Published:Updated:

இரண்டேகால் ஏக்கர்... 2,28,000 ரூபாய் கலப்பு வாழையில் கலக்கல் லாபம்!

வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி

மகசூல்

இரண்டேகால் ஏக்கர்... 2,28,000 ரூபாய் கலப்பு வாழையில் கலக்கல் லாபம்!

மகசூல்

Published:Updated:
வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி

‘‘ஒரே ரக வாழையைச் சாகுபடி செய்தால் சந்தையில் தேவை, விலை ஏற்ற இறக்கத்தால் சரியான விலை கிடைக்காமல் போகலாம். இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க, பல ரக வாழையைக் கலந்து நட்டால் ஒண்ணுல இல்லாட்டாலும் இன்னொண்ணுல வருமானம் கிடைக்கும்” என்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரி லிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது தனக்கர் குளம் கிராமம். ஊரின் தொடக்கத்திலேயே இருக்கிறது அருண்குமாரின் ‘காடு ஆர்கானிக் பார்ம்.’ ஒரு காலை வேளையில் அருண் குமாரைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றவர், வாழைத்தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

“வள்ளியூர்தான் என்னோட சொந்த ஊர். பி.டெக், எம்.பி.ஏ முடிச்சேன். ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்ல ‘அக்ரி கிரெடிட் மேனேஜரா’ 3 வருஷம் வேலை செஞ்சேன். அதுக்குப் பிறகு சென்னை, ‘இன்போசிஸ் ஐ.டி கம்பெனியில பேங்கிங் கன்சல்டன்ட்’டா 6 வருஷம் இருந்தேன். இப்போ பெங்களூருல ஒரு தனியார் கம்பெனியில ‘பேங்கிங் கன்சல்டன்ட்’டா 5 வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். கூடவே, விடுமுறை நாள்கள்ல விவசாயமும் செய்றேன்.

வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி
வாழைத்தார்களுடன் அருண்குமார்-சித்ரா தம்பதி

எவ்வளவு வேகமா ஓடினாலும் ஓர் இடத்துல நின்னுதானே ஆகணும்? அதே மாதிரி, நல்லா சம்பாதிச்சாலும் ஏதோ ஒரு மனக்குறை எனக்குள்ள இருந்துச்சு. இது நமக்கான பாதை இல்லன்னு தோணுச்சு. அதே நேரத்துல சொந்தமா ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. கடந்த 10 வருஷமாவே ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறவங்கள்ல நிறைய பேரு, இயற்கை விவசாயத்துப் பக்கம் வர்றாங்க. அதனால, சொந்த ஊர்ல நிலத்தை வாங்கி இப்பவே விவசாயத்தை ஆரம்பிச்சுட வேண்டியது தானேன்னு நண்பர்களும் சொன்னாங்க.

‘நாமளும் விவசாயம் செய்யலாமே... நல்லா சாப்பிடுவோம். அதையும் நல்லதையே சாப்பிடுவோம்’னு என்னோட மனைவி சித்ராகிட்ட சொன்னேன். அவங்களும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னாங்க. வள்ளியூரைச் சுத்திலும் நெல், வாழைதான் முக்கிய பயிர். முழுக்கவும் ரசாயன முறை விவசாயம்தான். ஆனா, எனக்கு இயற்கை முறையில விவசாயம் செய்யலாம்னு விருப்பம் இருந்துச்சு.

இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சுக்க இணையத்துல தேடினப்போதான் பசுமை விகடன் அறிமுகமாச்சு. தொடர்ந்து படிச்சப்போ நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். மகசூல் கட்டுரைகள்ல விவசாயிங்க சொன்ன சில முக்கியமான தகவல்கள், இடுபொருள்கள் தயாரிப்பு முறை, சாகுபடி பாடங்களைத் தனி நோட்டுல குறிப்பெடுத்து வச்சிருக்கேன். ஊருக்கு வந்து விவசாயம் செய்யப்போறதா வீட்டுல சொன்னதும் சிரிச்சாங்க. ‘விவசாயமே வேஸ்ட்தான். இதுல இயற்கை விவசாயம் வேறயா? கடல்ல உப்பைக் கரைச்சுட்டு நான் கரைச்ச உப்பு எங்கன்னு தேடுற மாதிரி இருக்குது உங்க முடிவு’ன்னு என்னோட மாமியார் சொன்னாங்க. இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னாங்க. ஆனா, நானும் மனைவியும் இயற்கை விவசாயம் செய்யுறதுல உறுதியா இருந்தோம்’’ என்றவர், விவசாயியாக மாறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘2016-ம் வருஷம் இந்த நிலத்தை வாங்கினேன். வாங்கும்போது தரிசு நிலமா தான் இருந்துச்சு. நிலத்தை 5 தடவை உழுதேன். பல தானியம் விதைச்சு மடக்கி உழுதேன். இப்படி ரெண்டு முறை செஞ்சேன். செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைக் கொட்டியும் வளப்படுத்தினேன். எதுலயுமே அகலக்கால் வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால, நிலத்தை வளப்படுத்தியும் முதல்தடவ 75 சென்ட்ல நேந்திரன் வாழையைச் சாகுபடி செஞ்சேன். ஓரளவு திரட்சியான காய்கள் காய்ச்சது. அதுலயே மறுதாம்பு விட்டேன். மறுதாம்புல வந்த குலைகள் இன்னும் சிறப்பா இருந்துச்சு. வீட்டுல உள்ள எல்லோரையும் தோட்டத் துக்குக் கூட்டிட்டு வந்து காட்டுனேன். ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. இயற்கை விவசாயத்தை விமர்சனம் செஞ்சு பேசினவங்க, ‘நீங்க ரெண்டு பேரும் எது செஞ்சாலும் யோசிச்சுதான் செய்வீங்க. இது உங்களுக்கான வெற்றிதான்’னு பாராட்டினாங்க.

‘ஒரே ரக வாழையை அதிக பரப்புல சாகுபடி செஞ்சுட்டு சந்தைப் படுத்துறதுல சிரமப்படுறதை விட, நாலஞ்சு ரகங்களா கலந்து போட்டா நோய்த்தாக்குதல் இருக்காது. ஒண்ணுல விலை இல்லன்னாலும் இன்னொண்ணுல கிடைச்சுடும்’னு ஒரு கட்டுரையில படிச்சேன். இப்போ 4 வருஷமா கலப்பு முறையில வாழைச் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்றவர் வாழை விவசாயத்தைப் பற்றிப் பேசினார்.

‘‘இது மொத்தம் 6 ஏக்கர் நிலம். ரெண்டே கால் ஏக்கர்ல செவ்வாழை, நேந்திரன், நாடான், ரசகதலி, ரொபோஸ்டா, மலை வாழை, கற்பூரவள்ளி, பச்சை படர்த்தி ஆகிய 8 ரக வாழைகள் மறுதாம்புல குலை தள்ளிய நிலையில இருக்கு. இன்னொரு ரெண்டரை ஏக்கர் நாட்டுரகத் தென்னை இருக்கு. அதுக்கு ஊடுபயிராகவும் இதே 8 ரக வாழைகளை நடவு செஞ்சு 3 மாசமாகுது. ஒண்ணேகால் ஏக்கர்ல மிளகாய், தக்காளி, கொய்யா, பலா, சீத்தா, மாதுளையைக் கலப்பா நட்டிருக்கேன்” என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘பெங்களூர்ல வேலை செஞ்சாலும் 10 நாளுக்கு ஒரு தடவை ஊருக்கு வந்திடுவேன். தினமும் தோட்டத்து வேலையாளுங்ககிட்ட இன்னிக்கு என்னென்ன வேலைகள் நடந்துச்சுன்னு கேட்டுக்குவேன். எந்தெந்த தேதிகள்ல இடுபொருள் தெளிக்கணும்னு நாலஞ்சு நாளுக்கு முன்னாடியே ஞாபகப் படுத்துவேன். நான் சொன்ன மாதிரியே சரியா செஞ்சுடுவாங்க. அதனால, விவசாயத்தைப் பத்தின கவலை இல்ல. இந்த ரெண்டேகால் ஏக்கர்ல 600 செவ்வாழை, 250 நேந்திரன், 250 நாடான், 200 ரசகதலி, 100 ரொபோஸ்டா, 100 மலை வாழை, 100 கற்பூர வள்ளி, 100 பச்சை படர்த்தினு மொத்தம் 1700 வாழைகள் இருக்கு. இதுல 1,500 வாழைகள்ல இருந்து தொடர்ச்சியா குலை வெட்டிகிட்டு இருக்கேன்.

வாழைச் சாகுபடி
வாழைச் சாகுபடி

மறுதாம்பு விட்டிருக்கிறதுனால தொடர்ச்சியா குலைகள் அறுவடையில இருந்துகிட்டே இருக்குது. வாரத்துக்கு 250-ல இருந்து 300 கிலோ வரைக்கும் சென்னை, பெங்களூர்ல இருக்க இயற்கை அங்காடிகளுக்கு, சீப்பு சீப்பா வெட்டி அட்டைப்பெட்டியில கட்டி அனுப்புறேன். சில நேரங்கள்ல நாகர்கோவிலுக்கும் தேவையைப் பொறுத்து அனுப்புறேன். போன வருஷம் மொத்தம் 13,310 கிலோ பழம் விற்பனையாச்சு. எல்லா ரக வாழை யையும் ஒரு கிலோ 25 ரூபாய்னு ஒரே விலையாத்தான் விற்பனை செய்யுறேன். அந்த வகையில 3,32,750 வருமானமாக் கிடைச்சுது. இதுல செலவுகள் 1,04,700 ரூபாய் கழிச்சு, 2,28,050 லாபமாக் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக,

‘‘தார் கணக்குல வாழைக்காய் கமிஷன் கடையில வித்திருந்தா, குறைவான வருமானம்தான் கிடைச்சிருக்கும். இந்த மறுதாம்பு வாழை வருமானத்துல பராமரிப்புச் செலவோடு அடிப்படைச் செலவுகளையும் சேர்த்திருக்கேன். அப்படிச் சேர்த்தும்கூட இது எனக்கு நல்ல வருமானம் தான். என்னை மாதிரி இயற்கை முறையில சாகுபடி செய்யுற விவசாயிகள்கிட்ட இருந்து விளைபொருள்களை வாங்கிச் சந்தைப்படுத்தலாங்கிற யோசனையும் இருக்கு. இப்படி இயற்கை விவசாயிங்க ஒரு குழுவா சேர்ந்தா அவங்களுக்கு உரிய விலை கிடைக்கும்’’ என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, அருண்குமார்,

செல்போன்: 95662 55228

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இரண்டேகால் ஏக்கரில் கலப்பு வாழைச் சாகுபடி செய்வது குறித்து அருண்குமார் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே!

வாழைச் சாகுபடிக்கு வடிகால் வசதி உள்ள மண் ஏற்றது. வண்டல், கரிசல் மற்றும் செம்மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை மற்றும் குழிக்குக்குழி 8 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதற்கிடையில் பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது நல்லது. குழிக்குள் 5 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்துடன் அரைக்கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து போட்டுவிட்டு 7 நாள்கள் காய விட வேண்டும். இதில், மூன்றாவது நாள் குழிக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

8-ம் நாளில் விதைக்கிழங்குகளை ஊன்ற வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் சூடோமோனஸ், 1 லிட்டர் டிரைக்கோடெர்மா விரிடி, 5 லிட்டர் ‘வேஸ்ட் டீ கம்போஸர்’, 3 லிட்டர் மீன் அமிலம் கலந்துகொள்ள வேண்டும். இதில், விதைக்கிழங்கை முக்கி எடுத்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் அழுகல், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது. 15-ம் நாளிலிருந்து 30 நாள்களுக்கு ஒருமுறை செறிவூட்டப்பட்ட ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் ஒரு லிட்டர் மீன் அமிலம், 2 லிட்டர் அசோஸ்பைரில்லம், 2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா, பயோபொட்டாஷ், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, ஹியூமிக் ஆசிட் ஆகியவற்றைத் தலா ஒரு லிட்டர் கலந்து நன்கு கலக்கினால் செறிவூட்டப்பட்ட ஜீவாமிர்தம் தயார். ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும்.

வாழைச் சாகுபடி
வாழைச் சாகுபடி

விதைக்கிழங்கு ஊன்றிய அன்றே தக்கைப்பூண்டு விதையைப் பரவலாகத் தூவ வேண்டும். பூப்பூத்த நிலையில் அப்படியே மடக்கி மூடாக்காக வைத்துவிடலாம். இதனால், களைகள் கட்டுப்படும். 90-ம் நாளுக்குப் பிறகு, 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி மீன் அமிலம், தலா 100 மி.லி பாஸ்போ பாக்டீரியா, ஹியூமிக் ஆசிட், கடல்பாசி திரவம் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கலப்பு வாழையாகச் சாகுபடி செய்வதால் பெரும்பாலும் இலைப்புள்ளி, தூர்வெடிப்பு, வேர் அழுகல் போன்ற நோய்களின் தாக்குதலுக்கான வாய்ப்புக் குறைவு. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5-ம் மாதத்திலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் தலா 100 மி.லி மெட்டாரைசியம் அனிசோபோல், பெவேரியா பேசினியா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். 12-ம் மாதம் வாழைத்தார்களை அறுவடை செய்யலாம்.

செலவைக் குறைக்கும் மறுதாம்பு

மறுதாம்பு குறித்துப் பேசிய அருண்குமார், “வாழையை மறுதாம்பு விடுறதுனால உழவு, தொழுவுரம், விதைக்கிழங்கு, நடவு போன்ற ஆரம்பகட்ட செலவுகள் மிச்சம்தான். வழக்கமான அறுவடையைவிட ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே இந்த மறுதாம்பு வாழைங்க அறுவடைக்கு வந்துடும். தாய் வாழை பூ தள்ளிய பிறகு, பூவின் எதிர்த்திசையில இருக்குற பக்கக்கன்றை வெட்டாம, மறுதாம்புக்காக விட்டுடணும். அந்தக் கன்னு ஈட்டி மாதிரி திரட்சியா இல்லேன்னா, அதை விட்டுட்டு அதுக்கு பக்கத்துல இருக்குற திரட்சியான கன்றை மறுதாம்புக்காக விடலாம். தாய் வாழையில குலை வெட்டினதும், மறுதாம்புக் கன்றை நல்லா பராமரிக்கணும். இந்த முறையில நல்லபடியா கவனிச்சா 10-வது மறுதாம்பு வரைக்கும் குலை வெட்டலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism