Published:Updated:

விலை இருந்தும்... விளைச்சல் இல்லை!நவதானியத்தின் விற்பனை மையமான விருதுநகர்!

விருதுநகர் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் சந்தை

விற்பனைக்கு வழிகாட்டும் விருதுநகர் சந்தை

விலை இருந்தும்... விளைச்சல் இல்லை!நவதானியத்தின் விற்பனை மையமான விருதுநகர்!

விற்பனைக்கு வழிகாட்டும் விருதுநகர் சந்தை

Published:Updated:
விருதுநகர் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் சந்தை

தமிழகத்தின் முக்கிய வணிக நகரான விருதுநகர் சந்தைகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள், சந்தை வாய்ப்புகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். பருத்தி, மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பருப்பு ஆகிய சந்தைகளின் வரிசையில் நவதானியமும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

விருதுநகர், ஏ.எஸ்.ஏ.ஆறுமுகம் நவதானிய கமிஷன் மண்டியின் உரிமையாளரான ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘தமிழ் நாட்டுலயே தென் மாவட்டங்கள்லதான் மானாவாரி விவசாயம் அதிகமா நடக்குது. விருதுநகர் மாவட்டத்துல விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள்ல பரவலா நடக்குது. அதே மாதிரி தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார், ராமநாதபுரம் மாவட்டத்தோட தென் பகுதிகள்லயும் பரவலா நடக்குது. இது எல்லாமே கரிசல் மண் பூமி. கரிசல் நிலத்தைப் பொருத்தவரை யிலயும் தை, பங்குனி மாசக் கடைசி, சித்திரை தொடக்கம், ஆடி மாதங்கள் முக்கியமானது.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை


மழை பெய்ஞ்சாத்தான் வெள்ளாமையைப் பார்க்க முடியும். மழைத் தண்ணிய உயிர் தண்ணின்னு சொல்லுவாங்க. சித்திரைக் கோடையில பெய்யுற மழைத் தண்ணிய கையில ஏந்தி தலையில தெளிச்சுக்குவாங்க விவசாயிங்க. பருத்தி, மிளகாய், கம்பு, வரகு, கேழ்வரகு, வெள்ளைச் சோளம், இருங்குச் சோளம், தினை, சாமை, வரகு, குதிரைவாலி, மொச்சை, பயறு, உளுந்து, எள்ளு, கொள்ளு மாதிரியான தானிய சாகுபடி நடந்துச்சு. இதுல தீவனச்சோளம், வெள்ளைச் சோளம் தான் அதிக ஏக்கர்ல சாகுபடியாகும்.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

பங்குனி மாசத்துலதான் தினை, கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி மாதிரியான தானியங்கள் அறுவடை நடக்கும். இதே மாசத்துலதான் நாட்டார் தெய்வக் கோயில்கள்ல திருவிழா நடக்கும். கோயில் திருவிழாவை ‘பங்குனிப் பொங்கல்’னுதான் சொல்லுவாங்க. பெரும்பாலும் பச்சரிசிக்குப் பதிலா வரகு, தினையிலதான் பொங்கல் வைப்பாங்க. அந்தத் திருவிழாவுல மாலை நேரத்துல (மாலை 6 முதல் 7 மணி) பெண்மணிங்க முளைப்பாரி தூக்கிக்கிட்டு ஊரைச்சுத்தி வந்து கோயில்ல இறக்குவாங்க.

ஒவ்வொருத்தரோட மண் சட்டியில முளைச்சிருக்குற முளைப்பாரியோட உயரத்தைப் பாத்துதான் அடுத்த வருஷத்தோட வெள்ளாமை எப்படி இருக்கும்னு நாட்டார் தெய்வங்கள் உணர்த்துறதா ஒரு நம்பிக்கை. ஆனா, ஒவ்வொரு விவசாயி வீட்லயும் அவங்கவங்க வீடுகள்ல இருக்க விதையை எடுத்துதான் முளைப்பாரியை வளர வைக்கிறாங்க. விதைகளோட முளைப்பைப் பார்த்து அந்த வீட்டு விவசாயிகிட்ட மத்த விவசாயிங்க விதை வாங்கவும் செய்வாங்க. இந்த முளைப்பாரிச் சடங்குல விதைத் தேர்வு நுட்பமும் மறைஞ்சிருக்கு. திருவிழாவுக்குக் கோயில்ல கால் நட்ட அன்னைக்கே முளைப்பாரி போட்டுடுவாங்க. 7 நாள்கள் வரைக்கும் வளர்ப்பாங்க. 8-வது நாள் கண்மாய்கள்ல அலசிடுவாங்க.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

பங்குனிக்குப் பிறகு, சித்திரை மாசக் கோடை உழவு ரொம்ப முக்கியம். சித்திரை மாசப் பிறப்பு அன்னைக்கோ, முதல் வெள்ளிகிழமையிலயோ, வளர்பிறையில ஏதாவது ஒரு நாள்லயோ பொன்னோர் பூட்டுவாங்க. ஊருல உள்ள கோயில்ல ஏர் கலப்பை, மாடுகளை நிறுத்தி பூஜை செஞ்சு, ஊருல உள்ள எல்லா விவசாயிகளும் ஒண்ணா நடந்து போயி, கோயிலுக்குச் சொந்தமான நிலத்துல கிழ மேலா (கிழக்கு மேற்காக) உழுவாங்க. உழுதுட்டு அவங்கவங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த தானியத்தை ஒரு கை வீசுன பிறகுதான் சொந்த நிலத்துல போயி உழுவாங்க. இந்தக் கோயில் நிலத்துல வளர்ற தானியத்தை ஊருல சுத்திக்கிட்டுத் திரியுற ஆடு, மாடுங்க மேயும்.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

சித்திரை முதல் நாள்ல ஊர்க் கோயில்கள், ஊர்ச் சாவடிகள்ல விவசாயிங்க கூடுவாங்க. புது வருஷப் பஞ்சாங்கம் வாசிப்பாங்க. அதுல மழை பெய்யுறதைப் பத்தி சொல்லுற சேதியைத்தான் விவசாயிங்க உன்னிப்பாக் கவனிச் சுக் கேட்பாங்க. பஞ்சாங்கம் வாசிக்கிற பூசாரிக்கு விவசாயிங்க சேர்ந்து காணிக்கையா நவதானியத்தை ஒரு பை நிறைய கொடுப்பாங்க. பஞ்சாங்க வாசிப்பு முடிஞ்சதும் அந்த வருஷம் என்னென்ன தானியங்களை விளைய வைக்கலாம்... என்ன தானியத்துக்குத் தேவை இருக்கு, முந்துன வருஷத்துல என்ன தானியம் சந்தையில தட்டுப்பாடு ஆச்சுன்னு சாகுபடி சம்பந்தமா விவாதிப்பாங்க.

சில கிராமங்கள்ல எல்லா விவசாயியும் ஒரே தானியத்தை விளைய வைப்பாங்க. சில கிராமங்கள்ல மூணு, நாலு வகைத் தானியத்தை விளைய வைப்பாங்க. தானியங்களுக்குத் தேவை இருந்தாலும், விலை பெரிய அளவுல இருக்காது. பருத்தி, மிளகாய் வத்தல், உளுந்து, பாசி பயறுக்குக் கிடைக்கிற விலையில பாதிகூடத் தானியங்களுக்குக் கிடைக்காது. அதுக்காக யாரும் தானியத்தை விவசாயம் செய்யாம இருந்தது கிடையாது. ரெண்டு ஏக்கர் வச்சிருக்கிற விவசாயிகூட 50 சென்ட்ல யாவது ஏதாவது ஒரு தானியத்தைப் போட்டுச் சந்தைக்குக் கொண்டு வருவார்.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

மழையை மட்டும்தான் நம்பி விவசாயம் செய்யணும்கிறதுனால மானாவாரி விவசாயம் பார்க்குற எல்லா விவசாயிங்களும் ஆடுகளை வளர்ப்பாங்க. அதுலயும் சுத்தக்கறுப்பு, கன்னி, கொடி, வெம்பூர் வெள்ளைன்னு இங்க உள்ள (விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்டினங்கள்) ஆடுகளை வளர்ப்பாங்க. ஆடுகளுக்குக் கம்பு, வெள்ளைச் சோளம், இருங்குச் சோளம், மக்காசோளம் கைத்திருகையில ஒண்ணு ரெண்டா உடைச்சுத் தீவனமாக் கொடுப்பாங்க. பெத்த பிள்ளைக்குக் கொடுக்குற மாதிரி கேழ்வரகைப் பக்குவமா உடைச்சுப் போட்டு வளர்த்த விவசாயிகளும் உண்டு.

இப்படித் தானியத் தீவனம் கொடுத்து வளர்த்த ஆடுகள், நல்ல உடல் திரட்சியோட இருந்துச்சு. அந்த ஆடுகளோட விற்பனையில கூடுதல் வருமானமும் கிடைச்சுச்சு. ஆடி மாசங்கள்ல `சுத்தக்கருப்பு’ ஆட்டுக்கு நல்ல கிராக்கி உண்டு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரையில இருந்தெல்லாம் வந்து கிடாவை வாங்கிட்டுப் போவாங்க. விருதுநகர் மாரியம்மன் கோயில் பொட்டல்ல பருத்தி, மிளகாய் வத்தல், மல்லி உள்ளிட்ட விளைபொருள்களைப் போல, முருகன் கோயில் வாசல்ல நவதானியங்களைச் சாக்குல வரிசையா விற்பனைக்கு வச்சிருப்பாங்க.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

நவதானியத்துக்குன்னு கமிஷன் மண்டிகள் வர ஆரம்பிச்சப்போ, முருகன் கோயிலைச் சுத்தியும் மண்டிகள் பெருக ஆரம்பிச்சது. ‘தானியத்துல என்ன வேணும் னாலும் விருதுநகருக்குப் போங்க’ன்னு சொல்லுற அளவுக்கு எல்லா வகைத் தானிய மும் இங்க கிடைக்கும். வெள்ளைச்சோளம், இருங்குச் சோளம், கேழ்வரகுதான் அதிகமா விற்பனையாச்சு.

பங்குனி, சித்திரை, ஆனி, ஆடி, கார்த்திகை, தை மாசங்கள்லதான் தென் மாவட்டங்கள்ல உள்ள கோயில்கள்ல திருவிழா, கொடை நடக்கும். இந்த மாசங்கள்ல நவதானியத் துக்கான தேவை அதிகமா இருக்கும். அதுலயும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல கமிஷன் மண்டிகள் திறக்குறதுக்கு முன்னாலயே ஊர்க்காரங்க நவதானியத்தை வாங்கிட்டுப் போகுறதுக்காகக் காத்துக் கிடப்பாங்க. மிளகாய் வத்தல், மல்லியோட, நவதானியமும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்குப் போகும். வெறும் தானியமா மட்டும் விற்பனை செய்யாம, தானியத்தைச் சுத்தப்படுத்திச் சில வியாபாரிங்க அரவை மில்லுல மாவா மதிப்புக்கூட்டி பாக்கெட் போட்டு விற்பனை செஞ்சாங்க. தானியத்தை மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம் பார்க்கலாம்னு உணர்த்தினவங்க விருதுநகர் வியாபாரிங்கதான்” என்று சொல்லி முடித்தார்.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

மக்காசோளத்தால் குறைந்த நவதானிய வரத்து

இரண்டாவது தலைமுறையாக நவதானிய வியாபாரம் செய்து வரும் விருதுநகரைச் சேர்ந்த அம்சவேணி டிரேடர்ஸ் உரிமையாளர் தாமோதரனைச் சந்தித்துப் பேசினோம். “விருதுநகர் சந்தையில நவதானியத்தை வித்தா கிலோவுக்கு 5 ரூபாய் வரைக்கும் கூடக் கிடைக்கும்னு விவசாயிகள் மத்தியில ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அது மட்டுமல்லாம மூட்டையை இறக்கி எடை போட்டு முடிச்சதும் பணத்தை எண்ணிடலாம்.

பண விஷயத்துல விருதுநகர் வியாபாரிங்க கடைப்பிடிச்சுட்டு வந்த நாணயமும் ஒரு காரணம். ஒத்த விவசாயியா வர்றதைவிட அஞ்சு பேரு ஆறு பேரு ஒண்ணாச் சேர்ந்து மாட்டுவண்டியில வந்துதான் மூட்டையை இறக்குவாங்க.

கடந்த 15 வருஷங்கள்ல பிராய்லர் கோழிப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரிச்சு கிட்டே இருக்கு. கோழித்தீவனம், மாட்டுத் தீவனத்துக்காக மக்காச்சோளத் தேவையும் அதிகமாச்சு. அதனால, நவதானியம் விளைய வைக்கிறதைக் குறைச்சுக்கிட்டு மக்காச்சோளத்துக்கு மாறினாங்க. கோழிப் பண்ணைக்காரங்களே கிராமங்களுக்கு நேரடியாப் போயி மக்காசோளத்துக்கான தேவையை எடுத்துச் சொல்லிப் பேச ஆரம்பிச்சதும், மக்காச்சோளச் சாகுபடி யோட பரப்பு அதிகமாச்சு. அதுலயும் வீரிய ரகத்தைத்தான் தேர்வு செஞ்சாங்க. சந்தையில நல்ல தேவை, கணிசமான விலையும் கிடைச்சதுனால திரும்புன திசையெல்லாம் மக்காச்சோளமாகத்தான் தெரியுது.

ராஜசேகரன், தாமோதரன்
ராஜசேகரன், தாமோதரன்

அதே நேரத்துல ரசாயன உரம் பயன்படுத்தி விளைய வைக்கிற விளைபொருள்களோட தீமை, பாதிப்புகளை மக்கள் உணர ஆரம்பிச்சுட்டாங்க. சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதிகமாயிருக்கு. நவதானியங்களுக்குச் சந்தையில நல்ல தேவை இருக்கு. ஆனா, மக்காச்சோளத்தின் சந்தை ஆக்கிரமிப்புனால நவதானியங்களோட வரத்து குறைஞ்சுடுச்சு. சுருக்கமாச் சொல்லணும்னா விலை இருந்தும் விளைச்சல் இல்ல. விளைச்சல் இல்லாததுனாலதான் சிறுதானியங்களோட விலை எகிறிப் போயிருக்கு.

குறைந்த நாள்கள், குறைவான பராமரிப்பு, அதிகமான மகசூல், நல்ல விலை எதுல கிடைக்கும்னு பார்த்து விவசாயம் செய்யுற நிலைமை உருவாயிடுச்சு. ஒரு ஏக்கர்ல மானாவாரியா மக்காசோளம் 15 குவிண்டால் முதல் 25 குவிண்டால் வரைக்கும் விளையுது. ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் 2,000 முதல் அதிகபட்சமா 2,500 வரைக்கும் விலைபோகுது. விருதுநகர்ல இருந்து மட்டும் வருஷத்துக்கு 1,00,000 குவிண்டால் வரைக்கும் உற்பத்தியாகுது.

விருதுநகர் சந்தை
விருதுநகர் சந்தை

தமிழ்நாட்டுல ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும், ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங் களுக்குதான் அதிகம் போகுது. அதுமட்டு மல்லாம தூத்துக்குடி துறைமுகத்துல இருந்து கப்பல் மூலமாவும் ஏற்றுமதியாகுது. மக்காச்சோள சாகுபடியுடன் விவசாயிங்க பழைய மாதிரி நவதானிய சாகுபடியை அதிகரிக்கணும்கிறது என்னோட வேண்டுகோள்” என்று கோரிக்கை வைத்தார்.

- பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism