Published:Updated:

10 சென்டில் குலை மஞ்சள் ரூ.42,000, 10 சென்டில் சிறுகிழங்கு ரூ.18,810 குறைவான பரப்பில் நிறைவான லாபம்!

மஞ்சள் வயலில் சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள் வயலில் சுப்பிரமணியன்

மகசூல்

பொங்கல் பண்டிகை வழிபாட்டில் வணங்குதலுக்குரிய மங்களப் பொருள்களில் குலைமஞ்சளும் சிறுகிழங்கும் முக்கிய மானவை. இவை இரண்டையும் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்காகச் சாகுபடி செய்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ளது சுப்பிரமணியனின் தோட்டம். தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள அவரது தோட்டத்துக்குப் பனிப்பொழிவு நிறைந்த ஒரு காலை வேளையில் சென்றோம். சுப்பிரமணியனும் அவரின் மனைவி சொர்ணமும் சிறுகிழங்குகளை அறுவடை செய்துகொண்டிருந்தனர். நம்மை அறிமுகப் படுத்தியதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சுப்பிரமணியன்.

“பூர்வீகமே விவசாயக் குடும்பம்தான். அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். அதுக்குப் பிறகு அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இந்தப் பகுதி முழுக்கவும் நெல் விவசாயம்தான். அப்பாவைப்போல, நெல் சாகுபடிக்கு அதிகப்படியான ரசாயன உரம், பூச்சிக் கொல்லி உபயோகிச்சதுனால நிலம் மலடாயிடுச்சு. மகசூலும் குறைஞ்சு போச்சு. ஆனாலும், விவசாயத்தைக் கைவிட்டுடக் கூடாதுனு தொடர்ந்து செஞ்சுக்கிட்டிருந்தேன்.

கிழங்கு தோண்டும் பணியில்
கிழங்கு தோண்டும் பணியில்

நாலு வருஷத்துக்கு முன்னால தாழை யூத்துல இருக்க ஒரு நண்பர் மூலமாத்தான் இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சது. அதன் பிறகு, இயற்கை முறையில நெல் சாகுபடி செஞ்சேன். கணிசமான மகசூலும் கிடைச்சது. ஆனா, வருஷா வருஷம் பொங்கலுக்காக விளைய வைக்குற குலைமஞ்சள், சிறுகிழங்குக்கு மட்கிய தொழுவுரத்தைத் தவிர எந்த உரமும் போடுறதுல்ல. இப்போ நாலு வருஷமாத்தான் ஜீவாமிர்தம், வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயன் படுத்துறேன்’’ என்றவர், தனது சாகுபடி விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இது 70 சென்ட் நிலம். வருஷம் முழுக்க இருக்குற மாதிரி சுழற்சி முறையில அரைக்கீரை, பொன்னாங்கன்னி, தண்டுக் கீரையை 20 சென்ட்ல சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். 10 சென்ட்ல குலை மஞ்சள், 10 சென்ட்ல சிறுகிழங்கு அறுவடை செய்யுற நிலையில இருக்கு. இதுதவிர, தனியா 3 ஏக்கர்ல அம்பை-16 ரக நெல் நட்டிருக்கேன்’’ என்றவர், விற்பனை மற்றும் வருமானம் பற்றிப் பேசினார்.

“குலைமஞ்சள், சிறுகிழங்கு ரெண்டுமே பொங்கல் பண்டிகை விற்பனையை வச்சுதான் சாகுபடி செய்றேன். போன வருஷம் 10 சென்ட்ல அறுவடை செஞ்ச 3,000 குலைகள்ல 200 குலைகள் சேதாரமாயிடுச்சு. 2,800 குலைகளை ஒரு குலை 15 ரூபாய்க்கு விற்பனை செஞ்சதுல 42,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. 10 சென்ட்ல சிறுகிழங்கு அறுவடையில கிடைச்ச 418 கிலோ விற்பனை மூலமா 18,810 ரூபாய் வருமானமாக் கிடைச்சது.

மஞ்சள் வயலில் சுப்பிரமணியன்
மஞ்சள் வயலில் சுப்பிரமணியன்

ரெண்டுக்கும் சேர்த்து 60,810 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. உழவு, விதை, நடவு, இடுபொருள், பராமரிப்பு, அறுவடைனு ரெண்டுக்கும் சேர்த்து 18,000 ரூபாய் வரை செலவு. அது போக, மீதமுள்ள 42,810 ரூபாய் லாபமாக் கிடைச்சது. வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்யாம நானே நேரடியா விற்பனை செய்யுறதுனாலதான் நல்ல விலை கிடைக்குது. சில விவசாயிங்க குலைமஞ்சளை அறுவடை செஞ்சு, மொத்தமா விலை பேசிடுவாங்க. அப்படி விலை பேசுனா பாதி வருமானம்தான் கிடைக்கும். நாமளே நேரடியா விற்பனை செய்யுறப்போதான் நல்ல விலை கிடைக்கும்” என்றவர் நிறைவாக,

‘‘அதிக பராமரிப்போ, வேலை மெனக்கெடலோ இதுல கிடையாது. பொங்கல் பண்டிகையை மனசுல வச்சு நட்டேன். நல்ல வருமானம் கிடைச்சது” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு: சுப்பிரமணியன்,

செல்போன்: 98656 45057

சிறுகிழங்கு, இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

10 சென்ட் பரப்பளவில் சிறுகிழங்குச் சாகுபடி செய்வது குறித்து சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சிறுகிழங்கை எல்லா மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆவணிப் பட்டம் ஏற்றது. சிறுகிழங்குச் செடிகளை நாற்றங்காலில் வளர்த்த பிறகு, சாகுபடி செய்யும் நிலத்தில் நடவு செய்ய வேண்டும். அதனால், முதலில் நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும். 10 சென்ட் பரப்பில் நடவு செய்ய அரை சென்ட்டில் (220 சதுர அடி) நாற்றங்கால் அமைக்க வேண்டும். அதில், அரையடி இடைவெளியில் விதைக்கிழங்குகளை ஊன்ற வேண்டும். அரைக்கிலோ விதைக்கிழங்கு போதுமானது. 7 முதல் 8-ம் நாளில் முளைப்பு தெரியும். 10 மற்றும் 20-ம் நாளில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

சிறுகிழங்கு வயல்
சிறுகிழங்கு வயல்

30 முதல் 35-ம் நாளில் நாற்றங்காலிலிருந்து செடிகளை எடுத்துச் சாகுபடி நிலத்தில் நட வேண்டும். நாற்றங்காலில் விதை ஊன்றும்போதே, சாகுபடிக்கான நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை நிலத்தை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது ஒரு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி பரவலாக உழவு செய்து ஓர் அடி அகலம், ஓர் அடி உயரத்தில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையேயான இடைவெளி ஓர் அடி.

நாற்றங்காலில் வளர்ந்துள்ள செடிகளைப் பிடுங்கி எடுத்து, அதில் இரண்டு கணுக்கள் சேர்ந்தாற்போல பிரித்து வைத்துக்கொண்டு, தண்ணீர் பாய்ச்சி, பாத்திகளின் இரு ஓரங்களில் அரையடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 20 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 15-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 25 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

300 மி.லி பஞ்சகவ்யாவை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 45 முதல் 50-ம் நாளில் கொடியாகப் படரத் தொடங்கும். அந்த நேரத்தில், மண் அணைக்க வேண்டும். இதனால், வேரில் கிழங்கு பரவலாகப் பிடித்து வளரும். இந்த நேரத்தில் ஊதா நிறப் பூக்கள் பூக்கும். ஆனால், பூப் பூப்பதற்கும் கிழங்கு வளர்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சிறுகிழங்கைப் பொறுத்த வரையில் பூச்சி, நோய்த்தாக்குதல் எதுவுமில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக 45-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்கலாம்.

100-ம் நாளுக்கு மேல் இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். சில கொடிகள் வாடியும் காணப்படும். செடியின் தூர்பகுதியில் மண் வெடிப்பு ஏற்படும். வரப்பு ஓரங்களில் உள்ள செடிகளின் தூர்களில் கிழங்கு வெளியே தென்படும். இதன் மூலம் கிழங்கு அறுவடைக்குத் தயாராகிவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120-ம் நாளில் அறுவடையைத் தொடங்கலாம். செடிகளைப் பிடுங்கி, நிலக்கடலைகளைப் பிரித்து எடுப்பதுபோல கிழங்குகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பிரித்தெடுத்த கிழங்குகளை நிழலில் சேமித்து வைக்கலாம். அதிகபட்சமாக 3 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம். மற்ற கிழங்கு வகைகளைப்போல, நீண்ட நாள்கள் இருப்பு வைத்து சந்தைக்கு விற்பனை செய்ய அனுப்ப முடியாது. ஈரப்பதத்துடன் இருக்கும் வரைதான் நல்ல விலை கிடைக்கும். ஒரே நாளில் அறுவடை செய்யாமல், தேவைக்கேற்ப அறுவடை செய்யலாம்.

மஞ்சள், இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

10 சென்ட் பரப்பளவில் குலை மஞ்சள் சாகுபடி செய்வது குறித்து சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

மஞ்சள் சாகுபடி செய்ய வண்டல்மண், செம்மண் ஏற்றது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம். ஆனி மாத இறுதியிலேயே 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது, ஒரு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி (10 சென்டுக்கு) பரவலாகச் சிதறி உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை ஓர் அடி என்ற இடைவெளியில் மஞ்சள் விதை யின் முளைப்புப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி நடவு செய்ய வேண்டும்.

மஞ்சள் வயல்
மஞ்சள் வயல்

10 சென்ட் பரப்பளவில் நடவு செய்ய 100 முதல் 120 கிலோ விதைக்கிழங்கு தேவை. விதை மஞ்சளுடன் சிறிது உமி, மணல் கலந்து தண்ணீர்த் தெளித்து ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். இதனால், விதை மஞ்சளில் வேர்கள் வெளிப்படும். நடவுக்கு முன்னர் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து விதைநேர்த்தி செய்து நட வேண்டும். இதனால், மஞ்சளை வேர் அழுகல் நோய் தாக்காது.

நடவு செய்த 20 நாள்களுக்குமேல் இலைகள் வெளியே தென்படும். 35 மற்றும் 55-ம் நாள் என இரண்டு முறை களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை 25 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். பெரும்பாலும் இலைப்புள்ளி நோயைத் தவிர வேறெதுவும் மஞ்சளைத் தாக்குவதில்லை. 45-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது வடிக்க வேண்டும்.

160-ம் நாளுக்கு மேல் அறுவடையைத் தொடங்கலாம். அறுவடைக்கு முன்பாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மண்வெட்டியால் வெட்டிக் குலைகளைச் சேதாரமில்லாமல் அறுவடை செய்யலாம். ஆனால், கறி மஞ்சளுக்கான அறுவடையை 10-ம் மாதத்தில்தான் செய்ய வேண்டும். 9-ம் மாதம் வரை இதே பராமரிப்பு முறையைப் பின்பற்றினால் போதும். அதற்குப் பிறகு எதுவும் செய்யத் தேவையில்லை. 10-ம் மாதத்தில் இலைகளில் உள்ள பச்சையம் குறைந்தும், வெளுத்தும் காணப்படும். அந்த நேரத்தில், கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். பக்குவமாகச் சேமித்தால், இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.