Published:Updated:

இந்தியாவின் இஸ்ரேல்... பால்வளம் பொங்கும் பாலைவன ராஜஸ்தான்!

 மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

டந்த நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த மழை நாளில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தஞ்சாவூர், மதுரை போல ஒரு காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த பழைமையான பகுதி. இப்போது மாவட்டத் தலைநகராக உள்ளது. நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பே சென்றிருந்தேன்.

‘‘நாளைதான் நமக்கு நிகழ்ச்சி. இன்று முழுக்க ராஜஸ்தான் பாலைவனத்தைச் சுற்றிப் பார்க்கலாம். நீங்களும் வருகிறீர்களா?’’ என்று அழைத்தார், நாக்பூரில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நண்பர்.

‘‘ராஜஸ்தான் என்றால் பாலைவனமாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கிறதே. உண்மையில் நாம் இருப்பது ராஜஸ்தானில் தானா?’’ என்று ஆங்கிலமும் இந்தியும் கலந்து கேள்வி எழுப்பினார், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரிய ராக இருக்கும் நண்பர்.

இவர்கள் இருவரும் கேட்டதைப் பார்த்தவுடன், முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம் வந்துள்ளார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

நாம், பாலைவனத்தையும் ஒட்டகங்களையும் பார்க்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 200 கி.மீ பயணம் செய்ய வேண்டும் என்று சொன்னேன். உங்களைப் போலத்தான் முதல் முறையாக ராஜஸ்தான் வருபவர்கள், இப்படிக் கேட்பதுண்டு என்று சொல்லிவிட்டு, மேலும், எனக்குத் தெரிந்த பாலைவனம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தேன்.

ஒட்டகம்
ஒட்டகம்


புவியியல் அமைப்புபடி எந்தப் பகுதி மிகக் குறைந்த மழைப் பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் இருக்காது. பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும். இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். ஆண்டுக்கு 250 மில்லிமீட்டருக்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனம் என்று அழைக்கிறோம். ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனம் இந்திய பெரும் பாலைவனம் என்று பெயர் பெற்றுள்ளது. தார் பாலைவனம் உலகின் 17-வது பெரிய பாலைவனம். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இயற்கையான எல்லையாக (Natural Boundary) இருக்கிறது.

2 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட தார் பாலைவனத்தில் 1,70,000 ச.கி.மீ பரப்பளவு (85 சதவிகிதம்) இந்தியாவிலும், 30,000 ச.கி.மீ. பரப்பளவு (15 சதவிகிதம்) பாகிஸ்தான் நாட்டிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள 1,70,000 ச.கி.மீ பரப்பளவில் 61 சதவிகிதம் நிலப்பகுதி ராஜஸ்தான் மாநிலத்திலும், மீதியுள்ளவை குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பரவி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், பிகானர், சுரு, கங்கா நகர், பார்மர், ஜெய்சல்மேர், ஜாலோர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியாகத் தார் பாலைவனம் உள்ளது. இவற்றில் பிகானர் மற்றும் ஜெய்சல்மேர் மாவட்டங்கள் முழுமையாகத் தார் பாலைவனத்திலேயே உள்ளன. குறிப்பாக ஜெய்சல்மேர், பாலைவனத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

பாலை வனப்பகுதிகளில் வசிப்பவர்கள் சிவப்பு நிற உடை அணிவதும் அதில் கண்ணாடியைப் பதிப்பதும் அலங்காரத்துக்கு அல்ல. தூரத்திலிருந்து பார்த்தாலும் ஆள் இருப்பது தெரிய வேண்டும் என்பதற்காகவே என்று, கடந்த முறை ராஜஸ்தான் பயணத்தில் நான் பார்த்தவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

 மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

எங்கள் உரையாடலைக் கேட்டபடி பக்கத்து அறையிலிருந்து வந்தவர், ‘‘உண்மைதான். நான் பாலைவனம் உள்ள பிகானரிலிருந்து வந்துள்ளேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் தேசிய ஒட்டக ஆய்வு மையம் இருக்கிறது’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகம் மேய்ப்பவர் களின் சமூக நிலைபற்றி பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்வதாகச் சொன்னார்.

இப்போது பாலைவனத்துக்குப் போக முடியாவிட்டாலும், ‘பாலைவனக் கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகத்தைப் பற்றி, எங்களுக்குச் சொல்லுங்கள் என்றேன். ‘‘அரசின் புள்ளிவிவரப்படி 1970-ம் ஆண்டு ராஜஸ்தானில் மட்டும் 11 லட்சம் ஒட்டகங்கள் இருந்தன. இப்போது சுமார் 2.5 லட்சம் ஒட்டகங்கள் என்ற அளவில் குறைந்துவிட்டன. அந்தக் காலத்தில் சாலை இல்லை. ராஜஸ்தான், குஜராத் பாலைவனப் பகுதிகளில் மக்களுடைய பயணத்துக்கும் பொருள்களைக் கொண்டு செல்லவும் ஒட்டகங்கள் மட்டுமே பயன் பட்டன. தார்ச் சாலைகள் போடப்பட்டதன் மூலம் ஒட்டகங்கள் பயன்பாடு குறையத் தொடங்கியது. மேலும் டிராக்டர்கள், வேன்கள், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் மக்கள் ஒட்டகங்களைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. இப்போதுள்ள ஒட்டகங்கள் பெரும்பாலும் பாலுக்காகவே வளர்க்கப் படுகின்றன. ஒட்டகம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை பால் கறக்கும். ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.50 முதல் ரூ.75 வரை விலை கிடைக்கிறது. ஒட்டக பால் சுவையானது. இந்தப் பாலில் இனிப்புகள், சாக்லேட், குல்ஃபி, நெய், வெண்ணெய், அழகு கிரீம்கள், சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பாலை முறையாகப் பதப்படுத்திவிட்டால் 100 நாள்கள் வரைகூட கெட்டுப்போகாமல் இருக்கும்.

ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு ‘ரெய்கா’ என்று பெயர். ஒட்டகத்துடன் உரையாடுவதற்கு என்றே ஒரு மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு டகால் என்று பெயர். ஒட்டகத்தை வளர்க்கும் ரெய்காக்கள் நாடோடி இன மக்கள். பல இடங்களுக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். ஒட்டகங் களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இவர்களில் பலர் நகர்ப்புறங்களில் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.

ஒட்டகங்கள் குறைந்து வருவதற்குப் பாலைவனப் பகுதியில் நீர்ப் பாசன வசதி செய்யப்பட்டதும் முக்கியமான காரணம் என்று சொன்னால், நீங்கள் ஆச்சர்யப் படக்கூடாது.

இந்திராகாந்தி கால்வாய் பாலைவனத்தைப் பசுமையாக மாற்றி வருகிறது. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை, கம்பு, சோளம், கரும்பு, காய்கறிகள் போன்றவை பயிரிடப் படுகின்றன. 640 கி.மீ நீளம் கொண்ட இந்திரா காந்தி கால்வாய்தான் இந்தியாவின் மிக நீளமான கால்வாய். இது பஞ்சாப் மாநிலத் திலிருந்து ஹரியானா மாநிலம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவன பகுதிகளில் பாசனம் செய்ய உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய ஆறுகளின் நீர் தார் பாலைவனத்தின் பாசனத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மூலம் பாலைவனத்தில் 6,807 ச.கி.மீ நிலம் பாசன வசதி பெறுகிறது. தண்ணீர் கிடைப்பதால், எங்கெல்லாம் விவசாயம் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் விவசாயம் விரிவடைந்து வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் பாலைவனத்தில் விவசாயம் செய்கிறார்கள் என்று ஆச்சர்யமாகச் சொல்லி வருகிறார்கள். அதைப் பல ஆண்டு களுக்கு முன்பே நம் நாட்டில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம்.ஒட்டகங்களின் எண்ணிக்கைப் பெருமளவு வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியமான காரணம் ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலம் வெகு வேகமாகக் குறைந்தது தான். ராஜஸ்தானில் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் மூலம் பார்மர், பிகானர், சுரு, ஹனுமான் கட், ஜெய்சால்மர், ஜோத்பூர், ஸ்ரீகங்கா நகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறின. இதனால், ஒட்டகங்களுக்குத் தீவன பற்றாக்குறை உருவானது. ஆடு, மாடுகளைப் போல தீவனத்தை விலைக்கு வாங்கிப் போட்டால், ஒட்டகங்களுக்கு கட்டுப் படியாகாது. இதனால், ஒட்டக வளர்ப்பு குறையத் தொடங்கியது. ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஒட்டகச் சந்தை மிகவும் பிரபலமானது. அரசு அதை மிகப் பெரிய கண்காட்சிபோலவும் கலை விழாபோலவும் நடத்தும். ஆனால், இப்போது ஒட்டகங்கள் இங்கு வருவது குறைந்துகொண்டே வருகிறது. ஒட்டகங்களைக் காக்க வேண்டும் என்று பல அமைப்புகள் போராடி வருகின்றன’’ என்று நிறுத்தியவர் அடுத்து சொன்னவை வியப்பில் ஆழ்த்தியது.

ராஜஸ்தானில்
ராஜஸ்தானில்

‘‘ஒரு பக்கம் ஒட்டகங்கள் குறைந்தாலும் இன்னொரு பக்கம் மாடுகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றன. இங்குள்ள விவசாயிகள் முன்பு மேய்ச்சல் நிலங்களை மட்டுமே நம்பி மாடுகளை வளர்த்தார்கள். நீர்ப் பாசன வசதி கிடைத்த பிறகு, நிலத்தில் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்து, மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள். இந்திய அளவில் கால்நடைகள் எண்ணிக்கையில் எங்கள் மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் மாநிலம் (பால் என்றால் நான் தான் கில்லாடி என்று சொல்லிக் கொள்ளும் அமுல் நிறுவனம் உள்ள குஜராத்கூட 4-வது இடத்தில்தான் உள்ளது. ஒரு காலத்தில் முன்வரிசையில் இருந்த தமிழ்நாடு 9-வது இடத்தில் இருக்கிறது). தார் பாலைவனப் பகுதியில் உருவானதுதான், தார்பார்க்கர் என்ற மாட்டு இனம். பாலை வனத்தில் அலைந்து திரிந்த இனம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு, குளிருக்கு இதமாகத் தேநீர் வரவழைத்தார்.

அதற்குள் எனக்கு 2007-ம் ஆண்டுப் பசுமை விகடன் இதழில் தார்ப்பார்க்கர் மாடுகள் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிசேகர் என்பவர் தான், ராஜஸ்தானிலிருந்து இந்த இன மாட்டை வாங்கி வந்து நிறைய விவசாயிகளிடம் கொடுத்தார். அதில் செங்கல்பட்டு முகுந்தனும் ஒருவர். இன்றும்கூட இவர் பண்ணையில் தார்பார்க்கர் மாடுகள் உள்ளன. வெள்ளை நிறத்தில் அழகாக உள்ள இந்த மாட்டின் பூர்வீகம், சிந்து சமவெளி. ‘காங்கிரேஜ்’ என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் சிந்து சமவெளி காலத்தில் வளர்க்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த மாட்டின் உருவ பொம்மை களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே வம்சாவழியில் வந்ததுதான் தார்பார்க்கர் மாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தார்ப்பார்க்கர்
தார்ப்பார்க்கர்


ஆவி பறக்கத் தேநீர் வந்தாலும் அடிக்கும் குளிரில் சூடு ஆறிவிடுகிறது. ஆனாலும், குடித்துக் கொண்டே அந்த பிகானர் நண்பர் உரையாடலைத் தொடர்ந்தார்.

‘‘தார்பார்க்கர் மாடுகளுக்குக் கால்நடை தீவனங்கள் கொடுக்கத் தேவையில்லை. மேய்ச்சல் இருந்தால் போதும். பசுந்தீவனம் கொடுத்தே, நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் பால் கறப்பது இங்கே சர்வ சாதாரணம். இந்தப் பாலின் சுவையும் அருமையாக இருக்கும். நாம் இருக்கும் அல்வார் பகுதியில் எருமைகள் தான் அதிகம். கெட்டியான எருமைப் பாலில் ‘கலாகந்த்’ (Kalakand) என்ற இனிப்பு இங்கே பிரபலம். ஊருக்குப் போகும்போது வாங்கிச் செல்லுங்கள். இப்போது ஆசைக்குக் கொஞ்சம் சுவைப்போம்’’ என்று அருகிலிருந்த இனிப்புக் கடைக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். நம் ஊர் வில்லிபுத்தூர் பால் கோவா போல இருந்தது. ஆனால், சுவைத்தால், தனிச்சுவையாக இனித்தது. அதைவிடச் சுவையாக இருந்தன அந்த நண்பர் பகிர்ந்த தகவல்கள்.