Published:Updated:

ஒரு ஏக்கர் 15,000 கிலோ பழங்கள்... ஆண்டுக்கு ₹12,24,000 லாபம் இயற்கையில் தித்திக்கும் ஸ்ட்ராபெர்ரி!

ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்

மகசூல்

ஒரு ஏக்கர் 15,000 கிலோ பழங்கள்... ஆண்டுக்கு ₹12,24,000 லாபம் இயற்கையில் தித்திக்கும் ஸ்ட்ராபெர்ரி!

மகசூல்

Published:Updated:
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்

குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் ஸ்ட்ராபெர்ரிக்கு, ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு உண்டு. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் ஸ்ட்ராபெர்ரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நீலகிரி, குன்னூர், கோத்தகிரி வட்டார விவசாயிகள் பலரும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை மேற்கொண்டாலும், ஒரு சில விவசாயிகள் மட்டுமே இயற்கை வழி வேளாண்மையில் ஸ்ட்ராபெர்ரியைச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோத்தகிரியை அடுத்த கோடநாடு அருகில் உள்ள ஈளாடா கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்.

அவரைச் சந்திக்க ஒரு காலை வேளையில் ஈளாடா கிராமத்துக்குச் சென்றோம். திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப்பசேலெனக் காட்சிதரும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது அவருடைய சிவகாமி எஸ்டேட். புன்னகையுடன் நம்மை வரவேற்றார் சிவகுமார். ஸ்ட்ராபெர்ரி மற்றும் காளான் விற்பனைக்கு அனுப்பும் பணி, முட்டைக்கோஸ் அறுவடை என மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்தப் பணிகளைக் கவனித்துவிட்டு வந்தவர், தோட்டத்தைச் சுற்றிக் காட்டியபடியே தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்


“என் பூர்வீகம் திருப்பூர் மாவட்டம். பல வருஷமா ஜவுளித்தொழில் செய்றோம். 2003-ம் வருஷம் இந்தத் தேயிலை எஸ்டேட்டை வாங்கினோம். அதுக்கு முன்ன, தேயிலைச் செடிகளுக்கு ரசாயன உரம் கொடுத்ததால, இந்த மண்ணோட தன்மை மோசமாக இருந்துச்சு. அதனால, தேயிலை விளைச்சலும் ரொம்ப குறைச்சலா இருந்துச்சு. பிறகு, காய்கறிகள் சாகுபடியில கவனம் செலுத்தினேன். ஆனா, தவிர்க்க முடியாத சூழல்ல 2016-ம் வருஷம் வரைக்கும் ரசாயன விவசாயம்தான் செய்ய முடிஞ்சது.

மக்களுக்கு நஞ்சில்லாத உணவுப் பொருளைக் கொடுக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, முறையா பயிற்சி எடுத்து, படிப்படியாக இயற்கை விவசாய முறைக்குத் திரும்பிகிட்டு இருக்கேன். இப்போ 32 ஏக்கர்ல காய்கறிப் பயிர்களை இயற்கை முறையில சாகுபடி செய்றேன். இதுல, 8 ஏக்கர்ல செளசெள மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்றோம். 24 ஏக்கர்ல முட்டைக் கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு, புரொக்கோலி மாதிரியான காய்கறிப் பயிர்களைச் சுழற்சி முறையில சாகுபடி செய்றோம்” என்றவர், ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்ட பசுமைக்குடிலுக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

செழிப்புடன் இருந்த ஆயிரக்கணக்கான செடிகளும், குடிலுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜா இசையும் புத்துணர்வூட்டி வரவேற்றன. பணியாளர்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்துகொண்டிருந்தனர். அந்தப் பணிகள் குறித்து நமக்கு விளக்கிய சிவகுமார், ஸ்ட்ராபெர்ரி சாகுபடி பற்றிப் பேசினார்.

“இந்த நிலத்துல கொய்மலர் சாகுபடிக்குத் திட்டமிட்டிருந்தோம். ஆனா, வெளிநாடுகள்ல கொரோனா முதல் அலை வந்த நேரத்துல பூக்கள் விலை குறைஞ்சுப் போச்சு. அதனால, கொய்மலருக்குப் பதிலா ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை ஆரம்பிச்சோம். புனே நகர்ல இருக்க ஒரு தனியார் நர்சரியில நபீலா, வின்டர்டான் ரக நாற்றுகளை வாங்கிட்டு வந்தேன்.

ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்

2019-ம் வருஷக் கடைசியில, ரெண்டேகால் ஏக்கர்ல முதன்முறையா ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை ஆரம்பிச்சேன். அப்ப 40 சத விகிதம் ரசாயன உரங்களைப் பயன் படுத்தினோம். சரியான வளர்ச்சி இல்லாத தால, அடுத்த ஒருசில மாசத்துலயே எல்லாச் செடிகளையும் அப்புறப்படுத்திட்டோம். மறுபடியும் உழவு ஓட்டிப் புது நாற்றுகளை நடவு செஞ்சோம். ரசாயன உரப் பயன் பாட்டை 20 சதவிகிதமாகக் குறைச்சோம். ஓரளவுக்குதான் விளைச்சல் கிடைச்சது.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனையோடு முழுமையா இயற்கை முறையில ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்ய முடிவெடுத்தோம். போன வருஷம், மறுபடியும் எல்லாச் செடிகளையும் எடுத்துட்டு, உழவு ஓட்டினோம். மண்புழு உரம், தொழுவுரத்தை அடியுரமாகக் கொடுத்து வரப்பைத் தயார் பண்ணி, ‘மல்ச்சிங் ஷீட்’ அமைச்சோம். இந்தப் பருவநிலைக்கு, நபீலா ரகம் நல்லா வளருது. திரட்சியாகவும், நல்ல இனிப்புச் சுவையுயோடும் பழங்கள் கிடைக்குது. அதனால, நபீலா ரக நாற்றுகளை மட்டுமே வாங்கிட்டு வந்து ரெண்டேகால் ஏக்கர்ல நடவு பண்ணினோம். ஒரு நாற்று 13 ரூபாய். ஒரு ஏக்கருக்கு 200 வரப்புகள். ஒரு வரப்புக்கு 90 - 100 நாற்றுகளை நடவு செஞ்சோம். ஒரு ஏக்கருக்குச் சராசரியா 18,000 நாற்றுகள் தேவைப்பட்டுச்சு. விளைச்சல் நல்லா இருந்ததால, முதல் பருவத்துல ஒவ்வொரு செடியிலும் சராசரியா 750 கிராம் பழங்கள் கிடைச்சது. அந்த அறுவடை போன அக்டோபர்ல முடிஞ்சதும், செடியோட கீழ் பகுதி இலைகளை விட்டுட்டு, மத்த இலைகளைக் கவாத்து பண்ணிவிட்டோம். இதனால செடிகள்ல செழிப்பான வளர்ச்சி இருந்துச்சு. இப்ப ரெண்டாவது போகத்திலிருக்குற இந்தச் செடிகள்ல சில மாசமா அறுவடை நடந்துகிட்டு இருக்குது. முதல் தடவை பயிரிட்ட செடிகள்ல 3 பருவம் வரைக்கும் பலன் கிடைக்கும். பிறகு, எல்லாச் செடிகளையும் நீக்கிட்டு, உழவு ஓட்டி, அடுத்த பயிரைச் சாகுபடி செய்யலாம்” என்றவர், சில பழங்களைப் பறித்து நம்மிடம் கொடுத்தார். அவற்றின் சுவை நன்றாக இருந்தது.

மாடுகள்
மாடுகள்

“பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வரப்பு களுக்கிடையே களைகளை வளரவிடாம கவனமா இருக்கோம். கோடைக்காலத்தில தினமும் ஒரு தடவை, மழைக்காலத்தில ஒருநாள்விட்டு ஒருநாள் சொட்டுநீர்ப் பாசனம் கொடுக்குறோம். ‘பாசிட்டிவ் வைபிரேஷ’னுக்காகக் குடிலுக்குள்ள இசையை ஒலிக்கவிடுறோம். போன வருஷத்துல இருந்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்துறதில்ல. குடிலுக் குள்ள அங்கங்க செண்டுமல்லியை நடவு செஞ்சிருக்கோம். இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க, நாட்டு மாடுகளை வளர்க்கிறோம்” என்று உற்சாகமாகக் கூறியவர், வருமான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

“ஒரு ஏக்கருக்கு 70 கிலோ வீதம், ரெண்டேகால் ஏக்கர்ல இருந்து தினமும் 170 கிலோ பழங்கள் கிடைக்குது. இயற்கை முறையில விளைய வெச்சாலும் பழங்களுக்குக் கூடுதல் விலையெல்லாம் கிடைக்கிறதில்ல. கிலோ 200 ரூபாய்னு பழக்கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்றோம். கோடைக்காலத்தில மட்டும் கூடுதல் விலை கிடைக்கும்.

காளான் வளர்ப்பு
காளான் வளர்ப்பு

இந்தத் தடவை ஒரு செடிக்குச் சராசரியா 850 கிராம் பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அதன்படி ஒரு ஏக்கர்ல இருக்க 18,000 செடிகள்ல இருந்து சேதாரம் போகச் சராசரியா 15,300 கிலோ பழங்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்றது மூலமா 30,60,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த வருமானத்தில, நாற்று, வேலையாட்கள் சம்பளம், பராமரிப்பு, இடுபொருள்கள், மின்சாரம், போக்கு வரத்து உள்ளிட்ட பல தேவைகளுக்கும் சேர்த்து 60 சதவிகிதம் செலவாகிடும். அந்த வகையில் 18,36,000 ரூபாயைக் கழிச்சா, ஒரு ஏக்கருக்கு 12,24,000 ரூபாய் லாபமாக் கிடைக்கும். மொத்தமுள்ள ரெண்டேகால் ஏக்கருக்குக் கணக்குப் போட்டா 27,54,000 ரூபாய் லாபமா கிடைக்கும். இதில், பசுமைக்குடில் அமைக்க ஆன செலவைச் சேர்க்கல. இந்த ரெண்டேகால் ஏக்கர் தவிர, போன வருஷம் கூடுதலா ஒண்ணே முக்கால் ஏக்கர்ல ஸ்ட்ராபெர்ரியைப் பயிரிட் டோம். அதுல முதல் அறுவடை முடிஞ்சு, இலைகளைக் கவாத்து பண்ணி விட்டிருக்கோம். அடுத்து ரெண்டாம் பருவத்துக்கு அது தயாராகிடும்.

இயற்கை வேளாண்மையில விளையுற ஸ்ட்ராபெர்ரி பழங்கள், அறுவடைக்குப் பிறகு, ஒரு வாரம் வரைக்கும் பளபளப்புத் தன்மையோட இருக்குது” என்றவர் மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சிவகுமார்,

செல்போன்: 98657 66666

ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவகுமார்

இப்படித்தான் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி!

ஸ்ட்ராபெர்ரி சாகுபடி பற்றி சிவகுமார் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே பாடமாக...

நிலத்தை உழவு ஓட்டி மண்புழு உரம், தொழுவுரத்தை அடியுரமாகக் கொடுத்து வரப்பைத் தயார் செய்து ‘மல்ச்சிங் ஷீட்’ அமைத்துக்கொள்ள வேண்டும். 30 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததிலிருந்து அடுத்த 30-ம் நாள் பூ பிடிக்கும். செடியின் வளர்ச்சிக்காக, முதல் தடவை பூக்கும் பூக்களை மட்டும் நீக்கி விட வேண்டும். செடியை நடவு செய்த 60-ம் நாளிலிருந்து பழங்களைப் பறிக்கலாம். தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பழங்களை அறுவடை செய்யலாம்.

வேர்களில் பூச்சித்தாக்குதலைத் தவிர்க்க, முருங்கையிலைச் சாற்றில் ஸ்ட்ராபெர்ரி நாற்றுகளின் வேர்களை முக்கி எடுத்து, ஒரு குழிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். ஸ்ட்ராபெர்ரி இலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பு சிலந்திப் பூச்சிகளின் தொந்தரவைத் தடுக்க, வேப்ப எண்ணெய் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதமும், அக்னி அஸ்திரத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதமும் கலந்து, சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி

இலைகள் மற்றும் பூக்களைத் துளைக்கும் இலைப்பேன் பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கற்பூரக் கரைசலையும், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி அக்னி அஸ்திரத்தையும் கலந்து 10 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்த வேண்டும். தவிர, விளக்குப்பொறி வைத்தும் இலைப்பேன்களைக் கவர்ந்து அழிக்கலாம். வேர் முடிச்சு நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க, பீஜார்மிதக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மி.லி வீதம் கலந்து வேர் வழியாகக் கொடுக்கலாம். சாறு உறிஞ்சும் செடிப்பேன் பாதிப்பைத் தடுக்க மூலிகைப் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதமும், கற்பூரக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதமும் கலந்து 10 நாள்களுக்கு ஒருமுறை இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

பூ பிடிக்கும்போது, அதன் தரத்தை அதிகரிக்கவும், பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், தேமோர் கரைசல் மற்றும் தயிர் கரைசலை ஒருநாள் விட்டு ஒருநாள் செடிகள்மீது தெளிக்க வேண்டும். மண்பானையில் 2 லிட்டர் புளிக்காத தயிருடன், 5 அங்குலம் காப்பர் கம்பியைச் சேர்த்து, காற்று ஊடுருவாத வகையில் ஒரு வாரம் வரை வைத்திருந்தால் தயிர் நொதித்துவிடும். பிறகு, அந்தக் கலவையை 20 லிட்டர் தண்ணீருக்கு 20 மி.லி வீதம் கலந்து, தயிர் கரைசலாகப் பயன்படுத்தலாம். தவிர, வளர்ச்சியூக்கிகளாகப் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், இ.எம் கரைசல் ஆகியவற்றையும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

ஆடுகள்
ஆடுகள்

சீக்கிரமே
ஒருங்கிணைந்த பண்ணையம்

“காங்கேயம் இனத்தில 20 நாட்டு மாடுகள், வெள்ளாடு இனத்துல 20 உருப்படிகள் வெச்சிருக்கோம். 38 முயல்களை வளர்க்கிறோம். முயல் களோட கழிவுகளைச் சேகரிச்சு, காய வெச்சு, பயிர்களுக்கு அடியுரமாகப் பயன் படுத்துறோம். குறைவான அளவுல நாட்டுக்கோழிகளையும் வாத்துகளையும் வளர்க்கிறோம். மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகளும் நடக்குது. சீக்கிரமே ஒருங்கிணைந்த பண்ணையமா மாத்திடுவோம்” என்கிறார் சிவகுமார்.

முயல்கள்
முயல்கள்

நாற்று, மல்ச்சிங் ஷீட், குடிலுக்கு மானியம்!

கோத்தகிரி துணைத் தோட்டக்கலை அலுவலர் சந்திரனிடம், ஸ்ட்ராபெர்ரி சாகுபடி குறித்த கூடுதல் விவரங்களைக் கேட்டோம். “30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக அளவில் நடைபெற்றது. பிறகு, நாற்றுகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட சில காரணங்களால் இங்குள்ள விவசாயிகள் மாற்றுப்பயிர்களைத் தேர்வு செய்தனர். இப்போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் மீண்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்வீட் சார்லி, ஆஃப்ரா, நபீலா, வின்டர்டான் ஆகிய ரகங்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால், ஒரு ஹெக்டருக்கான நாற்றுகள் வாங்க 1.12 லட்சம் ரூபாயும், மல்ச்சிங் ஷீட் அமைக்க 16,000 ரூபாயும் மானியமாகக் கொடுக்கிறோம்.

சந்திரன்
சந்திரன்

ஸ்ட்ராபெர்ரி சாகுபடிக்கு 20 – 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்றது. இந்தக் காலநிலை சாத்தியப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஸ்ட்ராபெர்ரி பயிரைச் சாகுபடி செய்யலாம். தரமான நாற்றுகளை வாங்கி, முறையாகப் பராமரித்தால் ஒவ்வொரு செடியிலும் ஒரு கிலோ வரை பழங்கள் கிடைக்கும். திறந்தவெளியில் சாகுபடி செய்யும்போது குளிர்காலத்தில் நோய்த்தாக்குதல் ஏற்படவும், பருவநிலை மாறும்போது பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. பசுமைக்குடில் அமைப்பதன் மூலம் இந்தச் சிக்கல்களைத் தவிர்க்கலாம். பசுமைக்குடில் அமைக்க ஒரு ஏக்கருக்கு 36 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் 16.80 லட்சம் ரூபாய் மானியமாகக் கொடுக்கிறோம். ஒருமுறை அமைத்த குடிலை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். சரியான கவனிப்பு கொடுத்துப் பராமரித்தால் ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் நல்ல லாபம் பார்க்கலாம். கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளிலும் ஸ்ட்ராபெர்ரியை சாகுபடி செய்யலாம்” என்றார்.

காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி

காய்கறிகள், காளான், தேயிலை..!

“24 ஏக்கர்ல வருஷத்துக்கு மூன்று போகம் காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்றோம். ஒவ்வொருமுறையும் அடியுரமாகத் தொழுவுரம் கொடுப்போம். பிறகு, பயிர்களோட வளர்ச்சிக்கு ஏற்ப, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மிளகாய்க்கரைசல், சூடோமோனஸ், கன ஜீவாமிர்தம் பயன்படுத்துறோம். 16 ஏக்கர்ல முட்டைக்கோஸ் அறுவடையில் இருக்குது. காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தையில நேரடியாக விற்பனை செய்றோம்.

சில வருஷமா மொட்டுக் காளான் வளர்க்கிறோம். வைக்கோல் சீக்கிரம் நொதிக் குறதுக்காகக் கொஞ்சம் ரசாயனம் பயன் படுத்துறோம். அதுவும் இல்லாம முழுமையா இயற்கை முறையிலேயே காளான் சாகுபடி செய்ய முயற்சி எடுத்துக்கிட்டிருக்கோம்.

தேயிலை சாகுபடி
தேயிலை சாகுபடி

இப்ப எஸ்டேட்ல இருக்கிற தேயிலைச் செடிகளோட வளர்ச்சிக்கு மூலிகைப் பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யாவைச் சுழற்சி முறையில் இலைவழியா தெளிக்குறோம். தேயிலையில் 40 சதவிகிதம் ரசாயன உரங்களைப் பயன்படுத்துறோம். இதையும் முழுமையா தவிர்க்க முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கோம்’’ என்கிறார் சிவகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism