Published:Updated:

2 ஏக்கர்... 85 நாள்கள்... 56,000 ரூபாய் சிவப்பு எள்ளில் சிறப்பான லாபம்!

எள்ளுடன் நித்திஷ்
பிரீமியம் ஸ்டோரி
எள்ளுடன் நித்திஷ்

மகசூல்

2 ஏக்கர்... 85 நாள்கள்... 56,000 ரூபாய் சிவப்பு எள்ளில் சிறப்பான லாபம்!

மகசூல்

Published:Updated:
எள்ளுடன் நித்திஷ்
பிரீமியம் ஸ்டோரி
எள்ளுடன் நித்திஷ்

'இளைச்சவனுக்கு எள்ளு’ என்ற பழமொழி, உடல் இளைத்தவர்களுக்கானது மட்டுமல்ல... அதைச் சாகுபடி செய்யக்கூடிய எளிய விவசாயிகளுக்கும் பொருந்துகிறது. இதைச் சாகுபடி செய்யக் குறைந்த நாள்கள், குறைவான தண்ணீர் போதும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கோடைப் பருவத்தில் ஆற்றுப்பாசனத்துக்கு வழியில்லை. வேறு பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு எள் சாகுபடி கைகொடுத்து வருகிறது. இதற்கு இடுபொருள்கள் அதிகம் தேவையில்லை. அதனால்தான் ஒருகாலத்தில் டெல்டா பகுதி விவசாயிகள், எளிமையான பராமரிப்பில் நிறைவான லாபம் எடுத்து வந்தார்கள்.

ஆனால், தற்போது எள் சாகுபடியில் ஈடுபடக்கூடிய விவசாயிகளில் பெரும்பாலானோர், அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகரித்து, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. செலவும் அதிகரிப்பதால் நிறைவான லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் அருகில் உள்ள குருவாடிப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்திஷ், இரண்டு ஏக்கரில் இயற்கை முறையில் சிவப்பு எள் சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார்.

ஒரு பகல்பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். அறுவடை செய்து பிரித்தெடுக்கப்பட்ட எள்ளை, சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நித்திஷ், மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘என்னோட சொந்த முயற்சியில ரெண்டு ஏக்கர்ல இயற்கை முறையில் எள் சாகுபடி செஞ்சு, நிறைவான மகசூல் எடுத்திருக்கேன். இதை நினைக்குறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏக்கருக்கு 315 கிலோ வீதம் மொத்தம் 630 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றவர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வயலில் நித்திஷ்
வயலில் நித்திஷ்

‘‘தஞ்சாவூர்ல சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துல பி.டெக் பயோடெக்னாலஜி படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம். அப்பாவுக்கு ஒத்தாசையா எல்லா வேலைகளும் பார்ப்பேன். இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். எங்க ஊரைச் சேர்ந்த இயற்கை விவசாயி அன்பு செழியனும், எங்க பல்கலைக்கழத்துல பணியாற்றும் பேராசிரியை சத்யா மேடத்தோட தூண்டுதலாலும்தான், இதுல எனக்கு ஆர்வம் அதிகமாச்சு. என்னோட எண்ணத்தை அப்பாகிட்ட சொன்னேன். அவரும் சரினு சொன்னார்.

மாவுப்பூச்சி தாக்குதல் அதிகம்

அதுக்கு ஏத்த மாதிரி, கொரோனா ஊரடங்கும் வந்துச்சு. முதல் கட்டமா, ரெண்டரை ஏக்கர்ல முழுமையாக என்னோட உழைப்புல பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சேன். தலா ஒரு ஏக்கர்ல கறுப்புக் கவுனி, தங்கச்சம்பா, அரை ஏக்கர்ல பாசுமதியும் சாகுபடி செஞ்சேன். கறுப்புக் கவுனியில 30 மூட்டை (60 கிலோ), தங்கச் சம்பாவுல 24 மூட்டை, பாசுமதியில 9 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது. நெல் அறுவடைக்குப் பிறகு மாசிப்பட்டத்துல ரெண்டு ஏக்கர்ல மட்டும் வி.ஆர்.ஐ.1 ரகச் சிவப்பு எள் சாகுபடி செஞ்சேன். இதுக்கு அடியுரமா எருகூட போடலை. நெல் சாகுபடிக்கு அடியுரமா போட்ட எருவுலயே மண்ணு வளமாகி, எள்ளுக்கு ஊக்கமா இருந்துச்சு. இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும், வேர் பூச்சி, கொண்டைப்பூச்சி, மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகம். ரசாயன விவசாயிகள் இதைச் சமாளிக்க, அதிகமா பூச்சிக்கொல்லி தெளிப்பாங்க. ஆனாலும் முழுமையாக் கட்டுப்படுத்தவே முடியாது. நான் வேப்ப எண்ணெய், 18 வகையான மூலிகைகள் கலந்து செஞ்ச இயற்கை பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம் பயன்படுத்தினேன். பயிரோட வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், தேமோர் கரைசல் கொடுத்தேன். 85-ம் நாள் எள்ளு முத்தி அறுவடைக்கு வந்துச்சு. ஏக்கருக்கு 315 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு.

‘‘இயற்கை முறையில நான் வெற்றிகரமா எள்ளு சாகுபடி செஞ்சு நிறைவான மகசூல் எடுத்ததைப் பார்த்துட்டு, எங்க பகுதியில உள்ள சில விவசாயிகள் இதுல ஆர்வமா இருக்காங்க.’’

எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியே பயன்படுத்தாமல், இந்தளவுக்கு அதிகமா மகசூல் எடுத்திருக்கேன். இதை இங்கவுள்ள விவசாயிகள் ஆச்சர்யமா பார்க்குறாங்க. ரசாயன விவசாயத்துல ஏக்கருக்கு 10,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாலுமே கூட, அதிகபட்சம் 270 கிலோதான் மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு.

சந்தை விலைக்கே

இயற்கை விளைபொருள்கள்


இயற்கை முறையில சாகுபடி செஞ்ச எள்ளுல பிழியக்கூடிய எண்ணெய் நல்லா சுவையாகவும் வாசனையாகவும் இருக்கு. இதோட தனித்தன்மையை நல்லாவே உணர முடியும். எண்ணெய்க்காகவும், இயற்கை முறையில் எள்ளு சாகுபடி செய்றதுக்காகவும், எங்க ஊர்க்காரங்க, உறவினர்கள் என்கிட்ட எள்ளு கேட்டிருக்காங்க, இது இயற்கை முறையில் விளைவிச்சதுங்கறதுனால, சந்தை விலையைவிட, ஒரு பைசாகூட கூடுதலா விலை வைக்கக் கூடாதுங்கறதுல நான் உறுதியா இருக்கேன். எள்ளுக்கு மட்டுமல்ல, நான் இனிமே இயற்கை முறையில் உற்பத்தி செய்யக்கூடிய எந்த ஒரு விளைபொருளாக இருந்தாலும், அதைச் சந்தை விலைக்குத்தான் விற்பனை செய்யணும்னு முடிவு பண்ணி யிருக்கேன்.

‘ஆர்கானிக்’ங்கற பேர்ல அதிகமா விலை வைச்சோம்னா, அதை நோக்கி, ஏழை, எளிய நடுத்தர மக்கள் வரமாட்டாங்க. அதுமட்டுமல்லாமல், நஞ்சு இல்லாத உணவுப் பொருளை உற்பத்தி செய்யணும்ங்கற நல்லா நோக்கத்துலதான், இதுல என்னை ஈடுபடுத்திக் கிட்டு இருகேங்கறதை மக்கள் நம்பமாட்டாங்க. இயற்கை முறையில நான் வெற்றிகரமா எள்ளு சாகுபடி செஞ்சி நிறைவான மகசூல் எடுத்ததைப் பார்த்துட்டு, எங்க பகுதியில உள்ள சில விவசாயிகள் இதுல ஆர்வமா இருக்காங்க’’ என்றவர் நிறைவாக, வருமானம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

செலவு வரவு கணக்கு
செலவு வரவு கணக்கு


2 ஏக்கர்... 72,840 ரூபாய்

‘‘ரெண்டு ஏக்கர்ல 630 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 100 கிலோவை எங்க வீட்டுக்கு எண்ணெய் ஆட்ட வச்சிக்கிட்டோம். தேவைக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டரியில கொடுத்து எண்ணெய் ஆட்டிக்கிட்டுருக்கோம். மொத்தமா கணக்குப் பார்த்தால் 100 கிலோ எள்ளுல 47 லிட்டர் எண்ணெய், 45 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் விலை 280 ரூபாய். அந்த வகையில 47 லிட்டர் எண்ணெய் மதிப்பு 13,160 ரூபாய். புண்ணாக்கை மாட்டுக்கு வச்சிக்குவோம். இதோட விலை மதிப்பு 1,380 ரூபாய். மீதியுள்ள 530 கிலோவை, எள்ளாகவே விற்பனை செஞ்சிடுவேன். கிலோ 110 ரூபாய் வீதம், 58,300 ரூபாய் கிடைக்கும். அதோட வீட்டுக்கு ஆட்டுன எண்ணெய், புண்ணாக்கு எல்லாம் சேர்த்து மொத்தமா கணக்குப் பார்த்தால், 2 ஏக்கர் எள் சாகுபடி மூலம், 72,840 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு போக, 56,290 ரூபாய் லாபமாகக் கையில மிஞ்சும்’’ என்று சொல்லி முடித்தார்.தொடர்புக்கு, நித்திஷ்,

செல்போன்: 91592 46146.

இப்படித்தான் எள் சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் வி.ஆர்.ஐ.1 ரகச் சிவப்பு எள் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்ப தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் மண்ணை ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, இரண்டு நாள்கள் கழித்துக் கலப்பை மூலம் ஆழமாக உழவு செய்ய வேண்டும். அடுத்து ரோட்டோவேட்டர் மூலம் ஒரு சால் உழவு ஓட்டி, நன்கு புழுதியாகும் அளவுக்கு மண்ணைக் கிளறி விட வேண்டும். 2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, அரைக்கிலோ சூடோமோனஸை 10 கிலோ மணலில் கலந்து நிலம் முழுவதும் பரவலாக தூவ வேண்டும். இரண்டரை கிலோ எள்ளு விதையில் 50 மி.லி வேப்ப எண்ணெயை, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலக்க வேண்டும். இதை 10 கிலோ மணலில் கலந்து பரவலாகத் தூவ வேண்டும். பூச்சித்தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், எறும்புகள், எள்ளு விதைகளை இழுத்துச் செல்லாமல் இருக்கவும் விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

எள்ளுடன்
எள்ளுடன்


விதை தூவிய பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் மண்ணை லேசாகக் கிளறி விட வேண்டும். 5-ம் நாள் முளைப்பு விடத் தொடங்கும். 12-ம் நாள் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-18 நாள்களில் களைகளை வேரோடு பிடுங்கி நிலத்திலேயே போட்டுவிடலாம். அவை வெயிலில் காய்ந்து தானாகவே மட்கி மண்ணுக்கு உரமாகிவிடும். 19-ம் நாள் மண்ணை ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 21-ம் நாள் 18 வகையான மூலிகைகள் கலந்து ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்ட மூன்றரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பயனளிக்கும். 35-ம் நாள் பூ பூக்கத் தொடங்கும். 38-ம் நாள் தண்ணீர் விட வேண்டும். அப்போது 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். பூக்கள் உதிராமல் இருக்கவும், பூக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் 10 லிட்டர் தேமோர் கரைசலை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் தேனீக்களின் வருகை அதிகரித்து மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறும்.

45-ம் நாள் 150 கிலோ ஈர சாணத்தைப் பாசனநீரில் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 50-ம் நாள் 3 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்த 10 நாள்கள் கழித்து, தேவைக்கு ஏற்பத் தண்ணீர் கொடுக்க வேண்டும். லேசான மழை இருந்தாலே போதுமானது. அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் மண்ணை ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 60 - 70 நாள்களில் காய்கள் முற்றத் தொடங்கும். 75 - 85 நாள்களில் முழுமையாக முதிர்ச்சி அடைந்து எள் அறுவடைக்கு வரும்.

எள்ளுக்கு ஏழு உழவு

எள் சாகுபடியில் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க, உழவு செய்வதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மண்ணை நன்கு புழுதியாக்குவது மிகவும் அவசியம். இதனால்தான், ‘எள்ளுக்கு ஏழு’ எனக் கிராமப்புறங்களில் இப்போதும் பழமொழி சொல்லப்படுகிறது. மாடு கட்டி உழவு ஓட்டுவதாக இருந்தால் ‘ஏழு உழவு’ அவசியம். அதற்கு நிகராக, டிராக்டரில் கலப்பை மற்றும் ரோட்டோவேட்டர் மூலம், நன்கு உழவு ஓட்டிப் புழுதியாக்க வேண்டும்.

இடுபொருள்
இடுபொருள்

18 வகையான மூலிகைக் கரைசல்

தலா அரைக்கிலோ வேம்பு, துளசி, எருக்கன், ஆடாதொடை, நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, புங்கன், நித்யகல்யாணி, தும்பை, அரளி, ஊமத்தை, காட்டாமணக்கு, சீத்தா, ஆமணக்கு, பப்பாளி உள்ளிட்ட இலைகளுடன் அரைக்கிலோ குமட்டிக்காய்களைச் சேர்த்து இடித்து, இவை மூழ்கும் அளவுக்குப் பசுமாட்டுக் கோமியம் கலந்து, 21 நாள்கள் வைத்திருந்து தினமும் காலை, மாலை இருவேளை கலக்கி விட வேண்டும். 21 நாள்களுக்குப் பிறகு, இதைச் சணல் சாக்கில் வடிகட்டி ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் பயன்படுத்தலாம். 2 மாதங்கள்வரை வைத்திருந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்த முடியும். அதன் பிறகு, தேவைக்குப் போக மீதம் இருந்தால் பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாவுப்பூச்சித் தாக்குதல்

மாவுப்பூச்சித் தாக்குதல் தென்பட்டால், 10 லிட்டர் சோற்றுக் கஞ்சியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, இதனுடன் ஒட்டும் பசையாக 250 கிராம் மைதா மாவு கலந்து, மாவுப்பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுள்ள செடிகளின் மீது மட்டும் தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சிகள் நகர்ந்து செல்ல முடியாமல் இறந்துவிடும். மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேறொரு மாற்று வழியும் உள்ளது. 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் வேப்ப எண்ணெய், 100 கிராம் காதி சோப்பு கலந்து தெளிக்கலாம். தேவைப்பட்டால், இந்த இரண்டு முறைகளையும்கூட அடுத்தடுத்துப் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism