Published:Updated:

30 சென்ட்... ரூ.2 லட்சம் மீன் வளர்ப்பில் வளரும் லாபம்!

மீன் அறுவடையில் காந்தி(பனியன் அணிந்திருப்பவர்)
பிரீமியம் ஸ்டோரி
News
மீன் அறுவடையில் காந்தி(பனியன் அணிந்திருப்பவர்)

மீன் வளர்ப்பு

ந்திய மீன் தேவையைச் சமாளிக்கக் கடல் மீன்கள் மட்டுமே போதாது. அதனால் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள், விவசாய நிலங்களில் மீன் குளங்களை உருவாக்கி நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்-எண்டத்தூர் சாலையில் 5 கி.மீ பயணித்து வலது புறம் பிரியும் சாலையில், 2 கி.மீ சென்றால் வருகிறது காவனூர் புதுச்சேரி. ஊரையொட்டியே இருக்கிறது காந்தியின் நிலம். மீன் குளப் பராமரிப்பிலிருந்த காந்தியைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர்,

“எனக்கு பூர்வீகம் இந்த ஊருதான். ஊரை ஒட்டி இருக்க இந்த நிலம் 2 ஏக்கர். இந்த 2 ஏக்கர்லதான் 30 சென்ட்ல குளம் அமைச்சிருக்கேன். 3 சென்ட்ல நாற்றங்கால் மீன் குளம் (Seed farm) அமைச்சிருக்கேன். மீதி நிலத்துல காய்கறி, நெல், மிளகாய் சாகுபடி செய்றேன். இன்னோர் இடத்துல ஒரு ஏக்கர் இருக்கு. அதுல நெல் சாகுபடி செய்றேன்.

மீன் அறுவடையில் காந்தி(பனியன் அணிந்திருப்பவர்)
மீன் அறுவடையில் காந்தி(பனியன் அணிந்திருப்பவர்)

எனக்கு வயசு 62. மீன் வளர்ப்புக்கு 2012-ம் வருஷம்தான் வந்தேன். அதுக்கு முன்ன தனியார் கம்பெனிகள்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தேன். சின்ன வயசுல கிணறுகள்ல போய் மீன் பிடிப்பேன். அப்படி மீன் பிடிச்சபோது ஒரு கூடை நிறைய மீன் பிடிச்சிட்டேன். அதைக் கொண்டு வந்து கொட்டகையில வெச்சிருந்தேன். அதைப் பாத்துட்டு எங்க மாமா திட்டிட்டாரு. புடிச்ச மீனைத் திரும்பவும் கொண்டு போய்க் கிணத்துல கொட்டிட்டேன். இப்படிச் சின்ன வயசுல இருந்தே மீன் வளர்ப்புன்னாலே ஓர் ஆர்வம் வந்துடும். சும்மா இருக்கிற நேரங்கள்ல ஏரிகள், கிணறுகள்ல மீன்கள புடிப்பேன். அப்புறம் அப்படியே படிச்சு வேலைக்குப் போயிட்டதால கண்டுக்கல. வேலை செய்யும்போதே இந்த 2 ஏக்கர் நிலத்த வாங்கினேன். கிணத்துல இருந்த தண்ணி பத்தல. அதனால, கிணத்துக்குள்ளே சைடு போர் போட்டதுல தண்ணி கிடைச்சுச்சு. விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாலும், கூடுதல் வருமானத்துக்கு மீன் வளர்ப்புல இறங்கலாம்னு முடிவு பண்ணி 2012-ம் வருஷம் இறங்கினேன்” என்று மீன் வளர்ப்புக்குள் வந்த கதையைச் சொன்னவர், அதில் கற்ற பாடத்தையும் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீரின் தரம் கண்டறியும் கருவி
தண்ணீரின் தரம் கண்டறியும் கருவி

“காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலமா மானியத்துல இலவசமாகவே மீன் குட்டையை அமைச்சுகிட்டேன். பிறகு, மீன் வளத்துறை அதிகாரிகள், மீன் வளர்ப்பு குறித்த ஆலோசனை கொடுத்தாங்க. அவங்களே மானியத்துல மீன் குஞ்சுகளை வாங்கிக் கொடுத்தாங்க. அதை வாங்கிக்கிட்டு வந்து குளத்துல விட்டேன். விட்ட கொஞ்ச நாள்லயே மீன்களோட செதில்கள்ல புழு விழுந்திடுச்சு. அதிகாரிககிட்ட போய்ச் சொன்னப்ப, ‘மீனைச் சுண்ணாம்புத் தண்ணியில அலசி, மறுபடியும் குளத்துல போடுங்க’னு சொன்னாங்க. அப்படிச் செஞ்சும் மீன்கள காப்பாத்த முடியல. இதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சப்ப, குட்டையை வெட்டித் தண்ணி விடுறதுக்கு முன்னால, குட்டையோட அடிப்பகுதி, பக்கச் சுவர்கள்ல சுண்ணாம்பு பூசியிருக் கணுமாம். நான் பூசாம விட்டதாலதான் இந்தப் பிரச்னை வந்துச்சு. பிறகு, மாதவரத்துல இருக்கிற மீன்வள ஆய்வு மையம், பொன்னேரில இருக்கிற மீன்வளக் கல்லூரி, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம்னு தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன். ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல மீன் வளர்ப்பு செட்டாகல. மீன் வளப்புக்கு ஆர்வம், பயிற்சி மட்டும் இருந்தா பத்தாது. அனுபவம் இருந்தாதான் ஜெயிக்க முடியும்னு புரிஞ்சது. அதுக்கு பிறகு, ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா ஆராய்ஞ்சேன். எங்கே தப்பு நடக்குது, ஏன் நடக்குதுனு யோசிச்சு சரி செஞ்சேன். பிறகு, எந்தப் பிரச்னையும் வரல” என்றவர் தொடர்ந்தார்.

“வாங்கிட்டு வர்ற மீன் குஞ்சுகள நேரடியா குளத்துல விடமாட்டேன். அதுக்குன்னு இருக்கிற நாற்றங்கால் மீன் குளத்துல 40 நாள்கள் வளர்த்துதான், பெரிய மீன் குளத்துல விடுவேன். கோதுமைத் தவிடு, அரிசி மாவு, வீணான காய்கறிகள், மீன் தீவனத்த உணவா கொடுக் கிறேன். தண்ணியோட நிறத்தை ஒருவிதமான பச்சை நிறத்துல பராமரிச்சிட்டு வருவேன். அதுக்குன்னு ஒரு கருவி இருக்கு. அந்தக் கருவிய தண்ணிக்குள் மூழ்கவெச்சா பளிச்சுனு தெரியக் கூடாது. அதேசமயம் கண்ணுக்குத் தெரியா மலும் இருக்கக்கூடாது. இதுக்கு இடைப்பட்ட விகிதத்துல பராமரிச்சுட்டு வரணும்.

மீன் அறுவடையில்
மீன் அறுவடையில்

ஒரு வருஷத்துக்கு 3 தடவை அறுவடை செய்வேன். குளத்துல விட்ட 4 மாசத்துல ஒரு மீன் 300 கிராம்ல இருந்து 500 கிராம் அளவுக்கு வளர்ந்திடும். இந்த எடையில மீன்கள பிடிச்சு விற்பனை செஞ்சிடுவேன். ஊரையொட்டியே குளம் இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னை யில்ல. சில பேர் முன்கூட்டியே சொல்லியும் வெச்சிடுறாங்க. கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை, காமன் கார்ப், சில்வர் கெண்டைனு வளர்த்திட்டு வர்றேன். இதுல சில்வர் கெண்டை சீக்கிரத்துல வளர்ச்சியடைஞ்சிடும்” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.

“குளத்துல 2,000 - 2,200 குஞ்சுகள விடுவேன். இந்த அளவு அதிகம்தான். ஆனா, அதுக்கேத்த மாதிரி தீவனம், பராமரிப்பு, ஆக்ஸிஜன் அளவை பராமரிச்சுகிட்டு வர்றேன். இதுல தவளை, பாம்பு சாப்பிட்டது போக 2,000 குஞ்சுகள் விற்பனைக்குத் தேறும். விதைப் பண்ணையில 40 நாள்கள், குளத்துல 75 நாள்கள்னு மொத்தம் 115 நாள்ல இருந்து மீன் அறுவடை ஆரம்பிக்கும். அப்படி வருஷத்துக்கு மூணு அறுவடை. (இந்த அறுவடையானது நான்கு மாதங்களுக்கொரு தடவை நடக்கும். ஒவ்வொரு தடவையும் ஒரு மாதம் மீன் பிடிப்பார்கள். இது அந்த மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் நடக்கும். ஆகமொத்தம், ஓராண்டில் 12 தடவை மீன் பிடிப்பார்கள்). வாரம் ஒருமுறை 200 கிலோ வீதம் 4 வாரங்களுக்கு 800 கிலோ மீன் கிடைக்கும். ஒரு கிலோ மீன் 150 - 200 ரூபாய்க்கு விலை போகும். குறைந்தபட்சம் 150 ரூபாய்னே வெச்சுகிட்டாலும் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீன் குஞ்சுகள், மீன், மீன் குஞ்சுகளுக்கான தீவனம், தவிடு, அறுவடைனு 55,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக ஓர் அறுவடைக்கு 65,000 ரூபாய் லாபம் கிடைக்குது. வருஷத்துக்கு இந்த மாதிரி 3 அறுவடை எடுப்போம். அதன் மூலமா 1,95,000 ரூபாய் கிடைச்சுகிட்டு இருக்கு. மீன் விலை அதிகமா இருக்கும்போது லாபமும் அதிகமா இருக்கும்” என்றவர் நிறைவாக,

மீன் நாற்றங்கால் (சீட் ஃபார்ம்)
மீன் நாற்றங்கால் (சீட் ஃபார்ம்)

“புதுசா மீன் வளர்ப்புல இறங்குறவங்களுக்கு முதல்ல ரெண்டு வருஷம் கஷ்டாமாத்தான் இருக்கும். பழகிடுச்சின்னா, ரொம்ப சுலபமா லாபம் சம்பாதிக்கலாம். இப்பல்லாம் நானும், எங்க வீட்டு ஆளுங்களே அறுவடை செஞ்சிடுறோம்” என்றவர் இன்முகத்தோடு விடைகொடுத்தார்.தொடர்புக்கு, காந்தி,

செல்போன்: 96261 25987.

தண்ணீர் தேங்கும் திறனுள்ள அனைத்து நிலமும் ஏற்றது!

மீன் வளர்ப்பு குறித்துக் காஞ்சிபுரம்-செங்கல் பட்டு மாவட்ட காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் உதவிப் பேராசிரியர் முனைவர் சிவக்குமாரிடம் பேசினோம்.

மீன் குளங்களை எந்த அளவில் அமைக்கலாம்?

“மீன் வளர்ப்புக்கான குளங்கள் அமைப்பது அவரவர்களுடைய நிலத்தின் தன்மையையும், எத்தனை குளங்களைப் பராமரிக்க முடியும் என்பதையும், எவ்வளவு வருமானம் வேண்டும் என்பதையும் பொறுத்தது. நாங்கள் பரிந்துரைப்பது 25 சென்ட்டிலிருந்து 2.5 ஏக்கர் பரப்பளவு வரையான குளங்கள்தான். 25 சென்ட்டில் 1,000 மீன்களை வளர்க்கலாம். அரை ஏக்கரில் 2,000 மீன்களையும், ஒரு ஏக்கரில் 4,000 மீன்களையும் வளர்க்க முடியும். 2.5 ஏக்கரில் 10,000 மீன்களை வளர்க்கலாம். இது ஓர் அறுவடைக்கான அளவு. நாற்றங்கால் குளங்களைப் பயன்படுத்தும்போது வருஷத்துக்கு 2 - 3 ஆறுவடை செய்ய முடியும்.”

சிவக்குமார்
சிவக்குமார்


25 சென்ட் பரப்பளவிலான குளத்தில் 1,000 மீன்களைத்தான் வளர்க்க வேண்டுமா? கூடுதலாக மீன்களை விட்டு வளர்க்கக் கூடாதா?

“1,000 மீன்களைப் பரிந்துரைக்கிறோம் என்றால் கூடுதலாகக் கூட்டு மீன் வளர்ப்பு முறையில் 100, 200 மீன்களை அதிகரிக்கலாம். 1,000 மீன்கள் வளர்க்கக்கூடிய திறனுள்ள குளத்தில் 2,000 மீன்களை வளர்ப்பது தவறு. குளத்தில் மீன்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறக்க நேரிடும். உணவு கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படும். சில விவசாயிகள் கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அது தவறு.”

மீன் குளங்களை அமைப்பதற்கு மானியம் உண்டா?

“வேளாண் பொறியியல் துறைமூலம் 100 சதவிகித மானியத்தில் பண்ணைக்குட்டை எடுத்துக் கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 30 சென்ட் நிலம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மீன்வளத்துறை துணை இயக்குநரும் இருக்கிறார். அங்கே அணுகினால் 40 சதவிகித மானியத் தொகையில் குளத்தை அமைத்துத் தருவார்கள். பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 60 சதவிகிதத்தில் எடுத்துக் கொடுப்பார்கள். அந்தத் துறையோட அலுவலர்களே மீன் குஞ்சுகள், மீன் வளர்ப்பதற் கான ஆலோசனைகளை வழங்குவார்கள். மேலும் தகவல்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள், நோய் பராமரிப்புக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம்.”

மீன்களுக்கான உணவு
மீன்களுக்கான உணவு

எவ்வளவு அளவிலான குளத்தில் எவ்வளவு வருமானம் பெற முடியும்?

“முழுக் கவனமும், நல்ல பராமரிப்பும் செய்து நேரடி விற்பனை செய்யும்பட்சத்தில் 25 சென்ட் அளவுள்ள குளத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திலிருந்து 2 லட்சம்வரை சம்பாதிக்கலாம். அரை ஏக்கரில் குளம் அமைத்தால் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம்வரை சம்பாதிக்கலாம். ஒரு ஏக்கர் என்னும் பட்சத்தில் 6 லட்சத்திலிருந்து 8 லட்சம்வரை சம்பாதிக்க முடியும்.”

மீன் வளர்ப்பதற்கு எந்தவகையான மண் ஏற்றது?

“களிமண் சிறந்தது. களிமண் கலந்த மணல்சாரி, செம்மண், வண்டல் மண் ஆகியவையும் ஏற்றது. மீன் வளர்க்க முடியாத மண் என்று ஒன்றில்லை. மணலைத் தவிரத் தண்ணீர் நீண்ட நாள்களுக்குத் தேங்கும் திறனுள்ள எல்லா நிலமும் மீன் வளர்ப்புக்கு ஏற்றது.”

நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஏற்ற மீன் இனங்கள் எவை?

“கட்லா (தோப்பா), ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக்கெண்டை ஆகியவைதான் முக்கிய மீன் இனங்கள். இதைத் தவிர சேல் கொண்டை, கல்சே, வெண்கெண்டை, பால் கெண்டை, கல்பாசு கெண்டை ஆகிய மீன் வகைகளையும் வளர்க்கலாம்.”

மீன்கள்
மீன்கள்


ஒரு மீன்குளத்தைத் தொடங்க ஆரம்பக்கட்ட முதலீடு எவ்வளவு தேவைப்படும்?

“மானியத்திலேயே குளத்தை அமைத்துக் கொண்டால், கால் ஏக்கரில் (25 சென்ட்) மீன்கள் வளர்க்க நடைமுறை செலவாக 15,000 - 25,000 ரூபாய் தேவைப்படும். அரை ஏக்கர் என்றால் 30,000 - 50,000 ரூபாய் தேவைப்படும்.”

தொடர்புக்கு, சிவக்குமார், உதவிப் பேராசிரியர், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம், செங்கல்பட்டு மாவட்டம். செல்போன்: 96004 67395.

மீன் குஞ்சுகள்
எங்கு கிடைக்கும்?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங் களில் உள்ளவர்களுக்கு செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் அரசு மீன் பண்ணைகளில் மீன் குஞ்சுகளை வாங்கலாம். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தின் அருகில் மீன் குஞ்சுகள் விற்கும் தனியார் பண்ணைகள் இருக்கின்றன. அங்கேயும் வாங்கலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலரை அணுகினால் மீன் குஞ்சுகள் எங்கு கிடைக்கும் என்ற விவரங்களைக் கொடுத்துவிடுவார்கள். அரசு மீன் பண்ணைகளில் வாங்கினால் ஒரு குஞ்சு 60 காசிலிருந்து 1 ரூபாய் விலையில் கிடைக்கும். அதே தனியார் பண்ணைகள் என்றால் 1 ரூபாயிலிருந்து 2 ரூபாய் வரை விலை இருக்கும்.