Published:Updated:

ஒரு கிலோ ரூ.300... முள் சீத்தா கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்!

முள் சீத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
முள் சீத்தா

நிகழ்ச்சி

ந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் (IIHR) மற்றும் பசுமை விகடன் இணைந்து ‘புற்றுநோயை விரட்டும் முள்சீத்தா, சாகுபடி முறைகளும் மருத்துவப் பயன்பாடுகளும்’ என்ற தலைப்பில் டிசம்பர் 18-ம் தேதி ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கோவை, சென்னை எனப் பல மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர்.

முள் சீத்தா மரங்கள்
முள் சீத்தா மரங்கள்

நேரலையில் பேசிய இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி தா.சக்திவேல், “முள் சீத்தா (Soursop) கரீபியன் தீவு, அமேசான் காடுகளிலிருந்து பரவியது. பிரெஞ்சுக் காரர்கள் இதை உலகம் முழுவதும் பரப்பினர். அந்த வகையில் பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இருக்கிறது. ஈரப்பதமான வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரும் திறன் கொண்டது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் நன்றாக வளர வாய்ப்பிருக்கிறது. ஆராய்ச்சியின்படி கன்னியாகுமரி, கோழிக்கோடு, மங்களூரு, கோவா, கொங்கன் பகுதிகளில் நன்றாகவே வளரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 21 - 30 டிகிரி செல்சியஸ் மிகவும் ஏற்றது. மற்ற பகுதி களில் வீட்டுத்தோட்டத்திலோ, தோட்டத்தின் ஒதுக்குப் புறத்திலோ வளர்த்து பார்த்து, நன்றாக வளரும் பட்சத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யலாம்.

முள் சீத்தா
முள் சீத்தா

இனிப்பு, புளிப்பு கலந்த கசப்பு என்று இரண்டு வகைகளில் முள்சீத்தா ரகங்கள் இருக்கின்றன. பருவ மழைக்காலங்களில் நடவு செய்யலாம். நடவு செய்த 2 ஆண்டுகளில் அறுவடைக்கு வரும். ஒரு மரத்திலிருந்து 12-லிருந்து 24 பழங்கள் கிடைக்கும். 5 ஆண்டுகள் ஆன ஒரு மரத்திலிருந்து சராசரியாக 42 கிலோ பழங்கள் கிடைக்கும். இந்தப் பழத்திலுள்ள அசிட்டோஜெனின் என்ற பொருள்தான் புற்றுநோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது என்று நம்பப்படுகிறது. இந்த அசிட்டோ ஜெனின் சீத்தாப்பழத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல உடல்பருமன், சர்க்கரை நோய்க்கும் எதிராகச் செயல்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பாற்றல், மஞ்சளுக்கு நிரூபித்தது போன்று முள்சீத்தாவுக்கு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக் கழகம், புற்றுநோய் சிகிச்சை மையம், தைவானில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகம் ஆகியவை இதுசம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன” என்றவர், அதை எப்படிச் சாப்பிடலாம் என்பது பற்றியும் பேசினார்.

அட்டவணை
அட்டவணை

“முள்சீத்தாபழத்தில் உள்ள சதைப் பகுதியைச் சாப்பிடலாம். சதைப்பகுதி இனிப்பாகவும், சில பழங்களில் இனிப்பு கலந்த கசப்பு சுவை உடையதாகவும் இருக்கும். இந்த மரத்தின் இலைகளைப் பறித்துத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீராகவும் அருந்தலாம். ஹைதரா பாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதை நிரூபித்துள்ளது. பெங்களூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ 300 - 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. இதற்கான வணிக வாய்ப்பு இப்போதுதான் வளர்ந்து வருகிறது. முதலில் இது நன்றாக வளர்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு பிறகு, வணிக ரீதியான சாகுபடியில் இறங்குவது குறித்து ஆலோசிக்கலாம்.

முனைவர் சக்திவேல்
முனைவர் சக்திவேல்

சீத்தாப்பழத்தை வணிக ரீதியாகச் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் அர்கா சகான், பாலன் நகர் ஆகிய ரகங்களைச் சாகுபடி செய்யலாம். பெங்களூருவில் உள்ள எங்கள் ஆராய்ச்சி மையத்தில் பண்ணையில் முள் சீத்தா மரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஆராய்ந்த வரையில் முள் சீத்தா மரங்களைப் பெரிய அளவில் நோய்கள் தாக்குவதில்லை. இதை வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதன் பழத்தை வாங்கிட்டு வந்து சாப்பிட்டு அதிலிருந்து கிடைக்கும் விதைகளை, தொட்டியில் போட்டு வளர்த்துக் கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யலாம். ஏற்கெனவே இருக்கும் மரங்களிலிருந்து ஒட்டுக்கட்டியும் கன்றுகளை உற்பத்தி செய்யலாம். இங்கே எங்கள் மையத் திலும் முன்பதிவு முறையில் கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம். மரத்தை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் தேவைப்பட்டால் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று பேசினார்.

தொடர்புக்கு, முனைவர் சக்திவேல்,

செல்போன்: 94488 13662