Published:Updated:

3.5 ஏக்கர்... ரூ.2 லட்சம் ... நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

வயலில் காமராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் காமராஜ்

மகசூல்

3.5 ஏக்கர்... ரூ.2 லட்சம் ... நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

மகசூல்

Published:Updated:
வயலில் காமராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் காமராஜ்

மானாவாரி, இறவை என இரண்டு முறையிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிர் நிலக்கடலை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், செல்லப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ், இயற்கை முறையில் நிலக்கடலைச் சாகுபடி செய்து வருகிறார். இவரைச் சந்திக்க ஒரு பகல் பொழுதில் செல்லப்பன்பேட்டை கிராமத்திற்குச் சென்றோம்.

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, சில காலம் விவசாயம் செஞ்சேன். பிறகு சென்னையில 10 வருஷம் டிரைவரா வேலைப் பார்த்தேன். அப்பதான் ஒரு கடையில இருந்த பசுமை விகடன் என் கண்ணுல பட்டுச்சு. அதை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சதும், விவசாயத்துல ஈடுபாடு வந்துச்சு. சொந்த ஊருக்கே வந்து விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். பசுமை விகடனைப் பார்த்து விவசாயத்துக்கு வந்திருந்தாலும் ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செய்தேன். பிறகுதான் உண்மையை உணர்ந்து கொஞ்சம்கொஞ்சமாக இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். கடந்த மூணு வருஷமா முழுமையா இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கேன்.

நிலக்கடலைச் செடிகள்
நிலக்கடலைச் செடிகள்இந்தப் பகுதியில உள்ள வைரப்பெருமாள்பட்டி, வில்வராயன்பட்டி, முன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி உள்ளிட்ட இன்னும் பல கிராமங்கள்ல இருக்க விவசாயிகள் வருஷத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது கடலைச் சாகுபடி செய்றதை வழக்கமா வெச்சிருக்காங்க. காரணம், கடலையில உழைப்புக்கேத்த நிறைவான வருமானம் கிடைக்குறதோடு கால்நடைகளுக்குச் சத்தான தீவனமும் கிடைச்சிடும். அறுவடைக்குப் பிறகு கொடிகளை வெயில்ல காய வெச்சி உலர் தீவனமாக கால்நடைக்களுக்கு கொடுப்போம். வைக்கோலைவிட இதைத்தான் ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிடும். சீக்கிரத்துல செரிமானம் ஆகிடும். இதைச் சாப்பிட்டால் பால் கறக்கும் தன்மையும் சினைப் பிடிக்கும் தன்மையும் நல்லா இருக்கும். ஊட்டமா, ஆரோக்கியமா வளரும். எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் ஆடு, மாடுகள் வளர்ப்புக்குக் கடலைக்கொடி மிக அவசியம்னு கருதுவாங்க.

நிலக்கடலை வயல்
நிலக்கடலை வயல்

கடலைக்கு வில்லன் கறுப்பு பொறி வண்டு

இந்த நிலையிலதான் ரசாயன உரங்களோட பயன்பாடுனால கடலைச் சாகுபடியில பல பிரச்னைகள் ஆரம்பிச்சது. பசுமை விகடன் படிக்கிறதுக்கு முன்னாடி வரையிலும் நாங்களும் ரசாயன முறையில்தான் கடலைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தோம். பச்சை புழுத் தாக்குதல் அதிகரிக்க ஆரம்பிச்சது. தாக்கம் அதிகரிக்க ஆரம்பிச்சதுனா, இலையை முழுமையா சுரண்டி நார்தான் மிச்சம் இருக்கும். அதனால கொடியோட வளர்ச்சி குன்றிப்போயிடும். இதையெல்லாம் விட மிகப்பெரிய பிரச்னை... கறுப்பு பொறி வண்டு. எங்க பகுதியில இதோட தாக்கம் ரொம்ப அதிகம். இது கடலைக் கொடியை ஒண்ணும் பண்ணாது. ஆனால், இது வந்து கடலைக் கொடியில உட்கார்ந்தால், துர்நாற்றம் வீச ஆரம்பிச்சிடும். எவ்வளவு நாள்கள் ஆனாலும் அந்த வாடை போகாது. நாம என்ன செஞ்சாலும் அந்த வாடையை, கடலைக்கொடியை விட்டு விரட்டவே முடியாது. இதுமாதிரியான பாதிப்பு ஏற்பட்ட கடலைக் கொடியை, எவ்வளவுதான் வெயில்ல காய வெச்சி, பல நாள்கள் வெச்சிருந்து, உலர் தீவனமாகக் கொடுத்தாலும், ஆடு, மாடுகள் சாப்பிடாது. இது மாதிரியான சமயத்துல விவசாயிகள் பரிதவிச்சி போயிடுவாங்க.

‘‘நான் சாகுபடி செய்யுறது, குத்துக்கடலை. இது குஜராத் ரகம்.’’
3.5 ஏக்கர்... ரூ.2 லட்சம் ...
நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

இதுமாதிரி ஒரு சத்தான, சுவையான உலர் தீவனம் எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காதே... நாங்க 15 ஆடுகள், 3 மாடுகள் வளர்க்குறோம். ரசாயன முறையில கடலைச் சாகுபடி செஞ்சப்ப, எங்களுக்கும் பல தடவை கறுப்பு பொறி வண்டு தாக்கத்தினால, கடலைக் கொடி பயன்படாமல் போயிருக்கு. இதுமாதிரியான பாதிப்புகள் மட்டுமல்ல.... ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிக்கு அதிகமா செலவு செஞ்சாகணும். எப்படிப் பார்த்தாலும் அதுக்கு மட்டுமே ஏக்கருக்கு 7,000 ரூபாய் செலவாகும். ரசாயன உரங்களால நிலத்துல உஷ்ணத்தன்மையும் அதிகமாயிடும். 7-10 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணீர் கொடுத்தாகணும். நாங்க ரசாயன முறையில நிலக்கடலைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தப்ப மண்ணு இறுகிப் போயி, கெட்டித்தன்மையோடு இருந்துச்சு. ஆனா இப்ப எப்படி இருக்கு பாருங்க’’ எனத் தனது கைகளால் நிலத்தைக் கிளறி, மண்ணை அள்ளி வீசினார்.

நிலக்கடலை
நிலக்கடலை

குஜராத் குத்துக்கடலை

‘‘நீங்களே பாருங்க, மண்ணு நல்லா பொலபொலப்பா ஈரத்தன்மையோடு இருக்கு. இவ்வளவு குறுகிய காலத்துலயே மண்ணு வளமாகி, மண்புழுக்களோட நடமாட்டத்தைப் பார்க்க முடியுது. ஆட்டு எரு, மாட்டு எரு, பஞ்சகவ்யா, திறன்மிகு நுண்ணுயிரி திரவம், வேப்பங்கொட்டைத்தூள் கரைசல் மட்டும்தான் பயன்படுத்துறேன். இதுவும் கூட அதிகமா கொடுக்குறதில்ல. இயற்கை இடுபொருள்களுக்கு அதிகபட்சம் ஏக்கருக்கு 3,000 ரூபாய்தான் செலவு செய்றோம். ஆனாலும் பயிரோட வளர்ச்சி செழிப்பா இருக்கு. என்னோட எளிமையான செயல்முறை, முதலீடுக்கு ஏற்ற வகையில நிறைவான லாபம் கிடைக்குது.

முதல் வருஷம், சோதனை முயற்சியா 2 ஏக்கர்ல மட்டும் இயற்கை முறையில நிலக்கடலை சாகுபடியைத் தொடங்கினேன். நான் சாகுபடி செய்யுறது, குத்துக்கடலை. இது குஜராத் ரகம். ஏக்கருக்கு 21 மூட்டை வீதம் (40 கிலோ-தோலுடன் கூடியது) மகசூல் கிடைச்சது. போன வருஷம் 3.5 ஏக்கர்ல இயற்கை முறையில சாகுபடி செஞ்சேன். ஏக்கருக்கு 24 மூட்டை வீதம் 84 மூட்டை மகசூல் கிடைச்சது. அதுல 4 மூட்டையை விதைக்கடலைக்காக வெச்சிக்கிட்டேன். எண்ணெய் தேவைக்காக ஒரு மூட்டை, நண்பர்களுக்காக ஒரு மூட்டை, கூலிக்கு 7 மூட்டைப் போக 71 மூட்டையை விற்பனை செஞ்சேன். ஒரு மூட்டை 2,240 ரூபாய் வீதம் 1,59,040 ரூபாய் கிடைச்சது. ஒரு மூட்டை விதைக்கடலையோட விலை 3,200 ரூபாய். 4 மூட்டை விதைக்கடலையோட மதிப்பு 12,800 ரூபாய்.

கடலைப் பருப்பு
கடலைப் பருப்பு

ஒரு மூட்டையில இருந்த 40 கிலோ கடலையை உடைச்சு பருப்பாக்கி, எண்ணெய் ஆட்டுனதுல 8 லிட்டர் எண்ணெய், 15 கிலோ புண்ணாக்கு கிடைச்சது. இயற்கை அங்காடிகள்ல, ஒரு லிட்டர் எண்ணெய் 250-300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுது. இந்த அடிப்படையில் 8 லிட்டர் கடலை எண்ணெய்யோட மதிப்பு 2,000 ரூபாய். 15 கிலோ கடலைப் புண்ணாக்கு மதிப்பு 375 ரூபாய். வீட்டுல வேக வெச்சி சாப்பிடுறதுக்கும், நண்பர்களுக்குக் கொடுக்குறதுக்காகவும் ஒரு மூட்டைப் பயன்படுத்தினோம். அதோட மதிப்பு 2,240 ரூபாய். அறுவடை செய்றவங்களுக்கு பணத்தோட கடலையும் கொடுக்கணும். அந்த வகையில கூலியாக் கொடுத்த 7 மூட்டையோட மதிப்பு 15,680 ரூபாய். கடலைக்கொடி உலர் தீவனத்தோட விலை மதிப்பு 10,000 ரூபாய். ஆக 3.5 ஏக்கர் கடலைச் சாகுபடி மூலம், 2,02,135 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு 71,620 போக போக 1,30,515 ரூபாய் லாபமாகக் கையில மிஞ்சுனுச்சு’’ என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

காமராஜ்,

செல்போன்: 63819 47881

காமராஜ்
காமராஜ்

நிலக்கடலைச் சாகுபடி

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் குத்துக்கடலைச் சாகுபடி செய்வதற்கான செயல்முறைகள் குறித்துக் காமராஜ் சொன்ன தகவல்கள் இங்கே...

ஆடி, கார்த்திகை, மார்கழிப் பட்டத்தில் நிலக்கடலைச் சாகுபடி செய்யலாம். ஆடிப்பட்டத்தில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். கார்த்திகை-மார்கழிப் பட்டம் கடலைச் சாகுபடிக்கு ஏற்றது. மணல் கலந்த செம்மண் நிலம் கடலைச் சாகுபடிக்கு மிகவும் உகந்தது. ஒரு ஏக்கரில் குஜராத் ரகக் குத்துடலை சாகுபடி செய்ய, ஏக்கருக்கு 40 கிலோ விதைக்கடலை தேவைப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 3 சால் புழுதி உழவு ஓட்டி, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு மற்றும் ஆட்டு எரு கலந்து அடியுரமாகப் போட வேண்டும். லேசான மழை ஈரத்தில் ஏர் கலப்பை மூலம் விதைக்கடலையை விதைப்புச் செய்ய வேண்டும். குத்துக்குக் குத்து முக்கால் அடி, வரிசைக்கு வரிசை முக்கால் அடி இடைவெளியில், 4 இன்ச் ஆழத்தில் லேசான பள்ளம் பறித்து, தலா ஒரு விதை வீதம் போட வேண்டும். 20 மற்றும் 40-ம் நாள் களையெடுக்க வேண்டும். 25 மற்றும் 45-ம் நாளில் 130 லிட்டர் தண்ணீரில் தலா 2 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும்.

65-ம் நாள் 3 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்துத் தூளாக்கி, 5 லிட்டர் தண்ணீரில் 2 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தலா 2 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் சேர்த்து 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல் கலந்து தெளிப்பதால், பூச்சி, நோய்த்தாக்குதல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, 15-20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 110 நாள்களில் அறுவடை செய்யலாம்.