Published:Updated:

ஐந்தடுக்குச் சாகுபடி! 1,30,000 ரூபாய்... ஊடுபயிர் கொடுக்கும் உன்னத வருமானம்!

தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலத்திலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது நாடாங்காடு கிராமம். எங்கு பார்த்தாலும் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள தென்னை மரங்கள். செழிப்போடு காணப்படும் நெல் வயல்கள் என்று இருக்க, ஒரு காலைவேளையில் சசிக்குமாரின் ஒருங்கிணைந்த பண்ணைக்குச் சென்றோம். பண்ணைக்குள் நுழைந்து பார்த்தபோது ஒரு வனத்துக்குள் சென்ற உணர்வைத் தந்தது. தேக்கு, மகோகனி, மா, ரோஸ்வுட், சவுக்கு உள்ளிட்ட உயர்ந்து வளர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் பண்ணையின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்பதைப்போல் கம்பீரமாக நின்றன. அறுவடை செய்த காய்கறிகளைப் பண்ணையின் முகப்பு பகுதிக்கு எடுத்துச் செல்வதற்காக பேட்டரி காரில் ஏற்றிக் கொண்டிருந்த சசிக்குமார், மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றார். காயை முகப்புப் பகுதியில் இறக்கிவிட்டு வந்தவர், ‘முதல்ல பண்ணையைச் சுத்தி பாருங்க’ என நம்மை பேட்டரி காரில் ஏற்றி, பண்ணையைச் சுற்றி வந்தார்.

அறுவடையான காய்கறிகளுடன் சசிக்குமார்
அறுவடையான காய்கறிகளுடன் சசிக்குமார்

மண்ணில் முதலீடு

குடையாக விரிந்து நிழல் பரப்பிய மரங்களுக்கு நடுவே பேட்டரி காரில் பயணித்தது மனசுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. ‘‘பண்ணையிலிருந்து எந்த ஒரு பொருளையும் கழிவுனு வெளியே அனுப்புறதே இல்ல. எல்லாத்தையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தி மண்ணுக்கு வளத்தையும், எங்களுக்கு வருமானத்தையும் பெருக்குறோம்’’ எனப் பேசத் தொடங்கிய சசிக்குமார்,

‘‘நான் இன்ஜினீயரிங் படிச்சிருக்கிறேன். அப்பா, அம்மா 10 ஏக்கர் நிலத்துல தென்னை சாகுபடி செஞ்சிட்டு இருந்தாங்க. அந்த வருமானத்துல என்னைப் படிக்க வெச்சு ஆளாக்கினாங்க. படிக்கும்போதே நானும் விவசாய வேலைகளைச் செய்வேன். படிப்பு முடிஞ்சுதும் ‘சாப்ட்வேர் இன்ஜினீயர்’ வேலை கிடைச்சது. கை நிறைய சம்பளம். அந்தச் சம்பளத்தை மண்ணிலேயே முதலீடு செஞ்சேன். என்னுடைய சம்பளத்தைச் சேர்த்து வெச்சு, எங்க நிலத்தை ஒட்டியே 15 ஏக்கர் நிலம் வாங்கினேன். இப்ப எங்ககிட்ட மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்குது. மணல் கலந்த செம்மண் நிலம்.

தென்னை, வாழை, நெல், கடலை, உளுந்து பயிர்களை ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தோம். 2012-ம் வருஷத்துக் குப் பிறகு நம்மாழ்வார் அய்யா சொன்னத பின்பற்றி ரசாயனம் பயன்படுத்தாம அமுதக் கரைசல், பஞ்சகவ்யானு இயற்கை இடுபொருள்களை வெச்சு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

ஐந்தடுக்கு முறையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள்
ஐந்தடுக்கு முறையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள்


ரசாயன உரம் பயன்படுத்துறதால விளைச்சல் கிடைக்கும். ஆனால், மண் வளம் கெடும்னு சொல்வாங்க. அதை அனுபவபூர்வமா தெரிஞ்சுகிட்டேன். ஆரம்பத்துல அமுதக் கரைசல், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டித் தயார் செஞ்சு பயன்படுத்திக்கிட்டு வந்தோம். பிறகு, பாண்டிச்சேரி வெற்றிச்செல்வன் மூலமா, ஜீரோ பட்ஜெட் முறை பற்றித் தெரிய வந்துச்சு.

தனிப் பயிராக இருக்கும்போது பூச்சி சுலபமா பயிரைத் தாக்குது. ஒரே நேரத்துல பல பயிர்கள் சாகுபடி செய்யும்போது பயிருக்கும் மண்ணுக்கும் நெருக்கமான உறவு உருவாகுது. வேற வேற வடிவத்தில் இருக்குற வேர்கள், மண்ணில் மாற்றத்தை உண்டாக்கி புதுச் சக்தியைக் கொடுக்குதுனு தெரிஞ்சுகிட்டு சுபாஷ் பாலேக்கர் உருவாக்கின ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறைகளையும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன்.

ஐந்தடுக்குச் சாகுபடி முறை
ஐந்தடுக்குச் சாகுபடி முறை


25 ஏக்கர்ல 2,000 தென்னை மரங்கள் இருந்துச்சு. கஜா புயல்ல சுமார் 1,000 தென்னை மரங்க விழுந்துடுச்சு. அந்த இடத்துல புதுசா 1,000 தென்னங்கன்றுகளை நடவு செஞ்சிருக்கேன். ரெண்டரை மாசத்துக்கு ஒரு தடவை 15,000 தேங்காய் வெட்டுறோம். ஒரு தேங்காய் விலை 15 ரூபாய். சமயத்தில இளநியாவும் விற்பனை செய்றேன். அதுமூலம் 6 மாசத்துல 4,50,000 ரூபாய் வருமானம் வருது. கூடவே தேக்கு 1,000, மா 200, ரோஸ்வுட் 200, மகோகனி 1,000 மரங்கள் இருக்குது.

தென்னையோட வருமானம், லாபம்கிறது தொடர்ந்துகிட்டிருக்கு. இதுக்கு நடுவுல, 4 ஏக்கர் நிலத்துல ஐந்தடுக்கு முறையில விவசாயத்தை ஆரம்பிச்சிருக்கேன். முழுக்க சுபாஷ் பாலேக்கர் முறையைத்தான் பயன்படுத்துறேன். வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’’ என்று வார்த்தைகளில் உற்சாகம் கூட்டிக்கொண்ட சசிக்குமார், தொடர்ந்தார்.

செண்டுமல்லி
செண்டுமல்லி

வாடல் நோய் பிரச்னையே இல்லை

“கடந்த ஏப்ரல் மாசம் ஐந்தடுக்குச் சாகுபடி ஆரம்பிச்சேன். அடுத்தடுத்த மாசத்திலிருந்து ஒவ்வொரு பயிரா வருமானம் கொடுக்க ஆரம்பிச்சது. முதல் மாசத்துல முள்ளங்கி, அடுத்து கத்திரி, பச்சை மிளகாய், வெண்டை, தக்காளினு ஒவ்வொண்ணா மகசூல் கொடுக்க ஆரம்பிச் சது. மஞ்சள் வளர்ந்துகிட்டு இருக்குது. பொங்கல் சமயத்துல அறுவடை செய்யப் போறேன். அன்னாசி ஒரு வருடத்துக்குப் பிறகே காய்ப்புக்கு வரும்.

4 ஏக்கர்ல தென்னையில் பழ மரங்கள், வாழை, காய்கறிப் பயிர்கள், கொடிப் பயிர்கள்னு ஐந்தடுக்கு முறையில் சாகுபடி பண்றேன். பூவன், ரஸ்தாளி, மலை வாழை ரகங்கள் இருக்கு. எல்லாமே தார் விடக்கூடிய நிலையில இருக்குது. பொதுவா எங்க பகுதியில தென்னையில வாடல் நோய் அதிகம் வரும். ஆனால் ஐந்தடுக்கு முறையில் பல பயிர்கள் இருக்குறதால, தென்னைக்கு அது மாதிரியான பாதிப்பில்லை. பயிர்களைக் குறி வெச்சு வரும் பூச்சி, வண்டுகளைச் செண்டிப் பூ(செண்டுமல்லி) கவர்ந்துடுது. அதனால பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்ல. தென்னை மட்டை, குருத்துகளை மூடாக்காகப் பயன்படுத்திக் கிறேன்.

இங்க விளையுற காய்கறிகளை நேரடியாகப் பண்ணைக்கே வந்து வாங்கிட்டுப் போயிடு றாங்க. எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்காங்க. போன் பண்ணிச் சொல்றவங் களுக்கு வீட்டுக்கே பொருள்களை அனுப்பு றோம். செண்டிப் பூக்களைப் பூக்கடைக்காரங்க நேரடியா வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க.

கத்திரி
கத்திரி
மாடுகள்
மாடுகள்

ஆறு மாசத்துல செண்டிப்பூவிலிருந்து 50,000 ரூபாய், கத்திரி, வெண்டை ரெண்டிலும் 25,000 ரூபாய், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 10,000 ரூபாய், முள்ளங்கி, கொத்தவரை 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறோம். விற்பனை ஆகாம தேங்குற கத்திரிக்காய், வெண்டைக்காயை வத்தல் போட்டு விற்பனை பண்ணினோம். அதுமூலம் 15,000 ரூபாய் கிடைச்சது.

முருங்கைக் கீரைகளைப் பறிச்சு மூணு நாள் நிழலில் காய வெச்சு அதில் சீரகம், மிளகு தேவையான அளவு உப்பு சேர்த்துப் பொடி தயார் பண்ணி, ஒரு கிலோ 750 ரூபாய்னு விற்பனை செய்றோம். முருங்கைக் கீரை பொடியில் குழம்பு, சூப் செய்யலாம். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்குது. முருங்கைப் பொடிமூலம் 10,000 ரூபாய் கிடைச்சது. எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 1,30,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. 4 ஏக்கர்ல நடக்கிற ஐந்தடுக்கு விவசாய முறைக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவானது. இதில் வாழை, மஞ்சள், அன்னாசி பலன் கொடுக்கத் தயாராகிட்டு இருக்குது. இனிமே எனக்கு பைசா செலவில்ல. வருமானம் மட்டும்தான்’’ என்றவர் நிறைவாக,

கொத்தவரை
கொத்தவரை


‘‘ஐந்தடுக்குச் சாகுபடியின் முதல் நோக்கமே மண் ஆரோக்கியத்தைப் பெருக்கணும்ங் கிறதுதான். பல பயிர்களைப் பயிரிடுறதுனால எந்தப் பயிரும் பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகாது. தென்னை மரங்களும் வாடல் நோயிலிருந்து பாதுகாக்கப்படுது. பண்ணை யில் எந்த ஒரு பொருளும் வீணானதுன்னு வெளியே தூக்கி எறியறதில்ல. மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். இப்படி இதோட நன்மைகளைச் சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப மண் மட்டுமல்ல... எங்களோட மனசும் நெறஞ்சு இருக்கு’’ என்றார் மகிழ்ச்சியாக.தொடர்புக்கு, சசிக்குமார்,

செல்போன்: 90804 03841.

ஐந்தடுக்குச் சாகுபடி

சுபாஷ் பாலேக்கரின் ஐந்தடுக்குச் சாகுபடி முறை குறித்து சசிக்குமார் பகிர்ந்துகொண்டவை, பாடமாக இங்கே இடம் பெறுகிறது.

தென்னை பிரதான பயிர். இரண்டாவது அடுக்கில் மரப்பயிர்கள், மூன்றாவது அடுக்கில் வாழை, நான்காவது அடுக்கில் காய்கறிச் செடிகள், ஐந்தாவது அடுக்கில் கொடி வகைப் பயிர்கள். இதுதான் ஐந்தடுக்குச் சாகுபடி முறை. நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் மண்ணை வைத்து வரப்பு போன்று மண் மேடை அமைக்க வேண்டும். ஒரு குழி விட்டு ஒரு குழி வாய்க்கால் பள்ளத்தில தண்ணீர் தெளிக்கும் மழைத் தூவானை (ரெயின் கன்) அமைக்க வேண்டும். ஒரு மழைத்தூவான் 6 அடி சுற்றளவில் தண்ணீரைத் தெளிக்கும். மழைத்தூவான் அமைக்கப்படாத குழியில் அன்னாசி செடிகளை ஊன்ற வேண்டும் (4,000 செடிகள்வரை நடவு செய்யலாம்).

மண் மேடையின் பக்கவாட்டில் இருபுறமும் அரையடி இடைவெளி விட்டு, மஞ்சள் நடவு செய்ய வேண்டும். மண் மேடாக உள்ள பகுதியில் வாழை, முருங்கை, சப்போட்டா, சீத்தாப் பழம் ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும். இவற்றுக்கிடையே வெண்டைக்காய், கத்திரிக்காய், கொத்தவரை, தக்காளி, பச்சை மிளகாய், பீர்க்கன், பூசணிக்காய் மற்றும் செண்டிப்பூ உள்ளிட்டவற்றைப் பயிர் செய்ய வேண்டும்.

ஐந்தடுக்குச் சாகுபடி முறை
ஐந்தடுக்குச் சாகுபடி முறை


கொடிப்பயிரின் அடிப்பகுதியை வெட்டக் கூடாது. பீர்க்கன், பூசணி காய்ப்பு முடிந்த பிறகு, வேரோடு வெட்டாமல் அடிப் பகுதியுடன் வெட்டி விட வேண்டும். அந்த வேரில் உள்ள இடைவெளி வழியாக மற்ற பயிர்களுக்குக் காற்று உள்ளே செல்லும். அதனால் பயிர் நல்ல முறையில் வளரும். மழை பெய்யும்போது மழைநீர் வேகமாக வந்து தரையில் விழாது. தென்னை, பழ மரங்களின் இலைகளில் பட்டு வேகம் குறைந்து, மெதுவாக மழைநீர் வழிந்து பயிரை வந்தடையும். அப்போது பஞ்சு எப்படித் தண்ணீரை உறிஞ்சுமோ அதே மாதிரி மண் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். மழைநீர் வேறு பகுதிக்கு ஓடாமல் பயிரின் அடிப்பகுதியைச் சென்றடையும். இதுதான் ஐந்தடுக்கு முறையின் சிறப்பு.

மண்புழு உரம்
மண்புழு உரம்

இயற்கை விளைபொருள்கள் விற்பனை

‘‘கடந்த முறை ரெண்டு ஏக்கர்ல பாரம்பர்ய ரகமான பூங்கார் பயிரிட்டேன். எருக்கஞ் செடி இலைகளை வயலில் போட்டு முதல் சேர் உழவு ஓட்டினேன். இலை அழுகிய பிறகு, மண்புழு உரம் போட்டு உழவு ஓட்டினேன். பிறகு ஓர் அடி இடைவெளியில நாற்றுகளை நடவு (வரிசை நடவு) பண்ணினேன். 15 நாளைக்கு ஒரு தடவை பாசன தண்ணியில ஜீவாமிர்தம் மட்டும் கலந்து கொடுத்தேன். கோனோவீடர் மூலம் களை எடுத்தேன். ரெண்டு ஏக்கர்ல 45 மூட்டை மகசூல் கிடைச்சது. என் மனைவி நளினி, சென்னையில் மகப்பேறு மருத்துவரா இருக்கிறார். அவர், சிகிச்சைக்கு வர்ற கர்ப்பிணி பெண்களுக்கு மாத்திரையைக் குறைச்சுட்டு, பூங்கார் அரிசியைப் பயன்படுத்த பரிந்துரை செய்றாங்க. சுகப்பிரவசம், தாய்ப்பால் சுரக்கனு பல நன்மைகளைப் பூங்கார் அரிசி தருது. தலா 5 மூட்டைகள் வீதம் 15 மூட்டை நெல்லை அவல், பச்சரிசி, புழுங்கல் அரிசியா மதிப்புக்கூட்டினோம். கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்றோம்’’ என்கிறார் சசிக்குமார்.

மேய்ச்சலில் மாடுகள்
மேய்ச்சலில் மாடுகள்

கைகொடுக்கும் கால்நடைகள்

பண்ணையில் உள்ள கால்நடைகள் பற்றிப் பேசிய சசிக்குமார், ‘‘நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். இயற்கையான முறையில வளர்றதால எங்க பண்ணையில வளர்ற கோழிகள் தனிச் சுவையோடு இருக்கும். ஒரு கோழி 600 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். 6 மாசத்துல 100 கோழிகள் விற்பனை மூலமா 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுக்காக எந்த மெனக்கெடலும் இல்ல.

நாட்டு ரகமான உம்பளச்சேரி ரகத்துல 8 பசு மாடுகள், 4 காளை மாடுகள் இருக்குது. சாணம், மாட்டுச் சிறுநீருக்காகத்தான் மாடுகளை வளர்க்குறேன். மாட்டுக் கொட்டகை தரையில மாட்டோட வயிறு அழுந்தாம இருக்க ரப்பர் படுக்கை வசதி அமைச்சிருக்கேன்.

கோழிகள்
கோழிகள்

ஜீவாமிர்தம் தயாரிக்கிற தொட்டியில மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீர் போய்ச் சேர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கேன். அதுல வெல்லப்பாகு, உளுந்து மாவு சேர்த்து கலக்குறதுக்காக ஒரு இயந்திரம் இருக்கு. அது மூலமா தொட்டிக்குள்ளயே கலந்து, நொதிக்கிறதுக்காக 3 நாள்கள் விட்டுடுவேன். பிறகு குழாய்கள் வழியாக, ஜீவாமிர்தம் பாசன தண்ணியில கலந்து பயிர்களுக்குப் போயிடும்.

ஜீவாமிர்தம் தயாரிக்கும்போது அடியில் தங்குற சாணத்தை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்குவேன். தேங்காய் உறிச்ச பிறகு கிடைக்குற மட்டைகளைத் தூளாக்குற இயந்திரம் மூலமா தூளாக்கிடுவோம். அந்தத் தூள்லயும் மண்புழு உரம் தயாரிச்சு பயிர்களுக்குப் பயன்படுத்துறேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு