ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

10 ஏக்கர்... 90 நாள்கள்... ரூ. 1,14,000... எளிதில் லாபம் கொடுக்கும் எள் சாகுபடி!

எள்ளுடன் செந்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
எள்ளுடன் செந்தில்

மகசூல்

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் எள் சாகுபடியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதைச் சாகுபடி செய்யும் சில விவசாயி களும்கூட, 1 ஏக்கர், 2 ஏக்கர் எனக் குறைவான பரப்பில்தான் பயிர் செய்கிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ரிசியூரைச் சேர்ந்த விவசாயி செந்தில், கோடைப்பட்டத்தில் 10 ஏக்கர் பரப்பில் கறுப்பு எள் சாகுபடி செய்து வெற்றிகரமாக விளைச்சல் எடுத்துக் கவனம் ஈர்க்கிறார்.

25.11.21 தேதியிட்ட இதழில் ‘மீன் வளர்ப்பில் நிறைவான வருமானம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் மூலம் ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு இவர் அறிமுகமானவர். இந்த ஆண்டுக் கோடைப் பட்டத்தில் இவர் பயிர் செய்த எள் சாகுபடி அனுபவங்களை அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம். அறுவடை செய்த எள்ளை சுத்தம் செய்துகொண்டிருந்த செந்தில், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

எள் வயலில் செந்தில்
எள் வயலில் செந்தில்

‘‘எள் சாகுபடிக்குக் கோடைப் பட்டம்தான் உகந்தது. முன்னாடியெல்லாம் நீடாமங்கலம் சுத்துவட்டார கிராமங்கள்ல, கோடைப் பட்டத்துல எள் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருந்தாங்க விவசாயிகள். ஆனா, இப்பெல்லாம் அப்படியில்ல. எங்க பகுதியில எள் சாகுபடியைப் பார்க்குறதே ரொம்ப அரிதாயிடுச்சு. கோடைப் பட்டத்துலயும் கூட பெரும்பாலான விவசாயிங்க நெல்லு தான் சாகுபடி செய்றாங்க. எள் சாகுபடி செஞ்சா, நிலத்துல உள்ள சத்துகளை எடுத்துடும்... ‘எள் விதைச்ச நிலத்துல அடுத்த போகம் நெல்லுல ஒழுங்கா வெள்ளாமை வராது’ங்கற தவறான கருத்து பரவலா இருக்கு. ஆனா, இது உண்மையில்லைங்கறது என்னோட அனுபவம்.

எள் வயல்
எள் வயல்

ஒவ்வொரு பயிருக்குமே தனித்தனி குணாதிசயங்கள் இருக்கு. தனக்குத் தேவையான சத்துகளை மட்டும்தான் எடுத்துக்கும். அதேசமயம் ஒரு குறிப்பிட்ட பயிரை, தொடர்ச்சியா அதே நிலத்துல சாகுபடி செஞ்சுகிட்டே இருந்தா, மகசூல் குறையும். மூணு போகமும் நெல்லையே விளைவிக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. நீடிச்ச, நிலைச்ச லாபகரமான வெள்ளாமைக்குப் பயிர் சுழற்சி முறை ரொம்ப அவசியம். இதனாலதான் கோடைப் பட்டத்துல எள் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். இந்த வருஷம், நான் 10 ஏக்கர்ல எள் சாகுபடி செய்யப்போறேன்னு சொன்னதுமே, எங்க ஊர் விவசாயிங்க ஆச்சர்யப்பட்டுப் போயிட்டாங்க. ‘இவ்வளவு பெரிய பரப்புல இது தேவையா... எள் பயிர் செய்யணும்னு ஆசைப்பட்டா, ரெண்டு, மூணு ஏக்கர்ல மட்டும் இதை விதைச்சிட்டு, மீதி பரப்புல நெல்லையே சாகுபடி செஞ்சுடுங்க’னு யோசனை சொன்னாங்க.

‘நெல் அளவுக்கு எள்ளுல லாபம் கிடைக்காது’னு சொன்னாங்க. ஆனா, நான் 10 ஏக்கர்லயும் எள்ளுதான் சாகுபடி செய்யணுங்கறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். கோடை மழை பெய்ஞ்சாலே போதும்... நல்லா விளைஞ்சிடும். இதுக்கு அதிகமா தண்ணீர் தேவைப்படாது. நிலத்தடி நீரை சிக்கனப்படுத்தலாம். இடுபொருள்களும் அதிகம் கொடுக்க வேண்டியதில்லை. களையெடுக்கவும் தேவையில்லை. கோடை காலத்துல நிலம் முழுக்கப் பரவலா அங்கங்க வெடிச்சாதான், மண் கண்டதுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். காற்றுல உள்ள நைட்ரஜன் சத்துகள் மண்ணுக்கு கிடைக்கும். நெல் சாகுபடி செஞ்சா, எப்பவும் தண்ணீர் இருந்துகிட்டே இருக்கணும்... நிலத்துல வெடிப்புகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. இப்படிப் பல வகைகள்லயும் பார்த்தா, கோடை பட்டத்துல எள்ளு சாகுபடி செய்றது சிறப்பானது. நெல்லு பயிர் செஞ்சா என்ன லாபம் கிடைக்குமோ, அதுக்கு நிகரான லாபம் எள் சாகுபடியில கிடைச்சுடுது. அதுவும் மூணே மாசத்துல அறுவடைக்கு வந்து, வருமானம் பார்த் துடலாம்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

கறுப்பு எள்ளுடன்
கறுப்பு எள்ளுடன்

‘‘நாங்க விவசாயக் குடும்பம். எனக்கு இயல்பாவே விவசாயத்து மேல ஈடுபாடு வர ஆரம்பிச்சது. பத்தாம் வகுப்புப் படிக்குறப்ப ஒரு சின்ன பரப்புல நானே உழவு ஓட்டி, எள்ளு தெளிச்சு, எந்த ரசாயன உரமும் போடாம விவசாயம் செஞ்சேன். 3 மூட்டை எள் மகசூல் கிடைச்சது. அதை அப்பாகிட்டயே விற்பனை செஞ்சு, அதுல கிடைச்ச பணத்துல சைக்கிள் வாங்கினேன்.

நான் நிறைய படிச்சு பெரிய வேலைக்குப் போகணுங்கற கனவுல இருந்த அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ‘இனிமேல் நீ இங்கயிருந்தா, விவசாயியாகவே மாறிடுவே’னு சொல்லி என்னை வெளியூர் அனுப்பிட்டார். நான் ‘டிப்ளோமா கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்’ படிச்சு, பல வருஷமா ‘கார்ப்பரேட் கம்பெனி’கள்ல வேலை பார்த்தேன். கொல்கத்தா, டெல்லி, சென்னைனு வெளியிடங்கள்ல வேலைபார்த்துக்கிட்டு இருந்தாலும்கூட விவசாய ஈர்ப்பு எனக்குக் குறையவே இல்ல. குறிப்பா, இயற்கை விவசாயத்துல எனக்கு ஈர்ப்பு அதிகமாச்சு. கார்ப்பரேட் கம்பெனியில பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டு, நாலு வருஷத் துக்கு முன்னாடி, இயற்கை விவசாயத்துல இறங்கினேன். மனைவி குழந்தைங்களோடு சென்னையில வசிச்சுக்கிட்டு இருந்தாலும்கூட, மாசத்துல பெரும்பாலான நாள்கள் இந்த ஊர்லயே தங்கி இருந்து விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். என்கிட்ட மூணு மாடுகள் இருக்கு. 10 ஏக்கர்ல நெல், எள், உளுந்து சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். மூணு ஏக்கர்ல மீன் குளம் இருக்கு’’ என்று சொன்னவர், எள் சாகுபடி அனுபவம் குறித்த தகவல்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

மண்ணை வளப்படுத்தும் கிளிகளின் எச்சம்

மண்ணை வளப்படுத்த பறவைகளோட எச்சமும் ரொம்ப அவசியம். எள் சாகுபடி செய்றதுனால என்னோட நிலத்துக்குக் கிளிகளோட எச்சம் நிறைய கிடைக்குது. எள்ளை கிளிகள் ரொம்பவே விரும்பி சாப்பிடும். மத்த பயிர்களை எல்லாம்விட, எள்ளு செடிகள் நல்லா உறுதியா நிக்கிறதுனால, பறவைகள் உட்கார்ந்து சாப்பிட வசதியா இருக்கும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுறதை பத்தியெல்லாம் நான் பெருசா கவலைப்பட மாட்டேன். மத்த பயிர்கள் மாதிரி எள் சாகுபடிக்கு அதிக பராமரிப்புச் செலவு கிடையாது. கிடைச்ச வரைக்கும் லாபம்னு நினைப்பேன்.

கறுப்பு எள்ளுடன்
கறுப்பு எள்ளுடன்

ஒரு யதார்த்த நிலையைச் சொல்ல ணும்னா, அறுவடைக்குத் தயாரான எள்ளுச் செடிகள்ல கடைசி ரெண்டு, மூணு நாள்களுக்குத்தான் கிளிகள் வந்து உட்கார்ந்து பழங்களைச் சாப்பிடும். இதனால 10 - 20 சதவிகிதம்தான் மகசூல் இழப்பு ஏற்படும். எள்ளுச் செடிகள் அறுவடைக்குத் தயாரானதும், இலைகள் பழுக்க ஆரம்பிச்சு, பச்சை நிறத்துல பழுப்பு நிறத்துக்கு மாறும். தொலைவுல பறந்துகிட்டு இருக்குற கிளிகள்கூட, இந்த நிறத்தை பார்த்து அடையாளம் கண்டுப்புடிச்சு வந்துடும். நல்லா பழுத்த எள்ளு பழங்கள்ல இருந்து வரக்கூடிய வாசனையாலும் கிளிகள் ஈர்க்கப்படும். அதிகாலையிலயும் மாலை நேரத்துலயும்தான் அதிகமா கிளிகள் வரும். எள்ளு செடிகளோட அடிப்பகுதியில உள்ள காய்கள்தான் முதல்ல பழுக்கும். அப்ப செடிகளோட மேல் பகுதியில உள்ள காய்கள் பச்சையாதான் இருக்கும். ஆனா, அதைக் கிளிகள் சாப்பிடாது. அறுவடைக்குத் தயாரான நல்ல முத்தி பழுத்த நெத்துகள் தான் கிளிகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அந்த நெத்துகள் ரொம்பக் கடினத்தன்மையோட இருக்குறதுனால, கிளிகளால அதை அதிகமா சாப்பிட முடியாது.

எள்ளுச் செடிகளைப் பொறுத்த வரைக்கும் கிளிகளால, பெரிய அளவுல மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லைங் கறது என்னோட அனுபவம். ஒருவேளை கிளிகளால அதிக மகசூல் இழப்பு ஏற்படும்னு தோணுச்சுனா, சத்தம் எழுப்பி விரட்டிடலாம். ஆனா, கிளிகளோட வருகை ரொம்ப அவசியம். கிளிகளோட எச்சத்தால மண்ணு வளமாகுது. தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுதுங்கறதை மனசுல வெச்சிக்கிட்டு, கிளிகள விரட்டுறதை பத்தி முடிவெடுக்கறது நல்லது.

கறுப்பு நிற எள்ளில் சத்துகள் அதிகம்

“நான் சாகுபடி செய்றது கறுப்பு நிற எள். இதுல சத்துகள் அதிகம். ஆனா, விவசாயிங்க பெரும்பாலும் இதைச் சாகுபடி செய்ய விரும்ப மாட்டாங்க. காரணம், இந்த எள்ளை எண்ணெயா ஆட்டினா, எண்ணெய் பார்வையா இருக்காது. இதை மக்கள் விரும்ப மாட்டாங்க. விக்கிறது சிரமங்கறதுனால, பெரும்பாலும் சிவப்பு எள், வெள்ளை எள்தான் சாகுபடி செய்வாங்க. ஆனா, எனக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்குறதுனால, இதோட மகத்துவத்தை அவங்களுக்குப் புரிய வச்சிருக்கேன். விளைபொருள்களைப் பொறுத்தவரைக்கும், கறுப்பு நிறத்துல உள்ள எல்லாத்துலயுமே சத்துகள் அதிகம். மருத்துவக் குணங்கள் நிறைஞ்சிருக்கும்னு நம்மாழ்வார் சொல்வார். கறுப்பு எள்ளுல ஆட்டின எண்ணெய்ல வாசனையும் சுவையும் தனித்துவமா இருக்கும். இயற்கை முறையில விளைவிச்சு, மரச்செக்குல ஆட்டின, கறுப்பு நிற எள்ளோட எண்ணெய்ங்கறதுனால, என்னோட வாடிக்கையாளர்கள்கிட்ட இதுக்கு நல்ல விலை கிடைக்குது. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 380 ரூபாய்னு விற்பனை செய்றேன்’’ என்று சொன்னவர், மகசூல் மற்றும் விற்பனை குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அட்டவணை
அட்டவணை

‘‘10 ஏக்கர் எள் சாகுபடி மூலம் 1,000 கிலோ எள் மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 60 சதவிகிதத்தை எள்ளாகவே விற்பனை செய்றது மூலமா, ஒரு கிலோவுக்கு 130 ரூபாய் வீதம் 600 கிலோ எள்ளுக்கு 78,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 400 கிலோ எள்ளை, மரசெக்குல கொடுத்து, எண்ணெயா ஆட்டினா, 200 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். செக்குக்காரங்க, எள்ளுப் புண்ணாக்கை என்கிட்ட கொடுக்க மாட்டாங்க. ஆட்டுக்கூலி அது நிகராயிடும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 380 ரூபாய் விற்பனை செய்றது மூலமா, 200 லிட்டர் எண்ணெய்க்கு 76,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் பத்து ஏக்கர் எள் சாகுபடி மூலம் மொத்தம் 1,54,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல 40,000 செலவு போக, 1,14,000 ரூபாய் லாபமா கிடைக்குது. என்னைப் பொறுத்தவரைக்கும் இது நிறைவான லாபம். இதுக்கு எந்த ஒரு மெனக்கெடலும் கிடையாது. ஒரே ஒரு தடவை மீன் அமிலம் தெளிச்சேன். அவ்வளவுதான். 90 நாள்கள்ல ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குதுனா, ரொம்பவே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்’’ என மிகுந்த மனநிறைவுடன் பேசி முடித்தார்.

தொடர்புக்கு, செந்தில்.

செல்போன்: 99760 81111

இடுபொருள்
இடுபொருள்

இப்படித்தான் எள் சாகுபடி

ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்ய, செந்தில் சொல்லும் செயல்முறைகள்... கோடை மழை பெய்து ஈரமான மண்ணை, இரண்டு நாள்கள் காயவிட்டு லேசான ஈரப்பதத்தில் இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் விதை எள் தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணம் நெருங்கும்போது, 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். மீன் அமிலம்... பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சிவிரட்டியாகவும் பயன் கொடுக்கும். பூக்கள் உதிர்வது தடுக்கப்படும். 90 - 95 நாள்களில் எள் அறுவடைக்கு வரும்.

மூன்று நாள்கள்தான் மூட்டம் போடுவேன்

“எள்ளுச் செடிகளை அறுவடை செஞ்ச பிறகு, அதை ஒரே இடத்துல குவிச்சு வச்சு, 5 - 7 நாள்கள் மூட்டம்போடுறது மற்ற விவசாயிங்களோட வழக்கம். அதுமாதிரி செஞ்சா, நெத்துகள் தானாகவே வெடிச்சு, முழுமையா எள்ளு கொட்டிடும். அதனால எள்ளு பிரிச்சு எடுக்குற செலவு குறையும். ஆனா, நான் அந்த மாதிரி செய்றதில்லை. காரணம், அதிக நாள்கள் மூட்டம் போட்டா, எள்ளு செடிகள்ல ஆவியாதல் மூலம் அதிக ஈரம் ஏற்பட்டு இலைகள் லேசா அழுகிடும். இதனால எள்ளுல துர்நாற்றம் ஏற்படும். அந்த எள்ளை எண்ணெயா ஆட்டும்போது, அந்த எண்ணெய்லயும் லேசா வாடை அடிக்கும். அந்த மாதிரியான பிரச்னை ஏற்படாம தவிர்க்க, அறுவடை செஞ்ச எள்ளுச் செடிகளை மூணு நாள்கள்தான் மூட்டம் போடுவேன். அடுத்த ரெண்டு நாள்களுக்குத் தினமும் வெயில்ல காயப் போட்டு, எள்ளை பிரிச்சு எடுப்போம். இதுக்கு ஆள் கூலி அதிமாகும்.

எள் வயல்
எள் வயல்

எள் சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது

எள் சாகுபடிக்கு மழைப்பொழிவுதான் சிறப்பானது. தண்ணீர் பாய்ச்சினா, மண் கெட்டியாயிடும். அதுமாதிரி இருந்தா விளைச்சல் சிறப்பா இருக்காது. என்கிட்ட மழைத்தூவான் இருக்கு. கோடையில மழை பெய்யலைனா, மழைத்தூவான் மூலம் நிலத்தை ஈரப்படுத்தி, புழுதி உழவு ஓட்டி, எள்ளு விதைச்சிடுவேன். 15-20 நாள்களுக்கு ஒரு தடவை மழைத்தூவான் மூலம் தண்ணீர் கொடுப்பேன்’’ என்கிறார் செந்தில்.