Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.1 லட்சம்! - விறுவிறு வருமானம் தரும் மிளகாய்!

மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
News
மிளகாய்

மகசூல்

சைவ-அசைவ உணவுகளில் மிளகாய், மிளகாய் வத்தல் பங்கு முக்கியமானது. மிளகாய் இல்லாமல் உணவு ருசிக்காது. அதனால் தான் மிளகாய்க்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பல விவசாயிகள் மிளகாய்ச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இயற்கை வழி வேளாண்மையில் மிளகாய்ச் சாகுபடி செய்து அதை வத்தலாக்கி விற்பனை செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த கதிரேசன்.

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் இருக்கிறது கதிரேசனின் தோட்டம். காய வைக்கப்பட்ட மிளகாய் வத்தல்களை அள்ளி, சேமிப்பு அறையில் கொட்டிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “நெல், கரும்பு, வாழை, காய்கறிகள்தான் இந்தப் பகுதியில சாகுபடி செய்யப்பட்டு வருது. எங்க அப்பா, அந்தக் காலத்துலயே பி.எஸ்ஸி கணிதம் படிச்சிருந்தாலும்கூட, தாத்தாவுடன் சேர்ந்து விவசாயத்தைத்தான் செய்துட்டு இருந்தாங்க.

மிளகாயுடன் கதிரேசன் தம்பதி
மிளகாயுடன் கதிரேசன் தம்பதி

தாத்தா காலத்துலயே அதிக மகசூலுக்காக, மட்கிய சாண உரத்தோடு ரசாயன உரத்தையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தினாங்க. ‘உரம் போடாம எந்தப் பயிரும் செழிக்காது. களைக்கொல்லி அடிக்காம எந்தக் களையும் மடியாது. பூச்சிக்கொல்லி அடிக்காம எந்தப் பூச்சியும் சாகாது. அதனால, நிலத்துல என்னத்தப் போட்டாலும் உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி இந்த மூணும் ரொம்ப முக்கியம். இது இல்லேன்னா விவசாயத்துல மகசூல் கிடைக்காம மண்டையச் சொறிய வேண்டியதுதான்’னு எங்க தாத்தா அப்பாகிட்ட அடிக்கடிச் சொல்வாராம்.

அதனால, அப்பாவும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தியேதான் விவசாயம் செஞ்சாங்க. 10 வருஷத்துக்கு முன்னால, எங்க நிலத்துல மண்ணு நல்லா இறுகிப் போயி உப்பு பொரிஞ்சாப்புல இருந்துச்சு. நாலஞ்சு உழவடிச்சும் மண்ணுக்கட்டி அப்படியேத்தான் இருந்துச்சு. அந்த வருஷம் ஒரு ஏக்கர்ல போட்ட நிலக்கடலை, சரியாவே முளைக்கல. வீட்டுக்குக்கூட விளைஞ்ச கடலைக் கிடைக்காம நஷ்டமாயிடுச்சு. அப்பாவோட நண்பர் ஒருவர்தான், ‘நிலத்துல உரத்தை இஷ்டத்துக்கும் தூவி, எந்தச் சத்துமே இல்லாம சாகடிச்சிட்ட. இந்த மண்ணைப் பார்த்தா, இறவைப் பாசன நிலம்னு யாராவது சொல்வாங்களா? 10 வருஷம் தரிசாக் கிடந்த நிலம் மாதிரி ஆக்கி வச்சிருக்கியே, இனிமேலும், ரசாயன உரத்தைப் போடாத. பெறவு மண்ணு ஒண்ணுத்துக்கும் ஆகாது. மண்ணை வளமாக்கி, தொழுவுரத்தை மட்டும் போட்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி முதல் கட்டமா 50 சென்ட்ல ஏதாவது பயிர் செஞ்சுப் பாரு. அதுல திருப்தி இல்லேன்னா விட்டுரு’ன்னு சொல்லி, பசுமை விகடன் புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார்.

அதுக்குப் பிறகு ரெண்டு தடவை பல தானிய விதைப்பு செஞ்சு மடக்கி உழுதும், தொழுவுரம் கொட்டியும், மண்புழு உரத்தைத் தூவியும் மண்ணை வளப்படுத்தினாங்க. ‘நிலத்தை வளப்படுத்தினா மட்டும் போதாது, பாரம்பர்ய ரகத்தை விதைச்சாத்தான் அதுக்குபேரு இயற்கை விவசாயம்’னு பசுமை விகடன்ல, படிச்சிட்டு பாரம்பர்ய ரகத்தைத்தான் விதைக்கணும்னு முடிவு. முதல்ல, ஒரு ஏக்கர்ல ‘சீரகச்சம்பா’ விதைச்சாங்க. நல்ல மகசூல் கிடைச்சுது. அறுவடை அன்னைக்குக் கை நிறைய நெல்லை அள்ளி எங்க அப்பா சந்தோஷத்தோடு சிரிச்ச சிரிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது.

மிளகாய்த் தோட்டத்தில்
மிளகாய்த் தோட்டத்தில்

அப்பாதான் ஆசான்

நான், டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, தனியார் நிறுவனங்கள்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்பப்போ தோட்டத்துக்கு வருவேன். மூணு வருஷத்துக்கு முன்னால, ‘வேலை... வேலைனு ஓடி நமக்கு சோறு போடுற விவசாயத்தை மறந்துடாத. நான் செய்யுற இயற்கை விவசாயத்தைக் கத்துக்கோ’ன்னு சொன்னாங்க. நானும் கிடைச்ச நேரத்துல தோட்டத்துக்கு வந்து அப்பாவுடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைக் கரைசல் தயாரிக்கிறது, தெளிக்கிறதுன்னு எல்லாமே கத்துக்கிட்டேன். முழுசா விவசாயப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்ததோடு, எனக்கு எதிர்கால வாழ்க்கைப் பாதையைக் கைகாட்டிய எங்க அப்பா சண்முகவேல் சமீபத்துல உடல்நலக் குறைவால எங்களை விட்டுப் பிரிஞ்சுட்டாங்க’’ என்றவர், மெளனமானார்.

சண்முகவேல்
சண்முகவேல்


தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசியவர், ‘‘அப்பா 8 வருஷமாவும், நான் மூணு வருஷமாவும் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். இது மொத்தம் 4 ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல ‘கே-1’ ரக மிளகாய் வத்தல் பறிப்பு முடியுற நிலையில இருக்கு. ஒரு ஏக்கர்ல நிலக்கடையும், ஒரு ஏக்கர்ல எள்ளும், ஒரு ஏக்கர்ல காய் கறிகளும் போடுறதுக்கு நிலத்தைத் தயார் படுத்திட்டு வர்றோம்.

747 கிலோ மகசூல்

“போன வருஷம் ஒரு ஏக்கர்ல கோவில்பட்டி நாட்டு ரக மிளகாய் அறுவடை செஞ்சதுல, 747 கிலோ மிளகாய் வத்தல் கிடைச்சுது. இதுல, 24 கிலோ கழிவு வத்தல் போக, 723 கிலோ வத்தலை, ஒரு கிலோ ரூ.165-ன்னு விற்பனை செஞ்சோம். அதன் மூலமா, ரூ.1,19,295 வருமானமாக் கிடைச்சது. இதுல, உழவு முதல் அறுவடை வரைக்கும் ரூ.30,800 செலவாச்சு. மீதமுள்ள ரூ.88,495 லாபமாக் கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

‘‘வீட்டுலயும் தோட்டத்துலயும் வந்து வத்தலை உள்ளூர் மக்களே வாங்கிட்டுப் போயிடுறதுனால விற்பனைக்குப் பிரச்னையில்ல. இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுக்காகத் தனி விலை எதுவும் வச்சு விற்கல. நஞ்சில்லாததை விற்கிறோம்ங்கிற ஆத்ம திருப்தி மட்டும்தான். அடுத்த வருஷம், மிளகாய் வத்தலைப் பொடியாக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்றார்.


தொடர்புக்கு, கதிரேசன்,

செல்போன்: 97881 42255

மிளகாய்
மிளகாய்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கரில் மிளகாய்ச் சாகுபடி செய்வது குறித்துக் கதிரேசன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

மிளகாய்ச் சாகுபடிக்கு ஐப்பசிப் பட்டம் ஏற்றது. சம்பா மிளகாய், குண்டு மிளகாய் என இரண்டு ரகங்கள் உள்ளன. இறவைப் பாசனத்துக்குச் சம்பாவும், மானாவாரி விவசாயத்துக்குக் குண்டு மிளகாயும் ஏற்றது. நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, ஒரு வார இடைவெளியில் 3 உழவு செய்துகொள்ள வேண்டும். மூன்றாவது உழவின்போது 3 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி பரவலாக்கி, உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். கடைசி உழவின்போதே 2 சென்ட் நிலத்தில் நாற்றங்காலைத் தயார் செய்து, அதில் மிளகாய் விதைகளைத் தூவ வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் மிளகாய் நாற்று நடவு செய்ய, 400 கிராம் விதை தேவை.

8-ம் நாளில் முளைப்பு தெரியும். 20 முதல் 25 நாள்களுக்குள் நாற்றுகளைப் பறித்து நடவு செய்து விட வேண்டும். நடவுக்கு முன்பாகப் பஞ்சகவ்யாவில் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து) நாற்றின் வேர்ப்பகுதியை முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்து நடலாம். இதனால், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது. நடவு செய்ததிலிருந்து, 10 முதல் 15-ம் நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். 25 முதல் 30-ம் நாளில் இரண்டாம் களை எடுக்க வேண்டும். செடி வளர்ந்து நிழல் கட்டும் வரை களை எடுத்துக் கொண்டிருந்தால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். செடிக்குச் செடி ஓர் அடி, வரிசைக்கு வரிசை ஓர் அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். மழைக்காலத்தில் நிலத்தில் தண்ணீர்த் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நெல் நாற்றுபோல நடாமல், நடவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகத் தண்ணீர் விட்டு, ஒரு குச்சியால் 2 இன்ச் ஆழத்தில் குழி எடுத்து, குழி நடவாக நடவு செய்தால் வேர்கள் உறுதியாக வளரும். ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் விட வேண்டும். 15-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 50 முதல் 55-ம் நாளில் பூவெடுக்கும். அப்போது, பூ உதிராமல் இருப்பதற்காக 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

மிளகாய்த் தோட்டம்
மிளகாய்த் தோட்டம்

மிளகாயைப் பொறுத்தவரையில் காய்த்துளைப்பான், இலைச்சுருட்டை நோய் ஆகிய இரண்டின் தாக்குதல் இருக்கும். மார்கழியில் பனி அதிகமாக இருக்கும்போது இலைச்சுருட்டை நோய்த் தாக்கும். அதைத் தடுக்க, 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி அமுதக்கரைசலைக் கலந்து இலைகளின் மேல் தெளித்தாலே போதும். காய்த்துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்க, பிஞ்சு பிடித்ததுமே 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி இஞ்சி-பூண்டு, மிளகாய்க் கரைசல் அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சி விரட்டியைத் தெளித்தாலே போதும்.

பூக்கள் பிஞ்சாகி, 65 முதல் 70 நாள்களுக்கு மேல் காய்கள், பழமாக மாறத் தொடங்கும். 80-ம் நாளுக்கு மேல் பழம் பறிக்கலாம். தொடர்ந்து, ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் இடைவெளியில் காய்ச்சலைப் பொறுத்துப் பழங்களைப் பறிக்கலாம். பறிக்கப்பட்ட பழங்களை 3 நாள்கள்வரை களத்திலோ, சாக்குகளை விரித்தோ உலர்த்தி வெயிலில் காய வைக்க வேண்டும். காயவைக்கப்பட்ட மிளகாயில், விதைகளின் சலசலப்புச் சத்தம் கேட்டால், வத்தலாகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.

காரத்தன்மை அதிகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் ‘கே-1’ மற்றும் ‘கே-2’ ஆகிய இரண்டு மிளகாய் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை 200 முதல் 210 நாள்கள் வயதுடையவை. இரண்டுமே நீள ரகச் சம்பா மிளகாய். இரண்டிலும் ‘கேப்சைசின்’ என்ற காரத்தன்மை அதிகம் உடையதுதான் இதன் சிறப்பம்சம். ‘கே-1’ ரகம்தான் பரவலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.