Published:Updated:

ரூ.2,57,000 மறுதாம்பிலும் வளமான வருமானம் தரும் வாழை!

வாழைக்குலையுடன் மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
வாழைக்குலையுடன் மணிகண்டன்

மகசூல்

ரூ.2,57,000 மறுதாம்பிலும் வளமான வருமானம் தரும் வாழை!

மகசூல்

Published:Updated:
வாழைக்குலையுடன் மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
வாழைக்குலையுடன் மணிகண்டன்

வாழையில் பல ரகங்கள் இருந்தாலும், சில ரக வாழைகளில் மட்டுமே மறுதாம்பு மகசூல் எடுக்க முடியும். அந்த வகையில் இயற்கை முறையில் சாகுபடி செய்த ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரக வாழைகளை மறுதாம்பு விட்டுக் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன்.

25.06.2016 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியான ‘இயற்கையில் இனிக்கும் ரஸ்தாளி’ என்ற கட்டுரையின் மூலம் இவர் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர். ஒரு ஏக்கரில் 7-வது மறுதாம்பு மூலம் ரஸ்தாளி, ஒன்றரை ஏக்கரில் 3-வது தாம்புவில் கற்பூரவள்ளியும் அறுவடை நிலையில் உள்ளது. இதுதவிர, ஒரு ஏக்கரில் தனியாக ரஸ்தாளியையும், ஒரு ஏக்கரில் ஏலக்கி ரக வாழையையும் நடவு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அழகாபுரியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது நத்தம்பட்டி. இங்குள்ள கண்மாய்க்கு அருகில் உள்ளது மணிகண்டனின் வாழைத் தோட்டம்.

வாழைக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை காலை வேளையில் சந்தித்தோம். நம்மை வரவேற்றவர், ஏழாவது மறுதாம்பு ரஸ்தாளி வாழைகளுக்குள் அழைத்துச் சென்றார். அதில், ஒரு வாழையின் குலையிலேயே பழுத்திருந்த இரண்டு ரஸ்தாளிப் பழங்களைப் பறித்தவர், ‘‘ஏழாவது தாம்புலயும் பழத்தோட ருசியைப் பாருங்க...’’ என்று சொல்லி நம்மிடம் கொடுத்தார். பழங்கள் தித்திப்பாக இருந்தது. நடந்தபடியே பேச ஆரம்பித்தார்.

வாழைக்குலையுடன் மணிகண்டன்
வாழைக்குலையுடன் மணிகண்டன்

“5 வருஷங்களுக்கு முன்னால, என்னோட வாழைச் சாகுபடி பற்றிய கட்டுரை பசுமை விகடன்ல வெளியான பிறகு, பல மாவட்டங்கள்ல இருந்து விவசாயிங்க போன் பண்ணினாங்க. சாகுபடி முறையிலயும், வருமானத்துலயும் நிறைய சந்தேகங்கள் கேட்டாங்க. புதுசா வாழை சாகுபடியை ஆரம்பிச்ச சில விவசாயிங்க நேரடியா தோட்டத்துக்கே வந்து சுத்திப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டாங்க. இப்போ வரைக்கும் விவசாயிங்ககிட்ட இருந்து போன் வந்துகிட்டுதான் இருக்குது. நானும் அவங்களோட கேள்விகள், சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன்.

‘இயற்கை விவசாயத்துல வாழையைச் சாகுபடி செஞ்சுட்டா மட்டும் போதுமா? மறுதாம்புவுக்குத் தாங்குமா’ன்னு உள்ளூர்ல ரசாயன உரம் பயன்படுத்துற சில விவசாயிங்க எங்கிட்ட கேட்டாங்க. அப்போதான், ‘மறுதாம்பு விட்டா என்ன’ன்னு எனக்குள்ள ஒரு யோசனை தோணுச்சு. ‘மறுதாம்புலயும் நல்ல மகசூல் எடுத்துக் காட்டுறேன்’னு அவங்ககிட்ட சவால்விட்டேன். பசுமை விகடன்லயும், வாழையில மறுதாம்பு விடுறது பத்தின கட்டுரைகள் வெளியாகி இருந்துச்சு. அதையும் படிச்சு பார்த்தேன். அந்த வருஷ ரஸ்தாளியில பூ தள்ளினதுமே, ஒவ்வொரு வாழையிலயும் மறுதாம்புவுக்கு ஒரு கன்றைத் தேர்வு செஞ்சு விட்டேன். குறிப்பிட்ட ஒரு சில கன்றுகளைத் தவிர மற்ற வாழைகள் ஒரே சீரா வளர்ந்து குலை தள்ளுச்சு. மறுதாம்புல விளைஞ்ச வாழைன்னே சொல்ல முடியாது. அந்த அளவுக்குக் காய்களும் திரட்சியா இருந்துச்சு. அப்படியே அடுத்தடுத்த வருஷம் மறுதாம்பு விட்டேன். ரஸ்தாளி மாதிரியே கற்பூரவள்ளியையும் மறுதாம்புல விட்டேன். அதுவும் நல்லா வந்துச்சு. இப்போ ரஸ்தாளி 7-வது தாம்பும், கற்பூரவள்ளி 3-வது தாம்புலயும் இருக்கு” என்றவர் கற்பூரவள்ளி வயலுக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

ரஸ்தாளி வாழைத்தோட்டம்
ரஸ்தாளி வாழைத்தோட்டம்


‘‘ஒரு ஏக்கர் ரஸ்தாளி 6-வது தாம்புவில் 720 குலைகள் வெட்டினேன். காய்கள் 4,050 கிலோ எடை இருந்தது. அதில், 3,000 கிலோவை, ஒரு கிலோ ரூ.50-க்குச் சென்னை யில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கும், மீதமுள்ள 1,050 கிலோவை உள்ளூரில் ஒரு கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்தேன். அந்த வகையில் மொத்தம் ரூ.1,76,250 வருமானம் கிடைச்சது. இதுல செலவுகள் ரூ.35,000 போக ரூ.1,41,250 லாபமாக் கிடைச்சது. அதேபோல ஒன்றரை ஏக்கர் கற்பூரவள்ளி 2-வது தாம்புவில், 950 வாழையில் 7,310 கிலோ காய்கள் கிடைச்சது. இதுல, 3,000 கிலோவைச் சென்னைக்கு ஒரு கிலோ ரூ.50 எனவும், மீதமுள்ள 4,310 கிலோவை உள்ளூரில் ஒரு கிலோ 25-க்கும் விற்பனை செஞ்சேன். அந்த வகையில் மொத்தம் ரூ.2,57,750 வருமானமாக் கிடைச்சுது. இதுல, செலவுகள் ரூ.64,000 போக ரூ.1,93,750 லாபமாக் கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

‘‘வாழைச் சாகுபடிக்கு அனைத்து வகை மண்ணும் ஏற்றது. இருந்தாலும் வண்டல், கரிசல் மற்றும் செம்மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.’’


‘‘கற்பூரவள்ளி வாழையைப் பொறுத்தவரை இடைவெளி 8 அடி சீராக இருக்கு. அதனால மூணு மாசத்துக்கு ஒரு களை எடுக்குறதால அதிக செலவாகுது. பொதுவா அறுவடை செஞ்ச வாழைகளைச் சென்னையில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கே அனுப்பிட்டு வர்றேன். கொரோனா ஊரடங்கினால சென்னைக்கு அனுப்புறது பாதியிலேயே தடைபட்டுப் போச்சு. இல்லைன்னா வருமானம் இன்னும் கூடுதலாகக் கிடைச்சிருக்கும்” என்றபடியே விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, மணிகண்டன்,

செல்போன்: 96775 90252

நுண்ணுயிர்களைப் பெருக்கும் மூடாக்கு

மூடாக்குப் போடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுவதுடன், மண்புழு மற்றும் நுண்ணுயிர் பெருக்கமும் ஏற்படுகிறது. மூடாக்குக்கு இணையாக எந்த ரசாயன உரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூடாக்கு போட்டாலே நிலத்தில் ஈரப்பதம் தானாக வந்துவிடும். வெப்பத்தையும் காற்றையும் பயிரின் தரைப் பகுதி தடுப்பதால், பயிருக்குப் பாய்ச்சப்படும் நீர் ஆவியாகாமல் தடுப்பதுடன் மண் வளத்தையும் அதிகரிக்கிறது. இதனால், மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் ரஸ்தாளி, ஒரு ஏக்கர் கற்பூரவள்ளி வாழைச் சாகுபடி செய்வது குறித்து மணிகண்டன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

வாழைச் சாகுபடிக்கு அனைத்து வகை மண்ணும் ஏற்றது. இருந்தாலும் வண்டல், கரிசல் மற்றும் செம்மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது முறை உழவு செய்யும்போதே ஒரு ஏக்கருக்கு 6 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 8 அடி, கன்றுக்குக்கன்று 8 அடி இடைவெளியில் 1 அடி ஆழம், 1 அடி அகலத்தில் குழி எடுக்க வேண்டும். குழியின் மேல் மண்ணைத் தனியாகவும், குழித்தோண்டி எடுத்த மண்ணைத் தனியாகவும் வைக்க வேண்டும்.

கற்பூரவள்ளி வாழை
கற்பூரவள்ளி வாழை


குழியை 3 முதல் 5 நாள்கள்வரை ஆற விடலாம். இந்த நாள்களுக்குள் வாய்க்கால் அல்லது சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்து விட வேண்டும். வட்ட வடிவ பெரிய பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர்விட்டு, அதில் 500 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 500 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். அதில் 250 விதைக்கிழங்குகள் வரை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, அந்தக் கிழங்குகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்திக் குழியில் நடவு செய்ய வேண்டும். இதனால், வேர் அழுகல், தண்டு அழுகல், பூஞ்சண நோய்கள் கட்டுப்படும்.

குழிக்குள் கிழங்கு நடவு செய்த பிறகு, மேல் மண், குழி தோண்டிய மண் இரண்டையும் கலந்து குழியை மூட வேண்டும். நடவுக்காகத் தேர்வு செய்யப்படும் கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடையுள்ளதாக இருக்க வேண்டும். விதைக்கிழங்கின் வேர்களை நன்றாகச் சீவி விட வேண்டும். இதனால், புதிய வேர்கள் தோன்றும். விதைக்கிழங்கு நட்ட அன்றோ மறுதினமோ உயிர் நீர் விட வேண்டும். குழிக்குள் காற்றுப் போகாமல் இருப்பதற்காக மூன்றாவது நாளில் கிழங்கைச் சுற்றிலும் மண் அணைத்து, இறுக்கமாக மிதித்து விட வேண்டும். இதனால், வேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

கிழங்கு நட்டதிலிருந்து 12 முதல் 15-ம் நாளில் களைகள் தென்படும். களைகளை எடுத்துவிட்டு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, நரிப்பயிர், தட்டை, உளுந்து, கொள்ளு ஆகியவற்றில் ஏதாவது ஒரு விதையை விதைக்க வேண்டும். விதைத்த 45 முதல் 50-ம் நாள் பூப்பூக்க ஆரம்பித்ததும் அச்செடியை வெட்டி வாழைக்கு மூடாக்காக அப்படியே போட வேண்டும். அன்றே, தண்ணீருடன் செறியூட்டப்பட்ட இ.எம் அல்லது ஹியூமிக் அமில கரைசலை விட வேண்டும். இதேபோல மூன்று மாதத்துக்கு ஒரு முறை என மொத்தம் மூன்று முறை விதைத்து (ஒரு முறை விதைத்த விதையை மறுமுறை விதைக்க வேண்டாம்) மூடாக்காக்கி, தண்ணீருடன் செறியூட்டப்பட்ட இ.எம் அல்லது ஹியூமிக் அமிலம் கரைசலை விட வேண்டும்.

இடுபொருள்
இடுபொருள்


15-ம் நாளிலிருந்து 20 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். மாதம் ஒரு முறை பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) மற்றும் இ.எம் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இ.எம் கரைசல்) கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 6-ம் மாதத்தில், பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும் (50 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 25 கிலோ எள்ளுப்பிண்ணாக்கு, 25 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 10 கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலவையாக்க வேண்டும். 200 லிட்டர் கொள்ளவுள்ள 4 டிரம்மில் 150 லிட்டர் தண்ணீரை, ஒவ்வொரு டிரம்மிலும் ஊற்றிச் சம அளவாகப் பிண்ணாக்குக் கலவையைப் பிரித்துக்கொட்டி மூடி வைக்க வேண்டும். 2 முதல் 5 நாள்கள் வரை தினமும் கிளறிவிட வேண்டும். 6-வது நாளில் பாசன நீரில் கலந்து விட வேண்டும்).

8-ம் மாதத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூப்பூப்பதற்கு முன் இதைச் செய்தால் காய்கள் திரட்சியாக இருக்கும். இதைத்தாண்டி வேறெதுவும் செய்யத் தேவையில்லை.

மறுதாம்பில் பின்பற்ற வேண்டியவை

தாய் வாழையிலிருந்து பூ தள்ளிய பிறகு, பூ தள்ளிய திசைக்கு எதிர்த்திசையில் உள்ள பக்கக் கன்றினை மறுதாம்புக்காக விட்டுவிட வேண்டும். ஒருவேளை அந்தக்கன்று திரட்சியாக இல்லாமல் இருந்தால், அதை விட்டுவிட்டு அதற்குப் பக்கத்தில் உள்ள திரட்சியான கன்றைத் தேர்வு செய்யலாம். தாய் வாழையிலிருந்து குலையை வெட்டியவுடன், அந்த வாழையில் 5 அடி உயரத்துக்கு மேல் உள்ள பகுதியை வெட்டி, அப்படியே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும்.இதனால், தாய் வாழையில் உள்ள சத்துகள் மறுதாம்பு வாழைக்கு முழுமையாகக் கிடைக்கும். வாழைகளை மறுதாம்பு விடும் எண்ணம் இருந்தால் வாழைக்கு வாழை 8 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி என்ற இடைவெளியில் வாழைக் கிழங்குகளை ஆரம்பத்திலேயே நடுவது சிறந்தது. இந்த இடைவெளியில் நடவு செய்தால், மறுதாம்பு விட்டாலும் வாழைகளுக்குச் சீரான இடைவெளி கிடைக்கும். களை எடுப்பது, உரமிடுவது, இடுபொருள் தெளிப்பது, அறுவடை வரை எளிதாக இருக்கும். இந்த முறையில், நன்றாகக் கவனித்து வந்தால் 8 மறுதாம்புகள் வரை தொடர்ந்து எடுக்கலாம்.

கற்பூரவள்ளி வாழைத்தோட்டம்
கற்பூரவள்ளி வாழைத்தோட்டம்

குலையை வெட்டிய பிறகு மறுதாம்பு விடப்பட்ட வாழைகளுக்கு இடையில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, நரிப்பயிர், தட்டை, உளுந்து, கொள்ளு ஆகியவற்றில் ஏதாவது ஒரு விதையைத் தூவி விதைக்க வேண்டும். விதைத்த 45 முதல் 50-ம் நாள் பூப்பூக்க ஆரம்பித்ததும், அச்செடியை அறுத்து வாழைக்கு மூடாக்காக அப்படியே போட வேண்டும். இதுபோல குறைந்தது இரண்டு முறையாவது விதைக்க வேண்டும்.

இதனால், மண்ணின் சத்துகள் சமநிலைப்படுத்தப்பட்டு வாழையின் வளர்ச்சி சீராக இருக்கும். அத்துடன் மூடாக்காகவும் இருக்கும். மாதம் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசலை 200 லிட்டர் என்ற கணக்கில் சுழற்சி முறையில் தண்ணீர் கலந்து விட வேண்டும். பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். தாய்வாழையை வெட்டிய பிறகு பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். குறைந்தது இரண்டு மாத இடைவெளியில் பிண்ணாக்குக் கரைசல் கொடுப்பது நல்லது.

மறுதாம்பு கன்றைத் தேர்வு செய்த பிறகு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பாய்ச்சியதிலிருந்து இரண்டாவது நாளில் கன்றைச் சுற்றி 750 மி.லி, ‘சூடோமோனஸ் விரிடி கரைசலை’ ஊற்ற வேண்டும். (1,000 வாழைக்கு, 800 லிட்டர் தண்ணீரில் இரண்டரை கிலோ சூடோமோனஸ், இரண்டரை கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூளைக் கலந்த கரைசல்) இதனால், இலைக்கருகல், வேர் அழுகல், பூஞ்சணம் நோய் போன்றவை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் செய்வது நல்லது. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை.

ரஸ்தாளி
ரஸ்தாளி

செலவைக் குறைக்கும் மறுதாம்பு!

செலவினங்களைக் குறைப்பதுதான் இயற்கை விவசாயத்தின் முக்கிய நோக்கம். மறுதாம்பு விடுவதால், உழவு, அடியுரம், விதைக்கிழங்கு ஆகியவற்றின் செலவுகள் மிச்சப்படும். வழக்கமான அறுவடையைவிட இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வந்துவிடும்.

செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல்

18 லிட்டர் தண்ணீரில்1 லிட்டர் இ.எம் உடன் 1 கிலோ நாட்டுச்சர்க்கரையைத் தூளாக்கிக் கலந்து 5 நாள்கள்வரை வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட இ.எம் தயார். இதை 200 லிட்டர் தண்ணீரில் ஊற்றிப் பாசன நீரில் கலந்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism