Published:Updated:

கறுப்புக்கவுனி... ரூ.95,000... நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்!

நெல் வயலில் சபா ஆறுமுகம்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் சபா ஆறுமுகம்

மகசூல்

கறுப்புக்கவுனி... ரூ.95,000... நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்!

மகசூல்

Published:Updated:
நெல் வயலில் சபா ஆறுமுகம்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் சபா ஆறுமுகம்

பாரம்பர்ய நெல் ரகங்களை அரவை ஆலைகளில் அரிசியாக மதிப்புக் கூட்டினால் அது, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியாகவே கிடைக்கிறது. இதை உணவாகப் பயன்படுத்தும்போது முழு சத்தும் உடலுக்கு கிடைப்பதில்லை. அதனால், உமி மட்டும் நீக்கப்பட்டு அதன் முழுச்சத்தும் அப்படியே கிடைக்கும்படி, தனி அரவை மிஷினில் அரிசியாக்கி நேரடியாக விற்பனை செய்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சபா ஆறுமுகம்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி யிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது நடுக்கல்லூர். இந்தக் கிராமத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகில் உள்ளது சபா ஆறுமுகத்தின் நெல் வயல். பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வரும் இவர், கடந்த போகத்தில் கறுப்புக்கவுனி சாகுபடி செய்தார். தற்போது பூங்கார் நெல்லைச் சாகுபடி செய்து வருகிறார். நெல் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும் நம்மை அழைத்துச் சென்று வரப்பில் நடந்தபடியே பேசத் தொடங்கினார்.

“எனக்கு பூர்வீகமே இந்த நடுக்கல்லூர்தான். ஆரம்பத்துல இருந்தே விவசாயம்தான் எங்களுக்கு முக்கியத் தொழில். இந்தப் பகுதி முழுவதுமே நெல் மட்டும்தான் சாகுபடி செய்வோம். பள்ளி, கல்லுரிப் படிப்பு படிக்கும்போதே கிடைக்குற நாள்கள்ல அப்பாவுடன் வந்து விவசாய வேலைகளைச் செய்வேன். பாலிடெக்னிக்ல டிப்ளோமா முடிச்சதும், விவசாயத்தையே முழுநேரமாச் செய்யலாம்னு முடிவெடுத்தேன். ஆரம்பத்துல ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சோம்.

நெல் வயலில் சபா ஆறுமுகம்
நெல் வயலில் சபா ஆறுமுகம்


ஊருல மூத்த விவசாயிங்க என்ன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துறாங்களோ அதையே, எல்லா விவசாயிகளும் பயன் படுத்திட்டு வந்தோம். நோய் வந்தா மொத்தமா எல்லா வயல்லயும் பரவும். அதனால, ஒவ்வொரு போகத்துக்கும், உரம், பூச்சி மருந்துகளை கம்பெனி மாத்தி மாத்தி அடிப்போம். லாபமோ, நஷ்டமோ விவசாயத்தைச் செய்வோம். ஒரு கட்டத்துல மகசூலே சுத்தமாகக் குறைஞ்சு போச்சு, மண்ணும் மலடாயிடுச்சு. இதைச் சரி செய்ய என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.

நல்வழி காட்டிய நம்மாழ்வார்

ஆனா, எந்த யோசனையும் வரல. கேக்குற எல்லாருமே ‘உரம் போடாம நாத்து எப்படி வளரும்’னு கேட்டாங்க. ஒருமுறை ஒரு நாளிதழ்ல நம்மாழ்வார் ஐயாவோட பேட்டியைப் படிச்சேன். ‘பாரம்பர்யமான விவசாயத்தை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை இஷ்டத்துக்கும் தெளிச்சு செயற்கை விவசாயமா மாத்திட்டோம். செயற்கை விவசாயத்துலயும் இன்னும் செயற்கையை எதிர்பார்க்க ஆரம்பிச் சுட்டாங்க. மண்ணை வளப்படுத்தணும். உரம், பூச்சிக்கொல்லியைக் கையாலத் தொடக் கூடாது. இதைச் செஞ்சாலே போதும் விவசாயத்துல ஜெயிக்கலாம்’னு அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துது.

பிறகு நண்பர் ஒருவர் மூலமா பசுமை விகடன் அறிமுகமாச்சு. தொடர்ந்து படிச்சேன். 2007-ல திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். மண் வளத்துல இருந்து அறுவடை வரைக்கும் இயற்கை விவசாயத்தைப் பத்தி முழுமையா அங்க தெரிஞ்சுகிட்டேன். அப்பவே, இயற்கை விவசாயத்து மேல ஆர்வமும், நம்பிக்கையும் வந்துச்சு. திருத்துறைப்பூண்டி, நெல் திருவிழாவுல கலந்துகிட்டு எங்க பகுதிக்கு, பட்டத்துக்கு ஏத்த சில நெல் ரகங்களையும் வாங்கிட்டு வந்தேன்.

நெல் வயல்
நெல் வயல்


பலதானிய விதைப்பு செஞ்சும், ஆட்டுக்கிடை போட்டும் மண்ணை வளப்படுத்தினேன். முதலில், ஒரு ஏக்கர்ல பூங்கார் நெல்லைச் சாகுபடி செஞ்சேன். முதல் முறையிலேயே ஓரளவு மகசூல் கிடைச்சுது. தொடர்ந்து, கறுப்புக்கவுனி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, தங்கச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பான்னு 10 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். இது மொத்தம் ஒரு ஏக்கர் நிலம். போன போகத்துல இந்த ஒரு ஏக்கர்ல கறுப்புக்கவுனிச் சாகுபடி செஞ்சேன். தொடர்ந்து 11 வருஷமா இயற்கை முறையில விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இந்த முறை ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்குற பூங்கார், கதிர்விட்ட நிலையில இருக்கு” என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

“போன முறை ஒரு ஏக்கர்ல 1,342 கிலோ கறுப்புக்கவுனி நெல் கிடைச்சது. வழக்கமா அறுவடை செய்ற நெல்லை மூட்டை பிடிச்சு மதிப்புக்கூட்டினா 870 கிலோ அரிசிதான் கிடைக்கும். நாங்க நெல்லை நல்லா புடைச்சு பொக்கு இல்லாம தரமான நெல்லை அரிசியாக் குனதுனால 915 கிலோ அரிசி கிடைச்சது. இந்த அரிசியை ஒரு கிலோ ரூ.150-க்கு நேரடியாக நுகர்வோர்கிட்ட விற்பனை செஞ்சேன். அந்த வகையில விற்பனை மூலமா ரூ.1,37,250 வருமானமாக் கிடைச்சுச்சு. இதுல உழவு முதல் அறுவடை வரையிலும் அரிசியா மதிப்புக்கூட்டுன வரை ரூ.42,000 செலவாயிடுச்சு. மீதமுள்ள 95,250 ரூபாய் லாபமாக் கிடைச்சுது.

செலவு/வரவு கணக்கு
செலவு/வரவு கணக்கு


ரப்பர் ஹெல்லர் மெஷின்

நெல்லை, அரவை மில்லுல கொடுத்து அரிசியாக்க மாட்டேன். எங்க ஊர்லயே இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்ற கல்லூரிப் பேராசிரியரான விஸ்வநாதன், ‘ரப்பர் ஹெல்லர் மெஷின்’ வச்சிருக்கார். அந்த மெஷின்ல நெல்லுல உமி மட்டும்தான் நீங்கும். மற்ற சத்துகள் அப்படியேதான் இருக்கும். தேவையைப் பொறுத்து அந்த மெஷின்ல அரிசியாக்கி விற்பனை செய்துட்டு இருக்கேன். இதனாலதான் அரிசியை ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். ‘விளைபொருளை விளைய வைக்கிறவன் தானே அதுக்கு விலையையும் வைக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொன்னதுபோல, என்னோட விளைபொருளுக்கு இந்த விலையை நான் வச்சிருக்கேன்.

விற்பனைக்கு உதவும் வாட்ஸ்அப் குழு

ஆரம்பத்துல, ‘என்னய்யா… அரிசியோட விலை கூடுதலா இருக்கே’ன்னு சொன்னவங்க கூட, சாதத்தைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகு, எந்தப் பேரமும் பேசல. எந்த நிலையிலயும் நான், விலையில சமரசம் செஞ்சதில்ல. மொத்தமா அரிசியா மதிப்புக்கூட்டி இருப்பு வைக்காம, தேவைக்கேற்ப அரைச்சு விற்பனை செய்யுறதுனால, விலையைக் குறைச்சுதான் விற்பனை செய்யணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல. என்னைப்போல இயற்கை விவசாயிகள் பலர் இணைஞ்சு வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கியிருக்கோம். அந்தக் குழுக்கள் மூலமும் விற்பனை செய்துட்டு வர்றேன்.

‘‘ ‘விளைபொருளை விளைய வைக்கிறவன்தானே அதுக்கு விலையையும் வைக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார்.’’


அதேபோல, பசுமைவிகடனில் வெளியாகுற ‘பசுமைச்சந்தை - வாங்க, விற்க’ பகுதியில விஸ்வநாதன் சார் சிலமுறை விளம்பரப்படுத்தினார். அதுல இருந்து அரிசிக்கான தேவை அதிகரிச்சுது. எனக்கு வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததும், விற்பனையை எளிதாக்கியதும் பசுமை விகடன்தான்” என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

தொடர்புக்கு,

சபா ஆறுமுகம்,

செல்போன்: 94437 26007

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் கறுப்புக்கவுனி சாகுபடி செய்வது குறித்துச் சபா ஆறுமுகம் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

கறுப்புக்கவுனி நெல் சாகுபடி செய்ய ஐப்பசி, கார்த்திகைப் பட்டம் ஏற்றது. கறுப்புக்கவுனியின் வயது 150 நாள்கள். ஒரு வார இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி பரப்பிவிட்டு உழவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ விதைநெல் தேவை.

விதைநெல்லை நிழலில் வைக்கப்பட்ட தார்ப்பாயின் மீது கொட்ட வேண்டும். அதன் மீது 2 லிட்டர் நாட்டுமாட்டுச் சிறுநீரைத் தெளித்து 10 நிமிடம் உலர வைக்க வேண்டும். பிறகு, சணல் சாக்கினுள் நெல்லைப் போட்டுக் கட்டி, தண்ணீர் தொட்டிக்குள் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வரை தண்ணீரை வடியவிட்டு, தனி அறையில் விதைநெல் சாக்கினை வைத்து, அதனை மற்றொரு சணல் சாக்கினால் மூடி வைக்கோலைப் பரப்ப வேண்டும். ஒருநாள் முழுவதும் வைத்திருந்தால், நெல்லில் முளைப்பு தெரியும்.

நெல் வயல்
நெல் வயல்


அதனை அப்படியே நாற்றாங்காலில் விதைக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 15 நாள்கள்வரை நாற்றங்காலிலேயே வளரவிட்டு வயலில் நடவு செய்துவிட வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் சென்றுவிட்டால், நாற்று முதிர்ச்சி அடைந்துவிடும். பயிருக்குப் பயிர் முக்கால் அடி, வரிசைக்கு வரிசை முக்கால் அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன்பாக நாற்றைப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து (நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச்செய்து) நட வேண்டும். இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. நடவு செய்த அன்று முதல் நீரும், பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். நடவு செய்த 15, 30 மற்றும் 45-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.

20-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாளிலிருந்து 15 நாள்கள் இடைவெளியில் மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்யாவை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கதிர் பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பாரம்பர்ய நெல் ரகத்தைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் பெரும்பாலும் இருக்காது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டியை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 140 முதல் 150-ம் நாளில் அறுவடை செய்யலாம்.

10 விவசாயிகள் சேர்ந்து ஒரு மெஷின் வாங்கினால் போதும்!

நடுக்கல்லூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி விஸ்வநாதனிடம் பேசினோம். ‘‘நெல்லை, இயற்கை முறையில் சாகுபடி செஞ்சாலும், சாதாரண அரவை ஆலைகள்ல கொடுத்து அரிசியாக மதிப்புக்கூட்டும்போது பட்டை தீட்டப்பட்டதாத்தான் கிடைக்குது. அதுமட்டுமல்லாம, மூட்டைகளின் எண்ணிக்கை யைப் பொறுத்துதான் முன்னுரிமை கொடுத்து அரிசியாக்குறதுல மில்லுக்காரங்க அக்கறை காட்டுறங்க. மற்ற அரிசியைப் போலவே இந்த அரிசியும் பட்டை தீட்டியதைப்போல இருக்குறதுனால, சந்தையில பாரம்பர்ய ரகத்துக்கான மவுசு குறையுது. ‘பாரம்பர்ய அரிசின்னு சொல்லுறீங்க… ஆனா, பார்க்கப் பாலிஷாத்தான இருக்கு’ன்னு எங்கிட்டயே நிறைய பேரு கேட்டிருக்காங்க.

விஸ்வநாதன் மற்றும் சபா ஆறுமுகம்
விஸ்வநாதன் மற்றும் சபா ஆறுமுகம்


அதனால, நாமளே சின்னதா ஒரு அரவை மெஷின் வாங்கிட்டா என்னன்னு எனக்குள்ள ஒரு யோசனை வந்துச்சு. பக்கத்தூருல உள்ள பட்டறையில நான் சொன்னபடியே சின்ன மெஷினை வடிவமைச்சு கொடுத்தாங்க. மெஷினுக்கு 70,000 ரூபாய் செலவாச்சு. இதுல, ‘ரப்பர் ஹெல்லர்’ பொருத்தியிருப்பதுனால நெல்லில் இருந்து உமி மட்டும்தான் நீங்கும். மற்ற சத்துகள் அப்படியேதான் இருக்கும். அரவை மில்களில் நெல்லை மொத்தமா அரிசியாக்கிட்டா அதிக நாள் இருப்பு வைக்க முடியாது. குறிப்பிட்ட நாள் களுக்குள்ள வித்தாகணும். ஆனா, இந்த மெஷின் இருக்குறதுனால எவ்வளவு தேவையோ அதை மட்டும் அரிசியாக்கி விற்பனை செய்யலாம். மெஷினுக்கான தொகையை ஒரே விவசாயி செலவழிக்கிறத விட, 10 விவசாயிகள் ஒண்ணாச்சேர்ந்து இதே மாதிரி ஒரு மெஷினை வாங்கிட்டா, அவரவரோட விற்பனைத் தேவைக்கு ஏத்த மாதிரி அரிசியாக்கி வித்துக்கலாம். இப்போ என்னோட மெஷின்ல நாலஞ்சு இயற்கை விவசாயிகள் நெல்லை அரிசியாக்கிட்டு போறாங்க. இதனால, எனக்கும் அரவைக்கூலி மூலமா தனி வருமானம் கிடைக்குது” என்றார்.

தொடர்புக்கு,
விஸ்வநாதன்,
செல்போன்: 94425 82582

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism