ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

2.5 ஏக்கர்... 1,29,000 ரூபாய்! கருங்குறுவை!

கருங்குறுவை நெல்
பிரீமியம் ஸ்டோரி
News
கருங்குறுவை நெல்

மகசூல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன விவசாயிகள் பலரும் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருவதோடு, பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மறுபுறம் படித்த இளம் தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தில் கால் பதித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான், புதுக்கோட்டை யைச் சேர்ந்த ராஜ்குமார். ‘ஏரோ நாட்டிக்கல் இன்ஜினீயரிங்’ படித்து முடித்த கையோடு, இயற்கை விவசாயத்தில் இறங்கி பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் இருக்கிறது ராஜ்குமாருக்குச் சொந்தமான நிலம். பயிர்களுக்கு இயற்கை இடுபொருள்கள் தயார் செய்துகொண்டிருந்த ராஜ்குமாரை ஒரு காலைவேளையில் சந்தித்துப் பேசினோம்.

நாற்று வயலில் ராஜ்குமார்
நாற்று வயலில் ராஜ்குமார்

“பிறந்து வளர்ந்தது எல்லாம் திருநாளூர் கிராமம். அங்க இருந்து 20 கி.மீ தூரத்துல இருக்க இந்த மேற்பனைக்காட்டுல இருக்குது எங்க விவசாயப் பூமி. மொத்தம் 4 ஏக்கர். அப்பா சம்பாதிச்ச காசுல, வாங்குன பூமி.

நான் கோயம்புத்தூர்ல ஏரோ நாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிச்சதும் தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது. அந்த வேலை எனக்கு ஒத்து வரல. வீட்டுல எல்லாரும் வெளிநாடு போகச் சொன்னாங்க. வேலையை விட்டுட்டு வந்துட்டேன். பாஸ்போர்ட்டு எடுத்து வேலைக்கும் விண்ணப்பிச்சேன்.

வழக்கம்போல அப்பா தனி ஆளா காட்டுல கஷ்டப்பட்டுக்கிட்டு கெடந்தாரு. வேலைக்குப் போற வரைக்கும் அவரோட சிரமத்தைக் குறைக்கலாம்னு விவசாயத்துக்கு வந்தேன். இதுக்கிடையில வெளிநாட்டுல இருந்து வேலைவாய்ப்பும் தேடி வந்துச்சு. ஆனால், எனக்கு வேலைக்குப் போக விருப்பமில்ல. கொரோனா காலம்ங்கிறதால எங்க வீட்டுல இருக்குறவங்களுக்கும் என்னைய வெளிநாடு அனுப்ப விருப்பமில்ல. அதுக்கப்புறம் முழு நேரமா விவசாயத்துல இறங்கிட்டேன்’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.

அதிர்ச்சிக்குப் பிறகு அனுமதி கொடுத்த அப்பா

‘‘விவசாயத்தைப் பொறுத்தவரை, நம்மாழ்வார் ஐயாதான் எனக்கு மானசீகக் குரு. கல்லூரியில படிக்கும்போதே அவரோட பேச்சைக் கேட்டிருக்கேன். யூடியூப்ல அவரோட வீடியோவை அடிக்கடி பார்ப்பேன். அவரோட பேச்சுதான் என்னை இயற்கை விவசாயம் செய்ய தூண்டுச்சு. அப்பாவுக்கு முழு நேர ஓய்வு கொடுத்துட்டு, விவசாயம் மொத்தத்தையும் நானே பார்த்துக் கலாம்னு முடிவு பண்ணேன். அப்பாவும் சம்மதம் சொல்லிட்டாரு. போன வருஷத்துல இருந்து விவசாயத்தை முழுசா கையில எடுத்துக்கிட்டேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்து எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு, இயற்கை இடுபொருள்களைத் தயாரிச்சு இயற்கை விவசாயம் செய்யப்போறேன்னு சொன்னதும், அப்பா அதிர்ச்சியாகிட்டாரு. வீரிய ரகங்களை விட்டுட்டு, பாரம்பர்ய நெல்லையே நடவு செய்யலாம்னு சொன்னது அவருக்கு ரெண்டாவது அதிர்ச்சி. ஆனாலும், அப்பா என் மேல நம்பிக்கை வெச்சு, ‘என்ன வேணும்னாலும் பண்ணுடா தம்பி’னு சொல்லிட்டாரு.

சமன்படுத்தும் பணி
சமன்படுத்தும் பணி

கற்றுக்கொடுத்த கருத்தரங்குகள்

சுற்றுவட்டாரத்துல யாரும் பெருசா இயற்கை விவசாயம் செய்யல. அதோட, பார்க்குறதுக்குக்கூட யார்க்கிட்டயும் பாரம்பர்ய நெல் இல்ல. முதல் முயற்சியா மாப்பிள்ளைச் சம்பா அரை ஏக்கர்ல நடவு செஞ்சு பார்க்க முடிவு செஞ்சேன். விருத்தா சலத்துல போய் விதைநெல் வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். இயற்கை விவசாயம் சம்பந்தமான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். பசுந்தாள் உர விதைப்பு, பஞ்சகவ்யா, உயிர் உரங்கள் பயன்பாடுன்னு எல்லாத்தையும் தேடித்தேடி கத்துக்கிட்டேன். எங்க சொந்தக்கார அண்ணன் சந்திரமோகன் அரிசிக் கடை வெச்சிருக்காரு. இயற்கை விவசாயப் பயிற்சி எங்க நடந்தாலும் போயிடுவாரு. அவர்தான் எனக்கு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கிற முறைகளைச் சொல்லிக்கொடுத்தாரு. அதற்கப்புறம் நானும் இயற்கை விவசாயக் கருத்தரங்குகளுக்குப் போய்த் தெரிஞ்சிகிட்ட விஷயங்கள் எல்லாத்தையும் வெச்சுதான் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘அந்தக் காலத்துல எல்லாம் எங்க பகுதியில முப்போகம் விளைஞ்சது. இப்ப ரெண்டு போகம்தான். போன வருஷம் அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா நடவு செஞ்சேன். ஒரு மாசத்துல நான் நெனச்ச மாதிரி முளைப்பு வரல. ‘உங்க அப்பா நல்லபடியா விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தாரு. நீங்க ஏன் இந்த வேலை பார்க்குறீங்க, இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல்லுன்னு சொல்லிக் கடைசியா ஒண்ணுமே இல்லாமப் போகப்போகுது’ன்னு பலரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வளர்ச்சி

பஞ்சகவ்யா, மீன் அமிலத்தை மாத்தி, மாத்தி தெளிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல பலன் கிடைச்சது. 90-ம் நாள் மூன்றரை அடி வரைக்கும் பயிர் வளர்ந்திருந்துச்சு. அதைப்பார்த்துட்டு கிண்டல் பண்ணுனவங்க அதிர்ச்சியாகிட்டாங்க. ‘எப்படி நடந்துச்சு’னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் பஞ்சகவ்யா, மீன் அமிலம், மாப்பிள்ளைச் சம்பாவோட அருமை, பெருமை எல்லாத்தை யும் சொல்ல ஆரம்பிச்சேன். அவங்க எல்லாரும், ‘எங்களுக்கு விதைநெல் கொடுங்க’ன்னு கேட்டாங்க. அவங்களுக்கும் கொடுத்தேன். பிறகு, கருங்குறுவை ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சேன். இப்போ, மூன்றரை ஏக்கர்ல கறுப்புக் கவுனி நடவு செஞ்சிருக்கேன்’’ என்றவர், மகசூல் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

அரை ஏக்கர்... 36,250 ரூபாய்

‘‘அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா போட்டதுல மொத்தமா 12 மூட்டை (1 மூட்டை 60 கிலோ) மகசூல் கிடைச்சது. இதுல ரெண்டு முட்டையை விதை நெல்லுன்னு ஒதுக்கிட்டேன். எனக்காக 20 கிலோ நெல்லை வெச்சுகிட்டு, 100 கிலோ விதைநெல்லை வெளியில வித்துட்டேன். ஒரு கிலோ 100 ரூபாய்னு கொடுத்ததுல 10,000 ரூபாய் கிடைச்சது. மீதமுள்ள 10 மூட்டையை அரிசியாக்கினேன். ஒரு மூட்டைக்கு 35 கிலோ அரிசி கிடைச்சது. இத கிலோ 75 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். மொத்தம் 350 கிலோ அரிசி மூலம் 26,250 ரூபாய் கிடைச்சது. விதை மொத்தமா மாப்பிள்ளைச் சம்பாவுல இருந்து 36,250 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவுல இருந்து அறுவடை செஞ்சு அரிசியாக்கின செலவு வரைக்கும் மொத்தமா 11,500 ரூபாய் செலவாச்சு. அதுபோக 24,750 ரூபாய் நிகர லாபமாகக் கிடைச்சது.

2.5 ஏக்கர்... 55 மூட்டைகள்

ரெண்டரை ஏக்கர் கருங்குறுவை சாகுபடி செஞ்சுதுல 55 மூட்டைகள் (ஒரு முட்டைக்கு 60 கிலோ) கிடைச்சது. 2 மூட்டையை விதைக்காக ஒதுக்கிட்டேன். அதுல 20 கிலோவை சொந்த தேவைக்காக எடுத்து வெச்சுட்டு, மீதி 100 கிலோவை விற்பனை செஞ்சோம். ஒரு கிலோ 100 ரூபாய் விலையில மொத்தமா 100 கிலோவுக்கு 10,000 ரூபாய் கிடைச்சது. 4 மூட்டையை அரிசியாக்கினோம். மூட்டைக்கு 35 கிலோ வீதம் 140 கிலோ அரிசி கிடைச்சது. கிலோ 80 ரூபாய்னு கொடுத்தோம். அதன் மூலமா மொத்தமா 11,200 ரூபாய் கிடைச்சது. மீதமிருந்த 49 மூட்டையை மூட்டை 2,200 ரூபாய்க்கு வித்தது மூலம் 1,07,800 ரூபாய் கிடைச்சது. ஆக, ரெண்டரை ஏக்கர் கறுங்குருவை சாகுபடி மூலம் 1,29,000 ரூபாய் கிடைச்சது. இதுல உழவுலயிருந்து அறுவடை வரைக்கும் 37,000 ரூபாய் செலவாச்சு. அதுபோக 92,000 ரூபாய் லாபமா கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

வரவு, செலவு கணக்கு
வரவு, செலவு கணக்கு


‘‘பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய நான் எடுத்த முயற்சி வெற்றிகரமா அமைஞ்சிருச்சு. எங்க பகுதி விவசாயிகள் பலரும் பார்த்துட்டு என்ன மாதிரி செய்யணும்னு என்கிட்ட விதை நெல் வாங்கிக்கிட்டு இருக்காங்க. போன தடவை என்னோட சேர்த்து எங்க உறவுக்காரங்களும் 3 ஏக்கர்ல கருங்குறுவை நடவு செஞ்சாங்க. இந்தத் தடவை 5 ஏக்கர்ல கறுப்புக் கவுனி நடவு செஞ்சிருக்காங்க’’ என்றார்.தொடர்புக்கு,

ராஜ்குமார், செல்போன்: 91596 39472

விற்பனையில் வில்லங்கம்

‘‘நான் நெல்லை அரிசியாக்கி வித்ததோடு, அங்க இங்க அலைஞ்சு நெல் மூட்டைகளையும் வித்துட்டேன். ஆனா, என்னோட சேர்ந்து கருங்குறுவை சாகுபடி செஞ்சவங்க நெல் மூட்டைகள் விற்பனையாகாம கிடக்கு. சந்தைப் பிரச்னைதான் பலரும் பாரம்பர்ய நெல் ரகங் களுக்கும் இயற்கை விவசாயத்துக்கு வரத் தயங்குறதுக்கு முக்கியக் காரணமா இருக்கு. அதை எளிமையாக்கப்பட்டா எங்க பகுதியில எல்லோரும் இயற்கை விவசாயத்துக்கு வந்திடுவாங்க” என்றார்.

கருங்குறுவை நெல்
கருங்குறுவை நெல்

சாகுபடி தொழில்நுட்பம்

கோடை சாகுபடிக்கு ஏற்ற ரகம் கருங்குறுவை. வயது 125 நாள்கள். நாற்றங்கால் அமைத்து, பூவரசு, கொன்றை, எருக்கு ஆகிய நறுக்கிய இலைதழைகள் 200 கிலோ, மாட்டு எரு 200 கிலோ இட வேண்டும். ஒரு வாரத்தில் நன்கு உழவு செய்து பரம்படித்து விதைக்க வேண்டும். விதைத்த 22 நாள்களில் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம். நாற்றின் வேர்ப்பகுதி சூடோமோனஸ்+தண்ணீர் கலந்த கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

இதற்கிடையே ஏக்கருக்கு 3 டன் தொழுவுரத்தை அடியுரமாக நடவு வயலில் கொட்டி உழவு செய்ய வேண்டும். ஒற்றை நாற்று முறையில் ஓர் அடிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 15-ம் நாளில் ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலத்தைப் பாசனத் தண்ணீர் வழியாகக் கொடுக்க வேண்டும். நடவு செய்த 25 மற்றும் 50-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.

பாரம்பர்ய நெல் ரகங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் பூச்சி நோய்த் தாக்குதல் இருக்காது. 15 நாள்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டியும், பயிர்களின் வளர்ச்சிக்காக 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி என்ற விகிதத்தில் பஞ்சகவ்யாவையும் இலை வழியாகத் தெளிக்க வேண்டும். 40-ம் நாள் மீண்டும் 2 லிட்டர் மீன் அமிலத்தை வாய்க்கால் பாசனம் வழியாகக் கொடுக்க வேண்டும். 75 முதல் 80 நாள்களில் கதிர் பிடிக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி மீன் அமிலத்தை இலை வழியாகக் கொடுக்க வேண்டும். 125 முதல் 130 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும்.