Published:Updated:

1,000 சதுர அடி... தினசரி 10,000 ரூபாய்! கலக்கல் வருமானம் கொடுக்கும் காளான்!

காளான் பண்ணையில் ஶ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
காளான் பண்ணையில் ஶ்ரீராம்

மகசூல்

1,000 சதுர அடி... தினசரி 10,000 ரூபாய்! கலக்கல் வருமானம் கொடுக்கும் காளான்!

மகசூல்

Published:Updated:
காளான் பண்ணையில் ஶ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
காளான் பண்ணையில் ஶ்ரீராம்

சேலம் மாவட்டம், தாரமங்கலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேடப்பட்டி கிராமம். ஊருக்குள் நுழைந்தவுடன் வெளியூர் வண்டியைப் பார்த்ததும், ‘ஶ்ரீராம் காளான் பண்ணைக்கு போறீங்களா?’ என்று விசாரிக்கிறார்கள் ஊர்மக்கள். ‘ஏரிக்கரைக்கு அடுத்து இருக்கக் கூரைக்கொட்டகையில காளான் பண்ணை இருக்குப் போய்ப் பாருங்க’ என்று ஏரிக்கரையோரம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் வழி சொன்னார்கள்.

ஏரிக்கரையின் மறுபக்கத்தில் இருக்கும் ஓடையைக் கடந்து கூரைக்கொட்டகையை அடைந்தோம். அங்கிருந்த இளைஞர்கள், ‘காளான் வேண்டுமா, கொஞ்சம் இருங்க, வேலையை முடிச்சிட்டு வர்றோம்’ என்று சொல்லிவிட்டு, காளான் எடைபோடும் படலத்தில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். காளான் அறுவடையை முடித்துவிட்டு வந்த பண்ணையின் உரிமையாளர் ஶ்ரீராமிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“பி.இ படிச்சிருக்கேன். படிக்கும்போதே உணவு தயாரிப்புல ஆர்வம் இருந்துச்சு. ‘கேட்டரிங்’ படிக்க ஆர்வம் இருந்தது. ஆனா, வீட்ல சேர்த்து விடல. சரி கடை வைக்கலாமேனு முயற்சி பண்ணினேன். அதுக்கும் வீட்டுல பணம் தரல. நானும், என்னோட நண்பரும் சேர்ந்து, ஏதாவது செய்யணும்னு யோசிச்சோம். அப்பத்தான் காளான் வளர்க்கலாம்னு முடிவுக்கு வந்தோம்.

காளான் பண்ணையில் ஶ்ரீராம்
காளான் பண்ணையில் ஶ்ரீராம்

பக்கத்து ஊர்ல ஒரு காளான் பண்ணை இருக்கு. அங்க ஒரு நாள் போய்ப் பார்த்தோம். அதுக்குப் பிறகு காளான் பண்ணை தொடங்கலாம்னு முடிவு பண்ணி முழுமூச்சா இறங்கிட்டோம். ஆரம்பகட்ட செலவுக்கு நண்பர்கள்கிட்ட கேட்டு 75,000 ரூபாய் தயார் பண்ணினோம். அந்தப் பணத்தை வெச்சு, 2017-ம் வருஷம் சின்னதா 150 சதுரஅடி இடத்தில கொட்டகைப் போட்டுச் சிப்பிக் காளான் வளர்க்கத் தொடங்கினோம். முதல் ரெண்டு வருஷம் நிறைய கஷ்டங்களைச் சந்திச்சோம். நல்ல அறுவடை கிடைக்காது. விதை கொடுக்குறவங்ககிட்ட கேட்டா,

‘நீங்க நல்லா பராமரிக்கல’னு சொல்லிட்டு இருந்தாங்க. நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் தெரிஞ்சது நல்ல விதையைத் தேர்வு செய்யாததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்னு. விதை கொடுக்குறவங்க முதல்ல தரமான விதையைக் கொடுக்காம, ரெண்டாம், மூன்றாம் தர விதைகளைக் கொடுத்து ஏமாத்திட்டாங்க. நல்ல அறுவடை கிடைக் காததால முதல் ரெண்டு வருஷத்துல

2 லட்சத்துக்கு மேல கடனே வாங்க வேண்டிய தாயிடுச்சு. அதுக்குப் பிறகு, தரமான விதைகள் வாங்கிக் காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். இப்ப தொழில் லாபத்துல போயிட்டு இருக்கு’’ என்றவர், காளான் வளர்ப்புத் தொழிலில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

காளான் பண்ணையில்
காளான் பண்ணையில்

‘‘ஆரம்பத்துல எப்படி விற்பனை செய்றதுன்னு தெரியல. ஒரு கடையில காலை யில 5 மணிக்கே வேணும்னு சொன்னாங்க. நாங்க, 4 மணிக்கே எழுந்து காளானைப் பறிச்சுக்கிட்டுப் போய்க் கொடுத்தா, விலையை ரொம்பக் குறைச்சி கேட்டாங்க. இதனால, விற்பனையில பெரிய தேக்கம் ஏற்பட்டுச்சு. பிறகுதான் எங்கெங்கலாம் காளான் பண்ணை போட்டு இருக்காங்க, அவங்க எப்படி விற்பனை செய்றாங்கன்னு ஒவ்வொரு பண்ணையாப் போய் விசாரிச் சோம். சிலபேர் காளான் பண்ணைக்குள்ள உள்ளே விடமாட்டாங்க. அப்புறம் இணையம், பசுமை விகடன் மூலமா படிச்சு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டோம்.

நாங்க ஆரம்பிச்சப்ப, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்குறதே பெரிய விஷயமா இருந்தது. பிறகு காளான் உற்பத்தியை அதிகரிச்சு, அறுவடை செய்த காளானை கவனமா பாக்கெட் போட்டு விற்பனைக்கு அனுப்பினோம். அதன் பிறகு விற்பனை அதிகரிச்சது. 150 சதுரஅடி கொட்டகையில ஆரம்பிச்சு, இப்போ, 1,000 சதுரடியில 6 கொட்டகை இருக்கு. பெங்களூரு, சென்னை, கோயமுத்தூர்னு வெளியூரிலிருந்து எல்லாம் ஆர்டர் வருது. தினமும் 60 முதல் 70 கிலோ காளானை அறுவடை செய்றோம். தினமும் 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. வைக்கோல், பேக்கிங், காளான் விதைகள், போக்குவரத்துனு ஒரு நாளைக்கு 7,000 ரூபாய் செலவாகுது. அதுபோக 3,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சுகிட்டு இருக்கு” என்றவர் நிறைவாக,

காளான் பண்ணையில்
காளான் பண்ணையில்

‘‘காளான் விற்பனையைப் பொறுத்தவரை கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தியை அதிகரிக்கணும். ஒரே சமயத்தில் 50 கிலோ அளவுக்கு உற்பத்தி செஞ்சுட்டு விற்பனை வாய்ப்பு இல்லாம தடுமாறக் கூடாது. கிராமங் களைவிட நகரங்கள்லதான் காளானை மக்கள் விரும்பி வாங்குறாங்க. அதனால, நகர்ப்பகுதியில விற்பனை வாய்ப்பைத் தேடணும். நீரிழிவு நோயாளிகளுக்குக் காளான் ரொம்ப நல்லது. இதுக்கான விழிப்புணர்வு அதிகமாகிக்கிட்டு வருது. அதனால இனி வரும் காலங்கள்ல விற்பனைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். கடைகள்ல விற்பனைக்காகக் கொடுக்குற காளான் விற்பனையாகலைன்னா திரும்பக் கொடுத்திடுவாங்க. அதை எடுத்து காய வெச்சு பொடி தயார் பண்ணி விற்பனை செய்யலாம். காளான் சூப், கால்நடை தீவனம் தயாரிப்புல பயன்படுத்திக்கலாம். பொருள் வீணாகாம பார்த்துகிட்டா போதும். நஷ்டம் இல்லாம தொழில் செய்யலாம்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஶ்ரீராம்,

செல்போன்: 96263 31387.

காளான் வளர்ப்பு தொடர்பாக ஶ்ரீராம் சொன்ன

தொழில்நுட்ப தகவல்கள் இங்கே பாடமாக...

காளான் பண்ணை தொடங்க நினைப் பவர்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் 100 அல்லது 150 சதுர அடியில் ஆரம்பிக்கலாம். கூரைக் கொட்டகையாக இருந்தால் நல்லது. காளான் வளர்ப்புக்குக் கொட்டகையின் வெப்பநிலை பராமரிப்பு மிக மிக அவசியம். கொட்டகைக்குள் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதம் இருப்பதுபோல் பராமரிக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே காளான் வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும்.

கொட்டகை
கொட்டகை

கொட்டகைக்குள் சணல் சாக்குப் பைகளைச் சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, அதன்மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்பநிலையும், ஈரப்பதத்தையும் சரியான முறையில் பராமரிக்கலாம்.

பருவகாலத்துக்கு ஏற்ப பராமரிப்பையும் மாற்ற வேண்டும். மழைக்காலத்தில் பெரிய அளவில் பராமரிப்புத் தேவையில்லை. காளான் விளைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், கோடைக்காலத்தில் காளான் விளைச்சல் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் அதிக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.

150 சதுர அடியில் காளான் வளர்ப்பைத் தொடங்க கொட்டகை, வைக்கோல், விதைகள், தண்ணீர் என்று ஆரம்பகட்ட முதலீடு 1 லட்சம் ரூபாய் வரை ஆகும். சரியான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் மூன்று மாதத்திலேயே போட்ட பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாம். சிறிய அளவில் ஆரம்பிக்கும்போது ஆள்கள் தேவைப்பட மாட்டார்கள். தரமான 1 கிலோ காளான் விதை 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 150 சதுர அடி கொட்டகையில் தொடங்க 20 கிலோ விதை தேவைப்படும்.

காளானை பாக்கெட் செய்யும் பணி
காளானை பாக்கெட் செய்யும் பணி

வைக்கோல், வெயில் காலத்தில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். மழைக்காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மட்கிப் போன, பழைய வைக்கோலாக இல்லாமல் புதிதாக அறுவடை செய்த வைக்கோலை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

வைக்கோலை ‘பிளாஸ்டிக் டிரம்’மில் போட்டு ஊற வைக்க வேண்டும். வைக்கோலில் இருக்கும் தேவையில்லாத பூஞ்சணங்களை அகற்றிய பின்பு, வெந்நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். வைக்கோலில் எஞ்சியிருக்கும் நஞ்சு பூஞ்சணங்களை அகற்ற எதிர் பூஞ்சை உயிரியைப் போட வேண்டும். ஒரு ‘டிரம்’மில் வைக்கோலை ஊற வைக்கும்போது 25 கிராம் அளவுக்கு எதிர் பூஞ்சை உயிரியைப் போட்டாலேயே போதுமானது. ஒரு ‘டிரம்’மில் முக்கால் கட்டு வைக்கோலைப் போட்டு ஊற வைக்கலாம். 18 மணி நேரம் ஊறினாலே போதுமானது. பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கலாம். அதில் ஈரப்பதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு, 2 கிலோ அளவிலான பையில் வைக்கோலை பந்துபோல் சுருட்டிப் போட வேண்டும்.

பைகளில் வைக்கோல் நிரப்புதல்
பைகளில் வைக்கோல் நிரப்புதல்

ஒரு ‘பிளாஸ்டிக் பை’யில் வைக்கோலைச் சுருட்டி வைத்து அதன்மீது விதையைத் தூவி விட வேண்டும். மீண்டும் வைக்கோலைச் சுருட்டி பந்துபோல் வைக்க வேண்டும். அதன்மீது மீண்டும் விதையைத் தூவி விட வேண்டும். இப்படி 3 முதல் 5 பந்து உருண்டைகளை ஒரு பையில் வைக்கலாம். பிறகு பையை இறுக்கமாகக் கட்டிவிட்டால் காளான் படுக்கை தயாராகிவிடும். பையில் பத்து இடங்களில் சின்னச் சின்ன ஓட்டைகள் போட்டு விட வேண்டும். ஒரு கிலோ விதையைக் கொண்டு நான்கு படுக்கைகள் தயாரிக்கலாம். தயார் செய்த படுக்கைகளை வரிசையாகக் கயிற்றில் தொங்க விட வேண்டும்.

படுக்கைகளை நிலத்திலிருந்து ஓர் அடி உயரத்தில், நிலத்தில் படாத அளவுக்கு உயரமாகக் கட்டி தொங்க விட வேண்டும். 15 நாள்களில் படுக்கை முழுவதும் வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கும். உள்ளே ஈரப்பதம் குறையும்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெப்பநிலையும் ஈரப்பதமும் நல்ல நிலையில் பராமரித்து வந்தால் 22-ம் நாளில் காளான் பூக்கள் வெளியே வர ஆரம்பிக்கும். 25-ம் நாளில் அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையிலிருந்து சராசரியாக 1 கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காளானை எடை போட்டுப் ‘பாக்கெட்’ செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

கட்டி தொடங்கவிடுதல்
கட்டி தொடங்கவிடுதல்

அறுவடை செய்த காளானைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் மூன்று நாள்கள் வைத்திருக் கலாம். வெளியூருக்கு அனுப்ப மாலை நேரத்தில் அறுவடை செய்யலாம். உள்ளூரில் விற்பனை செய்ய அதிகாலையில் அறுவடை செய்யலாம். 150 கிராம், 175 கிராம், 200 கிராம் ‘பாக்கெட்’களில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் அதிகபட்சமாக 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சான்றிதழ் அவசியம்

காளான் நேரடியாகச் சாப்பிடும் பொருள் என்பதால் உணவுப் பரிசோதனை சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தச் சான்றிதழைப் பெற ‘ஆன்லைன்’ வழியே எஃப்.எஸ்.எஸ்.ஐ (FSSAI) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு நாளைக்கு 3,500 ரூபாய்க்குக் குறைவாக விற்பனை செய்தால் 100 ரூபாய்ச் செலுத்தினால் போதும். 3,500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் ஆண்டுக்கு 2,000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism