Published:Updated:

ஏக்கருக்கு ரூ.5,50,000 தித்திப்பான லாபம் கொடுக்கும் பன்னீர் திராட்சை!

பன்னீர் திராட்சை!
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர் திராட்சை!

மகசூல்

ஏக்கருக்கு ரூ.5,50,000 தித்திப்பான லாபம் கொடுக்கும் பன்னீர் திராட்சை!

மகசூல்

Published:Updated:
பன்னீர் திராட்சை!
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர் திராட்சை!

திராட்சைச் சாகுபடியில் விவசாயத்தில் தேனி மாவட்டம் முதன்மையாகத் திகழ்ந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் திராட்சைச் சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில், இயற்கை முறையில் பன்னீர் திராட்சையைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செலின்.

திருநெல்வேலி மாவட்டம், டி.கள்ளிகுளத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது அச்சம்பாடு கிராமம். இங்குதான் உள்ளது செலினின் திராட்சைத் தோட்டம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பந்தலுக்குள் கறுநீல நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தன திராட்சைக் கொத்துகள். கையடக்கக் கத்தரியால் லாகவமாக அறுவடை செய்துகொண்டிருந்தனர் பெண் தொழிலாளர்கள். சிலர், அறுவடை செய்யப்பட்ட திராட்சைக் கொத்துகளை அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த செலின் மற்றும் அவரின் சகோதரர்களான ரீகன், ராஜன் ஆகியோரைச் சந்தித்தோம்.

பளபளக்கும் பன்னீர் திராட்சையுடன் செலின்
பளபளக்கும் பன்னீர் திராட்சையுடன் செலின்

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாக பேசத் தொடங்கினார். “கன்னி யாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பக்கத்துல இருக்குற காணிமடம்தான் என்னோட சொந்த ஊரு. இப்பவும் குடும்பத்தோட அங்கதான் இருக்கோம். விவசாயத்தைக் கவனிச்சுக்கிறதுக்காகத் தினமும் அங்க இருந்து வந்துட்டுப் போறேன். அடிப்படையில விவசாயக் குடும்பம்தான். எங்கப்பா ராஜமணி, தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செஞ்சிட்டு இருந்தார். இயற்கை பாதி, செயற்கை பாதிங்கிற கணக்குலதான் விவசாயம் நடதுச்சு. அறுவடை செய்யுற வாழைக்குலைகள், காய்கறிகளை நானே சந்தைக்குக் கொண்டு போவேன்.

‘என்ன படிப்பு படிச்சு வேலை பார்த்தாலும் ஒரு கட்டத்துல அலுப்பு தட்டும். அந்த நேரத்துல விவசாயத்துக்குதான் வந்தாகணும். அதனால விவசாய வேலைகளையெல்லாம் கத்துக்கணும். அதுதான் சோறு போடும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். பள்ளிக்கூடம் போகலன்னாகூட ஏன்னு கேட்க மாட்டார். ஆனா, தோட்டத்துக்கு வரலன்னா ‘என்ன ஆச்சு’ன்னு கேட்பார். விவசாயத்தை அப்படி நம்பி, எங்களுக்கும் அந்த நம்பிக்கையை ஊட்டியவர்.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்

‘பி.இ, எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்’ முடிச்சுட்டு, ‘எலெக்ட்ரோ டெக்னிக்கல் ஆபீஸரா’ கப்பல்ல 10 வருஷம் வேலை பார்த்தேன். பல நாடுகளுக்குப் போயிருக்கேன். இதுவரை நான் போன எல்லா நாடுகள்லயும் விவசாயத்துக்குன்னு தனி மதிப்பு இருக்கு. இத்தனை வருஷம் கப்பல்லயே வேலை பார்த்துட்டோம். இனிமேல் சொந்த ஊருல ‘செட்டில்’ ஆகணும். அதுலயும் விவசாயத்தைச் செய்யலாம்னு ஒரு யோசனை வந்துச்சு. அப்பா சொன்ன அலுப்பும், விவசாயப் பாதையும் அப்போ ஞாபகம் வந்துச்சு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பைலட் ஒருவர், ‘நீங்கள் விவசாயம் செய்தால் திராட்சைத் தோட்டம் போடுங்கள். கோடைக்காலத்தில் நல்ல மகசூலும் வருமானமும் கிடைக்கும்’னு சொன்னார்.

இனி விவசாயம்தான்னு உறுதியானதும், இந்த 5 ஏக்கர் நிலத்தை வாங்கி, சீர்படுத்தி மண்ணை வளமேத்த ஆரம்பிச்சேன். தேனி மாவட்டத்துல இருக்க 20-க்கும் மேற்பட்ட திராட்சைத் தோட்டங்களுக்கு நேர்ல போனேன். அவங்களோட சாகுபடி முறை களைக் கேட்டேன். ‘இந்தப் பகுதிகள்ல சீதோஷ்ண நிலை சாதகமா இருக்குறதுனால திராட்சைச் சாகுபடி சிறப்பா நடக்குது. உங்க ளோடது நல்ல வெயில் அடிக்கிற ஏரியா. ஒத்து வருமான்னு தெரியல’ன்னு பலர் சொன்னாங்க. ஒரு சிலர், ‘முதல் கட்டமா குறைவான எண்ணிக்கையில திராட்சைக் கொடி வச்சுப் பாருங்க. வந்துச்சுன்னா வெற்றிதானே’ன்னு சொன்னாங்க.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்

எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. முதல் கட்டமா 50 கொடிகள் வச்சேன். அதுக்காகச் சின்னப் பந்தலும் அமைச்சேன். கொடி வீசி ரெண்டரை மாசத்துல பந்தலுக்கு ஏறினதும் நம்பிக்கை வந்துடுச்சு. பூப்பூத்துக் காய்களைப் பார்த்ததும் எனக்குச் சந்தோஷம் தாங்கல. அதுக்கப்புறம் ஒரு ஏக்கருக்கு கல் பந்தலை நட்டேன். காய்ப்பும் நல்லா இருந்துச்சு. இப்போ நாலு வருஷமா பழம் பறிச்சிட்டு இருக்கேன். இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல திராட்சை பறிப்புல இருக்கு. ஒரு ஏக்கர்ல எலுமிச்சை காய்க்குற நிலையில இருக்கு. மீதமுள்ள நிலத்தை மா, கொய்யா சாகுபடிக்காகத் தயார்படுத்தி வச்சிருக்கேன்” என்றவர், வருமானம் மற்றும் விற்பனை குறித்துப் பேசிய செலின்,

“ஆரம்பத்துல தயக்கத்தோட விவசாயத் தைத் தொடங்கினேன். என்னோட நம்பிக்கை யும், மண்ணோட வளமும், இயற்கை இடு பொருளும் நல்ல மகசூலைக் கொடுத்திடுச்சு. தேனி, திண்டுக்கல் மாவட்டத்துல சாகுபடி செய்யுற திராட்சைக்கான சாகுபடிச் செலவைவிட எனக்குப் பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனா, அந்தப் பகுதி விவசாயிங்க ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளுக்குச் செய்ற செலவுல நாலுல ஒரு பங்குதான் ஆகுது. ஆரம்பகட்டத்துல 8,86,500 ரூபாய் வரை செலவாச்சு. இந்தச் செலவு அதிகம்னாலும் இது ஆரம்ப காலகட்டத்துக்கு மட்டும்தான்.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்

கல், கம்பிப் பந்தல் எல்லாமே 20 வருஷத் துக்கும் மேல தாக்குப் பிடிக்கும். முதல் அறுவடையில சுமாரான வருமானம் கிடைச்சாலும் அடுத்தடுத்த வருஷங்கள்ல நல்ல வருமானம் கிடைக்கும். அடியுரம், கவாத்து, இடுபொருள், பூச்சி-நோய் மேலாண்மை, இதை மட்டும் ஒழுங்காச் செய்தாலே திராட்சைச் சாகுபடியில நாமதான் ராஜா. திராட்சையில வருஷத்துக்கு மூணு சீஸன் உண்டு. மழைக்காலத்துல சரியான விளைச்சல் இருக்காது. அடுத்த ரெண்டு சீஸன்கள்ல கோடைக்காலத்துச் சீஸன்லதான் எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுக்கேத்த விலையும் இருக்கும். நாங்க சாகுபடி செய்றது இயற்கை முறை திராட்சை விவசாயம்.அதனால வருஷம் முழுக்கவும் ஒரு கிலோ திராட்சையை 60 ரூபாய்னு ஒரே விலையாத்தான் விற்பனை செய்றேன்.

செலவு-வரவு அட்டவணை
செலவு-வரவு அட்டவணை

ஆரம்பத்துல பழக்கடைகள், பழ மண்டிகள்ல விற்பனைக்காகக் கொண்டு போனப்போ, தேனி, திண்டுக்கல் மாவட்டத் துத் திராட்சை விலையை ஒப்பிட்டு விலை பேசுனாங்க. திராட்சை வராதுன்னு சொன்ன இடத்துல, அதுவும் இயற்கை விவசாயத்துல விளைஞ்சதுன்னு சொல்லியும் வியாபாரிங் களுக்குப் புரியல. கஷ்டப்பட்டு விளைய வச்சு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யணும்னு எனக்கு அவசியம் இல்ல. டி.கள்ளிகுளம், வள்ளியூர், திசையன்விளை சுற்று வட்டாரப் பகுதிகள்லயே விற்பனை செஞ்சுடுறேன். தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டும் போறாங்க. தரத்தைப் புரிஞ்சுக்கிட்டுக் கேட்கிறவங்களுக்கு 2 கிலோ அட்டைப் பெட்டியில வெச்சு அனுப்புறேன்.

போன வருஷம் மூணு சீஸன்லயும் சேர்த்து ஒரு ஏக்கர்ல 16 டன் பழம் கிடைச்சுது. இதுல ஒரு டன் வரைக்கும் பழம் சேதாரமாயிடுச்சு. 15 டன் பழம் விற்பனை மூலமா 9 லட்சம் ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல, மூணு சீஸனுக்கும் சேர்த்துப் பராமரிப்புச் செலவு 3,50,000 ரூபாய் கழிச்சு, 5,50,000 ரூபாய் லாபமாக் கிடைச்சுது. திராட்சையை கிரேப் ஜூஸ், உலர்திராட்சையா மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாங்கிற திட்டமும் இருக்கு. வள்ளியூர் தோட்டக்கலை அதிகாரிங்க எனக்கு நிறைய ஆலோசனை சொன்னதோடு உதவியும் செஞ்சாங்க. திராட்சைச் சாகுபடிய வெற்றிகரமாச் செய்யுறதுக்கு என்னோட ரெண்டு தம்பிகளோட ஒத்துழைப்பும் காரணம்” என்றார் மகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, செலின்,

செல்போன்: 98652 62394.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் பன்னீர் திராட்சைச் சாகுபடி செய்வது குறித்துச் செலின் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பன்னீர் திராட்சைச் சாகுபடி செய்யச் செம்மண், மணல் கலந்த செம்மண் ஏற்றது. குளிர்காலம், மழைக்காலம் தவிர மற்ற மாதங்களில் பயிரிடலாம். ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. நிலத்தை இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். அடுத்ததாகப் பந்தல் அமைக்க வேண்டும். சுற்றுப் பகுதியில் உள்ள வேலிக்கற்கள் 10 அடி இடைவெளியிலும், பந்தலுக்குள் வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில் ஒரு கல் வீதம் ஊன்றி கம்பி கட்டிப் பந்தல் அமைக்க வேண்டும். பறவைகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப் பந்தலுக்கு மேல் பகுதியிலும் சுற்றிலும் வலை அமைக்க வேண்டும்.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்

3 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பந்தலின் கடைசி வரை நீளமாக வாய்க்கால் எடுக்க வேண்டும். ஒரு வாய்க்காலுக்கும் அடுத்த வாய்க்காலுக்கும் உள்ள இடைவெளி 10 அடி. அந்த வாய்க்காலுக்குள் வேப்பிலை, எருக்கு, ஆவாரை என இலை தழைகளைப் போட்டு நிரப்பி, மண் போட்டு மூட வேண்டும். 15 நாள்கள் வரை தினமும் தண்ணீர் விட வேண்டும். பிறகு, வாய்க்காலில் செடிக்குச் செடி 2.5 அடி இடைவெளியில் (அடர் நடவு) அரை அடி ஆழத்தில் குழி எடுத்து, இரண்டு கை தொழுவுரம் போட்டு அதில், ‘ரூட் ஸ்டாக்’ என்ற வேர் கொடியை நட வேண்டும்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சீதோஷ்ண நிலை சரியாக இருப்பதால், திராட்சைக்கொடியை நிலத்தில் நேரடியாகவே நடுகிறார்கள். ஆனால், அதிக வெயில் அடிக்கக் கூடிய பகுதிகளில் நேரடியாக நட்டால் திராட்சைக் கொடி சரியாக வளராது. அதனால், ரூட் ஸ்டாக் வேர் கொடியை நட்டு அதனுடன் திராட்சைக் கொடியை ஒட்டுக் கட்டித்தான் வளர்க்க முடியும். ரூட் ஸ்டாக் என்பது திராட்சைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைக் கொடி.

பன்னீர் திராட்சை
பன்னீர் திராட்சை

இந்தக் கொடியை நட்டு 3 மாதங்கள் வரை வளர விட வேண்டும். பிறகு, அதில், 2 கிளையை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றைக் கட்டிங் செய்துவிட வேண்டும். அதில், திராட்சைக் கொடிக் குச்சியைச் சொருகி ‘பிளாஸ்டிக்’ தாளால் இறுக்கி ஒட்டுக் கட்டிவிட வேண்டும். ஒட்டுக்குக் கீழ் துளிர்த்தால் ரூட் ஸ்டாக் கொடிதான் வளரும். திராட்சைக்கொடி வளராது. அவ்வாறு ஒட்டுக்குக் கீழ் துளிர்த்தால் அதைக் கிள்ளிவிட வேண்டும். எனவே, இதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு கொடியின் தூர்ப்பகுதியில் தென்னை ஈக்குகள் நீக்கப்பட்ட குச்சியை ஊன்றி, அதில் திராட்சைக் கொடியைக் கட்டி மேல் எழுப்ப வேண்டும். ஒரு மாதத்தில் 3 அடி உயரம் வரை வளரும். அந்த நேரத்தில் ஒட்டுக்கட்டிய பிளாஸ்டிக் தாளை பிரித்து விட வேண்டும். இரண்டரை மாதத்தில் கொடி, பந்தலின் மேல் ஏறிவிடும். கொடி பந்தலில் ஏறும் வரை தினமும் கண்காணித்துக் கொடி வளையாமல் நேராகச் செல்லும்படி வாழை நாரால் கட்டி வர வேண்டும். கொடியில் 13 இலைகள் வந்ததும் அதன் நுனியைக் கிள்ளிவிட வேண்டும்.

பச்சை பசேலென்று பரந்து விரிந்திருக்கும் திராட்சைத் தோட்டம்
பச்சை பசேலென்று பரந்து விரிந்திருக்கும் திராட்சைத் தோட்டம்

ஒட்டுக்கட்டிய பிறகு வாரம் ஒருமுறை, ஒவ்வொரு கொடியின் தூரைச் சுற்றியும் 200 மி.லி கடலைப்பிண்ணாக்குக் கரைசலை விட வேண்டும் (200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘பிளாஸ்டிக் டிரம்’மில் 10 கிலோ கடலைப்பிண்ணாக்கு போட்டுத் தண்ணீர் சேர்த்து 3 நாள்கள் வரை புளிக்க வைத்தால், கடலைப்பிண்ணாக்குக் கரைசல் தயார்). மூன்று மாதங்கள் வரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். ஒட்டுக்கட்டியதிலிருந்து 6-வது மாதத்தில் பூக்கவிட்டால் நன்றாக இருக்கும்.

அதுவரை பூக்கும் பூக்களை உதிர்த்து விட வேண்டும். கவாத்துச் செய்ததும் வெட்டப்பட்ட கொடிகளில் இருந்து 3 நாள்கள் வரை பிசுபிசுப்பான திரவம் சொட்டுச் சொட்டாக வடியும். அந்த நேரத்தில் தண்ணீர் விடக் கூடாது. அப்போது, ஒவ்வொரு கொடியின் தூரைச் சுற்றி அரை அடிச் சுற்றளவில் குழி எடுத்து, வேப்பம் பிண்ணாக்கு 200 கிராம், கடலைப் பிண்ணாக்கு 200 கிராம், புங்கன் பிண்ணாக்கு 100 கிராம், ஆமணக்குப் பிண்ணாக்கு 100 கிராம் ஆகியவற்றைக் கலவையாக்கி வைக்க வேண்டும். திராட்சைக் கொத்தில் கறுப்பு நிறத்தில் ஓரிரு பழங்கள் தென்பட்டதுமே ஒவ்வொரு கொடியின் தூரிலும் 5 கிலோ மட்கின தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும்.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் திராட்சை கொத்துகள்

ஆட்டு எரு, மாட்டு எரு இரண்டையும் கலந்து வைத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. திராட்சைக் கொடியைப் பொறுத்தவரைக்கும் எந்த அளவுக்கு உரம் போடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மகசூலும் சுவையும் கிடைக்கும். திராட்சையை அதிகம் தாக்குவது சாம்பல்நோய். இந்த நோய் இலைகள், பழங்களில் படர்ந்து குலைகளின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதைத் தவிர்க்க ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சைக்கொல்லியைத் தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டைக் கரைசல் மூலமாகவும், சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

திராட்சை அறுவடை
திராட்சை அறுவடை

காய்ந்த வேப்பங்கொட்டையை ஒரு கிலோ எடுத்து அரைத்துத் தூளாக்கி 2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனுடன் 300 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து 24 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். பின் அந்தக் கரைசலை வடிகட்டினால், ‘சுண்ணாம்புக்கரைசல்’ தயார். 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி சுண்ணாம்புக் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பழ ஈக்களையும் இது விரட்டிவிடும். பூக்கள் மலர்ந்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கியதும், பந்தலில் தொங்கும் கொத்துகளை வாழை நாரால் கம்பியுடன் இழுத்துக் கட்ட வேண்டும். அறுவடைக்குப் பிறகு, கவாத்துச் செய்துவிட்டு களை எடுக்க வேண்டும். ஒருமுறை நடும் கொடியை, தொடர்ந்து முறையாகப் பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து பழம் பறிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism