Published:Updated:

3 ஏக்கர்... 2,400 கிலோ ரூ.1,20,000 லாபம் வளமான மகசூல் தரும் வம்பன்-10 உளுந்து!

உளுந்துடன் அசோக்
பிரீமியம் ஸ்டோரி
உளுந்துடன் அசோக்

மகசூல்

3 ஏக்கர்... 2,400 கிலோ ரூ.1,20,000 லாபம் வளமான மகசூல் தரும் வம்பன்-10 உளுந்து!

மகசூல்

Published:Updated:
உளுந்துடன் அசோக்
பிரீமியம் ஸ்டோரி
உளுந்துடன் அசோக்

தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அற்புதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோக், இயற்கை விவசாயத்தில், வம்பன்-10 ரக உளுந்து சாகுபடி செய்து, ஏக்கருக்கு 8 குவிண்டால் மகசூல் எடுத்துள்ளார்.

காவிரி டெல்டாவில் குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரும்பாலும் ஏக்கருக்கு 3-5 குவிண்டால் மகசூல்தான் கிடைக்கும்.

ஒரு பகல் பொழுதில் அவர் வயலுக்குச் சென்றோம். அறுவடை செய்த உளுந்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அசோக்கிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். மகிழ்ச்சியோடு வரவேற்றார். ``இந்த வருஷம் டெல்டா மாவட்டங்கள்ல உளுந்து சாகுபடி ரொம்ப அதிகம். இதைப் பயன்படுத்தி, விலையைக் குறைக்க முயற்சி செய்றாங்க வியாபாரிங்க.

ரசாயன முறையில சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்குச் செலவு அதிகம், மகசூலும் குறைஞ்சு போச்சு. அதனால, வழக்கத்தைவிட இந்த வருஷம் லாபம் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா, எனக்கு அப்படியில்ல. நிறைவான லாபம் பார்த்துடுவேன். காரணம், இயற்கை முறையில உற்பத்தி செஞ்சதுனால செலவு ரொம்ப குறைவு. அதேசமயம் அபரிமிதமான மகசூல். என்னோட உளுந்துல கொஞ்சம்கூட பொக்கு இல்ல. நல்லா திரட்சியா இருக்கு. அதிகமா மாவு காணும். இதை வாங்குறதுக்குனு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்காங்க. நானே சொந்தமா ஒரு கடை நடத்திக்கிட்டு இருக்குறதுனால, மக்கள்கிட்ட நேரடியா விற்பனைச் செஞ்சிடுவேன். வியாபாரிகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்ல’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

உளுந்துடன் அசோக்
உளுந்துடன் அசோக்

‘‘முதுகலை பொறியியல் பட்டப்படிப்புப் படிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈடுபாடு அதிகம். அதனால, கல்லூரிப் படிப்பை முடிச்சதும் விவசாயத்துல அப்பாவுக்குத் துணையா இருந்தேன். ‘படிப்புக்கேத்த வேலை பார்க்காம, ஏன் விவசாயத்துல கிடக்குறே’னு சொந்தக் காரங்க, ஊர்க்காரங்க எல்லாம் சொல்லிக்கிட்டே இருந்ததுனால, மன உளைச்சல் அடைஞ்சு, பெங்களூரூல ஒரு தனியார் நிறுவனத்துல சில வருஷம் வேலை பார்த்தேன். திடீருன்னு அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. அதனால, சொந்த ஊருக்கே திரும்பி வந்து விவசாயத்துல இறங்கினேன்.

நான் விவசாயிங்கிறதுனாலயே, எனக்குப் பெண் கொடுக்கப் பலரும் மறுத்துட்டாங்க. இதுல வேதனையான வேடிக்கை என்னென்னா, விவசாயியா இருக்குறவங்களே கூட, பெண் கொடுக்க மறுத்தாங்க. இதனால சொந்தமா தொழில் செய்ய முடிவெடுத்து, ஓர் அங்காடி ஆரம்பிச்சேன். பிறகு பெண் கிடைச்சு கல்யாணம் நடந்துச்சு. எங்களுக்கு 26 ஏக்கர் நிலம் இருக்கு. எங்க நிலத்துல விளையக் கூடிய அரிசி, நிலக்கடலை, எள்ளு, சோளம், உளுந்து, வாழை, காய்கறிகள் உட்பட எல்லா விளைபொருள்களையுமே பெரும்பாலும் எங்க அங்காடியிலயே வச்சு விற்பனை செஞ்சிடுவோம். இதனால வியாபாரிகளை நான் நம்பியிருக்க வேண்டிய சூழல் இல்ல.

2018-ம் வருஷத்துல இருந்து, இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்குறதுனால, என்னோட அங்காடியில் விற்பனை செய்யக் கூடிய விளைபொருள்களை, இந்தப் பகுதி மக்கள் விரும்பி வாங்குறாங்க. விவசாயம், நேரடி விற்பனை... ரெண்டுலயும் கவனம் செலுத்தவே நேரம் போதாததால, என்னால் மாடுகளை வளர்க்க முடியல. மத்த இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து, இயற்கை இடுபொருள்கள் வாங்கிக்குவேன். சில சமயங்கள்ல, அக்கம் பக்கத்து விவசாயிகள் கிட்ட மாட்டுச் சாணம், சிறுநீர் வாங்கியும் இடுபொருள்கள் தயார் பண்ணி பயன் படுத்துவேன். நான் இயற்கை விவசாயத்துல இறங்கினதுக்கு, என்னோட உறவினர் செந்தில்குமார் ஒரு முக்கியக் காரணம்’’ என்றவர், உளுந்து சாகுபடி அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

உளுந்து
உளுந்து

‘‘10 ஏக்கர்ல இயற்கை முறையில் உளுந்து சாகுபடி செஞ்சேன். கார்த்திகை மாசக் கடைசியில, 3 ஏக்கர்ல வம்பன்-10 ரகம், 7 ஏக்கர்ல வம்பன்-8 ரக உளுந்தும் சாகுபடி செஞ்சேன். என்னோட அனுபவத்துல, கார்த்திகைப் பட்டத்துக்கு வம்பன்-10 ரக உளுந்து மிகச் சிறப்பான விளைச்சல் கொடுக்குது. ஏக்கருக்கு 8 குவிண்டால் (800 கிலோ) மகசூல் கிடைச்சிருக்கு. வம்பன்-8 ரகத்துல 5.25 குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கு. சித்திரைப் பட்டத்துக்கு வம்பன்-8 ரக உளுந்து ஏற்றது’’ என்றவர், இயற்கை முறையில், வம்பன்-10 ரக உளுந்து சாகுபடி செய்த அனுபவத்தை, பகிர்ந்து கொண்டார்.

‘‘ரசாயன உரங்கள் அதிகமாகப் பயன் படுத்தினாலே உளுந்து செடிகள்ல பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமாகும். எங்க பகுதியில மஞ்சள் தேமல் நோய், சாறு உறிஞ்சும் பூச்சி, இலைச்சுருட்டுப்புழு, காய்ப்புழுக்கள்...இதுமாதிரி இன்னும் பலவிதமான பாதிப்பு களைச் சந்திச்சாகணும். இந்தத் தாக்குதல் களைக் கட்டுப்படுத்த, விதவிதமான ரசாயன டானிக், ஒட்டுப்பசை, பூச்சிக்கொல்லினு நிறைய செலவு செஞ்சுகிட்டு இருக்காங்க. ஆனா, நான் இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால என்னோட உளுந்து செடிகள்ல பூச்சி, நோய்த்தாக்குதல்களே ஏற்படல. மண்புழுவுரம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், தசகவ்யா, உயிர் உரங்கள், தேமோர் கரைசல் கொடுக்குறதுனால, உளுந்து செடிகள் நல்லா ஆரோக்கியமா செழிப்பா வளர்ந்து நிறைவான மகசூல் கொடுக்குது.

உளுந்து
உளுந்து

ரசாயன முறையில் சாகுபடி செஞ்சா ஒரு தடவைதான் பூ பூக்கும். செடிகள்ல பசுமையும் நிலைச்சு இருக்காது. ஆனா, இயற்கை முறையில் இரண்டு தடவை பூ பூத்துக் காய்கள் வைக்கும். செடிகள்ல எப்போதுமே பசுமைத்தன்மை நிலைச்சு இருக்கும்’’ என்றவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்துப் பேசினார். ‘‘வம்பன் 10-ரக உளுந்து, 3 ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். ஏக்கருக்கு 8 குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கு. இதுல கிலோவுக்கு 70 ரூபாய் வீதம் 56,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக, 40,200 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும்.

ஆக, 3 ஏக்கர்ல, வம்பன்-10 ரக உளுந்து சாகுபடி மூலம் 1,20,600 ரூபாய் லாபம் கிடைக்கும். இதுவே நிறைவான லாபம். அறுவடை செஞ்ச உளுந்தை, முறையா வெயில்ல காய வச்சு, இருப்பு வச்சிருந்து, அதிக விலை கிடைக்கும்போது விற்பனை செஞ்சா, இன்னும் கூடுதலா லாபம் பார்க்கலாம்’’ என்றவரிடம், விடை பெற்றுக் கிளம்பினோம்.

தொடர்புக்கு, அசோக்,

செல்போன்: 96299 77275.

இப்படித்தான் உளுந்து சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் ஒரு ஏக்கரில் வம்பன்-10 ரக உளுந்து சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்...

விதை நேர்த்தி

முளைப்புத்திறனை அதிகப்படுத்துவதற்கும், வேர் அழுகல் நோய் வராமல் தடுப்பதற்கும் விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம். 8 கிலோ விதை உளுந்தில், 150 மி.லி ஆறிய சோற்றுக் கஞ்சி, 50 மி.லி டிரைக்கோடெர்மா விரிடி திரவம் கலந்து, அரை மணிநேரம் நிழலில் உலர்த்தி, அதன் பிறகு விதைப்புச் செய்ய வேண்டும்.

சாகுபடி நிலம் தயாரிப்பு மற்றும் செயல்முறைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி, அடியுரமாக 250 கிலோ மண்புழு உரம் போட வேண்டும். மூன்றாம் சால் உழவு ஓட்டி மண்ணைச் சமப்படுத்தி, 8 கிலோ விதை உளுந்து தெளித்து, ஓர் அடி அகலப் பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் தலா முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும். நிலம் முழுவதும் பரவலாகத் தண்ணீர் சென்றடைய, இது வாய்க்காலாகப் பயன்படும். விதைப்பு செய்த 3-ம் நாள் முளைப்பு விடும். 5 - 7 நாள்களில் 2 இலைகள் உருவாகி செடி வளரத் தொடங்கும். 15-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 25-ம் நாள் 1 லிட்டர் தண்ணீரில் 350 மி.லி உயிர் பூஞ்சாண திரவம் (வெர்டிசிலியம் லக்கானி), 250 கிராம் வெல்லம், 250 மி.லி தயிர் கலந்து, 8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு இக்கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

உளுந்து வயல்
உளுந்து வயல்

28-ம் நாள், 800 மி.லி மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் களையெடுக்க வேண்டும். 32-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 400 மி.லி சூடோமோனஸ் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் பஞ்சகவ்யா, 800 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் தசகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். தேமோர் கரைசல் தெளிப்பதால் அதிக அளவில் பூக்கள் பூக்க, காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, உளுந்து நன்கு திரட்சியாக இருக்கும். 75 - 85 நாள்களில் உளுந்து அறுவடைக்கு வரும்.


அதிக நுண்ணுயிர்கள்

உளுந்து அறுவடை செய்யப்பட்ட நிலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற அசோக், “மண்புழு உரம் உட்பட இயற்கை இடுபொருள்கள் பயன் படுத்தியதால், இந்த மண் நல்லா கருமையாகவும், பொலபொலப்பாகவும் மாறி இருக்கு. அதிக அளவு நுண்ணுயிர்கள் பெருகினதுனால மண் நல்லா வளமாக மாறிக்கிடக்கு. இதைப் பார்த்துட்டு எங்க பகுதி விவசாயிகள் எல்லாரும் ஆச்சர்யப்படுறாங்க. சித்திரை பட்டத்துல இதுல மரவள்ளி பயிர் பண்ணி, ஊடுபயிரா, வம்பன்-8 ரக உளுந்து சாகுபடி செய்யப்போறேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism