Published:Updated:

தேங்காய் விலை குறைந்தாலும் தென்னை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி!

தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்
பிரீமியம் ஸ்டோரி
தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்

மகசூல்

தேங்காய் விலை குறைந்தாலும் தென்னை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி!

மகசூல்

Published:Updated:
தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்
பிரீமியம் ஸ்டோரி
தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்

தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக ஒரு தேங்காய்க்கு 6 - 8 ரூபாய்தான் விலை கிடைத்து வருகிறது. இதனால் தென்னை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலையிலும்கூட தென்னை சாகுபடியில் உத்தரவாதமான லாபம் கிடைக்க, தன் அனுபவத்தின் மூலம் மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பவன மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருமான பொன்னுராமன்.

‘‘தேங்காய் விலை குறைஞ்சாலும்கூட, நஷ்டம் ஏற்படாத வகையில விவசாயிகள் தங்களைத் தற்காத்துக்க முடியும்... இதுக்கு இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டுதல், ஊடுபயிர் சாகுபடி இவையெல்லாம் கண்டிப்பா கைகொடுக்கும்’’ என்கிறார் பொன்னுராமன்.

தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்
தென்னை மரங்களுக்கிடையில் பொன்னுராமன்

ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். தென்னந்தோப்பின் முகப்பில் இவருடைய வீடு அமைந்துள்ளது. செக்கில் ஆட்டி, சில்வர் கேன்களில் வைக்கப் பட்டிருந்த தேங்காய் எண்ணெய்யை சிறிய பாட்டில்களில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். இன்னொரு பக்கத்தில் தேங்காய் கொப்பரைகளை வெயிலில் காய வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவற்றை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னுராமன், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

‘‘தென்னை பயிர் செஞ்ச விவசாயிகள் எல்லாருமே இப்ப நொந்து கிடங்குறாங்க. தேங்காய்க்கு லாபகரமான விலை இல்லை. ஒரு காய் அதிகபட்சமாவே 8 ரூபாய்க்குதான் விலை போகுது. இப்படி இருந்தா விவசாயிங்களால எப்படிச் சமாளிக்க முடியும். இந்த இக்கட்டான நேரத்துல தென்னை விவசாயிகளுக்குக் கை கொடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்தக் கூடிய வகையில சிறப்புத் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தணும்.

அதே சமயம் என்னதான் விலை குறைந்தாலும், நஷ்டம் ஏற்படாத வகையில, தங்களைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்ல விவசாயிகள் கவனம் செலுத்தணும். இது சாத்தியமானு கேள்வி எழும். விவசாயிகள் மனசு வச்சா கண்டிப்பா சாத்தியப்படும். இதுக்கு என்னோட அனுபவமே உதாரணம்’’ என்று சொன்ன பொன்னுராமன், தன்னுடைய இயற்கை விவசாயப் பயணம் குறித்து விவரித்தவாறே, தென்னைந்தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

பொன்னுராமன்
பொன்னுராமன்

செழிப்பாகக் காட்சி அளித்த இந்தத் தென்னந்தோப்பில் ஆங்காங்கே ஏராளமான களைகள் மண்டிகிடந்தன. பசுமை நிறைந்த தென்னை மரங்களுக்கு இடையே பாக்கு மரங்கள் வளமாகக் காட்சி அளித்தன. ‘‘கடந்த 20 வருஷமா இயற்கை விவசாயம் செய்றதுனால, என்னோட தென்னந்தோப்பு நல்லா செழிப்பாகி, அதிக மகசூல் கிடைக்குது. இயற்கை விவசாயத்துனால செலவும் குறையுது. தோட்டத்தைச் சுத்தமா வச்சிக் குறேங்கற பேர்ல, அடிக்கடி உழவு ஓட்ட மாட்டேன். இதனால செலவு மிச்சமாகுற தோடு மட்டுமல்லாம, களைச்செடிகள் உயிர் மூடாக்கா இருந்து, மண்ணுல ஈரப்பத்தத்தைத் தக்க வைக்குது. அறுவடை செய்ற காய்கள்ல பாதியை அப்படியே தேங்காயாகவும், மீதி 50 சதவிகித காய்களைக் கொப்பரையாக்கி தேங்காய் எண்ணெய்யாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். தேங்காய் எண்ணெய்ல சோப்பும் தயார் செய்றேன். தென்னையில ஊடுபயிரா பாக்கு பயிர் பண்ணியிருக்கேன். இது மூலமாகவும் ஒரு கணிசமான தொகை கிடைக்குது’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நாங்க விவசாயக் குடும்பம். நான் 6 வருஷத்துக்கு முன்னாடி பணி ஓய்வு பெற்றேன். இப்ப நான் முழுநேர விவசாயி. நான் ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப, எப்பெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்குதோ, அப்பெல்லாம் என்னோட தென்னந்தோட்டத்துலயும் நெல் வயல்லயும் தான் இருப்பேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஈடுபாடு அதிகம். பல வருஷங்களா ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். 1990-களோட இறுதியில, ஜப்பான் இயற்கை வேளாண் அறிஞர் மசனோபு ஃபுகோகா எழுதின ‘ஒற்றை வைக்கால் புரட்சி’ புத்தகம் படிக்கக்கூடிய வாய்ப்பு அமைஞ்சது. அது என் மனசுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துனுச்சு. பயிர்கள்ல இருந்து நமக்குக் கிடைக்கக்கூடியதை மறுபடியும் நாம பயிர்களுக்கே கொடுக்கணும்னு அந்தப் புத்தகத்துல ஃபுகோகா சொல்லியிருந்தார். நெல் கருக்காவை, என்னோட வாழைத் தோட்டத்துல போட்டேன். அந்த வருஷம் அருமையான விளைச்சல். வாழைத்தாரை தூக்கிக்கிட்டு நகர்ந்து போக முடியலை. அந்தளவுக்கு நல்ல கனம். உயரமும் ரொம்ப ஜாஸ்தி. எங்க ஊருக்கு பக்கத்துலதான் நம்மாழ்வாரோட சொந்த ஊரான இளங்காடு. அப்ப நம்மாழ்வார் எனக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானியா அறிமுகமாகாத சமயம். அப்ப அவர் ஊர்லயும் இல்லை. ஆனா, நம்மாழ்வாரோட அண்ணன் பாலகிருஷ்ணன் விவசாயத்துல நல்ல அனுபவசாலி... ‘விவசாயம் தொடர்பா ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணுவாரு’னு எங்க பகுதியில ஒரு பேச்சுண்டு. அவரைச் சந்திச்சு, ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகத்தைப் பத்தியும் என்னோட வாழைத் தோட்டத்துக்குக் கருக்கா போட்டதுனால ஏற்பட்ட அனுபவம் பத்தியும் பாலகிருஷ்ணன் கிட்ட பேசினேன். அவர் மூலமாதான் நம்மாழ்வாரை சந்திக்குற வாய்ப்பு அமைஞ் சது. ‘பஞ்சகவ்யா’ டாக்டர் நடராஜனோட வீட்டுல நம்மாழ்வார் தங்கியிருந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு நான், இயற்கை விவசாயத்துல முழுமையா இறங்கினதோடு மட்டுமல்லாம, நம்மாழ்வாரோடு தொடர்ச்சியா பல இடங்களுக்குப் பயணிச்சேன்.

தேங்காய் காயவைக்கும் பணி
தேங்காய் காயவைக்கும் பணி

2001-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். எங்க குடும்பத்துக்கு மொத்தம் 8 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கர்ல நெல், 2 ஏக்கர்ல தென்னை, 1 ஏக்கர்ல வாழையும் காய்கறிகளும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். ஒரு நாட்டுமாடு உட்பட மொத்தம் 5 மாடுகள் இருக்கு. இதனால என்னோட பயிர்களுக்கு இயற்கை இடுபொருள்கள தாராளமா கொடுக்க முடியுது” என்றவர், தென்னை மட்டைகளைத் தூளாக்குவது பற்றிப் பேசினார்.

மட்டைகளைத் தூளாக்கிக் கொடுக்கும்

வேளாண் பொறியியல் துறை

“1 அடி ஆழம், 2 அடி அகலம், 50 அடி நீளத்துக்கு இந்தத் தோட்டத்துல 10 இடங்கள்ல உரக்குழி அமைச்சிருக்கேன். பொதுவா, தென்னந்தோப்புக்கான உரக்குழிகளை அதிக ஆழமாவோ, அதிக அகலத்துக்கோ அமைக்கக் கூடாது... அப்படி அமைச்சோம்னா, தென்னை மரங்களோட வேர்கள் பாதிக்கப் படும். இங்க நான் அமைச்சிருக்குற உரக் குழிகள்ல தென்னை மட்டைகளையும் தேங்காய் உரிமட்டைகளையும் போட்டு விடுவேன். மழையில ஊறி ஓரளவுக்கு மக்கி இருக்கும். மீதமிருக்குற மட்டைகளை வருஷத்துக்கு ஒரு தடவை மெஷின் மூலம் தூளாக்கி இந்தத் தோட்டத்துலயே போட்டு உரமாக்கிடுவேன். வேளாண்மை பொறியியல் துறையில இதுக்கான மெஷின் இருக்கு. மணிக்கு 250 ரூபாய் வீதம் பணம் கட்டணம் செலுத்தினா, அவங்களே என்னோட தென்னந்தோட்டத்துக்கு வந்து, மட்டை களைத் தூளாக்கிக் கொடுத்துடுவாங்க.

அதிகக் காய்ப்பு... நிறைவான வருமானம்

ஒரு வருஷத்துக்கு ஒரு தென்னை மரத்துல இருந்து 150 - 200 காய்கள் மகசூல் கிடைக்குது. ரசாயன முறையில சாகுபடி செய்றவங்களுக்கு இந்தளவுக்கு மகசூல் கிடைக்காது. கடந்த 20 வருஷங்களா, இயற்கை முறையில என்னோட தென்னந்தோட்டத்தை வளப்படுத்திக்கிட்டே இருக்குறதுனாலதான் எனக்கு நிறைவான மகசூல் கிடைக்குது. ஒரு மரத்துக்குக் குறைந்த பட்சம் 150 காய்கள்னு கணக்கு வச்சாலே 160 மரங்கள் மூலமா 24,000 காய்கள் கிடைக்குது. இதுல 12,000 காய்களைத் தேங்காயாகவே வித்துவிடுவேன். ஒரு காய்க்கு 6 ரூபாய் வீதம் 72,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதமுள்ள 12,000 காய்களை உடைச்சு, வெயில்ல காய வச்சு கீறி எடுத்தா, 1,200 கிலோ கொப்பரை கிடைக்கும். இதை மரச்செக்குல எண்ணெய்யா ஆட்டினா, 720 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். இயற்கை முறையில உற்பத்தி செஞ்சு, மரச்செக்குல ஆட்டின கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் கறதுனால, இன்னும் அதிகமா விலை வச்சாகூட வாங்குறதுக்கு ஆட்கள் இருக்காங்க. ஆனா, சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஒரு லிட்டர் 200 - 250 ரூபாய் தான் விலை வக்கிறேன். ஒரு லிட்டருக்கு சராசரியா 220 ரூபாய் வீதம் 720 லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்பனை மூலம் 1,58,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். 480 கிலோ தேங்காய்புண்ணாக்கு கிடைக்கும். இதை என்னோட மாடுகளுக்கும் வயலுக் கும் பயன்படுத்திக்குறேன். இதோட விலை மதிப்பு 4,800 ரூபாய்.

காய்ந்த தென்னை ஓலைகள்
காய்ந்த தென்னை ஓலைகள்

ஊடுபயிராகப் பாக்கு

தென்னைக்கு இடையில ஊடுபயிரா, பாக்கு பயிர் பண்ணியிருக்கேன். இந்தத் தென்னந்தோட்டத்துல மொத்தம் 100 பாக்கு மரங்கள் இருக்கு. வருஷத்துக்குச் சுமார் 250 கிலோ பாக்கு மகசூல் கிடைக்குது. கிலோவுக்கு 80 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

மொத்த வருமானம்

ஆக மொத்த 2 ஏக்கர் தென்னை சாகுபடி மூலம், வருஷத்துக்கு 2,55,200 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தென்னை பராமரிப்பு, தேங்காய் பறிப்புக்கூலி, எண்ணெய்யா மதிப்புக்கூட்டுதல் உட்பட எல்லாச் செலவும் போக, 1,60,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்குது. இது குறைந்தபட்ச லாபம். தேங்காய் விலை அதிகரிக்கும் போது இன்னும் கூடுதலா லாபம் கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.தொடர்புக்கு, பொன்னுராமன், செல்போன்: 98650 60630.

தென்னை சாகுபடி குறிப்புகள்

தென்னைச் சாகுபடி செய்வது குறித்து பொன்னுராமன் பேசியபோது, ’’இந்தத் தென்னந்தோப்போட மொத்த பரப்பு 2 ஏக்கர். தலா 22 அடி இடைவெளியில மொத்தம் 160 தென்னை மரங்கள் இருக்கு. இவையெல்லாமே 20 வருஷமான மரங்கள். மூணு மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா ஊத்துவேன். இதை மரத்துல இருந்து 3 அடி தொலைவுல 1 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து ஊத்துவேன். 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு மரத்துக்கு 25 கிலோ எருவோடு 5 லிட்டர் மீன் குணபம் கலந்து வைப்பேன். மரத்துல இருந்து 3 அடி தொலைவுல அரைவட்டமா அரையடி ஆழத்துக்குப் பள்ளம் பறிச்சு இதைப் போட்டு, மண்ணைப் போட்டு மூடுவோம். மீன் குணபம் ரொம்ப அருமையா வேலை செய்யுது. மண்ணை மிக வேகமா வளப்படுத்தும். எலி வெட்டும் தவிர்க்கப்படும். மீன் குணபம் வாடைக்கு எலிகள் வராது.

பாக்கு மரத்துடன்
பாக்கு மரத்துடன்

தென்னை சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் காண்டாமிருக வண்டு தாக்குதல்களைக் கட்டுப்படுத்துறதுதான் மிகப் பெரிய சவால். ஆனா, இதை நான் ரொம்ப எளிமையா கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன். ஒரு மண் பானையில பாதியளவுக்குத் தண்ணி வச்சு, அதுல 1 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கை கலந்திடுவேன், இந்தப் பானையோட கழுத்துப் பகுதி வரைக்கும் மண்ணுக்குள்ள இருக்குற மாதிரி புதைச்சு வச்சிடுவேன். இது மாதிரி என்னோட தோட்டத்துல நாலஞ்சு இடங்கள்ல பானையைப் புதைச்சிடுவேன். ஆமணக்குப் புண்ணாக்கு நல்லா நொதிச்சு, புளிச்ச வாடை வீசும். இந்த வாடையால் காண்டாமிருக வண்டுகள் ஈர்க்கப்பட்டு, பானைக்குள்ள விழுந்து அழிஞ்சுடும். அதை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திடலாம். அடுத்த ரெண்டு மாசத்துல ஆமணக்குப் புண்ணாக்கு இறுகிக் கெட்டியாயிடும். அதுல தண்ணி ஊத்தி கலக்கி விடுவேன். அடுத்த மூணு மாசத்துக்கு இதுல இருந்து புளிச்ச வாடை அடிச்சுக்கிட்டு இருக்கும். அதுக்குப் பிறகு புதுசா தயார் பண்ணுவேன்.

வாடல் நோயைக் கட்டுப்படுத்த வேப்பம்பிண்ணாக்கு

இங்கவுள்ள தென்னை மரங்கள்ல இதுவரைக்கும் பெருசா சொல்லிக்குற மாதிரி பூச்சி, நோய்த்தாக்குதல்கள் ஏற்பட்டதில்லை. எப்பயாவது வாடல் நோய்க்கான அறிகுறி லேசா தென்பட்டால், ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் வேப்பம்புண்ணாக்கு போடுவேன். உடனடியா, வாடல் நோயைக் கட்டுப்படுத்தப்படும்.

ஈரியோஃபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தும் சோற்றுக்கற்றாழை

ஈரியோஃபைட் சிலந்தி தாக்குதல் ஏற்படாமல் தடுக்க, என்னோட தென்னந்தோட்டத்துல பல இடங்கள்ல சோற்றுக்கற்றாழை வளர்க்குறேன். சோற்றுக்கற்றாழை இருந்தால் ஈரியோஃபைட் வராது. அதனாலதான் நம்மோட முன்னோர்கள், தென்னையை நட்டால், அதுக்குப் பக்கத்துலயே ஒரு சோற்றுக்கற்றாழை வைக்குறதை வழக்கமா வச்சிருந்திருக்காங்க.

தேங்காய் காயவைக்கும் பணி
தேங்காய் காயவைக்கும் பணி

இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை களை ஓட்டுவோம்

தென்னந்தோட்டத்தைச் சுத்தமா வச்சிக்கணும்னு விவசாயிகள் நினைக்கக் கூடாது. இதனால தென்னைக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுங்கறது என்னோட அனுபவம். களைப் புற்கள், களைச் செடிகள் எல்லாம் சிறு, குறு தாவரங்கள். அதனால களைகளுக்கும் தென்னை மரங்களுக்கும் உணவுப் போட்டி வராது. நிலத்துல உயிர் மூடாக்கா களைகள் இருந்தாதான், மண்ணுல ஈரப்பதம் பாதுகாக்கப்படும். நுண்ணூயிரிகளும் வாழும். காய்கள் பொறுக்கக் கஷ்டமாகுற அளவுக்குப் புதர்கள் மண்டினால்தான் டிராக்டர் மூலம் உழவு ஓட்டுவோம். பெரும்பாலும் ரெண்டு வருஷங்களுக்கு ஒரு தடவை இதைச் செய்றோம்.

மிளகுக் கொடியுடன்
மிளகுக் கொடியுடன்

மண்ணில் கால்கள் பதிந்தால் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை

மண்ணுல ஈரப்பதம் இருந்தாலே போதும். தண்ணி தேங்கி நிக்கணும்னு அவசியம் இல்லை. நான் என்னோட தோட்டத்துல நடக்கும்போது, மண்ணுல கால்கள் பதிஞ்சிருக்கானு பாப்பேன். பதிஞ்சிருந்தா தண்ணி பாய்ச்ச வேண்டியதில்லை. ஒருவேலை கால்கள் மண்ணுல பதியலைனா, மண்ணுல ஈரப்பதம் இல்லாம, காய்ஞ்சு கிடக்குனு புரிஞ்சுகிட்டு, அப்பவே தண்ணி பாய்ச்சிடுவேன்’’ என்றார்.

தேங்காய் காயவைக்கும் பணி
தேங்காய் காயவைக்கும் பணி

கள்ளுக்கு அனுமதியுங்கள்... தென்னைக்கு வரி விதியுங்கள்!

‘‘கள்ளுங்கறது தமிழர்களோட பாரம்பர்ய உணவு. இதை விரும்பக்கூடியவங்கள் இதைக் குடிக்குறதுல எந்தத் தவறும் இல்லை. இது உடலுக்கு நிறைய சத்துக்களைக் கொடுக்கக் கூடியது. கள் இறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தால்தான் தென்னை விவசாயிங்க லாபம் பார்க்க முடியும். இதுல கலப்படம் வந்து ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டா என்ன செய்றதுனு ஆட்சியாளர்கள் பயப்படுறாங்க. கள்ளுக்கடைங்களைத் திறந்தாதான், கலப்படக் கள்ளைத் தடுக்குறது கஷ்டம். விவசாயிகள் தங்களோட தோட்டத்துல கள் விற்பனை செய்ய அனுமதிக்கலாம். ஏதாவது தவறு நடந்தா, அந்த விவசாயி மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். கள் இறக்க அனுமதி கொடுத்தா, இப்ப டாஸ்மாக் மூலம் கிடைக்குற வருமானம் பாதிக்கப்படும்னு ஆட்சியாளர்கள் கருதுறாங்க. இதுக்கு ஒரு மாற்று வழி இருக்கு. கள் இறக்கக்கூடிய தென்னை, பனை மரங்களுக்கு வரி விதிக் கலாம்’’ என யோசனை தெரிவித்தார் பொன்னுராமன்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யிலும் மதிப்புக்கூட்டுதல்

‘‘நான் உற்பத்தி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய்யில் இருந்து வருஷத்துக்கு 1,500 சோப்புகள் தயார் செஞ்சு, ஒரு சோப்பு 20 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி, 30 சோப்புகள் தயார் செய்யலாம். இதோட விலை மதிப்பு 600 ரூபாய். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 230 ரூபாய். காஸ்டிக் சோடா, வேலையாள்கள் சம்பளம் இந்த இரண்டும் சேர்த்து 100 ரூபாய். ஆக மொத்தம் 330 ரூபாய்ச் செலவாகும். மீதி 270 ரூபாய் லாபமா கிடைக்கும். தேங்காய் எண்ணெயா விற்பனை செஞ்சா 230 ரூபாய் வருமானம். சோப்பா மதிப்புக்கூட்டினா, ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் கூடுதலா லாபம் கிடைக்குது’’ என்கிறார் பொன்னுராமன்.

வீட்டுக்குத் தேவையான மிளகு

‘‘20 பாக்கு மரங்கள்ல மிளகுக் கொடி ஏத்தி விட்டிருக்கேன். அருமையா விளையுது. எங்களோட வீட்டுக்கு தேவைக்குப் பயன்படுத்திக்குறோம்’’ என்கிறார் பொன்னுராமன்.

மீன் குணபம் தயாரித்தல்

50 சதவிகிதம் மீன் கழிவுகள், 25 சதவிகிதம் ஈர சாணம், 25 சதவிகிதம் மாட்டு சிறுநீர்... இவற்றை ஒரு பிளாஸ்டிக் கேனில் போட்டு நன்கு கலக்கிவிட்டு மூடி வைக்க வேண்டும். நான்கு நாள்களுக்கு ஒரு முறை மூடியைத் திறந்து கலக்கி விட வேண்டும். அடுத்த 15 நாள்களில் மீன் குணபம் தயாராகிவிடும்.