Published:Updated:

`நிஜ ஆர்கானிக் பொருள்களை எப்படி கண்டுபிடிப்பது?’ - விளக்கும் இயற்கை விவசாய ஆர்வலர்

துரை.நாகராஜன்

ஆர்கானிக் பொருள்கள் மீது பலருக்கும் விருப்பம் இருந்தாலும், நாம் வாங்குவது நிஜ ஆர்கானிக் பொருள்கள்தானா என்ற சந்தேகமும் பலருக்குள் இருக்கிறது. அதைத் தீர்ப்பதற்கான வழிகள் இங்கே.

தக்காளி
தக்காளி

மக்கள் மத்தியில் ஆர்கானிக் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. சந்தையில் ஒரு பொருளுக்கு அதிகமான கிராக்கி இருக்கிறது என்றால், அதேபோல போலியான பொருள்களும் கலக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய கேள்விகளைப் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் முன்வைத்தோம்.

"ஆர்கானிக் பொருள்கள்னா என்ன?"

காய்கறிகள்
காய்கறிகள்

"அதுக்கு முன்னால இயற்கை விவசாயம் பத்தி அவசியமா தெரிஞ்சுக்கணும். கடந்த 10,000 வருஷமா எப்படி சாதாரணமா நடந்ததோ அதுதான் இயற்கை விவசாயம். இடையில 60 வருஷங்களுக்கு முன்னாலதான் ரசாயனங்கள் விவசாயத்துக்குள்ள வருது. பல ரசாயன கொல்லிகளைக் கொட்டி விளைவிக்கப்படும் விவசாயம்தான் ரசாயன விவசாயம். இந்த ரசாயனங்கள்தான் பல உயிரினங்களுக்கும் கேடுகளை விளைவிக்கக் கூடியது. நம்மைச் சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று என அனைத்துக்கும் ரசாயனங்கள் கேடு விளைவிக்கின்றன. இதனால்தான் நமது பாரம்பர்ய விவசாயத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. ரசாயனங்களை ஓரம்கட்டி, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளையக்கூடிய விவசாயப் பொருள்களைத்தான் `இயற்கை காய்கறிகள், ஆர்கானிக் காய்கறிகள்' என்கிறோம்."

"ஆர்கானிக் பொருள்கள் ஏன் தேவை?"

ஆர்கானிக்
ஆர்கானிக்

"ரசாயன விவசாயத்துல (யூரியா, பூச்சிக் கொல்லி) உற்பத்தி செய்யுற பொருள்கள் பல விதத்துல நமக்கு கேடு விளைவிக்கக் கூடியது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது, அது 0.01 சதவிகிதம்தான் பூச்சிகள் மேல விழும். மீதம் செடிகள் மேலயும், மகசூலுக்கு தயாரா இருக்குற பூ மேலதான் விழும். முன்னால ஒருத்தருக்கு கேன்சர் இருந்துச்சுன்னா, அவங்களுக்கு புகை, மதுப்பழக்கம் இருக்கானு கேட்பாங்க. இப்போ 7 மாதக் குழந்தைல இருந்து 70 வயசு பெண்மணி வரைக்கும் கேன்சர் வருது. இதுதவிர, இன்னைக்கு வர்ற பெரும்பாலான நோய்கள் ரசாயன உரங்களால மட்டும்தான் வருது. பயிருக்கு தெளிக்குற மருந்துகள் செடியில மட்டும் இருக்காது. மழை பெய்யும்போது, நீர்மூலம் வழிந்து கிணற்றில் விஷமாக இறங்கும். ரசாயன உரங்களை உபயோகிக்கும் விவசாயிக்கு நேரடியாகவே அதன் தாக்கம் இருக்கும். இப்படிப்பட்ட நிலையிலதான் ஆர்கானிக் பொருள்கள் நமக்குத் தேவைப்படுது. அதனால்தான் இயற்கை விவசாயம் செய்யுறாங்க, அதை வாங்கி இயற்கைப் பொருள்களை சாப்பிடுங்கனு மக்கள்கிட்ட கேட்குறோம்."

"உலக சுகாதார நிறுவனத்தால தடை செய்யப்பட்ட ரசாயன பொருள்கள் இந்தியாவில் இருக்கின்றனவா?"

குழந்தைகள் உணவில், சர்க்கரை ஆபத்து! - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கிளைபோசேட் களைக் கொல்லிகளை இன்னைக்கு பல நாடுகள் தடை செஞ்சிருக்கு. உலக சுகாதார நிறுவனம்கூட கிளைபோசேட் புற்றுநோய் ஏற்படுத்தும்னு சொல்லியிருக்கு. இதுபோக உலக சுகாதார நிறுவனங்கள் பல பூச்சிக்கொல்லிகளை வரையறுத்து தடை செஞ்சிருக்காங்க. ஆனா, இந்தியாவில் இந்தப் பூச்சிக் கொல்லிகள் சுதந்தரமாக உலா வந்துகிட்டுதான் இருக்கு. போன வருஷம்கூட பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள், மோனோகுரோடோபாஸையும், எமிடா குளோரைடையும் கலந்து தெளிச்சாங்க. காலையில தெளிச்சுட்டு மாலையில வீட்டுக்குப் போய் மறுநாளே இறந்தவங்க ஏராளம். வெறும் பருத்தி பூச்சிக்கொல்லிக்கு மட்டுமே இந்த நிலைன்னா, காய்கறிகள், பழங்கள் இன்னும் மற்ற உணவுப் பொருள்களுக்கு நிலை எப்படியிருக்கும்னு நீங்களே நினைச்சுக்கங்க."

"ஆர்கானிக் பொருள்களைக் கண்டுபிடிப்பது எப்படி?"

காய்கறிகள்
காய்கறிகள்

"முதல் வழி, இந்தப் பொருள் எங்க இருந்து வருதுனு கேளுங்க. விவசாயி பெயர், பண்ணை பற்றி அதிகமாக கேளுங்க. அதுபற்றி அவருக்குத் தெரியலைனாலே நாம உஷாராயிடணும். எப்போ ரெண்டு மூணு கை மாறுதோ, அப்போ தவறுகள் பெரிதாக மாறும். அப்போது தவறுகள் வர வாய்ப்புகள் இருப்பதால நாம விழிப்புணர்வோட இருக்கணும். அடுத்ததா ஆர்கானிக் பொருள்களின் சுவை வித்தியாசமா இருக்கும். சீக்கிரமா வேகும். சுவைய வச்சே ஆர்கானிக் பொருள்களைக் கண்டுபிடிக்கலாம். ஆர்கானிக் பொருள்கள்ல சத்துகள் அதிகமா இருக்குனு பல ஆய்வுகள்ல நிரூபிக்கப்பட்டிருக்கு. இப்படி சில கேள்விகள் வழியாகவும், மன நிறைவு வழியாகவும் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்."

"ஆர்கானிக் சர்டிபிகேட் இருந்தால் மட்டும்தான் அது ஆர்கானிக்னு ஒரு சட்டம் வரப்போகுதே... அதை எப்படி பார்குறீங்க?"

Vikatan

"அது சிறு விவசாயிகளையும், சிறு அங்காடிகளையும் வெளியே தள்ளிவிடும். கொள்கைகள் மூலமா வரக்கூடிய கேடுகள்ல இதையும் ஒண்ணா பார்க்கிறேன். ஒரு ஆர்கானிக் பொருளை எங்கேயோ இருக்கும் கம்பெனி நிர்ணயிக்கும்ங்குறதுல எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும். ஒரு விவசாயிகிட்ட இருந்து கடைக்காரர் வாங்குற பொருள்கள் இயற்கையானதுனு சொல்ல 3,000 கி.மீ தாண்டி இருந்து ஒருவர் வந்து சொல்வதை ஏற்கமுடியாது. அந்த கம்பெனிக்காரர்கள் ஆர்கானிக் முத்திரை கொடுக்குறதுக்கு, கட்டணம் வசூலிப்பாங்க. ஆர்கானிக்னு சொன்னா மட்டுமே கம்பெனிக்குப் பணம் கிடைக்கும். பணத்தை எதிர்பார்த்து வர்ற கம்பெனி ஆர்கானிக்னு சொல்லத்தானே செய்வாங்க. அப்போ போலி ஆர்கானிக் பொருள்கள் ஊடுறுவும் வாய்ப்புகளும் அதிகமா இருக்கு. அதனாலதான் இது வேண்டாம்னு சொல்றோம்."

"எல்லா பொருள்களையும் இயற்கை முறையில விளைவிக்க முடியுமா?"

"ரசாயனத்துல விளைவிக்குற பொருள்கள் எல்லாத்தையும், இயற்கையிலேயும் விளைவிக்க முடியும். ரசாயனங்கள் வர்றதுக்கு முன்னால அப்படித்தானே விளைய வச்சோம். அதனால அதுல எந்த வேறுபாடுகளும் கிடையாது.

ஆர்கானிக் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வீடியோவைக் கிளிக் செய்க: