Published:Updated:

தேன், தென்னை, மா, பலா, வாழை, ஆடு, கோழி, காய்கறி, மண்புழு உரம்... 5 ஏக்கர், ரூ.5 லட்சம்...

பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்

உயரவைக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

தேன், தென்னை, மா, பலா, வாழை, ஆடு, கோழி, காய்கறி, மண்புழு உரம்... 5 ஏக்கர், ரூ.5 லட்சம்...

உயரவைக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

Published:Updated:
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்

ஒருங்கிணைந்த பண்ணை

டித்தவர்கள் விவசாயத்தை விட்டு விலகி வேறு வேலைக்குப் போகும் நிலை இன்றைக்கு மாறிவிட்டது. பாரம்பர்ய விவசாயிகளுக்கு இணையாகப் படித்த இளம் விவசாயிகள் பலரும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் நிஷா மைதீன்.

புதுக்கோட்டை, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பெண் விவசாயி நிஷா மைதீன். பி.காம், எம்.பி.ஏ, எம்.பில் பட்டதாரி. தனியார் பள்ளி ஆசிரியை. இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் காரணமாக, ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, தனது 5 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கும் திருவரங்குளம் அருகே வேப்பங்குடி என்ற கிராமத்திலிருக்கிறது ‘நிஷா இயற்கை விவசாயப் பண்ணை’ ஒரு காலைப்பொழுதில் அந்தப் பண்ணைக்குச் சென்றோம். தூறல் விடாமல் பெய்து கொண்டிருந்தது. தூறலிலும் விவசாய வேலை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. காய்கறி அறுவடை பணியிலிருந்த நிஷா, நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

பண்ணையில்  நிஷா மைதீன்
பண்ணையில் நிஷா மைதீன்

“புதுக்கோட்டைதான் சொந்த ஊரு. என்னோடு கூடப்பிறந்தவங்க 4 பேர். சின்ன வயசிலயே பிழைப்புக்காகச் சென்னைக்குப் போயிட்டோம். 10-ம் வகுப்புவரைக்கும் சென்னையிலதான் படிச்சேன். ஒரு கட்டத்துல அப்பா தொழில்ல நஷ்டமாகிடுச்சு. அதனால திரும்பவும் புதுக்கோட்டைக்கே வந்திட்டோம்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில ‘பி.காம்’ சேர்ந்தேன். கல்லூரியில சேர்ந்தப் பவே, புதுக்கோட்டையில ஒரு கம்பெனியில பகுதிநேர வேலையிலும் சேர்ந்திட்டேன். வேலையைப் பார்த்துக்கிட்டே ‘எம்.பி.ஏ, எம்.பில்’ வரைக்கும் படிச்சு முடிச்சேன். எம்.பி.ஏ படிக்கும்போதே கல்யாணம் ஆகிருச்சு. எனக்கு ரெண்டு பையனுங்க. வீட்டுக்காரரு வெளிநாட்டுல வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. படிச்சு முடிச்ச உடனே புதுக்கோட்டை அரசுப் பெண்கள் கல்லூரியில கெளரவ விரிவுரையாளராக வேலையும் கிடைச்சது. ரெண்டாவது பையன் பொறந்த பிறகு, அந்த வேலையை விட்டு நின்னுட்டேன். சில வருஷங்களுக்கு அப்புறம் தனியார் பள்ளியில ஆசிரியராகவும் வேலை பார்த்தேன்’’ என்றவர், தான் விவசாயத்துக்குள் வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

எழில் கொஞ்சும் ஒருங்கிணைந்த பண்ணை
எழில் கொஞ்சும் ஒருங்கிணைந்த பண்ணை

“கணவருக்கு விவசாயத்துல அதிக ஆர்வம். 2015-ம் வருஷம் இந்தத் தோட்டத்தை வாங்கினோம். இது மொத்தம் 5 ஏக்கர். வாங்கும்போதே தென்னை, மா, பலான்னு சில மரங்கள் இருந்துச்சு. மற்ற இடங்கள் தரிசா கெடந்துச்சு. ரொம்ப வறட்சியான பகுதி. வேலைக்கு ஆள் போட்டு, எங்க அப்பா பார்த்துட்டு இருந்தாரு. இந்தத் தோட்டம் வாங்கும்போது எனக்கு விவசாயத் தைப் பத்தி எதுவுமே தெரியாது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அப்புறம்தான் விவசாயத்தைப் பத்தின முழுமையான புரிதலே எனக்கு வந்திச்சு. அதுவரைக்கும் தோட்டத்தை எட்டிகூடப் பார்க்காத நான், தினமும் தோட்டத்துக்குப் போக ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் நம்மாழ்வார் பத்தி தெரிஞ்சுகிட்டு அவரோட கருத்துகளைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயம் பற்றி அவர் பேசினதையெல்லாம் ‘யூடியூப்’ல வீடியோவாப் பார்த்தேன். இயற்கை விவசாயி ஒருத்தர் மூலமா பசுமை விகடன் அறிமுகமாச்சு.

காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி

பசுமை விகடன் மூலமா பல இயற்கை விவசாயிகளோட தொடர்புகளையும் ஏற்படுத்திக்கிட்டேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். இப்படி இயற்கை விவசாயத்து மேல ஈடுபாடு அதிகமானதால 5 ஏக்கர்லயும் இயற்கை விவசாயமே செய்யணும்னு முடிவு பண்ணி னேன். கொஞ்ச நாள்லயே அப்பாவுக்கு ஓய்வு கொடுத்திட்டேன்’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“விவசாயம் செய்ய வீட்டுக்காரரு எனக்கு ரொம்பவே உதவி பண்ணாரு. விவசாயம் பார்க்க வந்ததும், முதன்முதலா ஒரு பசுமாட்டை வாங்குனேன். ஒரு ‘போர்வெல்’ போட்டோம். தோட்டம் முழுக்க சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மாத்தினேன். இருக்கிற சில மரங்களோட இன்னும் சில மரங்களை அதிகப்படுத்தி ஒருங்கிணைந்த பண்ணையமா மாத்த முடிவு செஞ்சு, அதைச் செயல்படுத்த ஆரம்பிச்சேன்.

இப்ப, எங்க பண்ணையில 5 ஏக்கர்ல 160 தென்னை மரங்கள், 15 பலா, 80 மா, 200 கொய்யா, 50 நாவல், 25 சப்போட்டா, 50 பப்பாளி, 300 வாழை, 52 எலுமிச்சை, 22 கொடுக்காய்ப்புளி மரங்களையும் நடவு செஞ்சிருக்கோம். ஒரு ஏக்கர்ல காய்கறி விவசாயமும் நடக்குது. ஆடு, மாடு, கோழி வளர்ப்பும் நடக்குது. இதோடு மல்பெரி ‘ஷெட்’ போட்டுப் பட்டுப்புழு வளர்க்கிற முயற்சியும் நடந்துகிட்டு இருக்கு. மீன்குட்டை வெட்டி மீன் வளர்ப்பை ஆரம்பிக்கணும்’’ என்றவர், விவசாயத்தால் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசினார்.

எலுமிச்சை
எலுமிச்சை

“ஆரம்பத்துல புதுக்கோட்டையிலிருந்து தோட்டத்துக்கு ‘டூவீலர்’ல வருவேன். இப்போ வீட்டுக்காரரு ‘கார்’ வாங்கிக்கொடுத்திட்டாரு. ரெண்டு பையன்களையும் காலையில பள்ளிக்கூடத்துக்குக் அனுப்பி விட்டுட்டு இங்க வந்திடுவேன். இங்க இருக்க, நாய், ஆடு, மாடு, மரம், செடி, கொடிக எல்லாம் நான் பெத்து எடுக்காத பிள்ளைங்க. எப்படியும் இவங்கள பார்க்காம இருக்க முடியாது. அதனால தினமும் தவறாம தோட்டத்துக்கு வந்திடுவேன். வேலைக்கு ரெண்டு பேர் இருக்காங்க. நானும், அவங்களோட சேர்ந்து வேலை பார்ப்பேன்.

இயற்கை இடுபொருளுக்குச் செலவு செய்யக் கூடாது

பேக்கிங், மதிப்புக்கூட்டல், விற்பனை பண்றதுன்னு எல்லாத்தையும் நானே பார்த்துக்குவேன். அதனாலதான் என்னால வெற்றிகரமாக இயங்க முடியுது. இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் இடுபொருள்களுக்குன்னு பெருசா நாம செலவு செய்யக் கூடாது. ஜீரோ பட்ஜெட்ல தான் விவசாயம் பண்ணனும்னு வைராக்கியமா இருப்பேன். அது மாதிரியே, எங்க தோட்டத்துல கிடைக்கிறதை வச்சே, இயற்கை இடுபொருள்களைத் தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

இயற்கை இடுபொருள்களுடன்
இயற்கை இடுபொருள்களுடன்

பஞ்சகவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், பழைய கஞ்சி கரைசல், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் கரைசல், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல்னு நிறைய இடுபொருள்கள் தயாரிக்கிறேன். இப்போ இடுபொருள்களை இலவசமாகச் சிலருக்குக் கொடுக்கிறேன். மாடித்தோட்டம் வச்சிருக்கவங்க, சின்னதா இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமா இருக்குற பலரும் விலைக்கும் வாங்கிட்டுப் போறாங்க’’ என்றவர், வருமான கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

“இந்த 5 ஏக்கர் பண்ணையில இருந்து வருஷத்துக்கு தென்னை மூலம் 60,000 ரூபாய், தேன் மூலமா 2,00,000 ரூபாய், காய்கறிகள் மூலமா 60,000 ரூபாய், மாம்பழம் மூலமா 35,000 ரூபாய், கொய்யா மூலமா 25,000 ரூபாய், பப்பாளி மூலமா 15,000 ரூபாய், எலுமிச்சை மூலமா 18,000 ரூபாய், கால்நடைகள் மூலமா 38,800 ரூபாய், மண்புழு உரம் மூலமா 10,000 ரூபாய், சப்போட்டா, பலா, நாவல், வாழை மூலமா 41,200 ரூபாய்னு மொத்தமா 5,03,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் நிஷா மைதீன்

சாம்பல்தான் பொட்டாஷ்

“பல விவசாயிங்க பொட்டாஷ், யூரியான்னு உரத்தைத் தேடி போறாங்க. அப்படிப் போகும்போது அதிக செலவாகும். நஷ்டமும் ஏற்படும். பொட்டாஷ்ங்கிறது சாம்பல்தான். நம்ம தோட்டத்துல இருக்கத் தேவையில்லாத குப்பைகளை எரிச்சு, அந்தச் சாம்பலைப் போட்டாலே பொட்டாஷ் சத்து கிடைச்சிடும். இப்படி இயற்கையிலேயே எல்லாச் சத்துகளும் கிடைக்குது. விவசாயிகள் எல்லாரும் இயற்கை விவசாயத்துக்கு மாறணும். நான் என்னோட தோட்டத்துல கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அரசு மானியத்துலதான் பெரும்பாலான வேலைகளைச் செஞ்சிருக்கேன். அரசோட திட்டங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு, அதை மானியத்துல வாங்கி விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். ஒருங்கிணைந்த பண்ணையத்தை ஜீரோ பட்ஜெட்ல வெற்றி கரமாக நடத்துறதால நிறைவான லாபம் கிடைக்குது” என்கிறார்.

தொடர்புக்கு, நிஷா மைதீன்,

செல்போன்: 99948 07068

தென்னை

தன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையிலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்து பேசிய நிஷா மைதீன்,

“பண்ணையைச் சுற்றிலும் 160 தென்னை மரங்கள் இருக்கு. இதுல 80 மரங்கள்தான் இப்போ காய்ப்புல இருக்கு. 3 மாசத்துக்கு ஒரு வெட்டு. வருஷத்துக்கு 4 முறை தேங்காய் பறிச்சு விற்பனை செய்றோம். தென்னை மூலமா வருஷத்துக்கு 7,500 காய்கள் கிடைக்குது. ஒரு காய் 10 ரூபாய்னு விற்பனை செய்றோம். அதன் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வியாபாரிககிட்ட மொத்தமா கொடுக்கிறதால, ஏத்துக்கூலி, வாடகை கொடுக்கத் தேவையில்ல. பறிக்கிறவங் களுக்கு காய்க்கு ஒரு ரூபாய்னு 7,500 ரூபாய். குப்பை எரு வைக்கிறது, பராமரிப்புச் செலவு 7,500 ரூபாய். ஆக மொத்தம் 15,000 ரூபாய் வரை செலவு ஆகும். அந்தச் செலவுபோகத் தென்னையிலிருந்து வருஷத்துக்கு 60,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. அடுத்த வருஷத்துல இருந்து இன்னும் சில மரங்கள் காய்ப்புக்கு வந்திடும். லாபமும் அதிகரிக்கும்.

தேனீப் பெட்டி
தேனீப் பெட்டி

மரங்களுக்குக் கீழே தொடர்ந்து ஈரப்பதம் இருக்கவும், வேர்க்கறையான் நோய் தாக்கத் திலிருந்து பாதுகாக்கவும் ஒவ்வொரு தென்னை மரத்துக்குக் கீழேயும் சோற்றுக் கற்றாழை வச்சிருக்கோம். அதே மாதிரி தென்னை மரத்துக்குத் தேவை ‘போரிக் ஆசிட்’. நம்ம கிராமத்தைச் சுற்றிலுமே கிடைக்கிற எருக்கஞ்செடியில ‘போரிக் ஆசிட்’ இருக்கு. இந்த எருக்கஞ்செடியைத் தண்ணியில ஊறவச்சு, அதைத் தென்னை வேர்ல கொடுக்கும்போது குரும்பைக் கொட்டுறது தவிர்க்கப்படும். இதை என்னோட நேரடி அனுபவத்தில தெரிஞ்சு கிட்டேன்.

தேன்

தேனீ வளர்த்தால், குரும்பை கொட்டாதுன்னு சொன்னாங்க. ஒரு தேனீப்பெட்டி வாங்கித் தேனீ வளர்ப்பை ஆரம்பிச்சேன். பிறகு, கோயம்புத்தூர் போய்த் தேனீ வளர்ப்பு பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். 60 பெட்டிகள் வரையிலும் இப்போ என்கிட்ட இருக்கு. மாசத்துக்குச் சராசரியா 50 கிலோ தேன் கிடைக்குது. ஒரு கிலோ தேன் 400 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். நிறைய பேர் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. விற்பனைக்கு எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. வருஷத்துக்கு 600 கிலோ தேன் கிடைக்குது. தேன் மூலமா 2,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. தேன் எடுக்கிற கூலி, பாட்டில் செலவுகள்னு பார்த்தால் 40,000 ரூபாய் செலவாகும். மீதி 2,00,000 ரூபாய் தேன் மூலமா நிகர லாபமாகக் கிடைக்குது.

மண்புழு உரம்
மண்புழு உரம்

மாம்பழம்

இமாம்பசந்த், பங்கனபள்ளி, ருமானி, கல்லாமை, காசா லட்டு ரகங்கள் இருக்கு. ஏப்ரல் முதல் ஜூலை வரை சீஸன். இமாம்பசந்த் 150 கிலோ, பங்கனபள்ளி 100 கிலோ கிடைச்சது. இது ரெண்டையும் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். அதுல 20,000 ரூபாய் கிடைச்சது.

மற்ற ரகங்கள் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா 400 கிலோ கிடைச்சது. கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செஞ்சோம். அந்த வகையில் 20,000 ரூபாய் கிடைச்சது. மொத்தமா இந்த வருஷம் மாம்பழம் மூலமா 40,000 ரூபாய் கிடைச்சது. பறிப்புக் கூலி, இதரச் செலவுகள்னு 5,000 போனாலும், 35,000 லாபமாக நின்னுச்சு. எல்லாத்தையும் நானே பழுக்க வெச்சு நேரடியாக விற்பனை செஞ்சதால, நல்ல லாபம் கிடைச்சது.

கொய்யா
கொய்யா

கொய்யா

200 கொய்யா மரங்கள் இருக்கு. அதுல 80 கொய்யா மரங்கள் காய்ப்புல இருக்குது. போன வருஷம் 700 கிலோ காய் கிடைச்சது. அதுல வீட்டுக்கு, சொந்தக்காரங்களுக்குன்னு கொடுத்தது போக 600 கிலோவை, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். அந்த வகையில 30,000 ரூபாய் கிடைச்சது. பராமரிப்பு, பறிப்புக் கூலி, விற்பனைனு 5,000 ரூபாய் செலவு போக 25,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைச்சது. அடுத்த வருஷத்துலயிருந்து மற்ற மரங்களும் காய்க்க ஆரம்பிச்சிடும்.

பப்பாளி

பண்ணை ஆரம்பிச்சப்ப பப்பாளி நிறைய போட்டிருந்தேன். கஜா புயல்ல எல்லாம் ஒடிஞ்சு விழுந்திருச்சு. இப்போ, 25 பப்பாளி மரங்கள் இருக்கு. வாரத்துக்கு 10 பப்பாளிப் பழங்கள் வரைக்கும் கிடைக்கும். கிலோ கணக்குல கொடுக்க மாட்டேன். ஒரு பப்பாளி 40 ரூபாய்னு கொடுப்பேன். மாசத்துக்கு 40 பப்பாளி பழம் மூலமா 1,600 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்குப் பப்பாளி மூலமா 19,200 ரூபாய் கிடைக்கும். இயற்கை அங்காடியில்ல மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க. பறிப்புக் கூலி, விற்பனை செலவுன்னு 4,200 ரூபாய் கழித்தால், 15,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

மாடுகள்
மாடுகள்
கோழிகள்
கோழிகள்

எலுமிச்சை

52 எலுமிச்சை மரங்கள் இருக்கு. அடுத்த வருஷத்திலிருந்து இந்த மரங்கள்ல மகசூல் எதிர்பார்க்கலாம். முன்னாடியே இங்க இருந்த 2 எலுமிச்சை மரங்கள்ல இருந்து மாசத்துக்கு 25 கிலோ காய் கிடைக்குது. கிலோ 20 ரூபாய் வரை விலை போகும். ஆனா, விற்பனை செய்ய மாட்டேன். அப்படிச் செஞ்சா 500 ரூபாய்தான் கிடைக்கும். ஆனா, நான் ஊறுகாய் போட்டுறுவேன். அதை 2,000 ரூபாய்க்கு விற்பனை செஞ்சிடுவேன். இப்படி வருஷத்துக்கு எலுமிச்சையிலிருந்து 24,000 ரூபாய் கிடைக்கும். எண்ணெய், மிளகாய்ப்பொடினு 6,000 ரூபாய் செலவு வச்சாலும் 18,000 நிகர லாபமா கிடைக்கும்.

ஆடுகள்
ஆடுகள்

கால்நடை

ஆடு, மாடு, கோழி வளர்க்குறேன். 3 மாடுகள், ரெண்டு கன்றுகள் இருக்கு. பசுந்தீவனமா கோ-4, அகத்தி வரப்புல போட்டுருக்கேன். அது ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகக் கிடைக்குது. 2 பால் மாடுகள் மூலமா தினமும் 3 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் என்னோட வீட்டுத் தேவைக்கு எடுத்துக்குவேன். மீதி 2 லிட்டரை விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் 50 ரூபாய். நான் ஒரு லிட்டர் எடுத்துக்கிறதைச் சேர்த்து, தினமும் பால் மூலமா 150 ரூபாய் கிடைக்கும். மேய்ச்சல், தீவனம், பராமரிப்பு தினமும் 70 ரூபாய் செலவாகிடும். பால் மூலம் மாசம் 2,400 ரூபாய் வீதம் வருஷத்துக்கு 28,800 ரூபாய் லாபம் கிடைக்கும்.

8 ஆடுகள் இருக்கு. ஆடுகளை விற்பனை செய்யல. 20 அசில் கோழிகள், 10 சேவல்கள் இருக்கு. கறிக்காகக் கோழி விற்பனை செய்ற தில்ல. முட்டையை மட்டும் விற்பனை செய்றேன். மாசத்துக்கு 100 முட்டைகள் கிடைக்கும். ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 1,200 முட்டைகளை விற்பதன் மூலம் 12,000 ரூபாய் கிடைக்குது. இதர செலவுகள் எல்லாம் போக 10,000 ரூபாய் கோழிமூலம் லாபமாகக் கிடைக்குது.

காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி

காய்கறி

கத்திரி, தக்காளி, பாகற்காய், புடலங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், கருணைக் கிழங்கு, சுரைக்காய், கீரை வகைகள் ஒரு ஏக்கர்ல போட்டுருவேன். சீஸனைப் பொறுத்து போட்டுக்குவேன். பெரும்பாலான கீரை வகைகளைப் பயிர் செஞ்சிடுவேன். காய்கறிகள் மூலமா தினசரி 300 ரூபாய் கிடைச்சிடும். அந்த வகையில வருஷத்துக்குச் சராசரியா 1,00,000 ரூபாய் கிடைக்கும். இதுல, விதை, நடவு, பறிப்புக் கூலி, விற்பனைனு எல்லாச் செலவும் 40,000 ரூபாய் வச்சாலும், 60,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும்.

மண்புழு உரம்

மண்புழு உரம் தயாரிச்சிக்கிட்டு இருக்கேன். மாசத்துக்கு 200 கிலோ மண்புழு உரம் எடுக்கலாம். 100 கிலோ எங்களோட தோட்டத் தேவைக்கு எடுத்துக்குவோம். மீதியிருக்க 100 கிலோவை விற்பனை செய்றேன். கிலோ 10 ரூபாய். 25 கிலோ பையில போட்டு 250 ரூபாய்க்குக் கொடுப்பேன். மழைக்காலம் 3 மாசத்துல பெருசா கிடைக்காது. வருஷத்துக்குச் சராசரியா 1,000 கிலோ வரைக்கும் விற்பனையாகிடும். அது மூலமா 10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

பலா
பலா

சப்போட்டா, பலா, நாவல்

சப்போட்டா மரங்கள்லயிருந்து வருஷத்துக்கு 200 கிலோ கிடைக்குது. கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்றோம். இதன் மூலமாக வருஷத்துக்கு 10,000 ரூபாய் கிடைக்குது. பறிப்புக் கூலி, விற்பனை செலவுன்னு 2,000 ரூபாய் போக 8,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

15 பலா மரங்கள் இருக்கு. ஒரு மரத்துல 12 பழங்கள் வரைக்கும் கிடைக்கும். ஒரு பழம் 80 முதல் 100 ரூபாய்னு விற்பனை செய்வோம். எல்லா மரத்துலயுமே காய்ப்பு இருக்குது. பலா மூலமா வருஷத்துக்கு 14,400 ரூபாய் கிடைக்குது. பறிப்பு விற்பனை, குப்பை வைக்கிற கூலின்னு 2,000 ரூபாய் கழிச்சா 12,200 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். நாவல்ல 2 மரங்கள்ல மட்டும் காய்ப்பு இருந்துச்சு. 30 கிலோ கிடைச்சது. கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செஞ்சதுல, 2,400 ரூபாய் லாபமாகக் கிடைச்சது.

வாழை
வாழை

வாழை

பூவன், ரஸ்தாலி, கறிவாழைன்னு 3 ரகங் களும் இருக்கு. இலைக்காகக் கொஞ்சம் வாழைச் சாகுபடி செய்றேன். மாசத்துக்கு 400 இலைகள் அறுவடை பண்ணுவேன். இலை 2.50 ரூபாய்க்குக் கொடுப்பேன். அந்த வகையில மாசத்துக்கு 1,000 ரூபாய் வீதம் வருஷத்துக்கு 12,000 ரூபாய் கிடைக்கும். அதே மாதிரி மாசத்துக்கு ஒரு தார் ரஸ்தாலி, ஒரு தார் பூவன் விற்பனை செய்வேன். பழத்தைப் பொறுத்து சராசரியா ரஸ்தாலி 400 ரூபாய், பூவன் 150 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். வருஷத்துக்கு ரஸ்தாலி மூலமா 4,800 ரூபாய், பூவன் மூலமா 1,800 ரூபாய் கிடைக்கும். வாழை மூலமா வருஷத்துக்கு 18,600 ரூபாய் கிடைக்குது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism