Published:Updated:

ஒரு ஏக்கர்... 85 நாள்கள்... ரூ.31,000 லாபம் பலன் கொடுத்த பச்சைப்பயறு சாகுபடி

பச்சைப்பயறு
பிரீமியம் ஸ்டோரி
பச்சைப்பயறு

மகசூல்

ஒரு ஏக்கர்... 85 நாள்கள்... ரூ.31,000 லாபம் பலன் கொடுத்த பச்சைப்பயறு சாகுபடி

மகசூல்

Published:Updated:
பச்சைப்பயறு
பிரீமியம் ஸ்டோரி
பச்சைப்பயறு

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வந்த பச்சைப் பயறு, காலப்போக்கில் குறைந்துவிட்டது. இப்போது ஒரு சில விவசாயிகள் மட்டும் மேட்டு நிலங்களில் இதைச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்த வரிசையில், தஞ்சாவூர்-புதுக்கோட்டை எல்லையோர கிராமமான தெற்குவாசல்பட்டி யைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் பச்சைப்பயறு சாகுபடி செய்து, நிறைவான விளைச்சல் கண்டுள்ளார்.

ஒரு பகல் பொழுதில் அவர் தோட்டத்துக்குச் சென்றோம். அறுவடை செய்த பச்சைப் பயற்றைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பச்சைப் பயறுல சத்துகள் அதிகம். உடம்புக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். வயித்துப் புண்ணையும் ஆத்தும். ஞாபசக்தியை அதிகரிக்கும். இதனால்தான் எங்க ஊருல, பச்சைபயறை வேக வச்சு, நாட்டுச்சர்க்கரை கலந்து, குழந்தைகளுக்கு வாரத்துல மூணு நாள் கொடுக்குறது வழக்கமா இருந்துச்சு. நாங்க இப்பவும் இதைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். பாசிப்பயறுல துவையல் செஞ்சும் சாப்பிடுவோம். ரொம்பவே சுவையா இருக்கும். பச்சைப்பயறுல நார்ச் சத்து நிறைஞ்சிருக்குறதுனால, இதைச் சாப்பிட்டா மலச்சிக்கல் நீங்கும். பச்சைபயறை முளைக்கட்டி, நிழல்ல உலர்த்தி, மாவாக்கி, அதோட பனைவெல்லம் சேர்த்துப் பெண்கள் சாப்பிட்டா, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்’’ என அதன் மருத்துவக் குணங்களை அடுக்கிக்கொண்டே போனவர், பச்சைப்பயறு விவசாயம் குறித்துப் பேசினார்.

வயலில் ராஜேந்திரன்
வயலில் ராஜேந்திரன்

குறைவான தண்ணீரிலேயே விளைந்துவிடும்

‘‘இதைச் சாகுபடி செய்ய அதிக தண்ணீர் தேவைப்படாது. 10 நாள் களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வறட்சி யைத்தாங்கி வளரக்கூடியது. கார்த்திகை மாசக் கடைசியில இருந்து மார்கழி மாசத்துக்குள்ள இதை விதைச்சா, விளைச்சல் சிறப்பா இருக்கும். 75 - 85 நாள்கள்ல அறுவடைக்கு வரும்.

ஒவ்வொரு வருஷமும் பச்சைப் பயறு சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். நான் சாகுபடி செய்றது நாட்டுரகம். பல வருஷமா, தொடர்ச்சியா விதை எடுத்து வச்சு, சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம்’’ என்றவர், அவரைப் பற்றிய தகவல் களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, குடும்பத் தொழிலான விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இங்க ஆற்றுப்பாசனத் துக்கு வாய்ப்பில்ல. அப்பெல்லாம் ‘போர்வெல்’ வசதியும் கிடையாது. அதனால, விவசாயத்தை விட்டுட்டு, ஒரு தனியார் நிறுவனத்துல வேலைக்குப் போனேன். ஒரு கட்டத்துல அந்த வேலையில சலிப்பு ஏற்பட்டுச்சு. அதை விட்டுட்டு, மறுபடியும் விவசாயத்துக்கே வந்துட்டேன். வந்த பிறகு, போர்வெல் அமைச்சு தொடர்ந்து விவசாயத்துல ஈடுபட்டுட்டு வர்றேன்.

எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. கரிசல் கலந்த மணல் பாங்கான நிலம். நெல், மரவள்ளி, கடலை, உளுந்து, பச்சையப்பயறுனு பலவித மான பயிர்கள சாகுபடி செய்றோம். 10 வருஷத்துக்கு முன்ன, அதிக அளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன் படுத்திதான் சாகுபடி செஞ்சு கிட்டு இருந்தோம். செலவு அதிகமானதோடு பூச்சி, நோய்த்தாக்குதலும் அதிக மாகிகிட்டே இருந்துச்சு. அதனால படிப்படியா ரசாயன உரங்களோட அளவை குறைச்சுக்கிட்டே வந்தோம். கடந்த 5 வருஷமா முழுமையா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம். இதுக்காக 6 மாடுகள் வளர்க்குறோம்’’ என்றவர், பச்சைப்பயறு சாகுபடி குறித்த அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.

பச்சைப்பயறு  வயல்
பச்சைப்பயறு வயல்

‘‘பச்சைப்பயறு சாகுபடியைப் பொறுத்த வரைக்கும், நெத்துப் பறிக்க ஆள் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். இதனாலேயே எங்க பகுதியில நிறைய விவசாயிகள், தனிப்பயிரா இதைச் சாகுபடி செய்றதை கைவிட்டுட்டாங்க. வீட்டுத் தேவைக்காக வரப்பு ஓரத்துலயும், கடலையில ஊடுபயிராக இதைச் சாகுபடி செய்றாங்க. ஆனா, நான் இதை ஒரு ஏக்கர்ல தனிப்பயிராச் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். ரெண்டு தடவை பூ பூத்து காயாகி, நெத்தாக மாறும். இதுல தான் விவசாயிகளுக்கு நெருக்கடியான சூழல் வருது. ஆள்கள் வச்சு பறிச்சா... நல்லா முத்தின நெத்துகளை மட்டும் பறிக்கலாம். மீதியுள்ள காய்களை அது நெத்தாக முத்துற வரைக்கும் காத்திருந்து பறிக்கலாம். அதுமாதிரி பறிச்சா கூடுதல் மகசூல் எடுக்கலாம். ஆனால், வேளையாள் தட்டுப்பாடால, எங்க பகுதியில அதுக்கு வாய்ப்பே இல்ல. ஒருவேளை ஆள்கள் கிடைச்சாலுமே கூட, நிறைய கூலி கொடுத் தாகணும். அது கட்டுப்படியாகாது. அதனால தான் நாங்க 70 - 80 சதவிகிதம் நெத்துகள் முத்தியிருந்தாலே, செடியோட அறுவடை பண்ணிடுறோம். அறுவடை பண்ணி, வெயில்ல காய வச்சு, டிராக்டரை விட்டு அடிப்போம். நெத்துகள் உடைஞ்சு பயறு உதிர்ந்துடும். பிறகு, தூத்தி, புடைச்சு சுத்தப்படுத்துவோம்’’ என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.

அட்டவணை
அட்டவணை


‘‘ஒரு ஏக்கர்ல, 7 குவிண்டால் (700 கிலோ) மகசூல் கிடைச்சிருக்கு. ஒரு குவிண்டாலுக் குச் சராசரியா 7,000 ரூபாய் வீதம் 49,000 ரூபாய் கிடைக்கும். இதுல செலவு போக 31,600 ரூபாய் லாபம் கிடைக்கும். குறுகிய நாள்கள்ல இது நிறைவான லாபம். அறுவடைக்குப் பிறகு, செடியை நல்லா வெயில்ல காய வச்சு உலர் தீவனமா ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்திக்குவோம். இது நல்ல சத்தான தீவனம். எங்களோட ஆடுகள் இதை விரும்பிச் சாப்பிடும்’’ என்றவரிடம் விடைபெற்றுக் கிளம் பினோம்.

தொடர்புக்கு: ராஜேந்திரன்,

செல்போன்: 94438 66400

இப்படித்தான் பச்சைப்பயறு சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்துக்கான பச்சைப்பயறு சாகுபடி பற்றி ராஜேந்திரன் சொல்லிய தொழில்நுட்பம், இங்கே பாடமாக இடம் பெறுகிறது.

விதைநேர்த்தி

விதைப்புச் செய்வதற்கு முதல்நாள், மாலைநேர இளம் வெயிலில், விதைகளைக் காய வைக்க வேண்டும். மறுநாள் 8 கிலோ விதையுடன் 50 மி.லி சூடோமோனஸ் திரவம், 50 மி.லி ஆறிய சோற்றுக் கஞ்சியைக் கலந்து, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, அதன் பிறகு விதைப்புச் செய்ய வேண்டும். வேர் அழுகல் நோய் வராமல் தடுக்க, விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

பச்சைப்பயறு  அறுவடை
பச்சைப்பயறு அறுவடை

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 2 சால் புழுதி உழவு ஓட்டி, அடியுரமாக 250 கிலோ மண்புழுவுரம் இட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட பச்சைப்பயறு விதை 8 கிலோ தெளிக்க வேண்டும். பிறகு, இரண்டு அடி அகலம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைப்பு செய்த பிறகு, பார் அமைத்தால்தான், மண்ணால் விதைகள் மூடப்பட்டு, அவை முளைக்கத் தொடங்கும். சாறு உறிஞ்சும் பூச்சிகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 15-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் தலா 300 மி.லி வேப்ப எண்ணெய், புங்கெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

20-ம் நாள் பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 25-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தசகவ்யா, 400 மி.லி சூடோமோனஸ் இவற்றோடு, தனியாக அரை லிட்டர் தண்ணீரில் 400 மி.லி உயிர் பூஞ்சண திரவம், 250 கிராம் வெல்லம், 250 கிராம் தயிர் கலந்து 8 மணிநேரம் ஏற்கெனவே ஊற வைத்திருந்த கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 750 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் பூப்பூக்கும் தருணத்தில் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தசகவ்யா, 500 மி.லி தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 50-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 750 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தசகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். 75 - 85 நாள்களில் நெற்றுகள் முற்றி அறுவடைக்கு வரும்.

தேனாம்படுகை பாஸ்கரன்
தேனாம்படுகை பாஸ்கரன்

சாகுபடி குறைவுக்கு போர்வெல்தான் காரணம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் தரிசில் பச்சைப்பயறு சாகுபடி செய்வது கைவிடப்பட்டது குறித்து, தஞ்சாவூர் மாவட்டம் தேனாம்படுகையைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘முன்னாடியெல்லாம், டெல்டா விவசாயிகள்ல பெரும்பாலானவங்க, சம்பா, தாளடி அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, உளுந்து, பச்சைப்பயறு தெளிக்கறதை வழக்கமா வச்சிருந்தாங்க. நெல் வயல்ல உள்ள ஈரத்தையும் சத்து களையும் எடுத்துக்கிட்டு அது வளரும். நெல்லை அறுவடை செஞ்ச பிறகு, பயறு செடிகள் வேகமா வளர்ச்சி அடைஞ்சு 65 - 85 நாள்ல மகசூல் கொடுக்கும். இது ரொம்பவே அவசியமானது. அப்பெல்லாம் நெல்லைக் கையால் அறுவடை செஞ்சதுனால அது சாத்தியமாச்சு. ஆனா, காலப்போக்குல வேலையாள்கள் தட்டுப்பாடால், நெல் அறுவடைக்கும், வைக்கோல் கட்டுறதுக்கும் இயந்திரங்களைத்தான் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்தாச்சு.

அதனால, நெல் தரிசுல பயறு சாகுபடி செய்றதையே விவசாயிகள் கைவிட்டுட்டாங்க. மெஷின்கள் பயன் படுத்துறதா இருந்தா, முன்கூட்டியே வயலை நல்லா காயவிடணும். ஆனா, பயறு செழிப்பா வளர்ந்து வர மண்ணுல ஈரம் அவசியம். குறிப்பா, மெஷின் மூலம் நெல் அறுவடை செய்றப்பவும், வைக்கோல் கட்டும்போதும், அதோட கனத்துனால, உளுந்து, பச்சைப்பயறு பெருமளவு நசுங்கி பாதிக்கப்படும். நெல் தரிசுல பயறு சாகுபடி கைவிடப்பட்டதுக்கு இதுதான் முக்கியமான காரணம். போர்வெல் மூலம் தண்ணி கிடைக்குறதுனால, முன்பட்ட கோடையிலயும் நெல் சாகுபடி செய்யதான் விவசாயிகள் ஆர்வம் காட்டுறாங்க. பயறு சாகுபடி குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம்’’ என்றார்.

பச்சைப்பயறு
பச்சைப்பயறு

இயற்கை முறையில் பூச்சித்தாக்குதல் குறைவு!

பூச்சி, நோய் மற்றும் இடுபொருள் மேலாண்மை குறித்துப் பேசிய ராஜேந்திரன், ‘‘பச்சைப்பயறு சாகுபடியில மாவுப்பூச்சி, காய்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளைச் சமாளிக்கிறதுதான் சவாலான விஷயம். ரசாயன உரங்கள் அதிகமா பயன்படுத்தினா இந்தப் பாதிப்புகள் அதிகமா இருக்கும். ஆனால், நான் இதை இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால, பூச்சி, நோய்த்தாக்குதல் சொல்லிக்குற அளவுக்கு இல்ல. மண்புழு உரம், தசகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல், ஜீவாமிர்தம், வேப்ப எண்ணெய்-புங்கெண்ணெய் கரைசல், உயிர் உரங்கள் பயன்படுத்துவேன். செடிகள் நல்லா செழிப்பா விளைஞ்சு, நிறைய நெத்துகள் உருவாகி இருந்துச்சு’’ என்றார்.

பச்சைப்பயறு சாகுபடிக்கு சிறப்புத் திட்டம்!

தமிழ்நாட்டில் நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காகத் தமிழக வேளாண்மைத்துறை `நஞ்சை தரிசில் பயறு சாகுபடி’ சிறப்புத் திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டம் குறித்துப் பேசும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், ‘‘தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 7.76 லட்சம் டன் பயறு வகைப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தமிழகத்தின் தேவையோ 12 லட்சம் டன். தற்போதைய உற்பத்தியை ஒப்பிடும்போது 4.24 லட்சம் டன் பற்றாக்குறை எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் உளுந்து, பச்சைப்பயறு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாகத்தான், நஞ்சை நெல் தரிசில் பயறு வகைச் சாகுபடி திட்டத்தைத் தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிக்குப் பிறகு, வயலை வெறும் தரிசாகப் போட்டு வைக்காமல், குறுகிய நாள்களில் மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. விதை, இடுபொருள், தண்ணீர் கொண்டு செல்வதற்கான குழாய், தார்ப்பாய் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படும்’’ என்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் ‘‘நஞ்சை நெல் தரிசில் பயறு சாகுபடி திட்டம்னு இதைச் சொன்னாலும், நெல் அறுவடைக்குப் பிறகும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யலாம்னு சொல்லியிருந்தோம். இது மூலமா விவசாயிகள் கூடுதல் வருமானம் எடுக்குறதோடு மட்டுமல்லாம... இந்தச் செடிகளோட இலைகள் நிலத்துல உதிர்றதுனால, மண்ணை வளப்படுத்தவும் இது உறுதுணையாக இருக்கும். காற்றுல உள்ள நைட்ரஜனை கிரகித்துக் கொடுக்கக்கூடிய பணியையும் பயறு வகைச் செடிகள் செய்யுது. மார்கழியில இருந்து சித்திரை வரைக்கும் எப்ப வேணும்னாலும் உளுந்து சாகுபடி செய்யலாம். அதுக்கான ரகங்கள் இருக்கு. ஆனா, பச்சைப்பயற்றைப் பொறுத்தவரைக்கும், அதிகபட்சம் தை மாதம் கடைசி வாரத்துக்குள்ள விதைப்புச் செஞ்சாதான் அது வெற்றிகரமா விளையும். மற்ற பட்டங்கள்ல சாகுபடி செய்றதுக்கான ரகங்கள் இதுல இல்லை. உளுந்து விளையாத உப்பு மண்ணுலகூட பச்சைப்பயறு சிறப்பா விளையும். உளுந்தைவிடப் பச்சைப்பயறுக்குக் கூடுதல் விலையும் கிடைக்குது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலம் தமிழக அரசே கொள்முதல் செய்யுது. உளுந்துக்குக் கிலோவுக்கு 63 ரூபாயும், பச்சைப்பயறுக்கு 72.85 ரூபாயும் விலை வழங்கப்படுது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism