Published:Updated:

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா... ரூ.35,000 லாபம்! - இடைவெளி அதிகம்... செலவும் குறைவு!

நெல் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
நெல் சாகுபடி

மகசூல்

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா... ரூ.35,000 லாபம்! - இடைவெளி அதிகம்... செலவும் குறைவு!

மகசூல்

Published:Updated:
நெல் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
நெல் சாகுபடி

ம்பா பருவத்தில் பெய்த தொடர் கனமழையால், திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இதே மாவட்டத்தைச் சேர்ந்த வடுவூர் அருகேயுள்ள அய்யம்பேட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராஜன், தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்ததால், நிறைவான லாபம் ஈட்டியுள்ளார்.

ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். வீடும் நிலமும் ஒன்றிணைந்து அமைந்திருந்தது. அறுவடை செய்த நெல்லை காய வைத்து, மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்த ராஜன் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘எங்க அப்பா ராணுவ வீரர். ஓய்வுபெற்ற பிறகு, கடந்த 40 வருஷமா விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தார். எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. ரசாயன இடுபொருள்களுக்கு அதிகமா செலவு செஞ்சதுனால, பெருசா லாபம் கிடைக்கல. ராணுவ வீரருக்கான ஓய்வு ஊதியத்துலதான் எங்க குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் 12-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, எந்த வேலைக்கும் போகாம இருந்தேன். யார்கிட்டேயும் கைகட்டி வேலை பார்க்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. இதுக்கிடையில குங்ஃபூ மாஸ்டராகி, மெடல் எல்லாம் வாங்கினேன். நிறைய இளைஞர் களுக்குப் பயிற்சியும் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.

அறுவடையான நெல்லுடன் ராஜன் தம்பதி
அறுவடையான நெல்லுடன் ராஜன் தம்பதி

அந்த நேரத்துலதான் 7 வருஷத்துக்கு முன்ன எனக்குப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. அதைப் படிக்கப் படிக்க விவசாயத்துல ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. குறிப்பா, இயற்கை விவசாயம் செய்யணுங்கிற துடிப்பு அதிகமாச்சு. ‘இனிமே ரசாயன உரங்கள் போடாம இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்’னு அப்பாகிட்ட சொல்லிப் பார்த்தேன். ஆனால், அப்பா மறுத்துட்டார். அவர் இறந்த பிறகு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு என்கிட்ட வந்துச்சு. அதன்பிறகு என்னோட விருப்பம்போல் 3 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். இயற்கை உரத்துக்காகத் தஞ்சாவூர் குட்டை மாடு ஒண்ணும், பால் தேவைக்காக ஒரு ஜெர்சி மாடும் வளர்க்கிறோம்’’ என்றவர் சாகுபடி சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்தார்.

‘‘எங்களுக்குச் சொந்தமான இந்த ஒரு ஏக்கர் நிலத்துல, முதல் முறையாக இயற்கை விவசாயத்துல உளுந்து சாகுபடி செஞ்சேன். சம்பா பட்டத்துல பாரம்பர்ய நெல் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். எப்போதுமே ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செய்றதுதான் வழக்கம். முதல் வருஷம் ஏக்கருக்கு 22 மூட்டை (ஒரு மூட்டை 60 கிலோ) மகசூல் கிடைச்சது. 2-ம் வருஷம் 25 மூட்டை. இந்த வருஷம் தொடர் மழையினால, 20 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. ஆனாலும் கூட, எனக்குச் செலவு ரொம்பக் குறைவுங்கிறதுனால, ஏக்கருக்கு 25,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது.

மாடுகளுடன்
மாடுகளுடன்

ரசாயன முறையில, நவீன நெல் ரகங்கள் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள், வழக்கமான முறையைத்தான் கடைப்பிடிப்பாங்க. ஏக்கருக்கு 30 கிலோ விதைப்பு செஞ்சு, ரொம்ப நெருக்கமா குத்துக்குக் குத்து, 8 - 10 நாற்றுகள் நடவு செய்வாங்க. அதுல நாற்றுப்பறிப்புக்கும் நடவுக்கும் 4,600 ரூபாய்க்கு மேல செலவாகும். ஆனால், நான் ஆலங்குடி பெருமாளோட ஒற்றை நாற்று நெல் நடவு முறையைக் கடைப்பிடிச்சதுனால ஒரு கிலோ விதைதான் தேவைப்பட்டுச்சு.

‘‘அதிக இடைவெளியில ஒற்றை நாற்று நடவு செஞ்சதுனால பல விதங்கள்லயும் செலவு மிச்சமாகுது.’’

குத்துக்குக் குத்து 40 செ.மீ, வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியில தலா ஒரு நாற்று நடவு செஞ்சோம். இதுக்கு 1,600 ரூபாய்தான் செலவாச்சு. அதிக இடைவெளி விட்டதுனால, கோனோவீடர் மூலம் களை ஓட்டவும் ரொம்பச் சுலபமா இருந்துச்சு. நான் ஒரு ஆளே களை ஓட்டிட்டேன். நெருக்கமாக நடவு செஞ்ச விவசாயிகள், ஆரம்பத்துல களைக்கொல்லி தெளிச்சதோடு மட்டுமல்லாம, பிறகு ரெண்டு முறை, ஆளுங்கள வெச்சு களை எடுத்தாங்க. அதுக்கு 3,000 ரூபாய்க்கு மேல செலவு பண்ணியிருந்தாங்க. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி அடிச்சது, அறுவடைனு ஏக்கருக்கு 23,000 ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டாங்க. தொடர் மழையால பெரும்பாலானவங்களுக்கு ஏக்கருக்கு 18 மூட்டைக்கும் குறைவாத்தான் மகசூல் கிடைச்சிருக்கு. கிலோவுக்கு 19 ரூபாய் வீதம் மொத்தம், 21,000 ரூபாய்க்குக் குறைவாத்தான் வருமானம் கிடைச்சிருக்கு. அதுல செலவைக் கழிச்சா, கையில லாபம் எதுவுமே அவங்களுக்கு மிஞ்சாது.

இடுபொருள்
இடுபொருள்

எனக்கு, அதிக இடைவெளியில ஒற்றை நாற்று நடவு செஞ்சதுனால பல விதங்கள்லயும் செலவு மிச்சம். இயற்கை இடுபொருள்களுக்கும் கூட நான் அதிகம் செலவு செய்யல. வாரம் ஒரு முறை ஏக்கருக்கு 13 லிட்டர் ஜீவாமிர்தம் தெளிச்சேன். குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு தடவை மட்டும் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிச்சேன். இதுமாதிரி இன்னும் பல விதங்கள்ல நான் செலவைக் குறைச்சதுனால, ஏக்கருக்கு அதிகபட்சம் 11,000 ரூபாய்தான் செலவாச்சு. இந்த வருஷம் எனக்கு 20 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு. 10 மூட்டை நெல்லை அரிசியாக்கி, எங்க வீட்டு உபயோகத்துக்கு வெச்சிக்கப்போறோம்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

ஒரு மூட்டை நெல் அரவை செஞ்சோம்னா, 40 கிலோ அரிசி கிடைக்கும். இதோட மதிப்பு கிலோ 70 ரூபாய் வீதம் 2,800 ரூபாய். குருணை, தவிடு விலை மதிப்பு 140 ரூபாய். அரவைக் கூலி 120 ரூபாய் போக, ஒரு மூட்டை நெல் மூலம் 2,820 ரூபாய் வருமானம். 10 மூட்டை நெல் மூலம் 28,200 ரூபாய் வருமானம். மீதி 10 மூட்டை நெல்லை அரிசியாக்கி, நிறைய லாபம் பார்க்க முடியும். ஆனால், நெல்லை இருப்பு வைக்க எங்க வீட்டுல இட வசதி இல்ல. அதனால இந்த 10 மூட்டை நெல்லையும் விற்பனை செய்ய ஏற்பாடு செஞ்சிருக்கேன். கிலோவுக்கு 25 ரூபாய் வீதம், 600 கிலோவுக்கு 15,000 ரூபாய் கிடைக்கும். சத்தான வைக்கோல், 20 கட்டுகள் கிடைச்சிருக்கு. இதை எங்களோட மாட்டுக்கு வெச்சிக்குவோம். இதோட மதிப்பு 2,200 ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி மூலம் எனக்கு 46,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல 10,900 ரூபாய் செலவு போக, 35,700 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு,

ராஜன்,

செல்போன்: 93446 32740

நிலத்தில் கொஞ்சம்கூட மேடு, பள்ளம் இருக்கக் கூடாது!

‘‘டிராக்டர் வெச்சு உழவு ஓட்டினால், கண்டிப்பாக மேடு பள்ளத்தை உருவாக்கும். இது மாதிரி இருந்தால் அதிகமாகக் களை மண்டி, பயிரோட வளர்ச்சி பாதிக்கப்படும். பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்கும் வாய்ப்புகள் அதிகம். வெற்றிகரமாக விவசாயம் செய்ய, நிலம் சமமாக இருக்குறது ரொம்ப முக்கியம். இதனால் குபேட்டா மூலமாகத்தான் உழவு ஓட்டுவேன். டிராக்டரை ஒப்பிடும்போது இதோட எடை ரொம்பக் குறைவு. இதுல அதிகமாக மேடு பள்ளம் உருவாகாது. ஆனாலும்கூட உழவு ஓட்டி முடிச்ச பிறகு தண்ணீர் கட்டி, எங்கயாவது மேடு பள்ளம் இருக்கானு பார்ப்பேன். அப்படியிருந்தால், மேட்டுல உள்ள மண்ணை வெட்டி, பள்ளத்துல போட்டு, நிலம் முழுக்கப் பலகை இழுத்து, மண்ணை நல்லா சமப்படுத்துவோம். மாடு கட்டி ஏர் உழுதால் அது இன்னும் நல்லது. கொஞ்சம்கூட மேடு பள்ளமே உருவாகாது. அதுக்கான முயற்சிகள் செஞ்சிக்கிட்டு இருக்கேன். கடந்த ரெண்டு வருஷமா நெல் அறுக்க, அறுவடை இயந்திரத்தையும்கூடத் தவிர்த்துட்டேன். ஆனால், இந்த வருஷம் மழை பாதிப்புனால, வேற வழியில்லாம அறுவடைக்கு இயந்திரம் பயன்படுத்த வேண்டியதாயிடுச்சு.’’

வயலில்
வயலில்

அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு

‘‘40 செ.மீ இடைவெளியில ஒற்றை நாற்று முறையில் நடவு செய்றதுனால, செலவு மிச்சமாவதோடு, பயிருக்குச் சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் நல்லா தாராளமாக் கிடைக்குது. இதனால் பயிர் பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாமல் நல்லா ஆரோக்கியமா வளருது. எலி தொந்தரவுகளும் குறையுது. வேர்கள் பரவத் தாராளமாக இடம் கிடைக்குறதுனால அதிக எண்ணிக்கையில தூர் வெடிக்குது. ஒரு நாற்றுக்கு 60-80 தூர்கள் வீதம் உருவாகி இருந்துச்சு. தாராளமாக இடைவெளி இருக்குறதுனால எளிதாகக் கோனோவீடர் மூலம் களை ஓட்ட முடிஞ்சது. வாரம் ஒரு முறை ஒவ்வொரு குத்துலயும் நுனி முதல் வேர்வரை பயிர் முழுக்க, ஜீவாமிர்தம் கொடுக்க வசதியா இருந்துச்சு. தொடர் மழையில ஒரு சில பயிர்கள் கீழே சாஞ்சாலும்கூட, அதோட கனம் மற்ற பயிர்கள் மேல ஏறாமல் இருந்துச்சு.’’

வைக்கோலுடன்
வைக்கோலுடன்

ஜீவாமிர்தம்

‘‘பாசனநீர் மூலம் ஜீவாமிர்தம் கொடுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், அது எல்லாப் பயிர்களுக்கும் போய் சேருமானு உத்தரவாதமா சொல்ல முடியாது. தெளிப்பு மூலம் இலைவழி ஊட்டம்தான் ரொம்பச் சிறப்பானதுங்கிறது என்னோட அனுபவம். பயிர் மேல தெளிக்குற ஜீவாமீர்தம், தானாக வழிஞ்சு, கண்டிப்பாக வேர்களுக்கும் வந்துடும். வாரம் ஒரு முறை தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு 130 லிட்டர் ஜீவாமிர்தம் தெளிப்போம். இது பயிர்களோட வளர்ச்சிக்கு உதவுறதோடு மட்டுமல்லாமல், பூச்சி விரட்டியாகவும் பயன்படுது. இந்த வருஷம் எங்க பகுதி முழுக்கவே நெற்பயிர்கள்ல குருத்துப்பூச்சித் தாக்குதல் அதிகம். நிறைய செலவு பண்ணி, பூச்சிக்கொல்லி தெளிச்சும் கூடக் கட்டுப்படுத்த முடியல. ஆனால், என்னோட வயல்ல ஒரு சில பயிர்கள்ல மட்டும் லேசா குருத்துப்பூச்சி தென்பட்டுச்சு. ஏக்கருக்கு 130 லிட்டர் தண்ணில 1 லிட்டர் வேப்பெண்ணெய், 50 கிராம் காதி சோப்பு கலந்து தெளிச்சேன். உடனடியாகக் கட்டுப்பட்டுச்சு’’ என்கிறார் ராஜன்.

வயல்
வயல்

இப்படித்தான் இயற்கை வழி நெல் சாகுபடி!

ஒரு ஏக்கரில் ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செய்வதற்கான செயல்முறைகள்:

நாற்றங்கால்

8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நன்கு சேற்றுழவு செய்து, 20 கிலோ ஈர சாணத்தோடு 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் கலந்து நன்றாகக் கலக்கி, அதை அடியுரமாகப் போட்டு, மண்ணைச் சமப்படுத்த வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட, மூன்றாம் கொம்பு விதைநெல் (12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, 24 மணி நேரம் சணல் சாக்கில் கட்டிவைத்து எடுக்கப்பட்டது) ஒரு கிலோவைத் தெளிக்க வேண்டும். விதைநெல் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இல்லாதவாறு, சற்று இடைவெளியில் ஒவ்வொரு விதைநெல்லும் தனித்தனியாக விழுமாறு பரவலாகத் தெளிக்க வேண்டும். குறைவான விதைநெல் என்பதற்காக, நாற்றங்கால் பரப்பைக் குறைத்துவிடக் கூடாது. 4 - 5 நாள்களில் முளைப்பு விடத் தொடங்கும். 7 மற்றும் 14-ம் நாள்களில் 13 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும். அதிகபட்சம் 25 நாள்களுக்குள் நடவு செய்துவிட வேண்டும். இளம் நாற்றுகள் தான் அதிகமாக விளைச்சல் தரும்.

மாட்டுடன்
மாட்டுடன்


சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் குபேட்டா டிராக்டர் மூலம் நன்கு சேற்றுழவு செய்து, கொஞ்சமும் மேடு, பள்ளம் இல்லாத வகையில் பலகை இழுத்து மண்ணைச் சமப்படுத்த வேண்டும். தலா 40 செ.மீ இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை தெளிப்பான் மூலம் 13 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். 15-20 நாள்களில் கோனோவீடர் மூலம் கிழக்கு- மேற்காகவும், அடுத்து மேற்கு-கிழக்காகவும், அதன் பிறகு வடக்கு- தெற்காகவும், தெற்கு-வடக்காகவும் களை ஓட்ட வேண்டும். இதனால் களைகள் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படுவதோடு, மண்ணில் இறுக்கம் குறைந்து வேர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். புதிய வேர்களும் உருவாகும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 இடங்களில் T வடிவ பறவைத் தாங்கிகள் அமைக்க வேண்டும். குருத்துப்பூச்சிகள் தென்பட்டால், 100 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் வேப்ப எண்ணெய், 50 கிராம் காதி சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism