Published:Updated:

2 ஏக்கர் எலுமிச்சை... ரூ.2,69,000 வருமானம்... ஓய்வுக்குப் பிறகும் உழைக்கும் முன்னாள் அரசு அலுவலர்!

எலுமிச்சை
பிரீமியம் ஸ்டோரி
எலுமிச்சை

மகசூல்

2 ஏக்கர் எலுமிச்சை... ரூ.2,69,000 வருமானம்... ஓய்வுக்குப் பிறகும் உழைக்கும் முன்னாள் அரசு அலுவலர்!

மகசூல்

Published:Updated:
எலுமிச்சை
பிரீமியம் ஸ்டோரி
எலுமிச்சை

மலைப்பாங்கான பகுதியில் எலுமிச்சையைச் சாகுபடி செய்து கணிசமான லாபம் பார்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த மஸ்தான். திருநெல்வேலி மாவட்டம், நரியூத்து அருகே உள்ள துலுக்கர்பட்டியில் அமைந்துள்ளது, இவருடைய பண்ணை. ஒரு காலைப் பொழுதில் பண்ணைக்குச் சென்றோம். எலுமிச்சைப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த மஸ்தான், நம்மை வரவேற்று பேசினார்.

“திருநெல்வேலி மாவட்டம், மூலக் கரைப்பட்டிதான் எனக்குச் சொந்த ஊரு. எங்க ஊர்லயே நான்தான் முதல் பட்டதாரி. பி.காம் முடிச்சதும் திருநெல்வேலியில சில கம்பெனிகள்ல கணக்காளராக வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வுல தேர்ச்சிப் பெற்று 1986-ம் வருஷம் இளநிலை உதவியாளரா வேலைக்குச் சேர்ந்து, படிப்படியா பதவி உயர் பெற்று காவல்துறையில அலுவலகக் கண்காணிப்பாளரா வேலைபார்த்து ஓய்வு பெற்றேன். 2010-ம் வருஷம், என்னோட வேலை பார்த்த நண்பர் குமாரசாமிதான் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார்.

குடும்பத்தினருடன் மஸ்தான்
குடும்பத்தினருடன் மஸ்தான்

எனக்கு விவசாயத்துல இயல்பாகவே ஆர்வம் அதிகம்ங்கறதுனால, பசுமை விகடனை தொடர்ச்சியா படிச்சிக்கிட்டே இருந்தேன். இயற்கை விவசாயத்துல விளைஞ்ச காய்களோட சுவையைப் பத்தி ‘மண்புழு மன்னாரு’ பகுதியில ஒரு தடவை படிச்சேன். சின்ன வயசுல வறுமையால எங்க அம்மா, ‘சொத்தைக் கத்திரிக்காய் வாங்கிட்டு வா’ன்னு என்கிட்டச் சொல்லுவாங்க. சொத்தையான பகுதியை வெட்டிட்டு நல்ல பகுதியை போட்டுக் குழம்பு வைப்பாங்க. அந்தக் குழம்பு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா, இப்போ ரசாயன உரத்துல விளைய வச்ச கத்திரிக்காய்ல ருசியும் இல்ல, வாசனையும் இல்லங்கிறதை நினைச்சுப் பார்த்தேன்.

ஓய்வு பெற்ற பிறகு, என்ன செய்யுறதுன்னு எனக்குள்ள ஒரு யோசனை இருந்துகிட்டே இருந்துச்சு. அரசுப் பணிகள்ல இருந்து ரிட்டையர்டு ஆனவங்கள்ல நிறைய பேரு இயற்கை விவசாயம் செய்யுறதைப் பசுமை விகடன் படிச்சப்போ எனக்கும் இயற்கை விவசாயம் செய்யணும்கிற எண்ணம் வந்துச்சு.

ஏற்கெனவே இந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தேன். ஆரம்பத்துல வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மட்டும் சாகுபடி செஞ்சோம். தொடர்ச்சியா வருமானத்துக்கு என்ன பயிர் சாகுபடி செய்யலான்னு நண்பர்கள் கிட்ட கேட்டேன்.

“ ‘எலுமிச்சை சாகுபடி செஞ்சா கணிசமான வருமானம் பார்க்கலாம். சந்தையில எப்போதும் இதுக்கு தேவை இருக்கும்’னு சொன்னாங்க. சில எலுமிச்சை தோட்டங்களையும் நேர்ல போய்ப் பார்த்தேன். பூ, பிஞ்சு, காய், பழம்னு எல்லா நிலையிலயும் எலுமிச்சை மரங்கள் செழுமையா இருந்துச்சு. அந்த மரங்களைப் பார்த்ததுமே எலுமிச்சை சாகுபடியில ஜெயிச்சிடலாம்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை வந்துச்சு. 2018-ம் வருஷம் ரெண்டு ஏக்கர்ல எலுமிச்சையும், மீதி ஒரு ஏக்கர்ல முதன்மை பயிரா தென்னையும்... அதுல ஊடுபயிரா சப்போட்டா, கொய்யா, வாழையும் சாகு படி செஞ்சேன்” என்று சொன்ன மஸ்தான் எலுமிச்சை சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

எலுமிச்சைத் தோட்டம்
எலுமிச்சைத் தோட்டம்

‘‘ரெண்டு ஏக்கர்ல 210 நாட்டு ரக எலுமிச்சை மரங்கள் இருக்கு. தலா 20 அடி இடைவெளி விட்டுருக்கேன். நடவு செஞ்சதுல இருந்து ரெண்டரை வருஷத்துக் குப் பிறகு மகசூல் கொடுக்க ஆரம்பிச்சது. வருஷத்துல 6 மாசம் காய்ப்பு அதிகமா இருக்கும். போன வருஷம் 9,300 கிலோ எலுமிச்சை பழங்கள் விற்பனை செஞ்சேன். ஒரு கிலோ பழம் குறைஞ்சபட்சம் 15 ரூபாய்ல இருந்தது அதிகபட்சமா 100 ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு. ஒரு கிலோவுக்குச் சராசரியா 29 ரூபாய் விலை கிடைச்சிருக்கு. 9,300 கிலோ பழம் விற்பனை மூலமா 2,69,700 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல செலவுகள் 80,000 ரூபாய் போக, 1,89,700 ரூபாய் லாபமாகக் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்கள்ல காய்ப்பு அதிகரிக்கும்.

செலவு, வரவு அட்டவணை
செலவு, வரவு அட்டவணை

சூப்பர் மார்க்கெட்

நான் உற்பத்தி செய்யக்கூடிய எலுமிச்சைப் பழங்களை இதுவரைக்கும் சந்தையில வித்தது கிடையாது. திருநெல்வேலியில உள்ள 5 சூப்பர் மார்க்கெட்கள், தெருக்களுக்குள்ள இருக்குற சின்னக் காய்கறிக் கடைகள், இது தவிர, சில ஹோட்டல்கள்லயும் விற்பனை செய்யுறேன். இயற்கை முறையில சாகுபடி செஞ்ச பழம்கிறதுனால தனி விலையெல்லாம் கிடையாது. சந்தையில என்ன விலையோ அந்த விலைக்கேதான் விற்பனை செய்யுறேன். ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பழத்தை விக்கிறோம்ங்கிற ஆத்ம திருப்தி ஒண்ணு மட்டும்தான்” என்றவர் நிறைவாக, “நான் இயற்கை விவசாயம் செய்ய என்னோட மனைவி சுபஹானி எனக்கு ரொம்பவே உறுதுணையா இருக்காங்க. இடுபொருள்களை அவங்கதான் தயாரிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு, மஸ்தான்,

செல்போன்: 91711 37377

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

2 ஏக்கரில் இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி செய்வதற்கான செயல் முறைகள் இங்கே.

எலுமிச்சை நடவு செய்வதற்குச் செம்மண், கரிசல் மண் ஏற்றது. மழைக்கு முன்பாக நடவு செய்வது சிறந்தது. நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கன்றுக்கு கன்று 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில 2 அடி சுற்றளவு 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.

5 முதல் 7 நாள்கள் வரை குழிகளை ஆற விட வேண்டும். இதற்கிடையில், சொட்டுநீர்ப் பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 20 கிலோ எரு, செம்மண், நிலத்தின் மேல் மண்... இவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட்டு, கன்று நடவு செய்ய வேண்டும். 6 மாத வயதுடைய கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. 3 மாதங்கள் வரை மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். 4 - 6-ம் மாதங்கள் வரை 10 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு செடிக்கும் 4 லிட்டர் ஜீவாமிர்தம் ஊற்ற வேண்டும்.

இடுபொருள்களுடன்
இடுபொருள்களுடன்

பாசன நீருடன் கலந்து விடுவதைவிட, கன்றின் தூரில் விடுவது நல்ல பலனைத் தரும். 6-ம் மாதத்துக்குப் பிறகு 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 20 நாள்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் 20 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பஞ்சகவ்யாவையும் மீன் அமிலத்தையும் மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். 10-வது மாதத்தில் கன்றின் இரண்டு புறத்திலும் முக்கால் அடி தூரத்தில் குழி எடுத்து ஒவ்வொரு குழிக்குள்ளும் 10 கிலோ எரு போட வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு எரு வைக்க வேண்டும்.

கன்றின் வளர்ச்சியைப் பொறுத்து மட்கிய எருவின் அளவை படிப்படியாகக் கூட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொழுவுரத்தைக் கொட்டிவிட்டுக் கன்றைச் சுற்றி கொத்தி விட வேண்டும். இதனால், மண் பொலபொலப்பாகும். கன்றில் தளிர் விடத் தொடங்கும்போது கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும். இலைகளில் சுருட்டுத்தன்மை மற்றும் பழுப்பு ஆகியவை தென்பட்டால், வேப்பெண்ணெயும், ஐந்திலைக் கரைசலும் தெளிக்க வேண்டும்.

எலுமிச்சைப் பழங்கள்
எலுமிச்சைப் பழங்கள்

200 லிட்டரில் 200 மி.லி வேப்ப எண்ணெயுடன், ஒட்டும் திரவத்துக்காக 100 மி.லி காதிசோப்புக் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

அடுத்து, ஒரு வாரம் கழித்து இலைகளில் சுருட்டு, இலைகளில் பழுப்பு ஆகியவை தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி ஐந்திலைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வப்போது களை எடுக்க வேண்டும். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, காய்க்கத் தொடங்கும். நான்காவது ஆண்டிலிருந்து மகசூல் அதிகரிக்கும்.

சில்வர் அகப்பை
சில்வர் அகப்பை

பழம் பறிப்பை எளிதாக்கும் சில்வர் அகப்பை!

எலுமிச்சை மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பதற்குப் பொதுவாக ‘தொரட்டி’யைப் (நீண்ட மூங்கில் கம்பின் நுனியில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இரும்பு வளைவுக் கம்பி) பயன்படுத்திதான் பறிப்பார்கள். தொரட்டியால் பழங்களை இழுத்துப் பறிக்கும்போது, அதன் கம்பி, கிளைகளில் பட்டு இலைகள், பூக்கள், பிஞ்சுகள் உதிரும். மரத்தைச் சுற்றி விழுகின்ற பழங்களையும் அதே தொரட்டியால் இழுத்து சேகரிக்கும்போது, கைகளில் முட்கள் குத்துகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் சிலர், மூங்கில் கம்பின் நுனியில் தேங்காய் சிரட்டையை அகப்பை போல இணைத்துக் கட்டி பழங்களைப் பறிக்கிறார்கள்.

மரத்தில் தொங்கும் பழத்தின் அடியில் வைத்து இதன், நுனிப்பகுதியால் இழுக்கும்போது இந்த அகப்பைக்குள் பழம் விழுந்துவிடும். அப்படியே மரத்தின் அடியில் விழுந்தாலும் பறித்த பழங்களைக் கைகளில் முள் படாமல் எளிதாக வெளியே இழுத்துவிடலாம். கிளையின் முட்களுக்கு நடுவில் பழம் சிக்கிக்கொண்டாலும் எளிதாக வெளியே எடுத்துவிடலாம். பல விவசாயிகள் இந்தச் சிரட்டை அகப்பையைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு சிறப்பான முறை. ஆனால், மூங்கில் கம்பு மற்றும் தேங்காய் சிரட்டை அடிக்கடி உடைந்துப் போய்விடும்.

எலுமிச்சை
எலுமிச்சை

இதனால்தான் அதற்கு மாற்றாக... 4 அடி நீளமுள்ள இரும்புக் குழாயின் [துரு பிடிக்காத தன்மை கொண்டது] நுனியில் சைக்கிள் பெல்லின் மூடியை வெல்டிங் வைத்து இணைத்துள்ளார், மஸ்தான். பெல் மூடியின் இன்னொரு ஓரத்தை, சிறிய அளவில் அரைவட்டமாக, கூர்மையாக வெட்டியுள்ளார். கூர்மையான பகுதி, பழத்தை பிடித்து இழுத்து, பெல் அகப்பையின் குழிக்குள் விழச் செய்கிறது. மரத்தின் அடியில் பழம் விழுந்தாலும், கிளையின் முட்களுக்கு நடுவில் பழம் சிக்கிக் கொண்டாலும் எளிதாக வெளியே எடுத்துவிடலாம்.