Published:Updated:

புடலை.... 4 ஏக்கர் வருமானம் 33 சென்ட் நிலத்தில் கிடைத்தது!

புடலைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
புடலைச் சாகுபடி

மகசூல்

புடலை.... 4 ஏக்கர் வருமானம் 33 சென்ட் நிலத்தில் கிடைத்தது!

மகசூல்

Published:Updated:
புடலைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
புடலைச் சாகுபடி

டெல்டா விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு சாகுபடியில்தான் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சமீபகாலமாகத் தண்ணீர் தட்டுப்பாடு, வேலையாள்கள் பற்றாக்குறை, விற்பனையில் உள்ள இடர்ப்பாடுகள் போன்ற காரணங்களால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்தும்கூட, நிறைவான லாபம் கிடைப்பதில்லை. ஆனாலும் மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதில் தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. சில விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு மாறத் தொடங்கிவிட்டார்கள். சிலர் பந்தல் சாகுபடியில் ஈடுபட்டு வெற்றிகரமாக லாபம் பார்த்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யோகேஷ்வரன் 33 சென்ட் பரப்பில் இயற்கை முறையில் குட்டை ரகப் புடலங்காய் சாகுபடி செய்து, நிறைவான வருமானம் பார்த்து வருவது இப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் இருக்கிறது இவரது தோட்டம்.

புடலைத் தோட்டத்தில் யோகேஷ்வரன்
புடலைத் தோட்டத்தில் யோகேஷ்வரன்

ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். கண்களுக்கு இதமாகப் பச்சைப் பசேலெனக் காட்சியளித்த புடலை கொடி பந்தலுக்குள் காய் பறித்துக்கொண்டிருந்த யோகேஷ்வரன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.டெக் படிச்சிட்டு, சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்துல வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். கொரோனாவால், 2020 மார்ச் மாசம் கும்பகோணத்துக்கு வந்து, வீட்ல இருந்தபடியே மென்பொருள் நிறுவனத்துக்கு வேலை பார்த்துக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வேலை பார்த்துட்டு, அதுக்குப் பிறகு, தோட்டத்துக்கு வந்து, காய்களைப் பறிச்சி, தாராசுரம் மார்க்கெட்டுக்கு எடுத்துக்கிட்டு போவேன். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு வந்து ஏதாவது பராமரிப்பு வேலைகள் இருந்தால் செய்வேன்.

என் அப்பா ரொம்ப வருஷமா கரும்புச் சாகுபடி செஞ்சுகிட்டிருந்தார். சர்க்கரை ஆலையிலிருந்து சரிவரப் பணம் வராததால, 4 வருஷத்துக்கு முன்னாடி நெல் சாகுபடிக்கு மாறினார். வேலையாள்கள் கிடைக்காம ரொம்பச் சிரமப்பட்டாங்க. அறுவடை செஞ்ச நெல்லை, கொள்முதல் நிலையத்துல விற்பனை செய்ய, பல நாள்கள் காத்திருப்பார். வேற ஏதாவது மாற்றுப்பயிர் முயற்சி பண்ணி பாருங்கனு அப்பாகிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன். ஆனா அவர் கேட்கல. இந்தச் சூழல்லதான் கொரோனாவால் ஒரு நல்லது நடந்துச்சு. கொரோனாவால், நான் வீட்ல இருந்து வேலை பார்த்ததால், மற்ற நேரங்கள்ல சும்மாதான் இருந்தேன். நானே நிலத்துல இறங்கி, சின்ன பரப்புல ஏதாவது ஒரு மாற்றுப்பயிரை, இயற்கை விவசாயத்துல சாகுபடி செஞ்சிப் பார்க்கலாம்னு தோணுச்சு.

புடலை அறுவடையில்
புடலை அறுவடையில்

பசுமை விகடன் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் பார்த்தேன். பந்தல் சாகுபடிதான் எனக்குப் பல விதங்கள்லயும் வசதியா இருக்கும்னு முடிவெடுத்தேன். அணைக்கரையில் இருக்க எங்களோட உறவினர் ஒருத்தர் நீண்டகாலமாகப் பந்தல் சாகுபடியில புடலை, பாகல், பீர்க்கன் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கார். அவர் அணைக்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் பயணம் செஞ்சி, தாராசுரம் மார்க்கெட்டுக்குக் காய்களைக் கொண்டு வர்றார். என்னோட தோட்டத்துல இருந்து தாராசுரம் காய்கறி மார்க்கெட் அரைக்கிலோ மீட்டர் தூரம்தான். காய்கறிச் சாகுபடி செஞ்சா, ரொம்ப எளிதா விற்பனை செஞ்சிடலாம்னு தோணுச்சு. என்னோட உறவினர்கிட்டயும் ஆலோசனை கேட்டேன். ‘புடலை சாகுபடி பல விதங்கள்ல எளிமையா இருக்கும்’னு சொன்னார். என்னோட விருப்பத்தை என் அப்பாகிட்ட சொன்னேன். ‘நீங்க ஒரு பைசாகூடச் செலவு பண்ண வேண்டாம். கொஞ்சம் நிலத்தை மட்டும் என்னோட பொறுப்புல கொடுங்க’னு கேட்டேன்.

காட்டுக்கருவை மண்டி, பல வருஷங்களா, சும்மா கிடந்த 33 சென்ட் நிலத்தை என் பொறுப்புல கொடுத்தாங்க. நிலத்தைச் சுத்தப்படுத்தி, உழவு ஓட்டி, பந்தல் அமைச்சு, பாதிப் பரப்புல புடலையும், மீதி பரப்புல பாகலும் சாகுபடி செஞ்சேன். 5 மாடுகள் வளர்க்குறோம். இதனால் நிறைய எரு கொடுக்குறதுனால, மண்ணு நல்லா வளமாகி, கொடிகள் பசுமையா இருந்தது. ஒரு கட்டத்துல பாகல்ல, மஞ்சள் நிற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுச்சு. ஆனால், புடலையில எந்த ஒரு பிரச்னையுமே இல்லை’’ என்றவர் விவசாயியான பிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

புடலைத் தோட்டம்
புடலைத் தோட்டம்

‘‘மற்ற காய்கறிகளை ஒப்பிடும்போது, புடலங்காய் சாகுபடி ரொம்ப எளிமையானது. பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்கான வாய்ப்புகள் குறைவு. இதையெல்லாம்விட, நான் இதுல சாதகமாக நினைக்கக்கூடியது, நேர சிக்கனம்தான். ரொம்பச் சுலபமா காய்களைப் பறிச்சிடலாம். காய் பறிப்புக்கு வேலையாள்களை நம்பியிருக்க வேண்டிய தில்ல. கத்திரி, வெண்டி (வெண்டை) சாகுபடி செஞ்சா, குனிஞ்சு குனிஞ்சு, காய்களைத் தேடித் தேடிப் பறிச்சாகணும்.

பாகல் கொடியில காய்கள் பறிக்கச் சிரமப்பட்டோம். கொடிகளுக்கு உள்ளார மறைஞ்சிருக்குற காய்களைத் தேடி கண்டுப் பிடிச்சு பறிக்குறது ரொம்பச் சிரமமாக இருந்துச்சு. அதுமட்டுமல்லாம, காம்புகளோட பறிச்சுக் கொண்டு போனால்தான் வியாபாரிகள் பாகற்காயை விரும்பி வாங்குவாங்க. காம்புகளோடு காய்களைப் பறிக்குறது சிரமமா இருந்துச்சு. நேரமும் நிறைய விரயமாசக்சு.

பீர்க்கன் சாகுபடி செஞ்சோம்னா, கத்தரிக்கோலால் நறுக்கிதான் காய்களைப் பறிச்சாகணும். வேலையாள்கள் தேவைப் படுவாங்க. ஆனால், புடலங்காய் அப்படியல்ல. போகுற போகுல நடந்துகிட்டே காய்களைப் பறிச்சிக்கிட்டு போயிக்கிட்டே இருக்கலாம். இதனால்தான் இந்த முறை 33 சென்ட்லயும் புடலையையே பயிர் பண்ணிட்டேன். மாலை நேரத்துல நானும் என் தங்கச்சியும் சேர்ந்து ஒரு மணிநேரத்துல 100-150 கிலோ காய்கள் பறிச்சிடுவோம். வேலையாள்களே தேவைப்படல. இந்த 33 சென்ட் மட்டுமல்லாம, புதுசா 66 சென்ட்ல இப்ப பந்தல் அமைச்சி புடலை சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கோம்’’ என்று புடலங்காயின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போன யோகேஷ்வரன் விற்பனைபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

இயற்கை உரம்
இயற்கை உரம்

“காயை அறுவடை செய்ததும் தாராசுரம் மார்க்கெட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி, ‘இது ரசாயன உரம் போடாம விளையுறது. மற்ற விவசாயிகளுக்குக் கொடுக்குற விலையை விட எனக்கு நீங்க கூடுதல் விலை கொடுக் கணும்’னு வியாபாரிகள்கிட்ட கேட்டேன். ‘இது ஆர்கானிக்ல விளைஞ்சதா, கெமிக்கல்ல விளைஞ்சதானு எல்லாம் மக்கள் பார்க்க மாட்டாங்க. காய், நல்லா தெளிவா, பார்வையா இருக்கானுதான் பார்ப்பாங்க’னு வியாபாரிகள் சொன்னாங்க. அவங்க சொன்னதையும் மீறி நான் கொண்டுபோன புடலங்காயை அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்தேன். மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு. எங்களோட காய்கள் நல்லா நிறமா, பார்வையா, பளபளப்பாக இருக்குறதுனாலயும், நாலஞ்சு நாள்கள் ஆனாலும், காய் கெட்டுப்போகாம இருக்குறதுனாலயும், எங்களோட காய்களுக்கு வியாபாரிகள் தனி மரியாதை கொடுக் குறாங்க. குறிப்பாக, நான் கொண்டு போகக்கூடிய காய்கள்ல கொஞ்சம்கூடக் கீறல், நசுங்கல் இருக்காது. காரணம், மூட்டையில காய்களை அதிகமாகத் திணிக்க மாட்டேன். முறையாக அடுக்கி, அதிக கனம் இல்லாமல் அடுக்கிக் காய்களைக் கொண்டு போவேன். புடலை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்குறதுதான் வழக்கம். ஆனால் நாங்க தினம்தோறும் பறிச்சு மார்க்கெட் கொண்டு போறதுனால, எங்களோட காய்கள் நல்லா பிஞ்சாகவும், ஒரே சைஸ்லயும் இருக்கும். இந்தக் காரணங் களால், மற்ற விவசாயிகளுக்குக் கொடுக்கக் கூடிய விலையைவிட என்னோட காய் களுக்குக் கிலோவுக்கு 2 ரூபாய் கூடுதலாக விலை கொடுக்குறாங்க’’ என்றவர் வருமான கணக்கை விளக்கினார்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

‘‘புடலை நாற்று நடவு செஞ்ச 65-ம் நாள்ல இருந்து காய்ப்புக்கு வந்துச்சு. காய்ப்புக்கு வரத் தொடங்கியதுல இருந்து இதுவரைக்கும், 63 நாள்கள் காய் பறிச்சிருக் கோம். தினமும் சராசரியா, 120 கிலோ வீதம் 7,560 கிலோ மகசூல் எடுத்திருக்கோம். இன்னும் 15-20 நாள்களுக்குக் காய்கள் கிடைக்கும். குறைந்தபட்சம் 500 கிலோவுக்கு மேல் மகசூல் கிடைக்கும். 33 சென்ட் புடலங்காய் சாகுபடி மூலம் எனக்கு மொத்தம் 8 டன்னுக்கு மேல மகசூல் கிடைக்கும். சராசரியாக கிலோவுக்கு 13 ரூபாய் வீதம் 1,04,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மண் கொத்துறது, இயற்கை இடுபொருள்கள், காய் பறிப்புக்கு எங்களோட உழைப்புக்கூலி, போக்குவரத்துச் செலவு இதையெல்லாம் கழிச்சோம்னா 70,500 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்குது. 4 ஏக்கர்ல நெல் சாகுபடியில் கிடைக்கக்கூடிய லாபத்தை 33 சென்ட்லயே எடுத்திட்டியேனு எங்க அப்பா ரொம்பவே சந்தோஷப்படுறார்’’ சாதித்த பெருமிதம் யோகேஷ்வரனின் முகத்தில் தெரிந்தது.

தொடர்புக்கு,
யோகேஷ்வரன்,
செல்போன்: 99441 12924.

மூங்கில் கால்களுடன் கூடிய தோட்டம்
மூங்கில் கால்களுடன் கூடிய தோட்டம்

மூங்கில் கால்கள்

சாகுபடி நிலத்தில் மூன்று சால் உழவு ஓட்டி 9 அடி உயரம் கொண்ட மூங்கில் கொம்புகளை ஓர் அடி ஆழத்தில் ஊன்ற வேண்டும். இதனால் 8 அடி உயரத்தில் பந்தல் அமையும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மூங்கில் கால்களின் அடிபாகம் மக்கிப் போனால், அந்த ஒரு அடியை நறுக்கிவிட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதைவிட உயரம் குறைவான மூங்கில் கால்களைப் பயன்படுத்தினால், அது மக்கிப் போனால், மீண்டும் பயன்படுத்த முடியாமல் போய்விடும். தலா 8 அடி இடைவெளியில் மூங்கில் கால்களை ஊன்றி, மேல் முனையில் நைலான் கயிற்றைக் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும். மூங்கில் கால்கள் உள்ள வரிசையில் முக்கால் அடி அகலம், அரையடி உயரம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பார்களில் மட்டும் அடியுரமாக எரு போட வேண்டும். இதற்கு மூன்று டன் எரு தேவைப்படும்.

புடலை
புடலை

மூங்கில் காலில் இருந்து சற்றுத் தள்ளி நான்கு பக்கமும் தலா ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 10-ம் நாள் கொடி வளரத் தொடங்கும். இதில் உள்ள ஏதாவது ஒரு இலையின் காம்பில், மெல்லிய ஒத்தைப்பிரி சணலைக் கட்டி, பந்தலின் மேலே கட்ட வேண்டும். சிலர், தாய் தண்டில் சணலைக் கட்டி விடுவார்கள். இது தவறான முறையாகும். தண்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். அறுந்தும் போய்விடும். எப்போதும் மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாற்று ஊன்றிய 15-ம் நாள் 5 லிட்டர் ஆறிய சோற்றுக்கஞ்சியில் 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா கலந்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, கொடிகளின் வேர்ப்பகுதிகளில் ஊற்ற வேண்டும். 40-ம் நாள் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடிகளில் மீது தெளிக்க வேண்டும். 50, 60 மற்றும் 70-ம் நாள்களில் இதே அளவு பஞ்சகவ்யா கொடுக்க வேண்டும்.

‘‘எங்களோட காய்கள் நல்லா நிறமா, பார்வையா, பளபளப்பாக இருக்குறதுனாலயும், நாலஞ்சி நாள்கள் ஆனாலும், காய் கெட்டுப்போகாம இருக்குறதுனாலயும், எங்களோட காய்களுக்கு வியாபாரிகள் தனி மரியாதை கொடுக்குறாங்க.’’காய்ப்புக்கு வந்த பிறகு, 15 நாள்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு மூங்கில் கால்களைச் சுற்றிலும், தலா 3 கிலோ எரு போட்டு, மண்ணைக் கொத்தி கிளறிவிட வேண்டும். புடலைக்கொடியின் வேர்கள் அறுபட்டு விடாமல் மிகுந்த எச்சரிக்கையோடு இதைச் செய்ய வேண்டும். மூன்று முறை எரு கொடுத்தால் போதுமானது. பூச்சித்தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், 60 லிட்டர் தண்ணீரில் ஒன்றரை லிட்டர் இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப களையெடுக்க வேண்டும்.

தண்ணீர், நேரம், விதையை மிச்சப்படுத்தலாம்!

“சாகுபடி நிலத்துல விதையை நேரடியாக ஊன்றாமல், குழித்தட்டில் விதைகளைப் போட்டு, நாற்று உற்பத்தி பண்ணி 15-17 நாள்கள்ல நடவு செய்வோம். இதுக்கு தினம்தோறும் தண்ணீர் கொடுக்க 5 நிமிஷம்தான் ஆகும். தண்ணீரும் சிக்கனமாகுது. என்னோட பணிச்சூழலுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கு. விதைகள் விரயமாகுறதும் தவிர்க்கப்படுது. விதைப்பு செஞ்ச 15-17 நாள்கள்ல மூன்று இலைகளுடன்கூடிய நாற்றுகளாக நடவு செய்றதுனால, கொஞ்சம்கூடச் சேதாரம் இல்லாமல் எல்லாமே செழிப்பாக வளர்ந்து வந்து காய்ப்பு கொடுக்குது” என்கிறார் யோகேஷ்வரன்.

இயற்கைப் புடலை சாகுபடி!

33 சென்ட் நிலத்தில் குட்டைப்புடலை சாகுபடி செய்யும் முறை குறித்து யோகேஷ்வரன் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கிறது.

குழித்தட்டில் நாற்று உற்பத்தி
குழித்தட்டில் நாற்று உற்பத்தி

குழித்தட்டில் நாற்று உற்பத்தி

தலா 50 குழிகள் கொண்ட 20 பிளாஸ்டிக் தட்டுகள் இதற்குத் தேவைப்படும். 25 கிலோ வயல் மண், 25 கிலோ மண்புழு உரம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அனைத்து குழிகளிலும் போட வேண்டும். அதன் மீது சிறிதளவு தென்னை நார் பஞ்சு போட வேண்டும். 500 கிராம் விதையைச் சாணிப்பாலில் ஒருநாள் ஊற வைத்து, ஒவ்வொரு குழியிலும் தலா ஒரு விதை வீதம் போட வேண்டும். பிறகு, லேசாக மண்ணைத் தூவி, தண்ணீர் தெளித்து, வைக்கோல் போட்டு மூட வேண்டும். 3-ம் நாள் வைக்கோலை நீக்கி விட வேண்டும். 3-5 நாள்களில் விதை முளைக்கத் தொடங்கும். குழித்தட்டுகள் நிழலில்தான் இருக்க வேண்டும். அதேசமயம் தென்னை மர நிழலில் வைக்கக் கூடாது. மட்டைகள் அல்லது தேங்காய் விழுந்து நாற்றுகள் சேதமடையும். 10 நாள்களுக்குப் பிறகு ஓரளவுக்கு லேசாக வெயில் படும் இடத்தில் குழித்தட்டுகளை வைக்க வேண்டும். 15-17 நாள்களில் நாற்றுகள் வளர்ந்து மூன்று இலைகளுடன் நடவுக்குத் தயராகிவிடும்.