Published:Updated:

25 சென்ட்... ரூ.62,100... இயற்கை விவசாயத்தில் செழிக்கும் வீரிய ரக கத்திரி!

கத்திரி வயலில் உலகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கத்திரி வயலில் உலகநாதன்

மகசூல்

25 சென்ட்... ரூ.62,100... இயற்கை விவசாயத்தில் செழிக்கும் வீரிய ரக கத்திரி!

மகசூல்

Published:Updated:
கத்திரி வயலில் உலகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கத்திரி வயலில் உலகநாதன்

வீரிய ரக கத்திரி என்று சொன்னாலே அதிக அளவில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தினால்தான் வெற்றிகரமான விளைச்சல் எடுக்க முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து பரவலாக நிலவுகிறது. இந்நிலையில் தான் இயற்கை விவசாயத்திலும் வீரிய ரக கத்திரியை வெற்றிகரமாக விளைவிக்க முடியும் என நிரூபித்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்த விவசாயி உலகநாதன். இவர் 25 சென்ட் பரப்பில் வீரிய ரக கத்திரிக்காயை இயற்கை முறையில் உற்பத்தி செய்து, உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், எசனை என்ற ஊரிலிருந்து 4 கி.மீ, தொலைவில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது உலகநாதனின் தோட்டம். ஒரு பகல்பொழுதில் இவரை நாம் சந்திக்கச் சென்றோம். கத்திரிக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த உலக நாதன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்தார். தலையில் அணிந்திருந்த தலைப் பாகையை அவிழ்த்து முகத்தைத் துடைத்தபடியே பேசத் தொடங்கியவர், ‘‘இது வீரிய ரக கத்திரிக்காய். ஊதா நிறத்துல நல்லா பளபளப்பா இருக்கும். சாப்பிடுறதுக்குச் சுவையாவும் இருக்கும். சந்தைகள்ல இதுக்கு நல்ல வரவேற்பு இருக்குறதுனால, கடந்த சில வருஷங்களாக எங்க பகுதி விவசாயிங்க இந்த ரகத்தைத்தான் அதிகமா சாகுபடி செய்றாங்க. இது நல்ல விளைச்சலும் கொடுக்கும். ஆனா, இதுக்கு நிறைய ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லியும் பயன்படுத்தினாதான், லாபகரமா மகசூல் எடுக்க முடியும்னு நினைச்சு மற்ற விவசாயிங்க இதுக்கு நிறைய செலவு செஞ்சுகிட்டு இருக்காங்க. ஆனா, நான் இயற்கை முறையில இதைச் சாகுபடி செஞ்சு ரசாயன நச்சுகள் இல்லாத கத்திரிக் காய்களை விளைவிச்சுக்கிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

“நாங்க விவசாயக் குடும்பம். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். குடும்பச் சூழ்நிலை காரணமா அதுக்கு மேல படிக்க முடியலை. விவசாயத்துல இறங்கிட்டேன். காய்கறி சாகுபடிக்கு நிறைய ரசாயன உரங்கள் போட்டதோட மட்டுமல்லாம, பூச்சிக்கொல்லியும் அதிகமா அடிச்சேன். இந்தச் சூழ்நிலையிலதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பெரம்பலூர் மாவட்டத்துல பரபரப்பா பேசப்பட்ட ஒரு செய்தி, என் மனசுல ஒரு பதற்றத்தை ஏற்படுத்துச்சு. பூச்சிக்கொல்லி அடிச்சப்ப, அதோட வீரியத் தால பாதிக்கப்பட்டுச் சில விவசாயிங்க இறந்துபோயிட்டதா பேச்சு அடிபட்டுச்சு. அப்பதான் என் மனசுல ஒரு கேள்வி உருவாச்சு. பூச்சிக்கொல்லி தெளிக்குறப்பவே விவசாயிங்களுக்கு இப்படிப் பாதிப்பு ஏற்படுதுனா, பூச்சிக்கொல்லி தெளிச்சு விளைஞ்ச காய்கறிகளைச் சாப்பிடுறவங் களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும்னு யோசிச்சி பார்த்தேன். உடனடியா இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு முடிவெடுத்தேன்.

கத்திரி வயல்
கத்திரி வயல்

பயிற்சி அளித்த கிருஷ்ணமூர்த்தி

சேலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பயிற்சியில 10 நாள்கள் கத்துக்கிட்டு, உடனடியா இயற்கை விவசாயத்துல இறங்கினேன். எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. கடந்த அஞ்சு வருஷமா இயற்கை முறையில புடலை, பீர்க்கன், கத்திரி, தக்காளினு பலவிதமான காய்கறிகள் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி பயிர் செஞ்ச துருவா வீரிய ரகக் கத்திரி இப்ப பறிப்புல இருக்கு. இதுவரைக்கும் 1,000 கிலோவுக்கு மேல காய்கள் பறிச்சி விற்பனை செஞ்சிருக்கேன். இன்னும் நாலஞ்சு மாசத்துக்குக் காய்கள் பறிக்கலாம். மீதி பரப்புல மற்ற காய்கறிகள் சாகுபடி செய்றதுக்காக நிலத்தைத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்று சொன்ன உலகநாதன் கத்திரி சாகுபடி குறித்த அனுபவத்தை விவரித்தார்.

கத்திரி வயலில் உலகநாதன்
கத்திரி வயலில் உலகநாதன்

‘‘அடியுரமா எரு கொடுக்குறேன். நாத்து நடவு செஞ்ச பிறகு, பஞ்சகவ்யா, கடலைப்புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, முட்டை கரைசல், தேமோர் கரைசல் கொடுக்குறேன். இதனால கத்திரிச் செடிகள் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறனோடு நல்லா ஆரோக்கியமா வளருது. ஆனாலும் கூடச் சீதோஷ்ண நிலை மாறும்போது, பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுட கூடாதுங்கறதுனால, முன்னெச்சரிக்கை நடவடிக்கையா மூலிகைப் பூச்சிவிரட்டியும் கொடுத்திடுவேன்’’ என்று சொன்னவர் மகசூல் மற்றும் வருமானம் குறித்து விவரித்தார்.

செலவு/வரவு அட்டவணை
செலவு/வரவு அட்டவணை

‘‘நாற்று நடவு செஞ்ச 60 நாள்களுக்குப் பிறகு காய்கள் பறிப்புக்கு வர ஆரம்பிக்கும். படிபடியா மகசூல் அதிகரிக்கத் தொடங்கும். இந்த 25 சென்ட் பரப்புல பயிர் பண்ணியிருக்குற கத்திரி செடிகள்ல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் 25-30 கிலோ காய்கள் பறிக்கலாம். எட்டு மாசங்களுக்கு மகசூல் கிடைக்கும். கத்திரிக்காய்களை உழவர் சந்தையில கடைபோட்டு நானே நேரடியா விற்பனை செய்றேன். ஒரு தடவை என்னோட கத்திரிக்காயை வாங்கிச் சாப்பிட்டு பார்த்துட்டா, பிறகு, என்கிட்டதான் தொடர்ந்து கத்திரிக்காய் வாங்கும் வாடிக்கையாளர்களாக மாறிடுவாங்க. ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 20 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 45 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். விஷேச நாள்கள்ல இன்னும் அதிகமாவே விலை கிடைக்கும். கடந்த முறை இந்த 25 சென்ட்ல 3,105 கிலோ கத்திரிக்காய் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்குச் சராசரியா 20 ரூபாய் வீதம் மொத்தம் 62,100 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல எல்லாச் செலவும் போக 42,400 ரூபாய் லாபம் கிடைச்சது. குறைவான பரப்புல இது எனக்கு நிறைவான லாபம்’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் உலகநாதன்.

தொடர்புக்கு,
உலகநாதன்,
செல்போன்: 96779 63064

இப்படித்தான் கத்திரி சாகுபடி!

25 சென்ட் பரப்பில் கத்திரி சாகுபடி செய்ய உலகநாதன் சொல்லும் தொழில்நுட்பங்கள் இங்கே பாடமாக...

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் நன்கு உழவு ஓட்டி, ஒரு வாரம் கழித்து ஒரு டன் மாட்டு எரு இட்டு மீண்டும் உழவு ஓட்டி மண்ணை நன்கு சமப்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 4 அடி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 25 - 35 நாள்கள் வயது கொண்ட கத்திரி நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. நடவு செய்த 21-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் 10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுக்க வேண்டும். தேவைக்கேற்ப அவ்வபோது களையெடுக்க வேண்டும். 35 - 40 நாள்களில் செடிகளில் பூ பூக்க ஆரம்பிக்கும். அப்போது 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி முட்டைக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.

மாடுகள்
மாடுகள்

பூக்கள் உதிர்வுத்தன்மை இதனால் தவிர்க்கப்படும். 45-ம் நாள் பிண்ணாக்கு கலவையை ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்பிடியளவு வைக்க வேண்டும் (தலா 25 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, ஆமணக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்துகொள்ள வேண்டும்). இதனால், காய்கள் திரட்சியாக இருக்கும். பூச்சித் தாக்குதல்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிகளைக் கட்டுப் படுத்த விளக்குப் பொறியும் வைக்கலாம். 50 மற்றும் 57-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர்க்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி இரண்டு முறை தெளிப்பதால், நன்றாக பூக்கள், பூத்து, காய்ப்பு தன்மை அதிகரிக்கும். எட்டு மாதங்களுக்கு தொடர்ந்து மகசூல் கிடைக்கும்.

வயலில்
வயலில்

விதைகள் சேகரிக்கும் முறை

அதிக காய்ப்புள்ள செடிகளில் உள்ள திரட்சியான காய்களைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். நன்கு பழுத்த பிறகு அவற்றைப் பறித்து, தண்ணீர் நிரப்பிய ஒரு பாத்திரத்தில் போட்டு மெதுவாகப் பிழிந்தால் விதைகள் உதிரும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, பாத்திரத்தின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும் விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிழற் பாங்கான இடத்தில் ஒரு துணியை விரித்து, அதில், விதைகளைப் பரப்பி ஒரு நாள் முழுவதும் உலர்த்த வேண்டும். பிறகு, அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு 50 நாள்களுக்குப் பிறகு விதைப்புச் செய்யலாம்.

கத்திரி வயலில் உலகநாதன்
கத்திரி வயலில் உலகநாதன்

நாற்று உற்பத்தி

25 சென்ட் பரப்பில் கத்திரி சாகுபடி செய்ய 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மாட்டு எருவுடன் 100 கிராம் வேப்பம்பிண்ணக்கு, தலா 50 கிராம் ட்ரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் கலந்து அடியுரம் இட வேண்டும். மண்ணை ஈரப்படுத்தி, 50 கிராம் விதை தூவி தென்னங்கீற்றுகளால் மூடி, அதன் மீது தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குப் பிறகு, தென்னங்கீற்றுகளை எடுத்து விட வேண்டும். அப்போது முளைப்பு வரத் தொடங்கி இருக்கும். 10-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் வாரம் ஒரு முறை பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 14-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 25 - 35 நாள்களில் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம்.