Published:Updated:

2 ஏக்கர்... ரூ.1,58,000 நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன், இயற்கை முறையில் நிலக்கடலைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு மாலைவேளையில் மகேந்திரனைச் சந்திக்கக் காடம்பட்டிக்குச் சென்றோம். கறம்பக்குடி தாண்டி ரெகுநாதபுரத்திலிருந்து காடம்பட்டிக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. சில இடங்களில் அறுவடைப் பணியும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. விவசாய வேலையை முடித்துவிட்டு வந்த மகேந்திரனிடம் பேசினோம்,

“நான் 8-ம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அப்பாதான் ரொம்ப வருஷமா விவசாயத்தைப் பார்த்துக்கிட்டாரு. அப்பாவுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணிக்கிட்டு இருந்தேன். 2014-ம் வருஷம் வெளிநாடு போக வாய்ப்பு கிடைச்சது. 5 வருஷம் சிங்கப்பூர்ல வேலை பார்த்தேன். அதற்கப்புறம் 2019-ம் வருஷம் சொந்த ஊருக்கு வந்திட்டேன். நான் வந்ததுக்கப்புறம் அப்பாவுக்கு விவசாய வேலையிலயிருந்து ஓய்வு கொடுத்தாச்சு. முழு நேரமா நான் விவசாயத்துல இறங்கிட்டேன்.

கற்றுக்கொடுத்த ஆசான்கள்

எங்களுக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கு. அப்பா பார்த்துக்கிட்டு இருந்த வரைக்கும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தோம். எனக்கு இயற்கை விவசாயம் செய்யணும்னு ரொம்ப நாளா ஆசை. நண்பர் ஒருத்தர் பசுமை விகடன் பத்தி சொன்னாரு. பசுமை விகடனைப் படிச்ச பிறகுதான், இயற்கை விவசாயத்தின் மீது நாட்டமே வந்துச்சு. குறிப்பா, பசுமை விகடன் யூடியூப் சேனல்ல வர்ற விவசாயிகளோட அனுபவங்களைப் பார்த்து, இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். இதுக் கிடையில வேளாண் பொறி யாளர் பிரிட்டோ ராஜ்கிட்ட இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகள் கேட்டேன். அவரும் எந்த நேரத்துல கூப்பிட் டுச் சந்தேகம் கேட்டாலும் சலிக்காம சொல்வாரு. இப்போ 2 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன்’’ என்றவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.

நிலக்கடலையுடன் மகேந்திரன்
நிலக்கடலையுடன் மகேந்திரன்

குஜராத் ரகக் குத்துக்கடலை

‘‘கடந்த சித்திரைப் பட்டத்துல முதல் முயற்சியா குஜராத் ரகக் குத்துக்கடலையை 2 ஏக்கர்ல விதைச்சு பார்த்தேன். இயற்கை முறையில் சாகுபடி செஞ்ச இந்தக் கடலையில் உழைப்புக்கேத்த நிறைவான வருமானம் கிடைச்சிருக்கு. இதிலிருந்து கிடைச்ச பருப்பு நல்ல தடிமனாகவும் சுவையாகவும் இருந்துச்சு. நல்ல விலையும் போச்சு. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, கொடிகள் மூலமா ஆடு, மாடுகளுக்குத் தீவனமும் ஆச்சு. அடுத்த மாசி பட்டத்துல 3 ஏக்கர்ல நிலக்கடலைச் சாகுபடி செய்யலாம்னு இருக்கேன்.

அறுவடை முடிச்ச பிறகு, கொடிகளை வெயில்ல காய வெச்சு உலர் தீவனமா கால்நடைகளுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இந்தக் கொடிகளைச் சாப்பிடுற கால்நடைகள் ஆரோக்கியமா இருக்கு. முன்பைவிடக் கூடுதலா பால் கறக்குது. இயற்கை முறையில் விளைவிச்சதால தஞ்சாவூரிலிருந்து சில விவசாயிகள் கொடியைக் கேட்டாங்க. அவங்களுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டியதாகிடுச்சு. என்னோட இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரைப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தான் கொஞ்சம் சவாலாக இருந்துச்சு. இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தி அதையும் சமாளிச்சிட்டேன்’’ என்றவர், தனது நிலக்கடலை வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

19 மூட்டை மகசூல்

“நான் சாகுபடி செஞ்சது குஜராத் ஜி-7 ரகக் குத்துக்கடலை. 2 ஏக்கருக்கும் மொத்தமா 19 மூட்டை (80 கிலோ மூட்டை, தோல் நீக்கிய பருப்பு) கிடைச்சது. அதுல 18 மூட்டை நிலக்கடலையை ஆலங்குடி மில்லுல மொத்தமாகக் கொடுத்திட்டேன். விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் வரலை. கொண்டு போன கொஞ்ச நேரத்துலயே மொத்த மூட்டையும் விற்பனையாகிருச்சு. ஒரு மூட்டை 7,700 ரூபாய்க்கு விலை போச்சு. 18 மூட்டை விற்பனை செஞ்சதுல மொத்தமா 1,38,600 ரூபாய் கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

நிலக்கடலையுடன்
நிலக்கடலையுடன்

ரூ.1,58,790 வருமானம்

‘‘மீதி ஒரு மூட்டை பருப்புல 15 கிலோ எடுத்து, செக்கு ஆட்டுனதுல 7 லிட்டர் எண்ணெய், 6 கிலோ புண்ணாக்கு கிடைச்சது. ஒரு லிட்டர் எண்ணெய் 250 ரூபாய்னு விலை போகுது. எண்ணெய் ஆட்ட 300 ரூபாய் செலவாச்சு. நிலக்கடலை பறித்த கூலி ஆட்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்த 65 கிலோ பருப்போட மதிப்பு 6,200 ரூபாய். கடலைக்கொடி உலர் தீவனம் மொத்தமா 120 கட்டு (35 கிலோ கட்டு) கிடைச்சது. 50 கட்டு வரையிலும் வீட்டுக் கால்நடைகளுக்கு வெச்சிக்கிட்டு 70 கட்டுத் தீவனத்தைக் கொடுத்திட்டோம். கடலைக்கொடி உலர் தீவனத்தோட விலை 12,000 ரூபாய். மொத்தமா கணக்குப் போட்டுப் பார்த்தா 2 ஏக்கர் கடலைச் சாகுபடி மூலமா 1,58,790 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல, 68,000 ரூபாய் செலவாச்சு. மீதி 90,790 ரூபாய் லாபமாகக் கையில் கிடைச்சது” என்றார் நெகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, மகேந்திரன்,

செல்போன்: 96883 78751

இயற்கை நிலக்கடலைச் சாகுபடி

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் குஜராத் ரக நிலக்கடலைச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து மகேந்திரன் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...

கார்த்திகை, சித்திரைப் பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு 50 கிலோ விதைக்கடலை தேவைப்படும். தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் 5 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். பிறகு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 2 கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடியை மணலோடு கலந்து நிலத்தில் தூவ வேண்டும். பிறகு உழவு செய்ய வேண்டும்.

இடுபொருள்
இடுபொருள்

விதைக்கும் முன்பு விதைநேர்த்தி செய்வது அவசியம். விதைப் பருப்பைத் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு 50 கிலோ விதைக்கு ஒரு கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்துகொண்டு விதைகளைப் புரட்டி எடுத்து, நிழலில் உலரவைக்க வேண்டும். சிறிது நேரத்தில் வெள்ளைப் பூசணம்போல மாறும். பிறகு, ஏர்கலப்பை கொண்டு உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு விதைக்கும் இன்னொரு விதைக்கும் இடையே 75 செ.மீ இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். விதைத்த 7 நாளிலேயே முளைப்பு வந்துவிடும். விதைத்த 15 மற்றும் 30-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.

இலைப்பேன், பச்சைப் புழுத் தாக்குதல், வண்டுத் தாக்குதல், இலைப் புள்ளி நோய் தாக்கக்கூடும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நாளில் 200 லிட்டர் தண்ணீரில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து பாசன நீரில் கலந்து பாய்ச்ச வேண்டும். 15 முதல் 20 நாள்களுக்குள் மீன் அமிலம், பஞ்சகவ்யா 10 லிட்டருக்கு 200 மி.லி வீதம் இலை வழியாகக் கொடுக்க வேண்டும். 35-ம் நாளில் மீன் அமிலம், பஞ்சகவ்யா 10 லிட்டருக்கு 200 மி.லி என்கிற வீதத்தில் நீர் பாய்ச்சும்போது தரை வழியாகக் கொடுக்கலாம். பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

35 முதல் 40-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கிவிடும். 40-ம் நாளில் செடிகளின் தூர்ப்பகுதியில் தலா 10 கிலோ பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் வைத்து மண் அணைத்து விட வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 75 மி.லி வெர்டிசீலியம் லக்கானி (சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு), ஸ்பேசில்லஸ் சப்டிலஸ் (நோய் கிருமிகள் தாக்கம் குறைக்க) கலந்து, அதில் அரிசி வடிகட்டிய கஞ்சி (இலைகளில் ஒட்டுவதற்காக) 100 மி.லி கலந்து இலை வழியாகக் கொடுக்கலாம். இது மிக முக்கிய நோய் தடுக்கும் மருந்தாகும்.

நிலக்கடலையுடன்
நிலக்கடலையுடன்

இன்னும் இடுபொருள்கள் செலவைக் குறைக்க நினைத்தால், வேப்ப எண்ணெய் கரைசல், இஞ்சி, பூண்டு கரைசலை இலை வழியாகத் தெளிக்கலாம். இதன் மூலமும் பூச்சி நோய் தாக்கத்திலிருந்து பயிர்களைக் காக்கலாம். பாசன தண்ணீரைப் பொறுத்தவரைக் கடலைக்குக் காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருக்க வேண்டும். 105 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

ஊடுபயிர் கொடுத்த வருமானம்

‘‘2 ஏக்கர் நிலக்கடலையில் ஊடுபயிரா வம்பன்-8 ரக உளுந்து விதைச்சேன். உளுந்திலும் நல்ல மகசூல் கிடைச்சது. 2 ஏக்கரிலிருந்து 300 கிலோ உளுந்து கிடைச்சது. ஒரு கிலோ உளுந்து 75 ரூபாய் வரைக்கும் போச்சு. இதன் மூலமா 22,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. கடலை அறுவடை செய்யும்போதே உளுந்தையும் அறுவடை செஞ்சிட்டோம். விதை, கூலி ஆள் செலவுன்னு 3,776 ரூபாய் செலவாச்சு. செலவைக் கழிச்சா 18,724 ரூபாய் நிகர லாபமா கிடைச்சது. ஊடுபயிர் லாபம் என் உழைப்புக்கு கிடைத்த ஊக்கப்பரிசு. இதை நிலக்கடலை கணக்குல சேர்க்கல’’ என்கிறார் மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு