Published:Updated:

60 சென்ட்... ரூ.1,50,000 பழுதில்லா வருமானம் கொடுக்கும் பாகல்..!

தோட்டத்தில் காளியண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் காளியண்ணன்

மகசூல்

60 சென்ட்... ரூ.1,50,000 பழுதில்லா வருமானம் கொடுக்கும் பாகல்..!

மகசூல்

Published:Updated:
தோட்டத்தில் காளியண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் காளியண்ணன்

- ஞான.வேல்முருகன்

நிலையான விலையும், விற்பனை வாய்ப்பும் கிடைக்கக்கூடிய பயிர்களே விவசாயிகளின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில், கொடி வகைக் காய்கறிகளுக்கு முதன்மை இடம் உண்டு. புடலை, பீர்க்கன் வரிசையில் பாகற்காயும் (பாகல்) விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. பாகற்காயைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டும் விவசாயிகளில் ஒருவராக இருக்கிறார் சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தில் வசிக்கும் காளியண்ணன்.

பாகல், தக்காளி, மிளகாய், வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு எனப் பல பயிர்களைச் சாகுபடி செய்து வரும் காளியண்ணன், ஒவ்வொரு முதன்மை பயிருக்கும் இடையில் ஊடுபயிரைச் சாகுபடி செய்து அதிலும் வருமானம் பார்த்து வருகிறார். ஒரு காலை நேரத்தில், தனது தோட்டத்தில் பாகல் அறுவடை பணியில் இருந்தவரைச் சந்தித்தோம்.

“எனக்கு பூர்வீகம் இந்த ஊர்தான். ஐ.டி.ஐ படிச்சு முடிச்சிட்டு மோட்டார் கம்பெனி, பெட்ரோல் பங்க், கெமிக்கல் கம்பெனினு பல இடங்கள்ல வேலைபார்த்தேன். அப்படியே 20 வருஷம் ஓடிடுச்சு. எங்களுக்குச் சொந்தமா இருக்கிற 15 ஏக்கர் நிலத்துல மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள்னு அப்பாதான் விவசாயம் பார்த்துக்கிட்டு வந்தாரு. ஒரு கட்டத்துல அவரால முடியல. அதனால நானே விவசாயத்தைப் பார்க்கலாமுன்னு வேலையை விட்டேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

காளியண்ணன்
காளியண்ணன்

“வேலையை விட்டுட்டு விவசாயத்துக்கு வரும்போது எங்ககிட்ட 20 ஆடுகள் இருந்துச்சு. நான் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிக் கூடுதலா 30 ஆடுகளை வாங்கிவிட்டேன். வேலையை விட்ட பிறகுதான் மாத வருமானம் எவ்வளவு அவசியம்னு உணரத் தொடங்கினேன். காரணம், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டினு எல்லாரும் மாதாமாதம் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வாழ்க்கை ஓட்டிக்கிட்டு இருக்கிறவங்க. அவங்களுக்கே ஒரு பெருந்தொகை தேவைப்பட்டுச்சு. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யணும்னா மரவள்ளியும் மஞ்சளும் கைகொடுக்காது என்பதை உணர்ந்தேன். தினமும் வருமானம் கொடுக்கிற பயிர்களைச் சாகுபடி செய்யத் தொடங்கினேன்” என்றவர் அறுவடை பணிகளை முடித்துவிட்டு வெயிலுக்கு இதமாக மர நிழலில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

“வழக்கமா பயிர் செஞ்சுட்டு வர்ற மரவள்ளிக்கிழங்குல இருந்து 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அத எடுத்துத் தர்பூசணி பயிர் வெச்சேன். போட்ட முதலீடுக்கு பங்கமில்லாம கிடைச்சது. அதனால, மறுபடியும் தர்பூசணி பயிர் செஞ்சேன். அது கொரோனா ஊரடங்கு சமயத்தில அறுவடைக்கு வந்ததால, விற்பனை செய்ய முடியாம நஷ்டமாகிடுச்சு. ஒரே பயிரைச் சாகுபடி செஞ்சா, ‘வந்தா லாபம், வரலைன்னா பெருத்த நஷ்டம்’ங்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். பிறகு தக்காளி, மிளகாய், தர்பூசணி, பூசணினு கலந்து பயிரிட்டேன். இதுல சிலதுல நஷ்டம் வந்தாலும் சிலதுல கணிசமான வருமானம் கிடைச்சது.

வாழையில் ஊடுபயிராகச் செண்டுமல்லி
வாழையில் ஊடுபயிராகச் செண்டுமல்லி

முதன்மைப் பயிராக மாறும் ஊடுபயிர்

காய்கறிச் சாகுபடியைப் பொறுத்தவரைச் சொட்டுநீர்ப் பாசனம், மல்ச்சிங் ஷீட் (மூடாக்கு முறை) நல்லா கைகொடுக்குது. இதை முறையா அமைச்சிட்டாலே அடுத்தடுத்த பயிர்கள் சாகுபடி செய்யும்போது உதவியா இருக்குது. தக்காளி, மிளகாய், தர்பூசணி, பூசணி பயிர்களைச் சாகுபடி செய்யும்போதே அங்கங்க குழியெடுத்து ஊடுபயிரா வாழை போட்டிருவேன். அந்தப் பயிர்களோட அறுவடை முடிச்சவுடனே வாழை முதன்மை பயிரா மாறிடும். இன்னொரு வயல்ல வாழைக்குள்ள ஊடுபயிரா செண்டுமல்லி பயிர் செஞ்சிட்டு வர்றேன். ஆக, ஒரு பயிரைத் தேர்ந்தெடுக்கும்போதே அதுல என்னென்ன வகையான ஊடுபயிர் செய்யலாம்கிறதையும் முடிவு செஞ்சிடுறேன். இப்படிச் செய்யும்போது ஏதாவது ஒரு பயிர் சறுக்கிட்டாகூட இன்னொரு பயிர் தூக்கி விட்டிரும்.

பந்தல் சாகுபடி
பந்தல் சாகுபடி

வருமானம்+நிலவளம் = செண்டுமல்லி

இப்போ 5 ஏக்கர்ல மரவள்ளிக்கிழங்கு இருக்கு. இதுல 2 ஏக்கர்ல ஊடுபயிரா செண்டுமல்லி போட்டிருக்கிறேன். செண்டுமல்லி நடவு செஞ்சு 40 நாள்ல பூ வந்துவிடும். 90 நாள்கள்ல அறுவடை முடிஞ்சிடும். அந்தச் செடிகளை அப்படியே பிடுங்கிப் போட்டு பார் அணைச்சு விட்டா நல்லா மட்கி, மரவள்ளிக் கிழங்குப் பயிருக்கு எருவாக மாறிடுது. சீஸன் காலத்துல செண்டுமல்லிப் பூ ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகும். இப்ப 10 ரூபாய்க்குத்தான் விற்பனையாகுது. 30 ரூபாய்க்கு மேல விற்பனையானால் விவசாயிக்கு நல்ல வருமானம்.

பூக்கள் பிடிக்க புளித்த மோர் கரைசல்

5 ஏக்கர்ல காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். இதுல ஒரு பகுதியாகத்தான் பாகலை 60 சென்ட் பயிரிட்டு இருந்தேன். பாகல் சாகுபடியில 75 சதவிகிதம் பாலி என்ற ரகத்தையும், 25 சதவிகிதம் நாட்டு ரகத்தையும் பயிர் செய்தேன். நாட்டு ரகத்துக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு. காய்க் கொண்டு போனவுடனே விற்பனை யாகிடும். அதுவும் மத்த ரகத்தைவிட கிலோவுக்கு அஞ்சு, ஆறு ரூபாய் கூடுதலாக் கிடைக்கும். ஆனா, நாட்டு ரகத்தில விளைச்சல் கொஞ்சம் குறைவு. இருந்தாலும் விலை அதை ஈடு செய்துவிடும்.

‘‘ஒரு பயிரைத் தேர்ந்தெடுக்கும் போதே அதுல என்னென்ன வகையான ஊடுபயிர் செய்யலாம் கிறதையும் முடிவு செஞ்சிடுறேன்."
60 சென்ட்... ரூ.1,50,000 
பழுதில்லா வருமானம் கொடுக்கும் 
பாகல்..!

வைரஸ் நோயைத் தடுக்கும் மோர்,
இளநீர் கரைசல்

நான் பாகலைக் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடவு செய்தேன். ஜனவரி முதல் வாரத்தில் பூப்பிடிக்க ஆரம்பிச்சது. அந்தச் சமயத்தில வைரஸ் நோய் பிரச்னை கொஞ்சம் எட்டிப் பார்க்கும். இதற்குப் புளித்த மோரையும் இளநீரையும் சம அளவில் கலந்து, அந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் 4 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிச்சு விட்டேன். பூக்கள் அதிகமாகப் பிடிக்கவும், பூக்கள் கொட்டாமல் இருக்கவும் தேமோர் கரைசல், அரப்புமோர்கரைசல்னு தகுந்த இடைவெளியில் தெளிச்சிட்டு வந்தேன். அதனால்தான் செடி இப்பவும் பச்சை பசேல்னு இருக்கு. விளைச்சலும் நல்லா இருக்குது” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

பாகல்
பாகல்

60 சென்ட்... 7,500 கிலோ

“காய்கறிகளைக் குறைவா சாகுபடி செய்யும்போது நேரடியா உழவர் சந்தைக்குக் கொண்டு போய் விற்பனை செய்யலாம். ஆனா, நான் தக்காளி, மிளகாய், பாகல்னு அதிகளவுல பயிர் செய்றதால நேரடி விற்பனையில ஈடுபட முடியல. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுல இருக்க மண்டிக்குத்தான் காய்கறிகளை அனுப்பி வைக்கிறேன். அங்க கொண்டு போற காய் எல்லாத்தையும் வித்துட முடியுது.

நடவு செஞ்ச 50-ம் நாளிலேயே அறுவடையை ஆரம்பிச்சிட்டேன். ஆரம்பத்துல கிலோவுக்கு 50 ரூபா கிடைச்சது. மார்ச் முதல் வாரத்துல கிலோ 13 ரூபாய்க்கும் இப்போ கிலோ 20 ரூபாய்னு விற்பனையாகுது. அறுவடை ஆரம்பிச்சபோது ஒருநாள் விட்டு ஒருநாள் காய் அறுவடை செய்யலாம். பிறகு, தினமும் அறுவடை செய்யலாம். நாங்க தொடர்ந்து 50 முதல் 70 நாள்கள்வரை காய் அறுவடை செய்திருக்கிறோம். 50 நாள்னு வெச்சுக்கிட்டாக் கூட ஒரு நாளைக்கு 150 கிலோ என்ற கணக்குல 50 நாள்களுக்கு 7,500 கிலோ கிடைச்சது. 10 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை விற்பனையாயிருக்கு. சராசரி விலையா 20 ரூபாய் என்ற அளவுல கிடைச்சது. அந்த வகையில 1,50,000 ரூபாய் கிடைச்சது. இது 60 சென்ட் நிலத்துல கிடைச்ச வருமானம். விதை, அறுவடை கூலி, கொடி கட்டுற கூலி, போக்குவரத்து, கமிஷன்னு 90,000 ரூபாய் செலவாச்சு. செலவு போக 60,000 ரூபாய் லாபமா நின்னது” என்றவர் நிறைவாக,

“பாகலைப் பொறுத்துவரை விற்பனைக்குப் பிரச்னையில்ல. நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறதால தொடர்ந்து பயிர் செய்யலாம்னு இருக்கேன். பாகல் போட்டால் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்” என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

காளியண்ணன்,

செல்போன்: 88382 83525

இப்படித்தான் இயற்கைப் பாகல் சாகுபடி

பாகல் சாகுபடி குறித்துக் காளியண்ணன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன...

தோட்டத்தில் காளியண்ணன்
தோட்டத்தில் காளியண்ணன்

நிலத்தை நன்றாக உழுது மண்ணைப் பொலபொலப்பாக்கிக்கொள்ள வேண்டும். 6 அடி அகலத்தில் பார் அமைத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தி அதன்மீது மல்ச்சிங் ஷீட் போட்டு மூடிவிட வேண்டும். இதன் மூலம் அடுத்த சாகுபடிக்கான உழவு, களை எடுக்கும் செலவு என எதுவும் செய்யத் தேவையில்லை. மல்ச்சிங் ஷீட் போர்த்துவதற்கு முன், நான்கு டிராக்டர் அளவுக்குத் தூளாக்கப்பட்ட தொழுவுரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இரண்டையும் நிலத்தில் தூவி விட வேண்டும். மல்ச்சிங் ஷீட் மூலம் பார் பிடித்த பகுதியை மூடிய பிறகு, மூன்று அடிக்கு ஒரு விதை என்ற வகையில் விதை ஊன்ற வேண்டும். 10-ம் நாளில் முளைத்து இலைகள் விடும். 20-ம் நாளில் இலைகள் வளர்ந்து கொடி ஓடத் தொடங்கும். அந்தச் சமயத்தில் சணல் கயிற்றில் கொடியைக் கட்டி மேலே ஏற்றி விட வேண்டும். 4 அடி உயரத்துக்குப் பிறகு, அதுவே மேலே ஏறி விடும். இதற்குக் கொம்பு கட்டி அதில் குறுக்கே நரம்பு கயிறுகொண்டு கட்டிவிட்டால், அந்தக் கயிற்றில் கொடி படர ஆரம்பித்துவிடும். கொடி கீழே விழாமல் மேல்நோக்கிச் செல்லும் வகையில் தொடர்ந்து சணல் கயிறுகொண்டு கொடிகளைக் கட்டி விட வேண்டும்.

30-ம் நாளில் பூக்கள் தென்பட ஆரம்பிக்கும். வழக்கமாகப் பாகல் செடியில் 40-ம் நாளில் இலைச்சுருட்டு நோய் பிரச்னை தாக்க வாய்ப்புள்ளது. தாக்குதல் இருந்தால் தலா 1 லிட்டர் வெண்ணெய் எடுத்த புளித்த மோரையும் இளநீரையும் கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கரைசலில் ஒரு லிட்டர் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 4 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து விட வேண்டும். பூக்கள் அதிகம் பிடிக்கவும், பூ உதிராமல் இருக்கவும் 40-ம் நாளில் தோமோர் கரைசலை (ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப் பால், 200 கிராம் நாட்டுச்சர்க்கரை கலந்து காற்றுப் புகாமல் நான்கு நாள்கள் வைத்திருந்து எடுத்த கரைசல்) தெளித்து விட வேண்டும். இதைப்போலவே வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரப்புமோர் கரைசலை (அரப்பு இலை எடுத்து நான்கு அரைத்துப் புளித்த மோரில் கலந்துகொள்ள வேண்டும்) தெளித்து விட வேண்டும். தோமோர் கரைசலையும், அரப்புமோர் கரைசலையும் 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு, மூன்று முறை தெளித்து விட வேண்டும். இதன்மூலம் கூடுதல் விளைச்சலும், நீண்ட நாள்களுக்கு மகசூலும் கிடைக்கும். மாதம் ஒருமுறை தலா அரைக்கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தக் கரைசலைச் சொட்டுநீர் வழியாகக் கொடுக்க வேண்டும்.

பூஞ்சண நோய், காய்துளைப்பான் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அதற்கு ஒட்டுண்ணி அட்டையை ஏக்கருக்கு 4 என்ற எண்ணிக்கையில் கட்டிவிட வேண்டும். தொடர்ந்து தோட்டத்தைக் கண்காணித்து வர வேண்டியது அவசியம். பழ ஈயைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 என்ற கணக்கில் வயலின் நான்கு மூலைகளிலும் கட்ட வேண்டும். வெள்ளை ஈக்களின் பாதிப்பைத் தவிர்க்க மஞ்சள் அட்டை 5 வாங்கி ஆங்காங்கே கட்டிவிட வேண்டும். நடவு செய்த 50-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 140 நாள்கள் வரை அறுவடை செய்யலாம்.