Published:Updated:

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 2,30,000 ரூபாய்! - சத்தான வருமானம் தரும் சாத்துக்குடி!

அறுவடையான சாத்துக்குடியுடன் ஜெயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சாத்துக்குடியுடன் ஜெயராஜ்

மகசூல்

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 2,30,000 ரூபாய்! - சத்தான வருமானம் தரும் சாத்துக்குடி!

மகசூல்

Published:Updated:
அறுவடையான சாத்துக்குடியுடன் ஜெயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சாத்துக்குடியுடன் ஜெயராஜ்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்தது 2 கி.மீ தொலைவில் உள்ள ஞானதாஸ் நகரில் உள்ளது வீட்டுடன்கூடிய ஜெயராஜின் தோட்டம். சாத்துக்குடிப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தவரை, ஒரு காலை நேரத்தில் சந்தித்தோம். நம்மை வரவேற்றவர், ‘‘முதல்ல இதைக் குடிங்க... அப்புறம் தோட்டத்துக்குள்ள போவோம்’’ எனச் சொல்லிச் சாத்துக்குடி ஜூஸைக் கையில் கொடுத்தார். தித்திப்பான ஜூஸைக் குடித்தோம். ‘‘வாங்க... இப்போ தெம்பாத் தோட்டத்துக்குள்ள போகலாம்’’ என்றவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். இதமான சாரல் காற்றில், மரங்களில் கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன சாத்துக்குடிப் பழங்கள்.

‘‘பழங்களைப் பார்த்தீயாளய்யா... எல்லாம் இயற்கை விவசாயத்தோட மகிமைதான்’’ என்றவர், நடந்தபடியே பேசத் தொடங்கினார். ‘‘எங்க அப்பா, தேவசமாதானம், சுதந்திரபோராட்ட தியாகி. அவர் அடிப்படையில ஒரு விவசாயி. நெல், வாழை தான் முக்கிய விவசாயமா இருந்துச்சு. அந்தக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி வரைதான் படிச்சேன். அதுக்கு பிறகு அப்பாவுடன் சேர்ந்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல மட்குன தொழுவுரத்தையும், அடுப்புச் சாம்பலையும் போட்டுத்தான் விவசாயம் செஞ்சோம். பக்கத்துத் தோட்டங்கள்ல விவசாயிங்க, ரசாயன உரத்தைப் போட்டு, நெல்லுல கூடுதலா மகசூல் எடுத்தாங்க. அதைப் பார்த்து அதிக மகசூல் ஆசையில அப்பாவும் ரசாயன உரத்துக்கு மாறினாங்க.

சாத்துக்குடியுடன் ஜெயராஜ்
சாத்துக்குடியுடன் ஜெயராஜ்


முதல் வருஷம் நெல்லுல ஓரளவு கூடுதலா மகசூல் கிடைச்சுச்சு. அதே மாதிரி பூச்சித் தாக்குதலும் நோய்த்தாக்குதலும் இருந்துச்சு. பக்கத்துத் தோட்டத்துக்காரங்க ரசாயனத்துல என்னவெல்லாம் பயன்படுத்தினாங்களோ நாங்களும் அதையேதான் செஞ்சுட்டு வந்தோம். அஞ்சாறு வருஷத்துக்குப் பிறகு மகசூல் படிப்படியா குறைஞ்சுடுச்சு. அப்பாவுக்குப் பிறகு நானும் ரசாயன உரத்தையே பயன்படுத்தினேன். ‘ஒரே கம்பெனி உரம் போட்டா அப்படித்தான் குறையும். வேறவேற கம்பெனி உரங்களைப் போட்டாத்தான் மகசூல் கிடைச்சுகிட்டே இருக்கும்’னு சொன்னாங்க. அதனால, கம்பெனியை மாத்திக்கிட்டே இருந்தோம். ஆனாலும், எந்தப் பிரயோசனமும் இல்ல. நெல்லைப் போலவே வாழைக்கும் ரசாயன உரத்தைதான் பயன்படுத்தினோம். ஒரு கட்டத்துல குலைகள் திரட்சி இல்லாமலும், சோடைக் காய்களாகவும், சல்லுக் (வளர்ச்சி இல்லாத) காய்களாவும் இருந்துச்சு. பூப்பூத்து உதிர ஆரம்பிச்சது. தூர்கள்ல வெடிப்பும் ஏற்பட்டுச்சு. நிலமும் சிமென்ட் தரை மாதிரி ஆயிடுச்சு.

பாதை காட்டிய பசுமை விகடன்

நெல், வாழையில கிடைச்ச சொற்ப வருமானத்துல பாதி உரத்துக்கும், பூச்சிக் கொல்லிக்கும் செலவாச்சு. ‘எந்தச் சூழ்நிலையிலயும் விவசாயத்தைக் கைவிட்டு டக் கூடாது’ன்னு அப்பா, எங்கிட்ட சொன்னார். அந்த ஒத்த வார்த்தைக்காக நஷ்டமானாலும் பரவாயில்லன்னு தொடர்ந்து ரசாயன உரத்தைதான் பயன்படுத்திட்டு வந்தேன். நான் ஜூனியர் விகடனோட வாசகர். அதுல 14 வருஷத்துக்கு முன்ன, பசுமை விகடனைப் பற்றிய விளம்பரம் வந்துச்சு. விவசாயம் சம்பந்தமா இருக்கேன்னு, பசுமையை வாங்குனேன். அதைப் படிச்சப்போதான், இயற்கை விவசாயம்னு ஒரு வழி இருக்குது தெரிஞ்சுகிட்டேன். அடியுரமா தொழுவுரம் போட்டாலும், ரசாயன உரம் போடாம, பூச்சிக்கொல்லி தெளிக்காம விவசாயம் செய்யலாம்னு அப்போதான் புரிஞ்சுது.

சாத்துக்குடி
சாத்துக்குடி

அதுல வாழை மகசூல் கட்டுரையைப் படிச்சப்போ, ‘ரசாயன உரத்தை அதிகம் பயன்படுத்துனதுனால நிலம் இறுகிப் போச்சு. மண்ணு மலடாகிடுச்சு. நானே அதுக்கு காரணமாயிட்டேன். நிலத்துல மூணு, நாலு முறை பல தானிய விதைப்பு விதைச்சு மண்ணை வளப்படுத்தினேன். இப்போ என் தோட்டத்துல ரசாயன உர நாத்தம் (துர்நாற்றம்) அடிக்காது. தண்ணி பாய்ச்சுனா மண் வாசனையைத்தான் உணர முடியும். மண்புழுவைக் கண்ணாலப் பார்க்க முடியும்’னு ரொம்பச் சிலாகிச்சு அந்த விவசாயி சொல்லி யிருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு வாஸ்தவம்தான். ஏன்னா, நானும் மண்ணை மலடாக்கித்தான போட்டுருந்தேன்.

உடனே, சாகுபடி நிலத்தை நாலஞ்சு முறை ஆழமா உழுதேன். பலதானிய விதைப்பு விதைச்சு, பூப்பூத்த நேரத்துல மடக்கி உழுதேன். இப்படி, மூணு முறை தொடர்ந்து செஞ்சேன். அதுக்கு பிறகும் நெல்லு, வாழையைச் சாகுபடி செஞ்சேன். நல்ல மாற்றம் தெரிஞ்சது. மகசூலைவிட மண்ணை வளப்படுத்திட்டோமேங்கிற ஆத்ம திருப்திதான் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு. கூடவே, ஒரு ஏக்கர்ல நெல்லிச் சாகுபடி செஞ்சேன். எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல காய்ப்பு இருந்துச்சு. ஆனா, அதுக்கான சந்தை வாய்ப்பு இல்லாமப் போச்சு. 25.03.2015 தேதியிட்ட பசுமை விகடனில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில மணிகண்டன்கிற விவசாயியோட ஒருங்கிணைந்த பண்ணைக் கட்டுரையில சாத்துக்குடிச் சாகுபடி செய்றதைப் பற்றிப் படிச்சேன்.

சாத்துக்குடி தோட்டம்
சாத்துக்குடி தோட்டம்


எலுமிச்சை வளரும் இடத்தில் வரும்

சாத்துக்குடிச் சாகுபடி செய்யலாம்னு ஒரு யோசனை தோணுச்சு. எங்க பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்குப் போய், ‘சாத்துக்குடி நம்ம பகுதியில வருமா’னு கேட்டேன். ‘எலுமிச்சை, நார்த்தங்காய் வர்ற எல்லா இடத்துலயும் சாத்துக்குடி வரும். மண்ணு செம்மண்ணா இருந்தா சிறப்பு’ன்னு சொன்னாங்க. உடனே, அந்த விவசாயிக்குப் போன் பண்ணி பேசினேன். சாத்துக்குடிச் சாகுபடி செய்யுற முறையைப் பத்தி விரிவாச் சொன்னார். அவருகிட்டயே 120 கன்னுகளை வாங்கி 2016-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல நட்டேன். இது மொத்தம் மூணு ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல சாத்துக்குடி காய்ப்புல இருக்கு. ஒரு ஏக்கர்ல ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா, பூப்பூத்த நிலையில இருக்கு. மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நாடன், ஏத்தன் ரக வாழைச் சாகுபடி செய்யுறதுக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர் சாத்துக்குடி மரத்தின் அருகே நின்றுகொண்டே பேசினார்.

“சாத்துக்குடி காய்ப்புக்கு வந்து இது ரெண்டாவது வருஷம். ஒரு ஏக்கர்ல மொத்தமுள்ள 120 மரங்கள்ல 100 மரங்கள் நல்ல நிலையில இருக்கு. வெதும்பிய பழங்கள், அழுகிய பழங்கள் கழிச்சது போக, போன வருஷம் மொத்தம் 5,000 கிலோ பழங்கள் கிடைச்சது. செப்டம்பர் – நவம்பர்ல அறுவடையாகுற முதல் சீஸன்ல 3,000 கிலோவும், ரெண்டாவது சீஸன்ல (இடைப் பருவத்துல) 2,000 கிலோவும் கிடைச்சது. முதல் சீஸன்ல கிடைச்ச 3,000 கிலோவை காவல்கிணறு விலக்குல இருக்குற காய்கனிச் சந்தையில மொத்த வியாபாரிக்கே வித்துட்டேன். இயற்கை முறையில விளைஞ்ச பழம்கிறதுனால தனி விலையெல்லாம் தரல. ஒரு கிலோவை 30 ரூபாய்க்குத்தான் எடுத்துக்கிட்டாங்க.

‘‘ ‘எலுமிச்சை, நார்த்தங்காய் வர்ற எல்லா இடத்துலயும் சாத்துக்குடி வரும். மண்ணு செம்மண்ணா இருந்தா சிறப்பு’ன்னு சொன்னாங்க.’’

விலை குறைவுன்னு தெரிஞ்சும், வேற வழியில்லாம அந்த விலைக்கே வித்துட்டேன். அதுக்கு பிறகு, எனக்குக் கன்னு கொடுத்த ஆரணி மணிகண்டன்கிட்ட கேட்டேன். ‘பழத்தை மார்க்கெட்டுக்கு தூக்கிட்டுப் போனா, அடிமாட்டு விலைக்குத்தான் வாங்குவாங்க. இயற்கையில விளைய வெச்சதுன்னு சொன்னா, அவங்களுக்கு எப்படித் தெரியும்? அடுத்த சீஸன்ல, பறிக்குற பழத்தை மார்க்கெட்டுக்கெல்லாம் தூக்கிட்டுப் போகாதீங்க. உங்க தோட்டத் தோட வாசல்ல, ‘இங்கு இயற்கை சாத்துக்குடி கிடைக்கும்’னு ஒரு போர்டை மட்டும் வையுங்க. பழத்தை வாங்குறதுக்கு உங்களைத் தேடி வருவாங்க’ன்னு சொன்னாரு. அன்னைக்கே, இனி, வியாபாரிக்குப் பழம் கொடுக்குறதில்லன்னு முடிவெடுத்தேன்.

அவர் சொன்ன மாதிரியே உள்ளூர் மக்களே தோட்டத்துக்கு வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட சொல்லி, வாங்குறவங்க எண்ணிக்கை அப்படியே பெருகிப் போச்சு. ரெண்டாவது சீஸன்ல கிடைச்ச 2,000 கிலோவை ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செஞ்சேன். விலையில எந்தச் சமரசமும் வெச்சுக்கல’’ என்றவர் நிறைவாக,

செலவு/வரவு கணக்கு
செலவு/வரவு கணக்குஆண்டுக்கு 5,000 கிலோ

‘‘முதல் சீஸன்ல 3,000 கிலோ பழம் விற்பனை மூலமா ரூ.90,000-ம், ரெண்டாவது சீஸன்ல 2,000 கிலோ பழம் விற்பனை மூலமா ரூ,1,40,000-ம்னு மொத்தம் ரூ.2,30,000 வருமானமாக் கிடைச்சது. இதுல ஆரம்ப கட்டமா ரூ.68,900 செலவாச்சு. போன வருஷம் முதல் மகசூலுக்கான பராமரிப்புச் செலவு ரூ.52,000 ஆச்சு. வருமானத்துல செலவுத்தொகையைக் கழிச்சது போக மீதமுள்ள ரூ.1,09,100 லாபமாக் கிடைச்சது. இனிமேல் பராமரிப்பு மட்டும்தான் செலவு. அடுத்தடுத்த வருஷங்கள்ல காய்ப்பும் அதிகரிக்கும்” என்று உற்சாகமாக சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, ஜெயராஜ்,

செல்போன்: 94429 70852

இப்படித்தான் சாத்துக்குடிச் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாத்துக்குடிச் சாகுபடி செய்வது குறித்து ஜெயராஜ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

சாத்துக்குடியுடன் ஜெயராஜ்
சாத்துக்குடியுடன் ஜெயராஜ்


சாத்துக்குடிச் சாகுபடி செய்ய செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளை மண் ஏற்றது. புரட்டாசி முதல் கார்த்திகை வரை நடவுக்கு ஏற்ற பருவம். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 18 அடி, குழிக்குக் குழி 18 அடி இடைவெளியில் இரண்டு அடி சுற்றளவு, இரண்டு அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் 130 குழிகள்வரை எடுக்கலாம். குழிகளை 10 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு 10 கிலோ மட்கிய தொழுவுரத்துடன் 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து வைக்க வேண்டும். பிறகு, 10 நாள்கள் குழிகளை ஆற விட வேண்டும். இதற்கிடையில், சொட்டுநீர்ப் பாசன வசதியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

4 முதல் 6 மாதங்கள் ஆன கன்றுகள் நடவுக்கு ஏற்றது. கன்றுகளைக் குழிக்குள் நடவு செய்து மண் அணைக்க வேண்டும். கன்றுகள் சாய்ந்து விடாமல் இருக்க நீளமான குச்சியை ஊன்றிக் கன்றுடன் இணைத்துக் கட்டலாம். ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். மழைக்கால நடவு என்பதால், பருவமழையிலேயே செடிகள், வேர் பிடித்துத் துளிர்த்து வளர்ந்துவிடும். மூன்று மாதங்களுக்குப் பிறகு 20 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி சூடோமோனஸ், 500 மி.லி டிரைக்கோடெர்மா விரிடி கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும். இலைகளில் புள்ளி, இலைச்சுருட்டு, நிறம் மாற்றம் ஏதும் தென்பட்டால் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி சூடோமோனஸ், 50 மி.லி டிரைக்கோடெர்மா விரிடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

6-வது மாதத்தில் கன்றுகளின் தூரிலிருந்து ஒரு அடி தூரத்தில் 10 முதல் 15 கிலோ மட்கிய தொழுவுரத்துடன் 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் கடலைப்பிண்ணாக்கு கலந்து வைக்க வேண்டும். இதேபோல, 6 மாதங்களுக்கு ஒருமுறை அடியுரமாகத் தொழுவுரம், பிண்ணாக்குகளை வைத்து வர வேண்டும். தூரிலிருந்து அடியுரம் வைக்கும் தூரத்தையும் தொழுவுரம், பிண்ணாக்குகளின் அளவையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். 3-ம் ஆண்டில் பூப்பூத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் காய் காய்க்கத் தொடங்கும். நாலரை ஆண்டுக்குப் பிறகே படிப்படியாக மகசூல் அதிகரிக்கும். 6-ம் ஆண்டிலிருந்து நல்ல மகசூல் எடுக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை இடையூறாக இருக்கும் தேவையில்லாத கிளைகளை வெட்டி எடுக்க வேண்டும்.

சாத்துக்குடி பழங்கள்
சாத்துக்குடி பழங்கள்


சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி கரைசலுக்குப் பதிலாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலத்தை மாதம் ஒருமுறை பாசன நீருடன் கலந்துவிடலாம். எனக்கு வயதாகிவிட்டதாலும், நானே விவசாயத்தைக் கவனித்துக் கொள்வதாலும் இது போன்ற கரைசல்களைத் தயாரித்துக் கொடுக்கவில்லை. இவற்றைக் கொடுத்து வந்தால் காய்கள் இன்னும் நல்ல திரட்சியுடன் இருக்கும். எலுமிச்சை, நார்த்தங்காய் மரத்தைப் பராமரிப்பது போலவே சாத்துக்குடியையும் பராமரித்தால் போதும். இதற்கெனத் தனியாக பராமரிப்பு எதுவும் தேவையில்லை. பொதுவாகச் சாத்துக்குடியில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் பூவெடுத்து, ஏப்ரல்-மே மாதங்களில் இரண்டாவது சீஸன் (இடைப்பருவ மகசூலும்), ஜூன்-ஜூலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் முதல் சீஸன் மகசூலும் கிடைக்கும். இதில் முதல் சீஸனில் மகசூல் அதிகமாக கிடைக்கும்.