Published:Updated:

ஒரு ஏக்கர் குளத்தில் ஆண்டுக்கு ரூ.1,40,000 லாபம்... தாமரை கொடுக்கும் வெகுமதி!

தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி

மகசூல்

ஒரு ஏக்கர் குளத்தில் ஆண்டுக்கு ரூ.1,40,000 லாபம்... தாமரை கொடுக்கும் வெகுமதி!

மகசூல்

Published:Updated:
தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி

மலர் சாகுபடி என்று சொன்னாலே, ரோஜா, மல்லிகை, சம்பங்கி போன்ற வழக்கமான சில மலர்கள்தான் நம் நினைவுக்கு வரும். இதுபோன்ற மலர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பூதப்பாண்டி, தன்னுடைய பண்ணையில் குளம் அமைத்து, அதில் தாமரை மலர்களைச் சாகுபடி செய்து மகிழ்ச்சியான வருமானம் பார்த்து வருகிறார். பொதுவாக, ஊர் பொதுக் குளங்களை ஏலம் எடுப்பவர்கள், அதில் வளரும் தாமரைப்பூக்களைப் பறித்து விற்பனை செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சொந்த நிலத்தில் குளம் அமைத்து, இவர் தாமரையை முறையாகப் பயிர் செய்வதென்பது புதிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது வைராவிகுளம் கிராமம். பச்சை பசேலெனக் காட்சி அளித்துக் கொண்டிருந்த நெல் வயல்களுக்கு நடுவே ஓர் குளத்தில் பூத்துக் குலுங்கின தாமரை மலர்கள். இதுதான் விவசாயி பூதப்பாண்டி யின் தாமரைக்குளம். இக்குளத்தில் தகரப் பரிசலில் அமர்ந்து மெதுவாக நகர்ந்து சென்றவாறே, தாமரை மலர்களைப் பறித்துக்கொண்டிருந்த பூதப்பாண்டி, நம்மைக் கண்டதும் முகத்தில் புன்னகை மலர கரை ஒதுங்கினார். மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கிய பூதப்பாண்டி, “இந்தப் பகுதி விவசாயிங்க நெல்லும் வாழையும் சாகுபடி செய்றதுதான் வழக்கம். ஆனா, நான் வித்தியாசமான முயற்சியா தாமரைப்பூ சாகுபடி செய்றதை எல்லாருமே ஆச்சர்யமா பேசிக்கிறாங்க. தண்ணி வசதி இருந்துட்டா போதும். இதுக்கு எந்தவித பராமரிப்பும் தேவைப்படாது. ஒரு தடவை கொடி ஊன்றிட்டோம்னா, பல வருஷங்களுக்கு ரொம்ப எளிதா வருமானம் பார்க்கலாம்’’ எனத் தாமரைப் பூக்களைக் கைநிறைய அள்ளிக்காட்டியவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி
தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வன். பி.ஏ பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். பள்ளி, கல்லூரியில படிச்சிக் கிட்டு இருந்த சமயத்துலயே, நேரம் கிடைக் கிறப்ப எல்லாம் வயலுக்கு வந்துடுவேன். உழவு, நடவு, களையெடுப்பு, அறுவடைனு இதுல இருக்கக்கூடிய எல்லா வேலைகளுமே எனக்குத் தெரியும். ‘பள்ளிகூடப் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயம்தாம்பா நம்மளை என்னைக்கும் காப்பாத்தும்’னு எங்க அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார்.

அப்பா சொன்ன யோசனை

விவசாயத்துல எனக்கு இயல்பாவே ஈடுபாடு இருந்தும்கூட குடும்பச் சூழ்நிலை காரணமா வெளிநாடுகளுக்குப் போயி வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு. கத்தார், துபாய், அபுதாபினு 5 வருஷம் சமையல் மாஸ்டரா வேலை பாத்தேன். அதுக்கு மேல அங்க இருக்கப் புடிக்காததுனால, சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன். அப்பதான் அப்பா சொன்னாரு, ‘எதுக்குப்பா நீ வெளியில வேலைக்குப் போயி கஷ்டப்படணும். எனக்கும் வயசாயிடுச்சு. பேசாம விவசாயத்தைப் பாரு. அதுதான் நம்மளைக் கைவிடாதுனு. எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு. எங்க குடும்பத்துக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. இதுல நெல்லும் வாழையும் சாகுபடி செஞ்சிகிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல, இதெல்லாம எல்லாரும் வழக்கமா செய்றது தானே... நாம புது முயற்சியா ஏதாவது செஞ்சுப் பார்க்கணுங்கற எண்ணம் ஏற்பட்டுச்சு. அது லாபகரமாவும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கான தேடல்ல இருந்தப்பதான், நம்ம பண்ணையிலயே ஒரு குளம் அமைச்சு, தாமரைப்பூ சாகுபடி செஞ்சு பார்க்கலாம்ங்கற ஐடியா வந்துச்சு’’ என்று சொன்னவர், தாமரைச் சாகுபடி அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

தாமரைப் பூ
தாமரைப் பூ

‘‘2017-ம் வருஷம் ஒரு ஏக்கர் பரப்புல குளம் அமைச்சு, தாமரை சாகுபடியைத் தொடங் கினேன். கொடி நட்ட நாலு மாசத்துல பூப்பூக்க ஆரம்பிச்சிடுச்சு. அதைப் பார்த்தப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கொடி நட்ட 6-வது மாசத்துல இருந்து வருமானம் கொடுக்கக்கூடிய அளவுக்கு மகசூல் ஆரம்பிச் சது. கடந்த நாலரை வருஷமா நிறைவான வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், இதன் விற்பனை மற்றும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கோடைக்காலத்தில் அதிக மகசூல்

“ரெண்டு நாள்களுக்கு ஒருமுறை பூப் பறிக்கிறேன். மாசியில இருந்து ஆனி மாசம் வரைக்கும் வெயில் காலம்ங்கறதுனால, அதிகமா பூக்கள் கிடைக்கும். ஒரு பறிப்புக்கு 500 பூக்கள் பறிக்கலாம். மழைக்காலத்துல ஒரு பறிப்புக்கு 250 பூக்கள் பறிக்கலாம். பனிக்காலமான மார்கழி, தையில பூக்களே கிடைக்காது.

விற்பனைக்கு ஏற்ற பூ இப்படிதான் இருக்கணும்

அறுவடை செய்த பூக்களை மலர விடக் கூடாது. மலர்ந்த பூவுக்கு விலை இருக்காது. ஓரளவு பெரிய சைஸ் மொட்டுகளாப் பார்த்து காம்போட கிள்ளணும். மொட்டுக் களோட நுனிப்பகுதி பச்சை நிறம் மாறி ரோஸ் நிறம் படர்ந்திருக்கும். அதுதான் பறிப்புக்கு ஏற்ற மொட்டு. என்னோட பூக்களைத் திருநெல்வேலி, தென்காசி பூ மார்க்கெட்டுல விக்கிறேன்.

ஒரு பூவுக்குக் குறைந்தபட்சம் 1 ரூபாய் 50 காசு முதல் 4 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். விரத நாள்கள், பண்டிகை, மற்றபடி விஷேச நாள்கள்ல 7 ரூபாய் வரை விலை போகும். போன வருஷம் பத்து மாசப் பறிப்புல மொத்தம் 60,000 பூக்கள் வரை கிடைச்சது. ஒரு பூவுக்குச் சராசரியா 3 ரூபாய் வீதம் 1,80,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல செலவுன்னு பார்த்தா களை எடுப்பு 10,000 ரூபாய் மட்டும்தான் பூக்களை நானே பறிச்சுக்கிறேன். இதுக்குக் கூலினு கணக்குப்போட்டா 30,000 ஆகும். ஆக மொத்தம் 40,000 ரூபாய் செலவு போக, 1,40,000 ரூபாய் எனக்கு லாபமா கிடைச்சிருக்கு.

தாமரைப் பூ அறுவடை
தாமரைப் பூ அறுவடை

பூக்கடைகளில் விற்பனை செய்தால் கூடுதல் லாபம்

என்னோட தாமரை பூக்களைச் சந்தையில விற்பனை செய்யாம, பூக்கடைகள்ல வித்தா இன்னும் கூடுதலா விலை கிடைக்கும். அதுவும் ஒரே கடையில மொத்தமா விக்காம, நாலஞ்சு கடைகள்ல பிரிச்சு வித்தா, நல்ல விலை கிடைக்கும். ஆனா, அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. நெல், வாழை விவசாயத்தையும் கவனிச்சாகணும். இதுல கிடைக்குற லாபம் போதும்’’ என மன நிறைவுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு,

பூதப்பாண்டி,

செல்போன்: 96553 30734.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் பரப்பில் குளம் அமைத்து தாமரைப்பூ சாகுபடி செய்வதற்கான செயல்முறைகள் இங்கே...

தாமரை சாகுபடிக்குச் செம்மண் மற்றும் களிமண் ஏற்றது. பண்ணை யின் பள்ளமான பகுதியில் 4 அடி ஆழத்துக்குக் குளம் அமைத்து, 2 அடி உயரத்துக்குக் கரை அமைக்க வேண்டும். 4 டன் எரு போட்டு உழவு ஓட்ட வேண்டும். ஓர் அடி மட்டத்துக்குத் தண்ணீர் நிறுத்த வேண்டும். அடுத்த 10 நாள்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. இந்த 10 நாள்களில் மண் வளமாக மாறத் தொடங்கும். அதன் பிறகு, சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தாமரைக் கொடிகளை நடவு செய்ய வேண்டும். கொடிகளை நடவு செய்யத் துல்லியமான இடைவெளி தேவையில்லை. குளம் முழுக்கப் பரவலாக அனைத்து பகுதியிலும் கொடிகளை நடவு செய்ய வேண்டும். தாமரைக் கொடிகளில் வேருடன் சேர்ந்த தண்டு, குருத்து, இலை ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். பொதுக்குளங்களில் தாமரைப்பூக்கள் பூப்பறிக்கும் தொழிலாளர்கள் மூலம் இந்தக் கொடிகளைப் பெற்று நடவு செய்யலாம். ஒரு ஏக்கர் குளத்துக்கு 300 முதல் 350 கொடிகள் தேவை. கொடிகள் நடவு செய்த 7 - 10 நாள்களில் உள்ளங்கை அளவில் இலைகள் தென்படும். 40-ம் நாள் மேலும் அரை அடி மட்டத்துக்குத் தண்ணீர் நிரப்ப வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒருமுறை அரை அடி மட்டத்துக்குத் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீரின் மட்டம் 5 அடி உயரத்துக்கு வந்ததும் தண்ணீர் நிரப்பத் தேவையில்லை. அதேசமயம் தண்ணீரின் மட்டம் 5 அடியைவிடக் குறையாத அளவுக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி
தாமரை மலர்களுடன் பூதப்பாண்டி

தண்ணீரின் மேல் மட்டத்தில் குடை இலை சுருண்டு காணப்பட்டால் அதைக் கிள்ளி விட வேண்டும். குடை இலை அதிகமாகிவிட்டால் பூப்பறிக்க இடையூறாக இருப்பதுடன், சூரிய வெளிச்சம் தண்ணீரில் படுவதைத் தடுக்கும். இதனால் பூக்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உண்டு. அதேபோல பழுப்பு நிறமுள்ள இலைகளையும் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு கிள்ளி விடும் குடைஇலை, பழுப்பு இலைகளைத் தண்ணீரில் அப்படியே போட்டுவிடலாம். இரண்டு மூன்று நாட்களில் அழுகி தண்ணீருக்கு அடியில் சென்று உரமாகிவிடும்.

நிழல் தரும் மரங்களைத் தவிர்க்க வேண்டும்

4 மாதங்களுக்குப் பிறகு, பூக்கள் உருவாகத் தொடங்கும். 6-ம் மாதத்திலிருந்து பூக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். குளத்தின் கரையோரங்களில் முளைத்திருக்கும் புற்கள் போன்ற களைகளை அவ்வப்போது அகற்றிக்கொண்டே இருக்க வேண்டும். தாமரை சாகுபடியில் அதிக மகசூல் பெற வெயில் மிகவும் அவசியம். எனவே, குளத்தைச் சுற்றி நிழல் தரும் மரங்களைத் தவிர்க்க வேண்டும்.

புதிய கொடிகள்

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை குளத்தின் தண்ணீரை வெளியேற்றிவிட்டு, கொடிகளை அகற்றிவிட வேண்டும். மண்ணுக்குள் இருக்கும் கிழங்குகளை அப்படியே விட்டுவிட வேண்டும். சின்ன டிராக்டர் மூலம் ரோட்டோவேட்டர் கொண்டு மேலோட்டமாக உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு தண்ணீர் நிரப்ப வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களில் புதிய கொடிகள் நன்கு வளர்ந்து மீண்டும் மகசூல் கொடுக்கத் தொடங்கும்.

பூ பறிக்கக் கத்துக்கிட்டா, செலவு மிச்சம்

‘‘குளத்தோட சுற்றுப்பகுதியில களைச்செடிகள் உருவாகும். அதை அப்புறப்படுத்திடணும். இதுல வேற எந்த வித பராமரிப்பும் கிடையாது. இதுல பூப்பறிக்கிற கூலி மட்டும்தான் பெரிய செலவு. நாமலே பரிசல்ல ஏறி உட்கார்ந்து பூப்பறிக்கக் கத்துக்கிட்டா அந்தச் செலவும் மிச்சம்தான். இதனால தான் எனக்கு நிறைவான லாபம் கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என்கிறார் பூதப்பாண்டி.

மீன்கள் வளர்க்கலாம்

தாமரைக்குளத்தில் மீன்கள் வளர்க்கலாம். இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், தாமரையின் குருத்துக்களைச் சாப்பிடக்கூடிய பில்லுக் கெண்டை, கரைகளைச் சேதப்படுத்தக்கூடிய சிசி வகை மீன்களைத் தவிர்க்க வேண்டும். கட்லா, மிர்கால், ரோகு, திலேப்பியா, விறால் மீன்களை தாமரைக்குளத்தில் வளர்க்கலாம். தாமரைக் கொடி நட்ட அன்றே குளத்துக்குள் மீன் குஞ்சுகளை விடலாம். ஒரு ஏக்கர் பரப்புக்கு 1,000 குஞ்சுகள் விடலாம். தாமரையின் அழுகிய இலைகக்கழிவுகளை உண்டு மீன்கள் வளரும். இதனால் தாமரைக் கொடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால், மீன்களின் எச்சம் உரமாகி தாமரையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றும்போது மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம், குளத்தில் தாமரைக் கொடிகள் படர்ந்திருக்கும்போது, பெரிய வலையைப் போட்டு, ஒரே சமயத்தில் கணிசமான அளவுக்கு மீன்களைப் பிடிப்பது சாத்தியமில்லை. வீட்டுத் தேவைக்கு அவ்வப்போது, சிறிய கன்னி வலையைப் போட்டு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மீன்களைப் பிடிக்கலாம்.