Published:Updated:

ஒரு ஏக்கர்... 6 மாதங்கள்... 1,64,000 ரூபாய்! - பழுதில்லா லாபம் தரும் பப்பாளி!

அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்

மகசூல்

ஒரு ஏக்கர்... 6 மாதங்கள்... 1,64,000 ரூபாய்! - பழுதில்லா லாபம் தரும் பப்பாளி!

மகசூல்

Published:Updated:
அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்

ற்போதைய சூழலில் குறைந்த தண்ணீர்த் தேவையுள்ள, தொடர்ந்து அறுவடை செய்ய வசதியுள்ள பயிர்களே பலரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில் பலரும் பப்பாளிச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள். இயற்கை முறையில் ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி கனகராஜ்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது வாலசுப்பிரமணியபுரம். இந்தக் கிராமத்தின் தொடக்கத்திலேயே உள்ளது கனகராஜின் பப்பாளித் தோட்டம். அறுவடை செய்த பப்பாளிப் பழங்களை எடை போட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். “நெல், வாழைதான் எங்கப் பகுதியோட முக்கிய விவசாயம். பொருளாதாரத்துல எம்.ஏ, பி.எட் முடிச்சிருக்கேன். நாலு வருஷம் தனியார் பள்ளியில பொருளாதார ஆசிரியரா வேலை பார்த்தேன்.

அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்
அறுவடையான பப்பாளியுடன் கனகராஜ்


இந்த நிலையில, அப்பாவால தனியா விவசாயத்தைக் கவனிச்சுக்க முடியல. அரசுப்பள்ளியில வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும். அதுவரைக்கும் விவசாயத்தைப் பார்ப்போம்னு விவசாயத்துல முழு மூச்சா இறங்கிட்டேன். ரசாயன உரம் பயன்படுத்தி நெல், வாழை விவசாயத்தைத்தான் செய்தேன். நெல்லுல கூடுதல் மகசூல் எடுக்கணும், வாழைக்குலையில காய்கள் திரட்சியா இருக்கணும்ங்கிறது மட்டும்தான் என்னோட நோக்கமா இருந்துச்சு. அதனால, மண் வளத்தைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படல. பல கம்பெனி உரங்களை வாங்கி இஷ்டத்துக்கும் போட்டேன். ஏழெட்டு வருஷத்துக்குப் பிறகு மகசூல் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சுது. ஆனா, பூச்சி, நோய்த் தாக்குதல் அதிகரிக்க ஆரம்பிச்சுது.

அதைக் கட்டுப்படுத்த பல கம்பெனிகளின் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிச்சேன். ஒரு பக்கம் ரசாயன உரம், இன்னொரு பக்கம் பூச்சிக்கொல்லின்னு என் வாழைத் தோட்டத்துக்குள்ள வந்தாலே உரமும், பூச்சிக்கொல்லியும் கலந்து ஒரு வித துர்நாற்றமே வீச ஆரம்பிச்சுது. நெல் கதிர் பழுப்பு நிறமாவும், வாழையில பூக்குற பூக்கள் உதிர்ந்தும், தூரு வெடிச்சும் இருந்துச்சு. மொத்தத்துல வாழை மரங்களெல்லாம் ‘புண்ணு பட்ட சீக்காளி’ மாதிரி பரிதாபமா நின்னுச்சு. இருந்தாலும் விவசாயத்தைக் கை விட்டுடக்கூடாதுன்னு தொடர்ந்து செய்துட்டுதான் வந்தேன்.

பல கம்பெனிகளோட உரம், பூச்சிக்கொல்லியை மாத்தி மாத்தி தெளிச்சதுனாலதான் இந்தப் பிரச்னை வந்துடுச்சோன்னு எனக்குள்ள தோணுச்சு. அதனால, ஒரே கம்பெனியோட உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்திட்டு வந்தேன்.

பப்பாளித் தோட்டம்
பப்பாளித் தோட்டம்


தேனாக இனித்த இயற்கை வாழை

ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்ல. வாழையில நஷ்டம்தான் மிஞ்சுச்சு. பக்கத்துல உள்ள கீரனூர்ல என்னோட நண்பர் தாமோதரன், வெண்பன்றிப் பண்ணையும், இயற்கை விவசாயத்துல வாழையும் சாகுபடி செய்துட்டு வந்தார். அவரோட தோட்டத்துக்கு ஒருநாள் போயிருந்தேன். தோட்டத்துக்குள்ள நுழைஞ்சு நடந்துட்டு போகும்போதே அப்படியொரு வாசம் வீசுச்சு. வாழையோட தூரு மண்ணைத் தோண்டிப் பார்த்தா பெரிய பெரிய மண்புழுவா நெளிஞ்சது. கற்பூரவள்ளி எடைப்பழத்துல (குலையிலேயே பழுத்த வாழைப்பழம்) ஒரு பழத்தை எடுத்து உரிச்சு சாப்பிட்டுப் பார்த்தேன். தேனா இனிச்சுச்சு. எல்லா வாழை மரமும் ஆரோக்கியமா இருந்துச்சு.

நண்பர் கொடுத்த நம்பிக்கை

என் வாழை மரங்களை மனசுல நினைச்சுகிட்டு ஏக்கத்தோட சுத்தி சுத்திப் பார்த்துட்டு நின்னேன். ‘பாத்தியா..? வாழையும் வாழைக்குலையும் எப்படி இருக்குன்னு. எந்த ரசாயன உரமும் கிடையாது. எல்லாமே இயற்கை உரம்தான். ரசாயன உரத்தைப் போடப் போட மண்ணுக்கு கேடு. ஒரு கட்டத்துல மண் வளம் போயி சக்கை (பயன்படுத்த முடியாத நிலம்) மண்ணா போயிடும். அந்த நாத்தம் பிடிச்ச உரத்தைப் போடாதன்னு பல தடவைச் சொன்னேன். நீ கேட்கல. இப்போ பாரு, உன் நிலத்து மண்ணும் செத்துப் போச்சு. வாழைமரமும் பட்டுப்போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நான் சொல்றபடி செய். ஒரே வருஷத்துல உன் தோட்டமும் இப்படி ஆயிடும்’னு என் நண்பர் தைரியம் கொடுத்தார். அவரோட தோட்டத்தைச் சுத்திப் பார்த்ததுலயே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.

இடுபொருள்
இடுபொருள்


அவர் சொன்ன மாதிரியே நிலத்தை நாலஞ்சு முறை ஆழமா உழுது, பல தானிய விதைப்பு விதைச்சு, தொழுவுரம், மண்புழு உரம் போட்டு மண்ணை வளப்படுத்தினேன். அதுக்கப்புறம் ஏத்தன் ரக வாழையைச் சாகுபடி செஞ்சேன். வாழை மரங்கள் ஆரோக்கியமாவும், காய்கள் ஓரளவு திரட்சியாவும் இருந்துச்சு. தொடர்ந்து இயற்கை முறையில வாழையைச் சாகுபடி செஞ்சுட்டு வந்தேன். வாழை விவசாயத்துல 10 மாசம் வரைக்கும் அறுவடைக்காகக் காத்துக்கிட்டு இருக்கணும்.

அதனால, தொடர் மகசூல் கிடைக்குற மாதிரி ஏதாவது சாகுபடி செய்யலாம்னு யோசிச்சப்போ பப்பாளிச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தேன். எங்க பகுதியில இருக்குற ரெண்டு பப்பாளித் தோட்டங்களைப் போயி பார்த்து, அந்த விவசாயிங்ககிட்ட சாகுபடி முறையைப் பத்தி தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, பப்பாளிச் சாகுபடியில இறங்கிட்டேன். இப்ப, ஒரு ஏக்கர்ல ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளி பறிப்புல இருக்கு. இன்னொரு ஏக்கர் நிலத்தைப் பப்பாளிச் சாகுபடி செய்யுறதுக்காகத் தயார்படுத்தி வெச்சுருக்கேன்” என்றவர், வருமானம் மற்றும் விற்பனை பற்றிப் பேசினார்.

‘‘எங்க பகுதியில இருக்குற ரெண்டு பப்பாளித் தோட்டங்களைப் போயி பார்த்து, அந்த விவசாயிங்ககிட்ட சாகுபடி முறையைப் பத்தி தெளிவாக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, பப்பாளிச் சாகுபடியில இறங்கினேன்.’’

நேரடி விற்பனை

‘‘பப்பாளி பறிப்புக்கு வந்து 6 மாசம் ஆகுது. வாரத்துக்கு ரெண்டு பறிப்புப் பறிக்கிறேன். இதுவரைக்கும் (18.08.21 வரை) 48 பறிப்புப் பறிச்சிருக்கேன். 9,120 கிலோ காய்க் கிடைச்சிருக்கு. ஒவ்வொரு காயும் 600 கிராம் முதல் 2 கிலோ வரை திரட்சியா, நல்ல எடையும் இருக்குது. பறிக்கிற காய்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்யாம குரும்பூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள்ல உள்ள பழக்கடைகளில் நானே நேரடியா விற்பனை செய்றேன். ஒரு கிலோ பப்பாளியை ரூ.18-ன்னு ஒரே விலையா விற்பனை செய்றேன். இதுவரைக்கும், 9,120 கிலோ விற்பனை மூலமா ரூ.1,64,160 வருமானமாக் கிடைச்சிருக்கு.

இதுல உழவு, அடியுரம், கன்றுகள், குழி, நடவு, இடுபொருள், பராமரிப்பு, பறிப்பு, போக்குவரத்து என இப்போ வரைக்கும் 80,000 வரை செலவாயிடுச்சு. இதுவரை கிடைச்ச வருமானத்துல செலவுப் பணம் 80,000-ஐ எடுத்துட்டேன். அது போக, 84,160 ரூபாய் லாபமாக் கிடைச்சுருக்கு. இனி, அடுத்தடுத்த மாதங்கள்ல மகசூலும் அதிகரிக்கும். அந்த நேரத்துல வாரத்துக்கு மூணு தடவைகூடப் பறிக்க வேண்டிய நிலை வந்துடும். கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்துல இருந்து மக்கள் மத்தியில் பப்பாளியைப் பயன்படுத்துற பழக்கம் அதிகரிச்சிருக்கு. அதனால, பப்பாளிக்குத் தொடர்ந்து தேவையும் இருக்கு” என்று விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, கனகராஜ்,

செல்போன்: 93674 73864

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் பப்பாளிச் சாகுபடி செய்வது குறித்து கனகராஜ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

‘ரெட்லேடி’ ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்ய ஆடி, கார்த்திகை ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்யும் பட்டத்துக்கு முன்பே உழவுப் பணிகளைத் தொடங்கி விட வேண்டும். 15 நாள் இடைவெளியில் 2 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, சொட்டுநீர்ப் பாசன அமைப்பை அமைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 8 அடி, குழிக்குக் குழி 6 அடி இடைவெளியில் முக்கால் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழியை 5 நாள்கள்வரை ஆறவிட்டு, குழிக்குள் 300 முதல் 400 கிராம் அளவு செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தைப் போட வேண்டும்(ஒரு பிளாஸ்டிக் தாள் விரித்து அதில், 800 கிலோ மண்புழு உரத்தைக் கொட்டி அதனுடன் தலா 500 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து 5 நாள்கள் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு). பிறகு, 5 நாள்கள் குழியை ஆறவிட்டு கன்றுகளை நடவு செய்யலாம்.

பப்பாளித் தோட்டம்
பப்பாளித் தோட்டம்


2 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. கன்றுகளை அதிகாலையில் நடுவதைவிட, மாலை நேரத்தில் நடுவதே சிறந்தது. கன்று நடவு செய்வதற்கு முந்தைய நாள் குழி நனையும்படி தண்ணீர் விட வேண்டும். ஒரு மாதம்வரை மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 2-வது மாதத்திலிருந்து 15 நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யா மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீருடன் கலந்து விட்டு வர வேண்டும்.

6-ம் மாதத்தில் பூக்கள் தென்படும், 7-ம் மாதம் பிஞ்சு பிடித்து, காய்க்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 8-ம் மாதத்திலிருந்து காய் பறிக்க ஆரம்பிக்கலாம். 11-ம் மாதத்திலிருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். 6 மற்றும் 10-ம் மாதங்களில் ஒரு கன்றுக்கு 2 கிலோ அளவு மட்கிய தொழுவுரத்தைச் தூரைச் சுற்றிப் போடலாம்.

பப்பாளியை நடவு செய்த 35 முதல் 40-ம் நாள் மற்றும் 70 முதல் 75-ம் நாள் என இரண்டு களை எடுத்தால் போதும். பப்பாளியைப் பொறுத்தவரையில் மாவுப்பூச்சிகள்தான் அதிகம் தென்படும். மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிற மாதிரி தெளித்தாலே போதும். சில நேரங்களில் பப்பாளி இலைகளில் மஞ்சள் தேமல், இலைச்சுருட்டு நோய் ஏற்படலாம். இவற்றைக் கட்டுப்படுத்த மூலிகையிலைக் கரைசலைக் கைத்தெளிப்பானால் தெளித்தாலே போதும். (வேம்பு, ஆடாதொடை, எருக்கு, ஆடுதின்னாப்பாளை, துளசி, நொச்சி ஆகியவற்றில் தலா 2 கிலோவை சிறியதாக நறுக்கி 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் போட்டு 5 நாள்கள் வரை ஊறவைத்து வடிகட்டினால் மூலிகையிலைக் கரைசல் தயார்) இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் தேவையில்லை.