Published:Updated:

இஞ்சி சாகுபடி! 80 சென்ட்... ரூ.94,000 குறைவான பராமரிப்பில் வளமான வருமானம்!

இஞ்சி சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
இஞ்சி சாகுபடி

மகசூல்

இஞ்சி சாகுபடி! 80 சென்ட்... ரூ.94,000 குறைவான பராமரிப்பில் வளமான வருமானம்!

மகசூல்

Published:Updated:
இஞ்சி சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
இஞ்சி சாகுபடி

ணவுகளில் சுவைக்காக மட்டுமல்லாமல், மருந்துப் பொருளாகவும் இஞ்சி சேர்க்கப் படுகிறது. இதை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை யிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது புளியரை. ஊரைச் சுற்றிலும் மலைகள், பசுமை போர்த்திய வயல்கள், மாந்தோப்புகள், பலாத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. நம் வருகையை முன்பே உறுதிப்படுத்தி இருந்ததால் ஊர் எல்லையில் நமக்காகக் காத்திருந்தார் பால்ராஜ். கடைக் கோடியில் உள்ள வயல்களைத் தாண்டி, சிற்றோடையைக் கடந்து மாந்தோப்புகளுக்கு இடையில் இருந்தன அவரது இஞ்சித் தோட்டம். அங்கு, நம்மை அழைத்துச் சென்றவர், ‘‘முதல்ல இதைக் குடிங்க” எனப் பித்தளை டம்ளரில் சூடான இஞ்சிக் காபியைக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார்.

‘‘நாங்க அடிப்படையில விவசாயக் குடும்பம். அப்பா, ரசாயன உரம் பயன் படுத்திதான் விவசாயம் பார்த்துகிட்டு இருந்தார். நான், பள்ளி, கல்லூரியில படிச்சப்பவே விவசாய வேலைகளைப் பார்த்தேன். இந்தப் பகுதியில 15 வருஷத்துக்கு முன்னாலயே இஞ்சி சாகுபடி செஞ்சது எங்கப்பாதான். இஞ்சிக்கு ஆரம்பத்துல ரசாயன உரம் பயன்படுத்திதான் சாகுபடி செஞ்சாங்க.

அறுவடையான இஞ்சியுடன் பால்ராஜ்
அறுவடையான இஞ்சியுடன் பால்ராஜ்

ரசாயன உரம் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சதுல பூச்சித் தாக்குதல், புழுவெட்டு அதிகமா வந்துச்சு. அதைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிச்சாங்க. அப்படியும் கட்டுப்படல. இஞ்சியில காரத்தன்மையும் குறைவா இருந்துச்சு. அது மட்டுமல்லாம, எங்க ஊரு மலையடிவாரத்துல விளையுற மாம்பழத் துக்கும், பலாப்பழத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கும். காரணம், அதோட இனிப்புச்சுவை. அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டுப் பூக்குறதுல இருந்து பழுக்க வைக்கிறது வரைக்கும் ரசாயன மருந்தை அடிக்கிறதுனால அந்தச் சுவையே இல்லாமப் போச்சு. இதெல்லாம் என்னை யோசிக்க வெச்சது.

கல்லூரியில படிக்கும்போதே எனக்கு இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் உண்டாகிடுச்சு. இயற்கை விவசாயத்தைப் பத்தி நம்மாழ்வார் பேசுன காணொலிகளை இணையதளத்துல பார்த்துருக்கேன். நண்பர் ஒருவர் மூலமாத்தான் பசுமை விகடன் அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். பி.எல் முடிச்சு சொந்த ஊருக்கு வந்ததும் வழக்கறிஞர் பணியைச் செய்ய ஆரம்பிச்சேன். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், ஓய்வுபெற்றவர்கள் வரிசையில் என்னை மாதிரியான வழக்கறிஞர்களும் இயற்கை விவசாயம் செய்துகிட்டு வர்ற மகசூல் கட்டுரைகளைப் பசுமை விகடன்ல படிச்சேன். அப்போதான் நாமளும் கிடைக்கிற நேரத்தைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தைச் செஞ்சா என்னன்னு தோணுச்சு.

இஞ்சி
இஞ்சி

‘‘அப்பாக்கிட்ட, ‘இஞ்சியை உணவுலயும், மருந்துலயும் பயன்படுத்துறோம். அதை ரசாயன உரத்துல சாகுபடி செஞ்சா எப்படிப்பா?ன்னு கேட்டேன். ‘நீ சொல்லுறதும் சரிதான்பா. எனக்கு உரம் போட்டுத்தான விவசாயம் செய்யத் தெரியும்’னு சொன்னார் அப்பா. ‘தாத்தா காலத்துல அடியுரமா சாணிக் குப்பை போட்டும், அடுப்புச்சாம்பலைத் தூவியும்தான் விவசாயம் நடந்துச்சுன்னு சொன்னீங்க. அதே மாதிரி செய்வோம். இனி நானே விவசாயத்தைப் பார்த்துக்கிறேன்’னு சொல்லி, விவசாயத்தைக் கையிலெடுத்தேன்.

மண்ணை நாலஞ்சு முறை உழுது பலதானிய விதைப்பு செஞ்சேன். மட்கின தொழுவுரத்தோட மண்புழு உரத்தைக் கலந்து மண்ணை வளப்படுத்துனேன். முதல் வருஷம் சுமாரான விளைச்சல்தான் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்கள்ல நல்ல மகசூல் எடுத்தேன். இப்போ 7 வருஷமா இயற்கை முறையில இஞ்சியைச் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். இந்த நிலம் 3 ஏக்கர். இதுல 2 ஏக்கர்ல அம்பை-16 நெல் சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தி வச்சிருக்கேன். 80 சென்ட்ல இஞ்சி அறுவடை நிலையில இருக்கு. 20 சென்ட்ல மரவள்ளி நட்டு நாலு மாசமாகுது” என்று, தான் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பிய கதையைச் சொன்னவர், வருமானம் குறித்துப் பேசினார்.

இஞ்சி சாகுபடி வயல்
இஞ்சி சாகுபடி வயல்

‘‘நீதிமன்றத்துக்குப் போயிட்டு விவசாயத் தையும் பார்க்குறது கொஞ்சம் சவாலா இருந்தாலும் தினமும் காலையில 6 மணியில இருந்து 8 மணிவரைக்கும் தோட்டத்துல இருப்பேன். தண்ணி பாய்ச்சுறது, இடுபொருள் தயார் செய்யுறதுன்னு விவசாய வேலைகளைப் பார்த்துடுவேன். மீன் அமிலம், பஞ்சகவ்யா, சூடோமோனஸ் கரைசல்களையும் கொடுத்தா இன்னும் நல்ல விளைச்சல் கிடைச்சிருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, கொரோனா பரவல் ஆரம்பிச்சப்போ இஞ்சியின் மருத்துவக் குணங்களைப் பத்தி சமூக வலைதளங்கள், ‘மீடியா’க்கள்ல பரவினப்போ இஞ்சிக்கு அதிக தேவை இருந்துச்சு. ஒரு கிலோ இஞ்சி, 65 ரூபாய்ல இருந்து 110 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. அந்த வருஷம் எதிர்பார்க்காத வருமானம் கிடைச்சிச்சு.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

போன வருஷம் 80 சென்ட்ல 2,650 கிலோ இஞ்சி கிடைச்சது. அதுல விதைக்காக 300 கிலோ எடுத்துக்கிட்டேன். மீதமுள்ள 2,350 கிலோ இஞ்சியை விற்பனை செஞ்சேன். போன வருஷம் விலை குறைஞ்சுப் போச்சு. கிலோ 35 ரூபாய்ல இருந்து 55 ரூபாய் வரைக்கும்தான் விலை போச்சு. கிலோ 40 ரூபாய்னு கணக்கு வெச்சுக்கிட்டாலும் 94,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. அதுல உழவு முதல் அறுவடை வரைக்குமான செலவு 28,500 ரூபாய் கழிச்சதுல 65,500 ரூபாய் லாபமாக் கிடச்சது. ‘விளை பொருளை மதிப்புக்கூட்டினா அதோட மதிப்பே தனி’ன்னு நம்மாழ்வார் ஐயா சொல்லுவார். அடுத்த முறை இஞ்சியைச் சுக்குவாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்லாம்னு இருக்கேன். நீண்டநாள் இருப்பு வைக்கலாம். நல்ல விலைக்கு விற்கலாம்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பால்ராஜ்,

செல்போன்: 97873 04633.

இப்படித்தான் செய்யணும் இஞ்சி சாகுபடி

80 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி செய்வது குறித்து பால்ராஜ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

களிமண்ணைத் தவிர மற்ற எல்லா மண்ணும் இஞ்சி சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசி, ஐப்பசிப் பட்டத்தில் நடலாம். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி எடுக்க வேண்டும். பாத்தியின் நீளம், சாகுபடி செய்யும் நிலத்தைப் பொறுத்தது. ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடைவெளி ஓர் அடி இருக்க வேண்டும்.

இஞ்சி சாகுபடி வயல்
இஞ்சி சாகுபடி வயல்

பாத்திகளின் மேல், வரிசைக்கு வரிசை, குழிக்குக் குழி ஒன்றரை அங்குலம் இடைவெளியில் அரையடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்குள்ளும் 2 கைப்பிடி அளவு மட்கின தொழுவுரத்தைப் போட்டு விதையைக் கிடைமட்டமாக வைத்து மண்ணால் மூடி விட வேண்டும். 80 சென்ட் பரப்பளவில் நடவு செய்ய 280 முதல் 300 கிலோ இஞ்சி விதை தேவை. நடவுக்கு முன்பாகப் பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து 5 நிமிடங்கள் வரை உலர வைத்து நடவு செய்யலாம். இதனால் பூஞ்சண நோய்கள் கட்டுப்படும்.

விதைப்பதற்கு முதல் நாள் நிலத்தைத் தண்ணீர் பாய்ச்சி ஈரப்படுத்த வேண்டும், விதை ஊன்றிய அன்று தண்ணீர் விடத் தேவையில்லை. மறுநாள் தென்னை ஓலை, வேப்பிலை, மரவள்ளிக்கிழங்கு இலை, அகத்திக்குலை ஆகியவற்றை மூடாக்காகப் போட வேண்டும். 8-ம் நாள்தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காரணம், முதலில் விதை இஞ்சியில் இருக்கும் ஈரத்தை பயன்படுத்தியே, வளரத் தொடங்கும். அந்த சமயத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். 30 முதல் 35-ம் நாளில் விதை முளைக்கும். 40 முதல் 45-ம் நாளில் பாத்தியின் மேல்பகுதியிலேயே முளைப்புத் தென்படும். 60 முதல் 65-ம் நாள்களில் இரண்டு இலைகள் தென்படும். அதற்குப் பிறகு மூடாக்கை எடுத்துவிடலாம்.

இஞ்சி
இஞ்சி

3 மற்றும் 6-ம் மாதம் என, இரண்டு முறை களை எடுக்க வேண்டும். 5-ம் மாதத்திலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். பனிக் காலத்தில் சாறு உறிஞ்சும் பூச்சி, குருத்துப்புழுக்களின் தாக்குதல் இருக்கும். இலையை அரித்துக் குருத்து வழியாக இஞ்சிக்குள் சென்றுவிடும். இதைத் தவிர்க்கப் பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்பிலைக் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

7-ம் மாதத்தில் இஞ்சி பயிரில் ‘மைக்’ போன்ற தோற்றத்தில் ரோஸ் நிறப் பூக்கள் பூக்கும். அந்த நேரத்தில் மண் அணைக்க வேண்டும். இதனால், தூரில் இஞ்சி அதிகமாகக் கட்டும். 10-ம் மாதத்தில் இஞ்சிப் பயிர்கள் பழுத்துக் காய்ந்துவிடும். அந்த நேரத்தில் சந்தையில் விலையையும் தேவையையும் பொறுத்து அறுவடை செய்யலாம். விதைக்காக என்றால் 11 முதல் 12-ம் மாதத்தில் எடுத்தால் திரட்சியாக இருக்கும்.

வேப்பிலைக் கரைசல்

10 கிலோ வேப்பிலையை உரலில் போட்டு, உலக்கையால் இடிக்க வேண்டும். அதை துவையல் பதத்துக்கு எடுத்து, 50 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 500 கிராம் மஞ்சள்தூளைக் கலக்கினால் வேப்பிலைக் கரைசல் தயார். இதை ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.