செய்யக்கூடிய வெற்றிலை, நல்லா தரமாவும் பார்வையாவும் இருக்கு. மண்ணுல அடியுரமா, எருவும், ஆமணக்குப் பிண்ணாக்கும் கொடுக்குறோம். பஞ்சகவ்யா, மீன் அமிலம், இ.எம் கரைசல்... இந்த மூணையும் தண்ணியிலக் கலந்து, 15 நாளுக்கு ஒரு தடவை, வெற்றிலை கொடிகள்ல தெளிப்போம். இதைத் தவிர, பாசனநீர்ல இ.எம் கரைசலைக் கலந்து விடுவோம். இதனால் எங்களோட வெற்றிலைக் கொடிகள் நல்லா திடகாத் திரமா வளர்ந்து, நல்ல தரமான வெற்றிலை கிடைச்சுக்கிட்டு இருக்கு.

வருமானம்

வெற்றிலைச் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும், வெற்றிலை விதைக்கொடி ஊன்றியதுல இருந்து 6-வது மாசம் பறிப்புக்கு வரும். 22 நாளுக்கு ஒரு தடவை வெற்றிலைகள பறிக்கலாம். அடுத்த மூணு மாசத்துக்கு மகசூல் கொடுக்கும். அப்பக் கிடைக்கக் கூடியது, ரெண்டாம் தர வெற்றிலையா இருக்கும். அளவு சின்னதாகவும், கொஞ்சம் கடினத்தன்மையோடும் இருக்கும் கிறதுனால, பீடா தயாரிக்கத்தான் அதை வாங்குவாங்க. அதனால் குறைவான விலைதான் கிடைக்கும். ஆனால், ஆரம்பக்கட்ட செலவுகளை ஈடுகட்ட அந்தப் பணம் ரொம்பவே உதவியா இருக்கும். எங்களோட வெற்றிலைக் கொடிக்கு இப்ப 16 மாசமாகுது.

அட்டவணை
அட்டவணை

ஒரு ஏக்கர்ல மொத்தம் 600 பட்டம்... ஒவ்வொரு பட்டமும் 4 அடி அகலம், 15 அடி நீளம், ஒன்றரை அடி உயரம் கொண்டது. 2 அடி அகலத்துக்கு வாய்க்கால் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பட்டத்துல இருந்தும், 22 நாளுக்கு ஒரு தடவை, ரெண்டரை கவுளி வெற்றிலை கிடைக்கும். (100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளி). அது ரெண்டாம் தர வெற்றிலைங் கிறதுனால, ஒரு கவுளிக்கு 20 ரூபாய் வீதம், ஒவ்வொரு பட்டத்துல இருந்தும், 50 ரூபாய் வருமானம் கிடைக்கும். 600 பட்டத்துல இருந்து கிடைக்கக்கூடிய வெற்றிலை விற்பனை மூலம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 6 - 9 மாதங்கள்ல 22 நாள்கள் இடைவெளியில குறைந்தபட்சம் 4 பறிப்பு மூலம் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அந்த வருமானம் ஆரம்பக்கட்ட செலவுகளை ஓரளவுக்குச் சமாளிக்கத்தான் ஒத்தாசையா இருக்கும். லாபம் கிடைக்காது.

வெற்றிலை விதைக்கொடி ஊன்றியதுல இருந்து 9 மாசத்துக்குப் பிறகு, கொடிகள் அதிக உயரத் துக்குப் போகாமல் இருக்க, கொடிகளைப் பிரிச்சு, மடக்கிக் கட்டுவோம். 12-ம் மாசம் கொடியோட நுனிப் பகுதியை, மூணு கணுக்கள் உள்ளடங்கிய நீளத்துக்கு நறுக்கி, 100 கொடிகள் 350 ரூபாய்னு விதைக் கொடியா விற்பனை செய்வோம். எங்களோட சொந்த பயன்பாட்டுக்கும் வச்சிக்குவோம்.

12-ம் மாசம் கொடிகளின் நுனிப்பகுதியை நறுக்கலைன்னா, கொடிகள் அமுங்கிடும். 14-ம் மாசத்துல இருந்து முதல் தரமான வெற்றிலை மூலம் நிறைவான மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 22 நாளுக்கு ஒரு தடவை ஒவ்வொரு பட்டத்துல இருந்தும் 2 கவுளி வெற்றிலை கிடைக்கும். ரசாயனத்துல விளைஞ்ச வெற்றிலைக்கு, வழக்கமா, ஒரு கவுளிக்கு 35 - 70 ரூபாய் வரை கிடைக்குது. நாங்க இயற்கை முறையில விளைவிக் குறதுனால, எங்களோட வெற்றிலைக்கு ஒரு கவுளிக்குக் குறைந்தபட்சம் 80 ரூபாய் விலை கிடைச்சுக்கிட்டு இருக்கு. ஒரு பட்டத்துல கிடைக்கக்கூடிய 2 கவுளி வெற்றிலை மூலம், 160 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு ஏக்கர்ல அமைச்சிருக்குற 600 பட்டம் மூலம் 96,000 ரூபாய் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இதுல பறிப்புக் கூலி, 9,600 ரூபாய், இயற்கை இடுபொருள்கள் கொடுக்குற வகையில 7,000 ரூபாய், கொடியைத் தூக்கிக் கட்டுறதுக்கான ஆள் கூலி 7,200 ரூபாய்ச் செலவாகும். எல்லாம் சேர்த்து 23,800 ரூபாய் செலவுபோக, மீதி 72,200 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். அடுத்த 2 வருஷம் வரைக்கும், 22 நாளுக்கு ஒரு தடவை, இதுமாதிரி லாபம் கிடைக்கும்.

மற்ற பயிர்களை ஒப்பிடும்போது வெற்றிலைச் சாகுபடியில முதலீடும் உழைப்பும் அதிகம். ஆரம்பத்துல அதிகமா செலவு செஞ்சுட்டு, 14 மாதங்களுக்குப் பிறகுதான் லாபம் கிடைக்க ஆரம்பிக்கும். ஆனா, அது நிறைவான லாபமா இருக்கும். இப்ப இயற்கை விவசாயத்துல இதைச் சாகுபடி செய்றோம்னு மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாகவும் ஆத்ம திருப்தியாவும் இருக்கு. எங்களைப் பார்த்துட்டு, மற்ற விவசாயிகளும் ரசாயனத்தோட அளவை குறைச்சு, பஞ்சகவ்யா, மீன் அமிலம், இ.எம். கரைசல் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க’’ என்றார் பெருமிதத்தோடு.

தொடர்புக்கு,

ஜெரால்டு,

செல்போன்: 82204 94823.


இப்படித்தான் வெற்றிலைச் சாகுபடி

ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயத்தில் வெற்றிலைச் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்:

வெற்றிலைத் தோட்டம்
வெற்றிலைத் தோட்டம்


தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி, 4 அடி அகலம் 15 அடி நீளம், 1.5 அடி உயரம் கொண்ட பட்டம் அமைக்க வேண்டும். ஒரு பட்டத்துக்கும் இன்னொரு பட்டத்துக்கும் இடையே 2 அடி அகலம் கொண்ட வாய்க்கால் அமைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அள்ளி, வாய்க்காலில் மட்டும் இறைக்க வேண்டும். பட்டத்தில் தலா ஓர் அடி இடைவெளியில் 2 அங்குலம் ஆழத்துக்குக் குழி பறிக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 அகத்தி விதைகள், 2 செம்பை விதைகள், 1 முருங்கை ஊன்ற வேண்டும். 15-ம் நாள் களையெடுக்க வேண்டும். அடுத்த 40 நாள்களில் அகத்தி, செம்பை, முருங்கை நன்கு வளர்ந்து நிழல் உருவானதும், தலா ஓர் அடி இடைவெளியில் வெற்றிலை விதைக்கொடி நடவு செய்ய வேண்டும். ஒரு விதைக்கொடி மூன்று கணுக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கொடி நடும் முன்பும், கொடி நட்ட பிறகும் வாய்க்காலில் மட்டும் தண்ணீர் இறைக்க வேண்டும். காரணம், தண்ணீர் அதிகம் நின்றால், வெற்றிலை கொடிகள் அழுகிவிடும். ஆகையால், தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன் பிறகு 40 நாள்கள் வரை மூன்று நாள்களுக்கு ஒரு முறையும், அதன் பிறகு 5 நாள்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் இறைக்க வேண்டும். மழைக்காலங்களில் மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப தண்ணீர் இறைக்க வேண்டும்.

வெற்றிலை அறுவடை
வெற்றிலை அறுவடை


கொடி நட்ட 60-ம் நாள், ஒவ்வொரு கொடியின் அருகிலும் நன்கு திடகாத்திரமாக வளர்ந்துள்ள, அகத்தி, செம்பை, முருங்கை இவற்றில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அகற்றிவிட வேண்டும். திடகாத்திரமான கொடிக்காலில் வெற்றிலைக் கொடியை ஏற்றிவிட வேண்டும். 65-ம் நாள் ஒரு பட்டத்துக்கு, தலா 20 கிலோ எரு, 1 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு கலந்து தூவ வேண்டும். கொடிக்கால்களாக உள்ள அகத்தி, செம்பை, முருங்கையில் உள்ள இலைகளை அவ்வப்போது அகற்றி, தோட்டத்திலேயே போட வேண்டும். இவை மட்கி மண்ணுக்கு உரமாகி பயன் கொடுக்கும். இவற்றின் குச்சிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும். 4-ம் மாதம் சவுக்குக் கம்புகளைக் குத்துக்கால்களாக அமைக்க வேண்டும். அகத்தி, செம்பை, முருங்கை உள்ளிட்ட கொடிக்கால்களைத் தாங்கிப் பிடிப்பதற்காகவும், ஏணி வைத்து ஏறி வெற்றிலை பறிப்பதற்கும் குத்துக்கால்கள் உறுதுணையாக இருக்கும். தலா 4 அடி இடைவெளியில் ஒரு குத்துக்கால் இருக்க வேண்டும். இது 15 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் 13-வது அடி மற்றும் 14.5-வது அடி உயரத்திலும் படுக்கை வசமாக இணைப்புக் கம்புகளை அமைக்க வேண்டும்.

இடுபொருள்கள்

வெற்றிலைக் கொடி புதைத்த 6 மாதங்கள் வரை, 15 நாள்களுக்கு ஒரு முறை 300 லிட்டர் தண்ணீரில் தலா 9 லிட்டர் பஞ்சகவ்யா, செறிவூட்டப்பட்ட இ.எம்.கரைசல், 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து கொடி முழுவதும் தெளிக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு 15 நாள்களுக்கு ஒரு முறை 600 லிட்டர் தண்ணீரில் தலா 18 லிட்டர் பஞ்சகவ்யா, செறிவூட்டப்பட்ட இ.எம்.கரைசல், 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பட்டத்துக்கு, தலா 20 கிலோ எரு, 1 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கும் கலந்து தூவ வேண்டும்.

வெற்றிலை
வெற்றிலை

செலவுகளை ஈடுகட்டுதல்

வெற்றிலை சாகுபடியில் மூன்று ஆண்டுகள் மகசூல் கிடைக்கும். அதன் பிறகு சவுக்குக் கழிகளை 50 சதவிகிதம் விலை குறைத்து மாற்றுப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்துவிடலாம். அகத்தி, செம்பை, முருங்கை இலைகளை ஆடு, மாடுகளுக்குச் சத்தான தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றிலைக் கொடி புதைத்ததிலிருந்து, 6 - 9 மாதங்கள் வரை இரண்டாம் தர வெற்றிலை விற்பனைமூலம் வருமானம் பார்த்துச் செலவுகளை ஈடுகட்டலாம். 14- மாதங்களுக்குப் பிறகு நிறைவான லாபம் கிடைக்கத் தொடங்கும். பயிரின் ஆயுள் காலம் மூன்று ஆண்டுகள். அதன் பிறகு, மகசூல் குறையத் தொடங்கும். மீண்டும், நிலத்தைத் தயார் செய்து, வெற்றிலைக் கொடியை நடவு செய்யலாம்.