Published:Updated:

8 ஏக்கர்... ஆண்டுக்கு 7,54,000 ரூபாய்..! உவப்பான வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஒருங்கிணைந்த பண்ணையம்

மகசூல்

8 ஏக்கர்... ஆண்டுக்கு 7,54,000 ரூபாய்..! உவப்பான வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

மகசூல்

Published:Updated:
ஒருங்கிணைந்த பண்ணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஒருங்கிணைந்த பண்ணையம்

ருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நிறைவான வருமானத்தையும் கொடுக்கிறது. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதுதான் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் வெற்றி சூட்சுமம். செலவையும் உழைப்பையும் குறைப்பதோடு, பல வகைகளிலும் ஆண்டு முழுவதும் உத்தரவாதமான வருமானத்தைக் கொடுப்பதாலேயே, ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகள் வெற்றி நடைபோடுகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகில் உள்ள தோழ வன்னியன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார்.

ஒரு பகல் பொழுதில் அவரது பண்ணைக்குச் சென்றோம். பச்சைப் பசேலெனச் செழிப்பாகக் காட்சியளித்த நெல் நாற்றுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிவக்குமார், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

சிவக்குமார்
சிவக்குமார்

‘‘இது மொத்தம் 8 ஏக்கர் நிலம். இதுல 6 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றோம். ஒன்றரை ஏக்கர்ல மீன்குளம் அமைச்சிருக்கோம். மீதி அரை ஏக்கர்ல தென்னை, தேக்கு, மா, சாத்துக்குடி மரங்கள் இருக்கு. வீட்டுக்குத் தேவையான காய்கறிளையும் மீன்களுக்குத் தேவையான அசோலாவையும் வளர்க்குறோம். இதோடு 10 மாடுகள் இருக்கு. என் மனைவி சுந்தரிக்கும் இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்களும் கடுமையா உழைக்குறாங்க.

மண்ணை வளமாக்கும் வைக்கோல்

வருஷம் ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்வோம். குறுவையில ஆடுதுறை.43 (ஏ.டி.டீ.43) பயிர் பண்ணுவோம். அறுவடை சமயத்துல மழை பெய்ஞ்சு நிலம் முழுக்கத் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்ப கிடைக்கக்கூடிய வைக்கோலை, நிலத்துலயே போட்டு, உழவு ஓட்டிடுவோம். இதனால மண்ணு வளமாகுது. தாளடி பட்டத்துல, பாரம்பர்ய நெல் ரகமான ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செய்றோம். அதுல கிடைக்குற வைக்கோலை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்குறோம்’’ எனப் பேசிக்கொண்டே போனவர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 12-ம் வகுப்பு முடிச்சதுமே, ‘விவசாயம்தான் வாழ்க்கையில் எப்பவும் கைகொடுக்கும்... படிச்சது போதும்’னு எங்க அப்பா சொல்லிட்டார். நானும் ஆர்வமா விவசாயத்துல இறங்கிட்டேன். 1992-ம் வருஷம் எங்க ஊர்ல வேளாண்மைத்துறை சார்பா வயல்வெளி பள்ளி நிகழ்ச்சி நடந்துச்சு. ‘நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை அழிச்சி பயிர்களைப் பாதுகாத்திடும். அதனால் பூச்சிக்கொல்லியே அடிக்கத் தேவையில்லை’னு வேளாண்மைத்துறை அதிகாரி ஒருத்தர் பேசினாரு.

தாக்கத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்

பூச்சிக்கொல்லிகளால ஏற்படுற பாதிப்புகளைப் பத்தியும் அவர் பேசினாரு. அந்த வருஷத்துல இருந்தே என்னோட வயலுக்குப் பூச்சிக்கொல்லி அடிக்குறதை விட்டுட்டேன். ஆனா, ரசாயன உரங்களைப் பயன்படுத்திக்கிட்டுதான் இருந்தேன். களையெடுக்க ஆள் கிடைக்காத நேரங்கள்ல களைக்கொல்லி பயன்படுத்துவேன். இந்தச் சூழ்நிலையில்தான் பசுமை விகடன் வெளிவந்துச்சு. அது, மிகப்பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திச்சு. அதுக்கு பிறகு, களைக்கொல்லியைச் சுத்தமா நிறுத்திட்டேன். ரசாயன உரங்களைப் படிப்படியா குறைச்சு, ஒரு கட்டத்துல முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். 2015-ம் வருஷம், ஒருங்கிணைந்த பண்ணையமா இதை உருவாக்குனேன்’’ என்றவர், அந்த விவசாய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நடவுக்குத் தயாராக நாற்றுகள்
நடவுக்குத் தயாராக நாற்றுகள்

‘‘எங்ககிட்ட ஏற்கெனவே கலப்பின மாடுக இருந்துச்சு. இயற்கை விவசாயத்துக்காக, உம்பளச்சேரி நாட்டு மாடுகளும் வளர்க்க ஆரம்பிச்சேன். மழைநீரைச் சேமிக்க, குளம் அமைச்சு, அதுல மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். வருஷா வருஷம் குறுவை நெல் சாகுபடியை தொடங்குறதுக்கு முன்னாடி, புழுதி உழவு ஓட்டி, தக்கைப்பூண்டு, சணப்பு கலந்து ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தெளிப்பேன். 45-ம் நாள் பூ பூக்குற தருணத்துல மடக்கி உழுவேன். எங்ககிட்ட 10 மாடுக இருக்குறதுனால, ஏக்கருக்கு 6 டன் எரு போடுவோம். தாளடி நெல் சாகுபடிக்கு அடியுரமா, 200 கிலோ கன ஜீவாமிர்தம் போடுவோம். இதனால் நுண்ணுயிரிகள் அதிக அளவு பெருகுது. மண்ணோட வளமும் கூடிக்கிட்டே போகுது.

கனஜீவாமிர்தம்
கனஜீவாமிர்தம்

நாற்று நடவு செஞ்ச பிறகு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மீன் அமிலம் கொடுக்குறோம். தேவைப்பட்டா உயிர் உரங்களும் பயன்படுத்துவோம். இந்தப் பகுதியில நெற்பயிர்கள்ல, இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, புகையான், பூஞ்சாணம் தாக்குதல் அதிகமா இருக்கும். என்னோட வயல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புகையிலைக் கரைசல் தெளிக் குறதுனால, கொஞ்சம்கூட பூச்சி, நோய்த் தாக்குதலே ஏற்படுறதில்ல’’ என்றவர் நிறைவாக,

‘‘இந்த 8 ஏக்கர்ல இருந்து நெல், தென்னை, பால், கன்னுக்குட்டிகள், காய்கறி, எள்ளு, உளுந்து, மீன்கள் மூலமா வருஷத்துக்கு 7,54,225 ரூபாய் லாபம் கிடைக்குது. அதோட மண்ணு, மனசு எல்லாம் ஆரோக்கியமா இருக்கு’’ என்று விடைகொடுத்தார் மகிழ்ச்சியாக.


தொடர்புக்கு, சிவக்குமார்,

செல்போன்: 94865 75604

வித விதமான வருமானம்

நெல், தென்னை, மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசிய சிவக்குமார்,

நெல்

“நாங்க உற்பத்தி செய்யுற நெல்லை, 6 மாசம் வரைக்கும் வெச்சிருந்து, அதுக்கு பிறகு அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றோம். குறுவைக்கு ஏற்ற பாரம்பர்ய நெல் ரகங்கள் பெரும்பாலும் மோட்டா ரகமாக இருக்குறதுனால, இதை அரிசியாக்கி விற்பனை செய்றதுல சிரமம் இருந்துச்சு. அதனால விற்பனைக்காக, குறுவையில ஆடுதுறை-43 ரகத்தைச் சாகுபடி செய்றோம். ஏக்கருக்கு 30 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை நெல் அரைச்சோம்னா 32 கிலோ அரிசி கிடைக்கும். கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 1,920 ரூபாய் வருமானம் கிடைக்கும். அந்த வகையில அரிசி விற்பனைமூலம் ஏக்கருக்கு 57,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணையோட மதிப்பு 6,000 ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஏக்கர் நெல் சாகுபடியில 63,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. சாகுபடி செலவு, அரவைக்கூலி, போக்குவரத்து மத்த செலவுகள் போக 33,600 ரூபாய் லாபமா மிஞ்சும். 6 ஏக்கர் குறுவை நெல் சாகுபடி மூலம் 2,01,600 ரூபாய் லாபமா கிடைக்கும்.

அரிசியுடன்
அரிசியுடன்


தாளடியில் சாகுபடி செய்ற, ஆத்தூர் கிச்சலி சம்பாவுல ஏக்கருக்கு 20 மூட்டை (60 கிலோ) நெல் மகசூல் கிடைக்கும். 1,200 கிலோ நெல்லை அரைச்சோம்னா 640 கிலோ அரிசி கிடைக்கும். கிலோவுக்கு 65 ரூபாய் வீதம் 41,600 ரூபாய். தவிடு, குறுணை மதிப்பு 3,900 ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி மூலம் 45,500 ரூபாய் வருமானம். இதுல செலவு போக 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். 6 ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலமா 1,20,000 ரூபாய் லாபம் கிடைக்குது. ஆண்டுக்கு இருபோகம் நெல் சாகுபடி மூலமா 3,21,600 ரூபாய் லாபம் கிடைக்குது.

மாடு வளர்ப்பு

உம்பளச்சேரி பாரம்பர்ய மாடுகள் 3, கன்றுகுட்டிகள் 2 இருக்கு. கலப்பின மாடு 3, கன்றுகுட்டிகள் 2 இருக்கு. இதுல ஏதாவது 2 மாடுகள் மூலமா, வருஷம் முழுக்க பால் கிடைக்கும். கன்றுக்குட்டிக குடிச்சது போக, மீதியுள்ள பாலைதான் கறப்போம். கன்றுகள் ஆரோக்கியமா வளர இது ரொம்ப அவசியம். தினமும் 15 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 35 ரூபாய்னு நேரடி விற்பனை செய்றது மூலமாக 525 ரூபாய் வருமானம் கிடைக்குது. பால் மூலமா வருஷம் 1,91,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. மேய்ச்சல்லயே தீவனம் கிடைச்சிடுது. எங்க வைக்கோலைக் கொடுக்குறோம். அடர் தீவனச் செலவே கிடையாது. கன்னுபோட்ட பசுவுக்கு மட்டும் ஒரு மாசம் வரைக்கும் தினமும் அரைக்கிலோ பருத்திக்கொட்டை புண்ணாக்கு கொடுப்போம். இதுக்கு அதிகபட்சமா 2,000 ரூபாய் செலவாகும். பால் விற்பனை மூலமா வருஷம் 1,89,625 ரூபாய் லாபம் கிடைக்குது.

மனைவியுடன்
மனைவியுடன்


எங்க பசுக்களுக்குச் சினை ஊசியே போட மாட்டோம். இயற்கையா காளையோட சேர்க்கைக்கு விடுவோம். வருஷத்துக்குக் குறைஞ்சபட்சம் 2 கன்றுகள் விற்பனை செய்றது மூலமா 24,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

தென்னை

48 தென்னை மரங்கள் இருக்கு. இதுல வருஷம் 6,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய் 10 ரூபாய். அது மூலமா 60,000 ரூபாய் வருமானம். காய் பறிப்புக்கூலிப் போக 48,000 ரூபாய் லாபமா கிடைக்குது. மண்ணு நல்லா வளமாக இருக்குறதுனால தென்னைக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் கிடையாது. தேமோர் கரைசல் தயார் செய்ய எங்கத் தேங்காயைத்தான் பயன்படுத்திக்குறோம்.

காய்கறிகள்

வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் இங்க உற்பத்தி செஞ்சிக்குறோம். இதோட மதிப்பு வருஷத்துக்கு 3,000 ரூபாய். இதுக்கு எந்த இடுபொருள்களுமே கொடுக்குறதில்ல. ஒரு மா மரம் இருக்கு. 2,000 காய்கள் கிடைக்குது. அதோட மதிப்பு 5,000 ரூபாய். ஒரு சாத்துக்குடி மரம் இருக்கு. இப்பதான் காய்ப்புக்கு வந்துருக்கு.

சிவக்குமார்
சிவக்குமார்


எள், உளுந்து சாகுபடி

வீட்டு தேவைக்கு மட்டும் ஒரு ஏக்கர்ல எள்ளு, 25 சென்ட்ல உளுந்து சாகுபடி செய்றோம். எள்ளு சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் கனஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல் கொடுப்போம். 300 கிலோ எள் மகசூல் கிடைக்கும். 100 கிலோ எள் விற்பனை செய்றது மூலம் 8,000 ரூபாய் வருமானம். 200 கிலோ எள்ளை, மரசெக்குல ஆட்டுறது மூலமா, 90 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்குது. இதோட மதிப்பு 27,000 ரூபாய். ஒரு ஏக்கர் எள்ளு சாகுபடி மூலம் 35,000 ரூபாய் வருமானம். செலவு போக 28,000 ரூபாய் லாபம்.

25 சென்ட் சாகுபடி மூலம் 80 கிலோ உளுந்து மகசூலாகும். இதோட மதிப்பு 8,000 ரூபாய். உளுந்து சாகுபடிக்கு கனஜீவாமிர்தமும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புகையிலை கரைசலும் கொடுப்போம். செலவுபோக 5,000 ரூபாய் லாபம்.

பண்ணையில்
பண்ணையில்
மீன் குட்டை
மீன் குட்டை


மீன் வளர்ப்பு

ஒன்றரை ஏக்கர்ல குளம் அமைச்சிருக்கோம். அதுல வருஷத்துக்கு 3,000 குஞ்சுகள் விடுவோம். அதுல 2,500 குஞ்சுகள் தேறி வரும். 6 - 8 மாசத்துல ஒரு மீன் சரசாரியா 350 - 500 கிராம் எடை இருக்கும். 1,000 கிலோ மீன்கள் விற்பனைக்குக் கிடைக்கும். வியாபாரிகளே மீன்களைப் பிடிச்சு எடுத்துக்குவாங்க. கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீன்களுக்காக அசோலா வளர்க்குறோம். தினமும் ஒரு கிலோ அசோலா போடுவோம். எண்ணெய் எடுத்த தவிடு 80 சதவிகிதம், கடலைப்புண்ணாக்கு 20 சதவிகிதம் கலந்து, மீன்களோட மொத்த எடையில் 2 சதவிகிதம் தீவனம் கொடுப்போம். இதுக்கான செலவு போக 1,30,000 ரூபாய் லாபமா கிடைக்கும்” என்றார்.

லாபக்கணக்கு
லாபக்கணக்கு

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்

நாற்று உற்பத்தி

இயந்திர நடவு செய்வதாக இருந்தால், 4 சென்ட் பரப்பில் பாய் நாற்றங்கால் அமைத்து, விதைநேர்த்தி செய்யப்பட்ட 20 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 10 கிலோ கனஜீவாமிர்தத்தை விதைநெல் மீது தூவி, வைக்கோல் போட்டு மூட வேண்டும். இதன் மீது தினமும் பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் வைக்கோலை நீக்கிவிட வேண்டும். 10-ம் நாள் அரைக் கிலோ கடலைப் பிண்ணாக்கை 5 லிட்டர் தண்ணீரில் 10 மணிநேரம் ஊற வைத்து, நன்றாகக் கலக்கி நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். 12-ம் நாள் 30 மி.லி மீன் அமிலத்தை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 18-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

மீன் அமினோ அமிலம்
மீன் அமினோ அமிலம்

சாகுபடி நிலம்

குறுவை என்றால் தக்கைப்பூண்டு, சணப்பு கலந்து 20 கிலோ தூவி, வளர்ந்தவுடன் மடக்கி உழவு செய்வதோடு, அடியுரமாக 6 டன் எரு போட வேண்டும். தாளடி பருவம் என்றால், அடியுரமாக 200 கிலோ கனஜீவாமிர்தம் போட வேண்டும். நன்கு உழவு ஓட்டி மண்ணைச் சமப்படுத்திய பிறகு, இயந்திரம்மூலம் குத்துக்குக் குத்து முக்கால் அடி இடைவெளியில் 3 - 5 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். 10-ம் நாள் 100 கிலோ கனஜீவாமிர்தம், 10 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 10 கிலோ வேப்பம்பிண்ணாக்கு கலந்து தூவி விட வேண்டும்.

15-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்து விட வேண்டும். இதுபோல் 15 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். நடவிலிருந்து 25-ம் நாள் 1 லிட்டர் மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் தலா 500 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை அரைத்து, இவற்றோடு 100 கிராம் காம்பு புகையிலை கலந்து, மண் பானையில் 10 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீரில் போட்டு, அடுப்பில் கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் ஆற வைத்து, மீண்டும் ஒருமுறை கொதிக்க விட வேண்டும்.

அசோலா வளர்ப்பு
அசோலா வளர்ப்பு


2 நாள்கள் கழித்து, வடிகட்டி, 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். பூச்சி, நோய்த்தாக்குதல் வராமல் தடுக்க இது துணை செய்யும். 40-ம் நாள் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை நன்கு வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 800 மி.லி மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்பத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.