Published:Updated:

குறைவான பராமரிப்பில் நிறைவான மகசூல் தரும் பூசணி!

பூசணி
பிரீமியம் ஸ்டோரி
News
பூசணி

மகசூல்

கொடிப் பயிர்களில் வெண்பூசணியும், மஞ்சள் பூசணியும் முக்கியமானவை. சைவ உணவில் வெண்பூசணி சாம்பாருக்கும், மஞ்சள்பூசணிக் (பரங்கி) கூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பொங்கல் பண்டிகையின்போது சூரிய வழிபாட்டில் இடம்பெறும் இவை, விவசாயிகளின் விருப்ப பயிராகவும் இருக்கிறது. அந்த வகையில் இரண்டு வகைப் பூசணிகளையும் ஆண்டு முழுவதும் அறுவடையில் இருக்கும்படி சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மணி.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத் திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் இருக்கிறது இவரது தோட்டம். 25.04.2017 பசுமை விகடன் இதழில் வெளியான ‘உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர் கத்திரி’ கட்டுரைமூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். பூசணி அறுவடை பணியிலிருந்தவரை பனி படர்ந்த காலை நேரத்தில் சந்தித்தோம்.

‘‘கத்திரி மகசூல் கட்டுரைக்குப் பிறகு, ஏகப்பட்ட அழைப்புகள். கத்திரிச் சாகுபடியில நிறைய விவசாயிங்க சந்தேகம் கேக்குறாங்க. ரொம்பச் சந்தோஷமா இருக்கு’’ என்றவர், தனது விவசாயம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

பூசணியுடன் மணி
பூசணியுடன் மணி

‘‘இது மொத்தம் 3 ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல கத்திரி இருக்கு. 50 சென்ட்ல மரவள்ளி, 50 சென்ட்ல செண்டுமல்லி நடவு செஞ்சிருக்கேன். 15 சென்ட்ல மஞ்சள் பூசணி, 5 சென்ட்ல வெள்ளைப் பூசணி பறிப்புல இருக்கு. இன்னொரு 15 சென்ட்ல மஞ்சள் பூசணி, 5 சென்ட்ல வெள்ளைப்பூசணி நடவு செஞ்சிருக்கேன். மீதமுள்ள 60 சென்ட்ல பச்சைமிளகாய், தக்காளி, பீட்ரூட் பயிர் செய்ய நிலத்தைத் தயார்படுத்தி வச்சிருக்கேன். வருஷம் முழுக்கப் பூசணி பறிப்புல இருக்குற மாதிரிச் சுழற்சி முறையில பூசணியைச் சாகுபடி செய்றேன்” என்றவர் வருமானம் மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்துப் பேசினார்.

“ஆழம் தெரிஞ்சு காலை விடணும்ங்கிறது மாதிரி தேவையும் விற்பனை வாய்ப்பையும் தெரிஞ்சுகிட்டு சாகுபடி செய்யணும். நான் ஆரம்பத்துல இருந்தே தெளிவா இருக்கேன். இயற்கை முறையில சாகுபடி செஞ்சாலும், ரசாயன உரத்தைப் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சாலும் உள்ளூர்ல ஒரே விலைதான் கிடைக்குது. இயற்கை விவசாயத்துல விளைய வச்ச விளைபொருளோட அருமை, அதைத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே நேரத்துல, ‘விளைய வைக்கிறவன்தான் விலையையும் முடிவு செய்யணும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார். என்னோட விளைபொருளுக்கு நானே விலையை நிர்ணயிச்சு சென்னையில இருக்க ரெண்டு இயற்கை அங்காடிகளுக்குத் தொடர்ச்சியா அனுப்பிட்டு இருக்கேன்.

பூசணி அறுவடை
பூசணி அறுவடை

அந்த ரெண்டு அங்காடிகளோட தேவையைப் பொறுத்துதான் நான் காய்கறிகளை விளைய வெக்கிறேன். அதனாலதான் பூசணியைக் குறைஞ்ச இடத்துல சாகுபடி செய்றேன். சந்தையில விலை கூடுதோ, குறையுதோ அதைப் பத்தி கவலையில்ல. வருஷம் முழுக்கப் பூசணி அனுப்புறதால ரெண்டு ரகப் பூசணியும் ஒரு கிலோ 25 ரூபாய்னு ஒரே விலைக்கே கொடுக்குறேன். போன தடவை 15 சென்ட்ல 568 கிலோ மஞ்சள் பூசணியும், 5 சென்ட்ல 287 கிலோ வெள்ளைப் பூசணியும் கிடைச்சுது.

மஞ்சள் பூசணி விற்பனை மூலமா 14,200 ரூபாய், வெள்ளைப் பூசணி மூலமா 7,175 ரூபாய்னு மொத்தம் 21,375 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல உழவுல இருந்தது அறுவடை வரைக்கும் 3,000 ரூபாய் செலவாச்சுது. மீதமுள்ள 18,375 ரூபாய் லாபமாக் கிடைச்சுது. மற்ற காய்கறிகளை மாதிரி பராமரிப்பு, பூச்சி, நோய்த்தாக்குதல்னு எதை நினைச்சும் கவலைப்பட வேண்டிய தில்ல. விற்பனை வாய்ப்பு குறைவா இருந்தாலும்கூட ரெண்டு பூசணியையும் 5 மாசம் வரைக்கும்கூட இருப்பு வைக்கலாம்” எனச் சொன்னபடியே விடை கொடுத்தார்.


தொடர்புக்கு, மணி, செல்போன்: 99524 21562.

பொங்கலும் பூசணியும்

மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு, கோலத்துக்கு நடுவில் பசுமாட்டுச் சாண உருண்டையில் பூசணிப்பூவைச் செருகி வைப்பது, பல மாவட்டங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாலையில் வாடிவிடும் இந்தப் பூக்களைச் சாணத்துடன் சேர்த்துச் சுவரில் காயவைத்துவிடுவார்கள். காய்ந்த, இந்த வறட்டியைத் தைப் பொங்கலன்று எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். பொன் நிறமான இந்தப் பூசணிப் பூவை, மங்கலத்தின் அடையாளமாக் கருதி சாண உருண்டையில் வைப்பதாகச் சொல்லப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் மதிய வேளையில் பரிமாறப்படும் உணவில் வெண்பூசணி தயிர் கூட்டும், மஞ்சள் பூசணிக்கூட்டும் முக்கியமானது. கிராமங்களில் வீடுகளின் பின்புறத்திலும், வீட்டுக்கூரையின் மீதும் பூசணிக் கொடிகளைப் படர விடுவதை இன்றும் பார்க்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல்

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 50 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தலா 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கைப் போட்டு அதனுடன் 200 கிராம் பெருங்காயம், 100 கிராம் கடுக்காய்த்தூள் கலந்து ஒரு வாரம்வரை வைத்திருந்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

வேப்பிலை-பூண்டுக்கரைசல்

10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 5 கிலோ வேப்பிலை, 500 கிராம் வெள்ளைப்பூண்டு (விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்) இரண்டையும் இரண்டு நாள்கள்வரை ஊற வைத்தால் வேப்பிலை-பூண்டுக் கரைசல் தயார்.

பூசணி
பூசணி

இப்படித்தான் பூசணிச் சாகுபடி!

15 சென்டில் மஞ்சள் பூசணி, 5 சென்டில் வெண்பூசணிச் சாகுபடி செய்வது குறித்து மணி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பூசணியைப் பொறுத்தவரை, பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். 10 அடி இடைவெளியில் 2 அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் 2 அடி இடைவெளியில் அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் 500 கிராம் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் போட்டு மூடி, விதையை ஊன்ற வேண்டும். 15 சென்ட் பரப்புக்கு 50 கிராம் மஞ்சள் பூசணி விதைகளும், 5 சென்ட் நிலத்துக்கு 20 கிராம் வெண்பூசணி விதைகளும் தேவைப்படும்.

விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது அவசியம். ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.லி சூடோமோனஸ் கலந்து அதில் விதைகளைப் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, 5 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து நடவு செய்யலாம். 5 முதல் 7-ம் நாளில் முளைப்பு தெரியும். 12-ம் நாளில் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 15-ம் நாளில் கொடி படரத் தொடங்கும்.

22-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் கலந்துவிட வேண்டும். 32-ம் நாள் பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 42-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல், 30 மி.லி மீன் அமிலம், 250 மி.லி பஞ்சகவ்யா கலந்து பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 45-ம் நாளுக்குமேல் பூப்பூக்கத் தொடங்கும். 50 நாளுக்கு மேல் காய் காய்க்கத் தொடங்கும். 15 மற்றும் 45-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி மீன் அமிலம், 250 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பூசணியைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பூச்சி, நோய்த்தாக்குதல் எதுவும் இல்லை. இருந்தாலும் 25 மற்றும் 40-ம் நாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வேப்பிலை-பூண்டுக் கரைசலை கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். 65-ம் நாளிலிருந்து அறுவடையைத் தொடங்கலாம். மஞ்சள் பூசணி முழுமையாக மஞ்சள் நிறமாக மாறிய பிறகும், வெண்பூசணி சாம்பல் படர்ந்தது போல் இருக்கும் நிலையிலும் அறுவடை செய்யலாம்.

பூசணி வயல்
பூசணி வயல்

களை எடுக்கத் தேவையில்லை

‘‘பூசணி, மண்ணில் படரும் கொடிவகைத் தாவரம் என்பதால், களை எடுக்கத் தேவை இல்லை. காய் காய்க்கத் தொடங்கியதும் காய்களின் மீது வெயில் பட்டால் நிறம் மாறவும், வெயிலில் வெதும்பிச் சேதமாகவும் வாய்ப்புள்ளது. கொடியே மூடாக்காக இருப்பதுடன் மண்ணில் உள்ள வெப்பம், காய்களில் உஷ்ணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் பூசணிக்குப் பாதுகாப்புதான்” என்கிறார் மணி.

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

20 சென்ட் பரப்பளவுக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் தேவை. பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் தொழுவுரத்தைக் கொட்டி, அதனுடன் தலா 500 மி.லி அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து கலவையாக்கி 15 நாள்கள் வரை வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தயாராகிவிடும். 7-ம் நாள் கலவையை மண்வெட்டியால் கிளறிவிட வேண்டும். 15-ம் நாளில் மீண்டும் ஒருமுறை கிளறிவிட்டுக் குழிகளில் இடலாம்.