Published:Updated:

5 ஏக்கர்... ரூ.4 லட்சம் லாபம்! துவரை கொடுத்த வெகுமதி!

நிலக்கடலைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலைச் சாகுபடி

மகசூல்

5 ஏக்கர்... ரூ.4 லட்சம் லாபம்! துவரை கொடுத்த வெகுமதி!

மகசூல்

Published:Updated:
நிலக்கடலைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலைச் சாகுபடி

“என் நிலத்துல இருந்து காய்கறிகளையும் நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே நேரம் எந்த இடுபொருளும் நேரடியாக என் நிலத்துக்குள்ள வராது” மகிழ்ச்சிப்பொங்க பேசுகிறார்கள் நடராஜன் - அனுராதா தம்பதி. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- செஞ்சி சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது, புதுப்பாளையம் கிராமம். தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் கட்டிக்கொண்டிருந்த நடராஜன்-அனுராதா தம்பதியைச் சந்தித்துப் பேசினோம். முதலில் பேசிய நடராஜன்,

“எனக்குச் சொந்த ஊர் விக்கிரவாண்டி. பாரம்பர்யமான விவசாயக் குடும்பம். எங்க அப்பா காலத்துக்குப் பிறகு, விவசாயத்துல கொஞ்சம் இடைவெளி விட்டுட்டேன். சின்ன வயசுல அப்பாகூட விவசாய வேலை செஞ்ச அனுபவம் உண்டு. எங்க அப்பா எப்பவுமே ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில் நெல்லை விளையவெச்சு அதை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவார். அதுவும் இயற்கை விவசாய ஆசை வர்றதுக்கு ஒரு வகையில் காரணம். அதுக்கு அப்புறமா படிப்பை முடிச்சுட்டு, விக்கிரவாண்டியில சின்னதா துணிக்கடை வெச்சு, முழுநேரமா தொழிலைக் கவனிக்க ஆரம்பிச்சேன்.

வயலில் நடராஜன்-அனுராதா தம்பதி
வயலில் நடராஜன்-அனுராதா தம்பதி

நாம சாப்பிடுற காய்கறிகளைப் பத்தின விழிப்புணர்வு அப்போ அவ்வளவாக இல்ல. 2009-ம் வருஷம் பசுமை விகடன் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். ‘புத்தகம் ஒருத்தருடைய வாழ்க்கையை மாத்தும்’னு சொல்றதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்க்கையிலயும் அது நடந்துச்சு. என் வாழ்க்கையைப் ‘பசுமை விகடனுக்கு முன், பின்’னு ரெண்டாப் பிரிக்கலாம். பசுமை விகடன்ல வர்ற இயற்கை விவசாயம் பத்தின கருத்துகள் எங்களை ஆழமாகச் சிந்திக்க வெச்சது. என் மனைவியும் தீவிரமான பசுமை விகடன் வாசகி.

ஒருமுறை திருவண்ணாமலையில் நடந்த சுபாஷ் பாலேக்கர் பயிற்சியில கலந்துகிட்டேன். அப்புறமா கோயம்புத்தூர் கொடீசியாவில் பாலேக்கர் தலைமையில் நடந்த 4 நாள்கள் பயிற்சி வகுப்பிலும் கலந்துகிட்டேன். அப்பவே இயற்கை விவசாயம்தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். உடனே விவசாயம் செய்ய நிலம் தேட ஆரம்பிச்சோம். 2013-ம் வருஷம் தான் இந்த நிலம் கிடைச்சது. மொத்தம் 5 ஏக்கர். கரடு முரடா சரளை மண்ணாக இருந்துச்சு. நிலத்தைச் சமப்படுத்தி விவசாயம் செய்ய எங்களுக்கு ஒரு வருஷம் ஆச்சு. முதல்ல கிச்சலிச் சம்பாவும், சீரகச் சம்பாவும் பயிர் செஞ்சோம். ரெண்டு ஏக்கர்ல 18 மூட்டை அறுவடை பண்ணிணோம். இயற்கை விவசாயமெல்லாம் சரியா வராதுனு எங்களுக்குப் பலரும் ஆலோசனை சொன்னாங்க. ஆனா, நாங்க எடுத்த முடிவுல உறுதியா இருந்தோம்” என்றவரைத் தொடர்ந்து, அனுராதா பேசத் தொடங்கினார்.

‘‘மகசூல் குறைவா இருக்குதுனு நாங்க மனசை தளரவிடல. இடுபொருள் கொடுக்குற முறைகளை மாற்றிப் பார்த்தோம். அடுத்த அறுவடையில் ஒரு ஏக்கருக்கே 18 மூட்டை கிடைச்சது. எங்களைக் கிண்டல் பண்ணினவங்கக்கூட ஆச்சர்யமாப் பார்த்தாங்க. ஜீவாமிர்தக் கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம் எப்படித் தயாரிக்கிறதுனு கேட்க ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்து எங்களுடைய எல்லா முயற்சிகளுமே வெற்றியாகத்தான் இருந்துச்சு. 7 வருஷமா இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். எங்களைப் பார்த்து நிறைய பேர் இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எங்களால் சில பேர் மறுபடியும் விவசாயத்துக்கு வந்தது பெருமையாத்தான் இருக்கு’’ என்றவர் தற்போதைய விவசாயம் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

வயலில் நடராஜன்-அனுராதா தம்பதி
வயலில் நடராஜன்-அனுராதா தம்பதி

துவரைதான் பிரதானப் பயிர்

‘‘இப்ப ஒரு ஏக்கர்ல புடல் சாகுபடி, 50 சென்ட்ல பாலேக்கர் சொல்ற உணவுக்காடு, 50 சென்ட்ல கத்திரி, 50 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரைகள் சாகுபடி செய்றோம். எங்களை மாதிரியே இயற்கை விவசாயம் செய்ற 45 பேர் சேர்ந்து, ‘ஞாயிறு இயற்கை குழு’ங்கிற பேர்ல விளைபொருள்களை விற்பனை செய்றோம். வாரம் 2 டன் காய்கறி களைச் சென்னைக்கு அனுப்புறோம். அங்க இருக்க எங்க சொந்தக்காரங்க மூலமா விற்பனை நடக்குது. ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர்கள் வரும். சென்னையில மாசம் ஒரு தடவை வீட்டுக்கே பொருளைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். இது இல்லாம 5 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றோம். அதுல பிரதானப் பயிரா துவரைச் சாகுபடி செய்றோம். வயல் ஓரமா மரத் துவரையும் சாகுபடி செய்றோம்” என்றவர் துவரை வயலைச் சுற்றிக்காட்டினார்.

5 ஏக்கர்... ரூ.2,00,000 லாபம்

தொடர்ந்து பேசிய நடராஜன், ‘‘அஞ்சு ஏக்கர் துவரையிலிருந்து மொத்தம் 1,500 கிலோ துவரை கிடைச்சது. நாங்க அப்படியே விற்பனை செய்யாம மதிப்புக்கூட்டி பருப்பா விற்பனை செய்றோம். தோல் நீக்கிச் சுத்தப் படுத்தும்போது 200 கிலோ எடை குறையும். மீதியிருக்க 1,300 கிலோ துவரையை, ஒரு கிலோ 150 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். அது மூலமா 1,95,000 ரூபாய் கிடைச்சது. அதுல செலவுத்தொகை 20,000 கழிச்சா 1,75,000 ரூபாய் லாபமா கிடைச்சது. 15 மரத் துவரைச் செடிகள் இருக்கு. ஒரு செடியில இருந்து 15 கிலோ துவரை கிடைக்கும். மொத்தம் 225 கிலோ மரத்துவரை. இதையும் மதிப்புக்கூட்டும்போது 200 கிலோ பருப்பு கிடைக்கும். அது மூலமா 30,000 ரூபாய் கிடைக்கும். அது போனஸ் மாதிரி. மொத்தத்துல 5 ஏக்கர் துவரையில இருந்து 2,00,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது’’ என்றார், ஊடுபயிர் பற்றிய தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

நிலக்கடலைச் சாகுபடி
நிலக்கடலைச் சாகுபடி

ஊடுபயிர் கொடுக்கும் வருமானம்

‘‘துவரையில ஊடுபயிரா நிலக்கடலையும், உளுந்தும் விதைச்சோம். 5 ஏக்கர்ல 50 மூட்டை (80 கிலோ) கடலைக் கிடைச்சது. ஒரு மூட்டையில இருக்கிற கடலையை உடைச்சு பருப்பு எடுக்கும்போது 40 கிலோ கிடைச்சது. அதைச் செக்கில் கொடுத்து ஆட்டினோம். 15 லிட்டர் எண்ணெய் கிடைச்சது. ஒரு லிட்டர் எண்ணெயை 230 ரூபாய் வரை விற்பனை செஞ்சோம். ஒரு மூட்டைக்கு 3,450 ரூபாய் கிடைச்சது. மொத்தம் 50 மூட்டைக்கு 1,72,500 ரூபாய் கிடைச்சது. 5 ஏக்கர்ல இருந்து 250 கிலோ உளுந்து அறுவடை பண்ணினோம். ஒரு கிலோ உளுந்து மதிப்புக்கூட்டி 120 ரூபாய்க்கு விற்பனை செஞ்சோம். அது மூலமா 30,000 ரூபாய் கிடைச்சது. ஆக மொத்தம் 5 ஏக்கர்ல இருந்து 4,02,500 ரூபாய் லாபமா நின்னுச்சு’’ என்றார்.

“பொதுவாகவே, இந்த அளவுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. பசுமை விகடனில் வெளியாகும் மகசூல் கட்டுரைகளில் லாபத்தை அதிகரித்துக் காட்டுகிறார்கள் என்று சிலர் கூறிவருகிறார்கள். உங்களுக்கு உண்மையிலேயே இந்த அளவு லாபம் கிடைக்கிறதா?” என்று கேட்டோம். இதற்குப் பதில் சொன்ன அனுராதா,

‘‘மகசூல் குறைவா இருக்குதுனு நாங்க மனசை தளரவிடல. இடுபொருள் கொடுக்குற முறைகளை மாற்றிப் பார்த்தோம். அடுத்த அறுவடையில் ஒரு ஏக்கருக்கே 18 மூட்டை கிடைச்சது.’’

‘‘பொதுவா, பசுமை விகடன்ல ‘இத்தனை லட்சம் லாபம்’னு ஒரு கட்டுரையைப் படிச்சதும் பலபேர் உடனே அதுல இறங்கி கையைச் சுட்டுக்கிறாங்க. ஆனா, அந்தக் கட்டுரையில லாபம் எடுக்குற விவசாயி, அதுக்காக எத்தனை வருஷம் உழைச்சிருப்பாரு. அதுக்கு முன்ன எவ்வளவோ நஷ்ட மாகிருப்பான்னு யோசிக்கிறதே இல்ல. எங்களையே எடுத்துக்குங்க. நாங்க, இன்னிக்கு 5 ஏக்கர்ல 4 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக் கிறோம்னா, அதுக்கு 4 வருஷம் உழைச்சிருக்கோம். நஷ்டமாகி யிருக்கோம். ஆனா, அதுக்காக வெறுத்துப் போயிடல. பசுமை விகடன் கட்டுரையில அனுபவ விவசாயி சொல்றதை உள்வாங்கி, நம்ம இடத்துக்கு ஏத்த மாதிரி யோசிச்சு செய்யும்போதுதான் வெற்றி பெற முடியும். அதைத்தான் பசுமை விகடனும் கற்றுக்கொடுக்குது. நாங்க இயற்கையை நம்புறோம். இயற்கை எங்களை ஏமாத்தல. எல்லாரும் இயற்கையை நோக்கித் திரும்பினால், மாற்றம் நிச்சயம் நிகழும்” என்று கூறி விடைகொடுத்தார்கள்.

தொடர்புக்கு, நடராஜன்,

செல்போன்: 70106 21983.

இயற்கை இடுபொருள்கள்
இயற்கை இடுபொருள்கள்

அக்னி அஸ்திரம்!

தலா ஒரு கிலோ பூண்டு, பச்சை மிளகாய் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் 500 கிராம் புகையிலை கலந்து ஒண்ணும்பாதியாக அரைத்து, 15 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 45 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் அக்னி அஸ்திரம் தயாராகிவிடும்.

துவரைச் சாகுபடி

ஆடிப் பட்டத்துக்கு ஏற்றது. வைகாசி மாதக் கடைசியில் உழவு செய்து, தக்கைப் பூண்டு, சணப்பு விதைத்து, 45-ம் நாள் நன்கு வளர்ந்து இருக்கும். இதை நன்றாக மடக்கி உழ வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 1,200 கிராம் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற கணக்கில் நடவு செய்ய வேண்டும். விதைக்கும் முன்பாக விதைகளைப் பீஜாமிர்தத்தில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 நாளைக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். சுழற்சி முறையில் 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலும், மீன் அமிலமும் தெளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி பத்திலைக் கரைசல் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். இதனால் பூச்சித்தாக்குதல் இல்லாமல் செடி செழித்து வளரும்.

தோட்டம்
தோட்டம்

துவரையைப் பொறுத்தவரைக் காய்ப்புழுத் தாக்குதல் இருக்கும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி அக்னி அஸ்திரம் கலந்து தெளித்தால் காய்ப்புழு தொந்தரவு இருக்காது. இது இல்லாமல் மாதம் ஒரு முறை கடலைப் பிண்ணாக்கும், வேப்பம் பிண்ணாக்கும் கலந்து, ஒரு செடிக்கு 250 கிராம் உரமாக வைக்க வேண்டும். செடி பூப்பூக்கும்போது தேமோர்க் கரைசல் தெளிக்க வேண்டும். கறுப்பு மற்றும் சிவப்பு நிற வண்டு துவரைச் செடிகளைத் தாக்கும். அந்த வண்டுகளைக் கைகளால் எடுத்து நிலத்துக்கு அப்பால் போட்டு விட வேண்டும். மார்கழியில் முதல் அறுவடை செய்யலாம். இரண்டாவது அறுவடையை வைகாசி மாதம் செய்யலாம். அடுத்த விதைப்புக்கான விதைகளை எடுத்து வைத்துக்கொண்டு விற்பனை செய்யலாம்.

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பைப் பற்றிப் பேசிய நடராஜன், ‘‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புல இறங்குனோம். 25 நாள் வயசுல 80 பெட்டை, 70 சேவல்னு மொத்தம் 150 சிறுவிடைக் கோழிகளை வாங்குனோம். 15 நாளைக்கு ஒரு முறை மஞ்சள்தூள், கீழாநெல்லி, நொச்சி, சீரகம், துளசி, கற்றாழை, மிளகு, வேப்பிலை, தூதுவளை கலந்து கொதிக்க வெச்சு, ஒவ்வொரு கோழிக்கும் 5 மி.லி கொடுக்குறோம். அதனால நோய்த்தாக்குதல் இல்லாம கோழிகள் ஆரோக்கியமா வளருது.

தினமும் ஒரு கோழிக்கு 150 கிராம் அசோலா, காய்கறிக்கழிவுகள், கம்பு, சோளம், கேழ்வரகு, கீரைகள்னு 3 வேளையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். ஒரு பானையில் தென்னை ஓலை, பனை ஓலை, பேப்பர், சாணம், வேண்டாத மரக்குச்சிகள் எல்லாத்தையும் ஒண்ணா போட்டுத் தண்ணி தெளிச்சு பானையை மூடி வெச்சுருவோம். சில நாள்கள்ல கறையான் உருவாகிடும். அதையும் கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கிறோம்.

10 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் இருந்தால் போதும். அதனால கூடுதலா இருந்த சேவல்களை விற்பனை செஞ்சோம். இதுவரைக்கும் 30 சேவல்களை விற்பனை செஞ்சிட்டோம். சிறுவிடை ரகம், எடை கம்மியாகத்தான் இருக்கும். அதனால ஒரு சேவல் 600 ரூபாய் வரை தான் விலைக்குப் போனது. பெட்டைக் கோழிகள் 6 மாசத்திலிருந்து முட்டைகள் போட ஆரம்பிச்சுரும். இப்ப மாசம் 200 முட்டைகள் வரை விற்பனை செய்றோம். ஒரு முட்டை 15 ரூபாய். அந்த வகையில 3,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில முட்டைகளை அடை வைப்போம். இப்ப எங்க பண்ணை வளர்ந்துட்டு இருக்குது. கோழி வளர்ப்பு மூலமா நாங்க இன்னும் லாபம் பார்க்க ஆரம்பிக்கல. இன்னும் ஒரு வருஷத்துல அது மூலமாவும் நல்ல லாபம் பார்ப்போம்னு நம்பிக்கை இருக்கு. கோழிக் கழிவுகளை நிலத்துக்கு உரமா பயன்படுத்திக்கிறோம்’’ என்றார்.

அசோலா
அசோலா

மீன் வளர்ப்பில்
ஆண்டுக்கு ரூ.3 லட்சம்


பண்ணைக்குட்டையில மீன் வளர்த்து வருகிறார்கள். அது தொடர்பாகப் பேசிய அனுராதா, ‘‘கெண்டை வகைகளான ரோகு, கட்லா, புல்கெண்டை மீன்களை வளர்க்குறோம். 6 மாசத்துக்கு ஒரு தடவை மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்வோம். வருஷம் ரெண்டு தடவை மீன் மூலமா வருமானம் கிடைக்கும். எல்லா ரகங்களும் கலந்து 1,500 குஞ்சுகள் வாங்கி விடுவோம். கடலை எண்ணெய் ஆட்டும்போது கிடைக்குற புண்ணாக்கு, கோழிகளுக்குப் போட்டதுல சிந்துனது, சிதறுனது மட்டும்தான் தீவனமாப் போடுவோம். மீன்களுக்குத் தனியா தீவனம் போடுறது இல்ல. அதனால வளர்ச்சி கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். சராசரியா 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். அதுமூலமா 1,50,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். ஒரு வருஷத்துல எப்படியும் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும்’’ என்றார்.