Published:Updated:

பால் குடிக்காத அஸ்வகந்தா... பலன் கொடுக்காத இ.எம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

பால் குடிக்காத அஸ்வகந்தா... பலன் கொடுக்காத இ.எம்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

திங்கள்கிழமை சிதம்பரம், செவ்வாய்க் கிழமை மயிலாடுதுறை, புதன்கிழமை கும்பகோணம்... என்று லாட்ஜில் ரூம் போட்டு லேகியம் விற்ற சித்த மருத்துவச் சிகாமணிகள் பலரும், இப்போது ஆன்லைன் மருத்துவர்களாக மாறிவிட்டார்கள். கொரோனா மூலம் பாதிப்பு ஒருபுறம் என்றாலும், மறுபுறம் அதன் மூலம் பயன்பெற்ற துறைகளும் உள்ளன. அதில் மருத்துவத் துறைக்குத்தான் முதலிடம். அதிலும் நம் ஊர் சித்த மருத்துவர்கள் காட்டில் பண மழைதான். பெருந்தொற்றுக்கு முன்பு, சித்த மருத்துவம் என்றாலே, தாழ்வானது நினைத்த வர்கள்கூட, வரிசையில் நின்று கஷாயங்களை வாங்கிக் குடித்த வரலாறு எல்லாம் நடந்தது. பரவாயில்லை... இப்போதாவது, தமிழ் மருத்துவ மான சித்த மருத்துவத்தின் மகிமையை மக்கள் அறிந்துகொண்டார்களே என்று மகிழ்ச்சி அடையலாம் என்று நினைத்தால், அதுதான் இல்லை.

கோட் சூட் போட்ட ஆங்கில மருத்துவர்களே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நோயாளிகளைக் கண்டால், ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள், இந்த வைத்திய ரத்னாக்கள். இவர்கள் மட்டுமில்லாமல் சில நல்லவர்களும் உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு சித்த மருத்துவர் விலை உயர்ந்த ஐபோன் வாங்கி வைத்துள்ளார். ஆனால், அதை எப்படிப் பயன்படுத்துவது என்று அவருக்குத் தெரியாது. அந்த ஐபோனை இயக்கவே உதவியாளரை நியமிக்கும் அளவுக்குச் செல்வச் செழிப்பில் திளைக்கிறார். இன்னொருவர் மருத்துவமனை ஆரம்பித்த போது, வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதைச் சொல்வார். இப்போது ஆடி காரில் வலம் வரும் அளவுக்கு, அவரின் வாழ்க்கைத்தரம் மாறிவிட்டது. எல்லாம் கொரோனா கொடைதான்.

முன்பெல்லாம் அனுபவ சித்த மருத்துவர், பட்டம் பெற்ற சித்த மருத்துவர், போலி சித்த மருத்துவர் என மூன்று வகை மருத்துவர் கள்தான், இந்தப் பூவுலகில் இருந்தார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில், வாட்ஸ் அப் சித்த மருத்துவர், யூடியூப் சித்த மருத்துவர்... எனப் புதிய வகையினரும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறார்கள்.

இப்படி டிஜிட்டல் புரட்சியில் உருவான ஒரு வாட்ஸ் அப் சித்தரின், பரம விசிறியாக என் நண்பர் இருந்தார். கொரோனா இரண்டாம் அலையில், அந்த நண்பரின் குடும்பத்தினர் அத்தனை பேரும், நனைந்து நைந்து போனார்கள். வாட்ஸ் அப் குழுவில் தன் நிலையை நண்பர் பதிவிட்டுள்ளார். வாட்ஸ் அப் சித்தரும், மருத்துவ ஆலோசனைகளை அள்ளி வழங்கியுள்ளார். உடனடியாக, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ‘அஸ்வகந்தா லேகியம் சாப்பிடுங்கள்’ என்று வழிகாட்டியுள்ளார்.

அந்த நண்பர், என்னைத் தொடர்புகொண்டு ‘‘அஸ்வகந்தா லேகியம் வேணும். எப்படியாவது வாங்கிக் கொடுங்க. ரொம்ப அவசரம்’’ என்றார். உடல் நலம் தேற நல்ல மருந்துதான் அது. ஆனால், மருந்துக்கடைகள் நிறைந்த சென்னை, அரும்பாக்கம் பகுதியில் ‘அஸ்வகந்தா லேகியம் இருப்பு இல்லை’ என்று அறிவிப்புகள் தொங்கிய நேரம் அது. ஆனால், அந்த நண்பர் எப்படியாவது வாங்கிக் கொடுங்கள் என மீண்டும் மீண்டும் கேட்டார். ஈரோடு பகுதியில் உள்ள சித்த ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத் தைத் தொடர்புகொண்டு, அஸ்வகந்தா லேகியத்தை வாங்கிக் கொடுத்தேன். கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருந்தது. அண்மையில் புத்தகக் கண்காட்சியில் அந்த நண்பரைப் பார்த்தபோது,

‘‘நீங்க வாங்கிக் கொடுத்த அஸ்வகந்தா லேகியத்தை, ஒரு மாசம் சாப்பிட்டோம். எந்த நன்மையும் கிடைக்கல. கூடவே, எனக்கு ரத்த அழுத்தம் குறைஞ்சு போயிடுச்சு. உடனே, அந்த லேகியத்தை சாப்பிடுறதை நிறுத்திட்டோம். சித்த மருத்துவத்துல பலன் கிடைக்காதுனு நிறைய பேர், சொல்லிக் கேட்டிருக்கேன். அதை அனுபவத்துல உணர்ந்துட்டேன்...’’ என்று சொல்லிக் கொண்டு போனார். அந்த ஈரோடு மருந்து நிறுவனம் விலை வேண்டுமானால் கூடுதலாக விற்கும். ஆனால், தரம் நன்றாகவே இருக்கும். ஆகையால், மருந்தில் கோளாறு இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் எப்படிச் சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன். ‘‘காலை மாலை இரண்டு வேளையும், ஒரு ஸ்பூன் சாப்பிட்டோம்’’ என்றார். அப்புறம் என்றேன். ‘‘அப்புறம் என்ன? அவ்வளவுதான்’’ என்றார். உங்களை அஸ்வகந்தா லேகியம் சாப்பிட சொன்ன சித்த மருத்துவர் வேறு எதுவும் சொல்லவில்லையா? என்றேன். ‘‘இல்லையே. இதைச் சாப்பிடுங்க உடம்பு தேறிடும்னுதான் சொன்னார்’’ என்றார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அஸ்வகந்தாவை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் மேலும் குறையும். அடுத்து, அரை, குறையாக மருந்து சாப்பிட்டால் முழுப் பலனும் கிடைக்காது. சித்த மருத்துவத்தில் எதை எதனுடன் சாப்பிட வேண்டும் என்ற விதி முறைகள் உள்ளன. அஸ்வகந்தா லேகியத்தைச் சாப்பிடும்போது, பால் குடிக்க வேண்டும். அப்போதுதான், மருந்து முழுமையாக வேலை செய்யும் என்றேன்.

‘‘ஓ அப்படியா... இதை வாட்ஸ் அப் குரூப் சித்த மருத்துவர் சொல்லலீங்களே...’’ என்றார் அப்பாவியாக. அவரைப் பற்றி விவசாரிக்கும்படி சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, அந்த அந்த வாட்ஸ் அப் சித்தர், மருத்துவரே இல்லை. யாரோ ஒரு சித்த மருத்துவரிடம், சில மாதங்கள் உதவியாளராக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்து, இப்போது மருத்துவம் பார்க்கிறார். அனுபவ சித்த மருத்துவம் தவறு கிடையாது. பரம்பரை சித்த மருத்துவர்கள் அனுபவ மூலமே மருத்துவம் பார்க்கிறார்கள். ஆனால், அரைகுறை அனுபவம் ஆபத்தானது. அந்த ‘அரை’ மருத்துவர், ஆலோசனை வழங்கியதற்கு, ஜிபே மூலம் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பி ஏமாந்துள்ளார், அந்த நண்பர். இலை, தழை... உள்ள சித்தமருத்துவம் தானே என்று சரியான மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொண்டால், பலனும் கிடைக்காது; பாதிப்பும் ஏற்படும் என்று அந்த நண்பரை எச்சரித்தேன்.

இப்படி அரை பாடம் படித்த மோசடி பேர்வழிகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான், செய்கிறார்கள்.

சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பண்ணையின் மேலாளர், விவசாயம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு வருவார். பார்க்கும் போதெல்லாம் ‘‘இயற்கை விவசாயம்னு சொல்றதெல்லாம் பொய்ங்க. பல வருஷமா செய்றோம். விளைச்சல் இல்ல...’’ என்று அலுத்துக்கொள்வார். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார். ஒரு முறை அவர் பண்ணையைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பண்ணையில் முக்கியமான இடுபொருளாக இ.எம் என்ற வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்துவதாகச் சொன்னர். அற்புதம். ஜப்பான் நாட்டில் உருவான இந்த உயிர் வளர்ச்சி ஊக்கியை உலகம் முழுக்கக் கொண்டாடுகிறார்கள். எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம் (E.M). மாட்டுத்தீவனத்தில் கலந்துகொடுத்தால், மாடுகள் நன்றாகப் பால் கொடுக்கின்றன. மீன் குளத்தில் இ.எம் கலந்துவிட்டால், மீன்கள் வளர்ச்சி அபாரமாக உள்ளன. பயிர்கள் மீது தெளித்தால், நோய், நொடியில்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கின்றன. உங்களுக்கு மட்டும் ஏன் பலன் கொடுக்கவில்லை.

தெளிப்பு
தெளிப்பு

எங்கே, அந்த இ.எம் பாட்டில், செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல் எங்கே? என்றேன்.

‘‘இ.எம் பாட்டில் இருக்கு. ஆனா, செறிவூட்டப்பட்ட கரைசல்னு சொல்றீங்களே, அது என்ன?’’ என்றார்.

செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசலை தயாரிக்க 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், 94 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். 5 கிலோ வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். வெல்லத்துக்குப் பதிலாக 5 கிலோ மொலாசஸ் அல்லது கழிவு சர்க்கரையைக் கரைத்து ஊற்றலாம். இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ, கிடைப்பது அரிதாக இருக்கும்பட்சத்திலோ வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதில் 1 லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

இந்த டிரம் மீது நேரடியாக வெயில் படக் கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக் கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து உடனே மூடி விட வேண்டும். கலக்கத் தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

இப்படிச் செய்தால்தான், நுண்ணுயிரிகள் உறக்கம் கலைந்து பல்கிப் பெருகும். அதன் பிறகு, பயன்படுத்தினால்தான் பலன் கிடைக்கும் என்றேன்.

‘‘சார், இந்த விஷயம் தெரியாது. எனக்குச் சொன்னவர், 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி பாட்டிலில் உள்ள இ.எம் திரவத்தைத் தெளிச்சா போதும்னுதான் சொன்னார்’’ என்றார்.

காலி இம்.எம் பாட்டில்களை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் இ.எம் வாங்கிய வகையில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்து சாதனை படைத்திருப்பார்கள். அதற்குள் நான் சென்று, அந்தச் சாதனையைத் தடுத்து நிறுத்திவிட்டேன். இவ்வளவு காலம், அடுப்பைப் பற்ற வைக்காமல், சோறு வேகவில்லை என்று சொல்லி வந்துள்ளீர்கள். நீங்கள் தவறு செய்துவிட்டு, இயற்கை விவசாய முறை மீது குற்றம் சொல்லியுள்ளீர்கள். இனியாவது, இ.எம் தயாரிக்கும் முறைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று நானே, அதைச் செய்துகாட்டிவிட்டு வந்தேன்.

இ.எம் கரைசல்
இ.எம் கரைசல்

சரி, திரும்பவும் சித்த மருத்துவத்துக்கு வருவோம்.

ஒருமுறை பெங்களூரு சென்று திரும்பும் போது, ‘‘வேலூர் பக்கத்துல ஒரு சித்த மருத்துவர் இருக்கிறாரு அவரைப் பர்த்துவிட்டுப் போகலாமா’’ என்று கார் ஓட்டியபடி கேட்டார் நண்பர். சென்னை போகும் வழிதானே என்று சரி என்றேன். மரம், செடிகளுடன் இருந்த அந்தச் சித்த மருத்துவமனையில் எங்களுக்கு முன்பே, சில கார்கள் நின்றிருந்தன. ஆந்திரா, கர்நாடகா... என வெளிமாநில பதிவு எண் கொண்டவையும் இருந்தன. ஏசி அறையில் காவி உடையில் அமர்ந்திருந்தார், சித்த மருத்துவர். அந்த வெள்ளைத்தாடியர், அறை முழுக்கப் பல விதமான தெய்வங்களின் படங்களால் நிரம்பி வழிந்தன. சாம்பிராணி, ஜவ்வாது வாசம் மூக்கைத் துளைத்தது.

‘‘ரெண்டு வருஷமா, முதுகு வலி உயிரை எடுக்குது. என்ன மருந்து சாப்பிட்டாலும் கேக்கல. நீங்கதான் எப்படியாவது, குணப்படுத்தணும்’’ என்று நண்பர் சொன்னார்.

தாடியைத் தடவியபடி எங்களை நோக்கி அசால்ட்டாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, நண்பரின் நாடிப்பார்த்தார், அந்தச் சித்த வைத்திய திலகம். அவர் நடத்திய திருவிளையாடலை அடுத்த இதழில் சொல்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism