Published:Updated:

நல்ல லாபம் தரும் கெளுத்தி மீன் வளர்ப்பு!

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

நல்ல லாபம் தரும் கெளுத்தி மீன் வளர்ப்பு!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

‘‘கெளுத்தி மீன் வளர்ப்பு பற்றிச் சொல்லுங்கள். இதற்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’

ஞானசேகரன், திருவில்லிப்புத்தூர்.

தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான, சென்னை, மாதவரத்தில் உள்ள வண்ண மீன் வானவில் தொழில்நுட்பப் பூங்காவின் பேராசிரியர் முனைவர் ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் விவரம் தெரிந்த விவசாயிகள் மட்டுமே, கெளுத்தி மீன் வளர்ப்பைச் செய்கிறார்கள். உலக அளவில் தாய்லாந்து நாட்டில் ஹெக்டேருக்கு 100 டன் வரை உற்பத்தி செய்து சாதனை படைக்கிறார்கள். அதுவும் ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடையும் செய்கிறார்கள். சுவை நிறைந்த கெளுத்தி மீன்களுக்குச் சந்தையில் எப்போதும் வரவேற்பு உண்டு. ஒடிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் இந்த மீனை விரும்பி உண்கிறார்கள். கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கெளுத்தி மீன்
கெளுத்தி மீன்

கெளுத்தி மீன் வளர்ப்புக்கு 500 - 1000 சதுரமீட்டர் அளவில் குளங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். சிறிய குளங்களாக அமைந்தால், மேலாண் மைக்கு வசதியாக இருக்கும். குளங்கள் அதிக ஆழம் இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியம். கெளுத்தி மீன்கள் வளர்ப்புக் குளங்களை விட்டு வெளியேறக்கூடியவை. எனவே, குளங்களைச் சுற்றி, வலை மூலம் வேலி அமைக்க வேண்டும். கெளுத்தி மீன்கள் குளத்தில் பள்ளம் தோண்டும் குணம் கொண்டவை. எனவே, குளத்தின் நடுவில் தண்ணீர் தொடர்ந்து விழுமாறு செய்தால், மீன்கள் பள்ளம் தோண்டாது.

 ராவணேஸ்வரன்
ராவணேஸ்வரன்

தேர்வு செய்யப்பட்ட குளங்களை மாட்டுச் சாணமிட்டு தயார் செய்தல் வேண்டும். பங்காசியஸ் என்ற கெளுத்தி மீன் வகை நம் சூழலுக்கு ஏற்றதாக உள்ளது. குளத்தைத் தயார் செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு விரல் அளவுடைய கெளுத்தி மீன் குஞ்சுகளை ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 20,000 வரை இருப்புச் செய்யலாம். பொதுவாக, மாலை நேரங்களில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வது நல்லது. அரிசித் தவிடு, குருணை ஆகியவற்றைத் தினமும் இரண்டு வேளை தர வேண்டும். ஆரம்ப காலங்களில் இருப்புச் செய்யப்பட்ட மீன்களின் மொத்த எடையில் 15 சதவிகிதம் என்ற அளவில் உணவிட வேண்டும். பின்னர், உணவிடும் அளவைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும். 500 கிராம் எடையை அடையும்போது அறுவடை செய்யலாம். கெளுத்தி மீன்களின் வளர்ப்புக் காலம் 6 - 8 மாதங்களாகும். மாதங்கள் கூடக் கூட மீன்களின் எடை அதிகரிக்கும். எனவே, போதுமான நீர் வசதி உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்து நல்ல உற்பத்தியைப் பெறலாம். ஹெக்டேருக்கு 8 - 10 டன் மீன்கள் ஓர் அறுவடைக்குக் கிடைக்கும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கெளுத்தி மீன் வளர்ப்புச் சம்பந்தமான பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு தொடர்பு கொண்டு பயன்பெறவும்.’’

தொடர்புக்கு,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி.
தொலைபேசி: 0461 2340554/ 2340154.

‘‘முதல் முறையாக இயற்கை முறையில் பருத்திச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி சொல்லுங்கள்?’’

என்.சந்திரசேகரன், கை.புதூர், சேலம்.

இயற்கை வழி பருத்திச் சாகுபடியில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த, முன்னோடி இயற்கை விவசாயி கலைவாணி பதில் சொல்கிறார்.

‘‘இயற்கை முறையில் பருத்திச் சாகுபடி செய்ய... தேர்வு செய்த நிலத்தில் 2 டன் தொழுவுரம், 500 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கொட்டி சமன்படுத்தி, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், தக்கைப்பூண்டு, சணப்பு ஆகிய விதைகளை மொத்தமாக 20 கிலோ அளவுக்கு எடுத்து விதைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 45-ம் நாள் இவை நன்கு வளர்ந்திருக்கும். அவற்றை ரோட்டோவேட்டர் கருவியால் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, மண்கட்டிகள் உடையும்படி கலப்பையால் உழுது, பார் எடுத்து, பாத்தி அமைத்து, ஒன்றரை அடி இடைவெளியில், இரண்டிரண்டு பருத்தி விதைகளாக ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு மூன்று கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும். விதைத்த 10-ம் நாள் துளிர்க்கத் தொடங்கும். மண்ணின் தன்மை யைப் பொருத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

பருத்தி
பருத்தி

15 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாளில் களை எடுத்து, இரண்டு லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து... அன்றே 50 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூர்களில் வைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூரில் வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வேர்களைத் தாக்கி சேதப்படுத்தும் வேர்ப்புழுக்கள், தண்டு துளைப்பான், காய்களைத் தின்னும் எலி, அணில் போன்றவற்றை இது கட்டுப்படுத்தி விடும். 60-ம் நாளில் களை எடுக்க வேண்டும். பிறகு, களை எடுக்கத் தேவையில்லை.

இந்தச் சமயத்தில், செடி முழுவதும் காய்கள் காய்த்துவிடும் என்பதால், காய்ப்புழுக்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது. ஆமணக்குக் கரைசல், இனக்கவர்ச்சிப் பொறி, ஆமணக்கு நடவு, கற்றாழை நார்க்கரைசல் போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்படுத்துவதன் மூலமும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். பருத்தி விதைக்கும்போதே 20 அடி இடைவெளியில், ஆமணக்கு விதையை வயல் முழுவதும் விதைத்துவிட்டால், பருத்தி, காய் பருவத்தில் இருக்கும்போது ஆமணக்குச் செடிகளும் 10 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிடும். காய்களைத் தாக்க வரும் பெரும்பகுதிப் புழுக்களை, ஆமணக்குச் செடிகள் ஈர்த்துக் கொள்வதால், பருத்தியில் சேதாரம் ஏற்படாது. ஏக்கருக்குச் சராசரியாக 15 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்.’’

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறதா?’’

@ம.சாந்தி,

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் மூலம் இயற்கை வேளாண்மை பயிற்சி பிரதி மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது.

இயற்கை முறையில் பயிர் சத்துகள் மேலாண்மை, இயற்கை முறையில் களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் அங்கக இடுபொருள்கள் தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, அங்ககச் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் போன்ற தலைப்புகளில் வல்லுநர்கள் வழிகாட்டுகிறார்கள். 7-ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் அடுத்த வேலை நாளில் (திங்கள்கிழமை) நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.590.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்,

வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி: 0422 6611206/2455055

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism