வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் செவ்வாழைக்குத் தனி மவுசு உண்டு. இந்த ரக வாழைக்குச் சந்தையில் எப்போதும் அதிக தேவை இருப்பதால், விற்பனையும் எளிதாகிறது. அந்த வகையில், செவ்வாழையைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை விவசாயி முருகன்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பனையங்குறிச்சியில் உள்ளது முருகனின் தோட்டம். அறுவடை செய்த செவ்வாழைக் குலைகளைத் தூக்கிக்கொண்டு வந்தவரைச் சந்தித்தோம். ``நேத்துப் பழுத்த பழம்... இதைச் சாப்பிட்டுப் பாருங்க’’ ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிடக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார்.