Published:Updated:

செலவில்லா சாகுபடி… உழவில்லா வேளாண்மை... நம்மாழ்வார் தொழில்நுட்பம்... நல்ல லாபம் கொடுக்கும் பண்ணை!

இசைமணி
பிரீமியம் ஸ்டோரி
News
இசைமணி

மகசூல்

'நிலத்தடி நீரை உயர்த்தி, களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க ஒரே வழி மூடாக்குதான். வீடுதான் சுத்தமா இருக்கணும். காடு குப்பையாத்தான் இருக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொன்ன மாதிரி உழவடிக்காம காட்டைக் காடா போட்டதுனாலதான் தென்னை விவசாயத் துல கணிசமான லாபம் கிடைக்குது’’ என்கிறார், விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி இசைமணி.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு-தாணிப்பாறை சாலையில் 6-வது கிலோ மீட்டரில் உள்ள மகாராஜபுரத்தில் இருக்கிறது இசைமணியின் தோப்பு. தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவரை ஓர் இதமான காலை நேரத்தில் சந்தித்தோம். இளநீரை வெட்டிக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். ‘‘அடிப்படையில விவசாயக் குடும்பம். நெல், தென்னைதான் எங்கள் பகுதியில முக்கிய விவசாயம். எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சேன். அதுக்கு பிறகு அப்பாவோட சேர்ந்து விவசாயம் பாக்க ஆரம்பிச்சுட்டேன். ரசாயன முறையில நெல், தென்னை விவசாயத்தைச் செஞ்சுகிட்டு வந்தோம். இன்ன அளவுதான்னு இல்லாம, அதிக மகசூல் கிடைக்கணும்கிற நினைப்புல இஷ்டத்துக்கும் ரசாயன உரத்தை அள்ளி போடுவார் அப்பா. பூச்சி, நோய்த் தாக்கு தலுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்வார். நானும் அப்பா மாதிரியே பூச்சி மருந்துக் கடைக்காரங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்வேன்.

இசைமணி
இசைமணி

பூச்சிக்கொல்லியை மாத்தி மாத்தி அடிச்சும் ஒரு கட்டத்துல பூச்சி, நோய்த் தாக்குதல் கட்டுப்படவே இல்ல. ரசாயன உரத்தை அதிகமாப் பயன்படுத்துனதுனால மண்ணும் சிமென்ட் தரை மாதிரி இறுகிப் போச்சு. மகசூலும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆனாலும், விவசாயத்தை விட்டுடக் கூடாதுன்னு செஞ்சுகிட்டு வந்தோம். அந்த நேரத்துலதான், எங்க ஊர்ல இருக்க முகேஷுங்கிற இளைஞர் ரசாயன உரமே போடாம விவசாயம் செஞ்சுட்டு வர்றதா சில விவசாயிங்க சொன்னாங்க. ‘உரம் போடாம விவசாயமா’ன்னு ஆச்சர்யப் பட்டேன்.

அந்தத் தம்பிய ஒரு நாள் சந்திச்சு பேசினேன். தென்னையில காய்ப்பு குறைவா இருக்குறதையும், பட்டுப்போற நிலைமையில இருக்குறதையும் சொல்லி வருத்தப்பட்டேன். ‘நான் ரசாயன உரம் போடுறதில்ல; அதோட உழவும் அடிக்கிற தில்ல; களையும் எடுக்குறதில்ல’ன்னு சொன்னதோடு அவரோட தென்னந் தோப்புக்கும் கூட்டிட்டுப் போனார். அது தென்னந்தோப்பா… இல்ல காடான்னு எனக்கே சந்தேகம் வந்துடுச்சு. ஆனாலும், காய்ப்புக்கு எந்தக் குறையுமில்லாம இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப் பட்டேன். ‘இதுக்கு பேர்தாங்கய்யா இயற்கை விவசாயம்’னு சொல்லி, தென்னை மரங்களுக்கு அமுதக்கரைசலை விடச் சொன்னதோடு, இயற்கை விவசாயத்தைப் பத்தியும், நம்மாழ்வாரைப் பத்தியும் சொன்னார்.

மூடாக்காக தென்னை மட்டைகள்
மூடாக்காக தென்னை மட்டைகள்

2003-ம் வருஷம், வத்திராயிருப்பு பக்கத்துல இருக்க ஆயர்தர்மம் கிராமத்துல பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ‘இயற்கை வாழ்வியல் பயிற்சி’ அளிக்க நம்மாழ்வார் ஐயா வந்திருந்தார். அவரை விருதுநகரிலிருந்து நானும் முகேஷும்தான் பேருந்துல அழைச்சுகிட்டு வந்தோம். வரும்போதே, இயற்கை, மழை, விவசாயம்னு நிறைய பேசுனாரு. ‘உங்க ஊருக்குப் பேரு ‘வற்றாத இருப்பு’தான். அந்த அளவுக்கு ஒரு காலத்துல தண்ணீர் செழிப்பா இருந்துச்சு. ‘வற்றாத இருப்பு’தான் பேச்சுவழக்குல ‘வத்திரா யிருப்பு’ன்னு மாறிடுச்சு. ஆனா, இப்போ இங்கயே தண்ணீர் வற்றிப் போகக்கூடிய நிலையிலதான் இருக்கு’ன்னு சொன்னதும் எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு.

நம்பிக்கைக் கொடுத்த நம்மாழ்வார்

‘காட்டுக்குள்ள இருக்க மரம், ஆத்தோரம் இருக்குற ஆலமரம்… வீட்டு முற்றம், புறம்போக்கு நிலங்கள்ல இருக்க மரங்களைப் பாருங்க... அதுக்கு யாருய்யா களை எடுத்தா? உரம் போட்டா? விவசாய நிலத்துக்குப் பச்சைப் போர்வைதான் முக்கியம். ஆனா, பூமித்தாய்க்குப் பச்சைப் போர்வை போர்த் தாம உரம், பூச்சிக்கொல்லி தெளிச்சு காயப் படுத்திட்டு இருக்கோம்’னு உயிர்மூடாக்கின் அவசியத்தைச் சொன்னார். அதோட, இயற்கை விவசாயத்தின் அவசியம், ரசாயன விவசாயத்தின் தீமைகளைப் பற்றியும் விளக்கமா பேசினார். அப்பவே ரசாயன உரம் போடாத, உழவில்லா விவசாயத்தைச் செய்யணும்னு உறுதி எடுத்தேன்.

இடுபொருள்
இடுபொருள்

2004-ம் வருஷம், வத்திராயிருப்புக்கு அவரை அழைச்சுட்டு வந்து பயிற்சி கொடுத்தோம். ‘நடக்குற இடத்துல விதைக்கக் கூடாது, விதைக்குற இடத்துல நடக்கக் கூடாது’, ‘அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ங் கிறதை நம்மாளுங்க (விவசாயிங்க) எப்பவும் மறந்துடக் கூடாது. அறுக்குறதை நிலத்துக்கு உரமாப்போடணும்’ன்னு அவர் பேசுன ஒவ்வொண்ணும் பாடமா இருந்துச்சு. தொடர்ந்து 4 தடவை எங்க ஊருக்கு அவரை அழைச்சு கிட்டு வந்தோம்’’ என்று நம்மாழ்வார் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவர், தற்போதைய விவசாயத்தைப் பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.

‘‘3 ஏக்கர்ல 250 தென்னை மரங்கள் காய்ப்புல இருக்கு. எல்லாம் 20 வருஷத்து மரங்கள். வரிசைக்கு வரிசை 24 அடி, மரத்துக்கு மரம் 24 அடி இடைவெளி இருக்கிற மரங்கள். மாசத்துக்கு ஒரு தடவை அமுதக்கரைசலை பாசன தண்ணியோடு கலந்து விடுறேன். 6 நாள்களுக்கு ஒரு தடவை 100 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 100 கிலோ சாணத்தை ஒன்றாகக் கலந்து கரைச்சிப் பாசன நீர்ல விட்டுக்கிட்டிருந்தேன். வேலையாள் பற்றாக்குறையால இதைக் கிணத்துலயே விட்டு, அப்படியே மரத்துக்குப் பாய்ச்சிடுறேன். வருஷத்துக்கு ரெண்டு தடவை களை எடுத்து, அப்படியே மூடாக்காப் போட்டுருவேன். இதைத்தாண்டி வேறெந்தப் பராமரிப்பும் செய்யுறதில்ல’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

தென்னையில் மூடாக்கு
தென்னையில் மூடாக்கு

ஆண்டுக்கு 37,500 காய்கள்

‘‘வருஷத்துக்கு, ஒரு மரத்துல இருந்து 150 காய்கள் கிடைக்குது. 250 மரங்கள்ல இருந்து 37,500 காய்கள் கிடைக்குது. ஒரு காய் (உரிக்காத தேங்காய்) 9 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில 3,37,500 ரூபாய் வருமானமாக் கிடைக்குது. களை எடுப்பு, இடுபொருள் தயாரிப்பு, வெட்டுக்கூலி, வேலையாள் கூலி, போக்கு வரத்துன்னு மொத்தம் 60,000 ரூபாய் வரைக்கும் செலவாகுது. மீதமுள்ள 2,77,500 ரூபாய் லாபமாக் கிடைச்சுகிட்டு இருக்கு’’ என்றவர் நிறைவாக,

‘‘தென்னை விவசாயத்தை ‘சோம்பேறி விவசாயம்’னு சொல்வார் நம்மாழ்வார். அது உண்மைதான். எந்தப் பராமரிப்பும், எந்த வேலை மெனக்கெடலும் இல்லாம கிடைக்குற இந்த வருமானம் எனக்குப் பெருசுதான்” என்றார் பெருமையாக.

தொடர்புக்கு, இசைமணி, 75980 56258.

ஆறு மாதத்தில் வளமாகிவிடும்!

பலதானிய விதைப்பு, நிலத்தை வளமேற்றுதல், உயிர் மூடாக்கு, பண்ணைக்குட்டை… என நம்மாழ்வார் கூறிய தொழில்நுட்ப தகவல்கள் குறித்து இசைமணி பேசியவை இங்கே பாடமாக...

பல ஆண்டுகளாக ரசாயன உரம் பயன்படுத்திய நிலமாக இருந்தாலும் சரி, சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ள நிலமாக இருந்தாலும் சரி, அதை ஆறே மாதத்தில் வளமேற்றிவிடலாம். இதற்குப் பயறு வகைகள், தானிய வகைகள், நறுமணப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 20 வகைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொன்றிலும் தலா 2 கிலோ எடுத்து (இது ஒரு ஏக்கருக்கான அளவு) நிலத்தில் விதைக்க வேண்டும். வளர்ந்த பிறகு, 20 நாள்களில் அப்படியே மடக்கி உழ வேண்டும். இரண்டாவது முறை மீண்டும் விதைத்து 45-வது நாளில் மடக்கி உழ வேண்டும். மூன்றாவது முறையும் விதைத்து 90 நாள்கள் வரை வளரவிட்டு, அப்படியே மடக்கி உழ வேண்டும். இப்படி மூன்று முறை விதைத்து, மடக்கி உழுதால் நிலம் வளமேறிவிடும். ஒருமுறை விதைத்தால் மட்டும் போதாது. பல விவசாயிகள் ஒரு முறை மட்டுமே விதைக்கிறார்கள். நம்மாழ்வார் சொன்னதுபோல மூன்று முறை விதைத்து உழ வேண்டும்.

மூடாக்குதான் நிலத்தின் உயிர்

நிலத்தடி நீரை உயர்த்தவும், களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கவும் ஒரே வழி மூடாக்குதான். தென்னை மட்டைகள், தேங்காய் உரிக்கப்பட்ட கூடு உள்ளிட்டவற்றை மூடாக்காகப் போடலாம். இவை மரத்துக்கு நல்ல உரமாகவும் இருக்கும். வெப்பத்தையும் காற்றையும் மரத்தின் தரைப்பகுதியில் தடுத்து, மரத்துக்குப் பாய்ச்சும் நீர் ஆவியாகாமல் தடுக்கிறது. மூடாக்கால் நீர்பிடிப்புத் தன்மையும் அதிகரிக்கும்.

கிணற்றுக்குச் செல்லும் இடுபொருள்
கிணற்றுக்குச் செல்லும் இடுபொருள்

தென்னையைப் பட்டுப் போக வைக்கும் உழவு

தென்னை மரத்தின் வேர்கள் நீண்ட தொலைவுக்குப் படர்ந்து சென்று தண்ணீரையும் சத்தையும் உறிஞ்சும். உடம்பில் காயம்பட்டால் அதன்மூலம் வைரஸ் உள்ளே போகும். அதுபோல் தென்னை மரங்களுக்கு இடையே உழவடிப்பதால் வேர்கள் துண்டு துண்டாக வெட்டுப்படும். இந்த வேர்கள் வழியாக வைரஸ்கள் மரத்துக்குள் போய் ‘ஈரியோஃபைட்’ (Eriophyid Mite) என்ற நோயை உருவாக்கிவிடும். இதனால் தேங்காய் சொறி சொறியா மாறிவிடும். உழவு ஓட்டும்போது அடி மண் மேலே வரும். அதில் உள்ள சத்துகள் வெயில்பட்டுக் காணாமல் போவதுடன், துண்டுபட்ட வேர்கள் மேலே வரும். இதன்மூலம் கண்டாமிருக வண்டு வேர் வழியே போய்க் குருத்தை நாசம் செய்வதோடு மரத்தையும் துளைபோட்டுச் சாப்பிடும். கடைசியில் மரத்தையே முழுதாகப் பட்டுப்போகச் செய்து கீழே சாய்த்துவிடும். என்னைப் பொறுத்துவரை தென்னையில் உழவு செய்வது தேவையில்லாத வேலை.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பண்ணைக்குட்டை

‘நிலத்துல விழுகுற மழைத் தண்ணி நம்ம தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அதே நேரத்தில் அதிகமா தேங்கி நிற்கவும் கூடாது. ஒரு துளி மழையோட அருமை, மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிற மானாவாரி விவசாயிக்கு மட்டும்தான் தெரியும். விவசாய நிலத்தின் ஒரு பங்குல பண்ணைக்குட்டை அமைக்கணும்’னு ஐயா சொல்வார். மழைநீரை நேரடியாகச் சேமித்து, வறட்சி மற்றும் தண்ணீர்த் தேவை ஏற்படும்போது பயன்படுத்துவதுதான் பண்ணைக் குட்டையின் நோக்கம். சரிவான பகுதியை நோக்கி, நிலத்தின் மூலைப் பகுதியில் அமைக்க வேண்டும். அதே நேரத்தில் பண்ணைக்குட்டையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் போர்வெல், கிணறு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரைச் சேகரித்து வைப்பது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில், மீன்கள் வளர்த்துத் தனி வருமானமும் பார்க்கலாம். பண்ணைக்குட்டைக்கு அருகில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதால், இதன் அருகில் பயிரிட்டுள்ள பயிர்கள் வறட்சியால் வாடாமல் பாதுகாக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 சென்ட் பரப்பிலாவது பண்ணைக்குட்டை அமைக்க வேண்டும்.

மட்டை எண்ணிக்கை குறைஞ்சா
காயும் குறையும்

‘‘ ‘ஒரு தென்னை மரத்துல இருந்து மட்டை, பாளைனு வருஷத்துக்கு 100 கிலோ கழிவுகள்வரை கீழே விழும். இதைப் பண்ணையை விட்டு வெளியேற்றிவிட்டு, அதே அளவுக்கு என்ன உரம் கொடுத்தாலும், தேங்காய் வருமானத்துக்கு மேல செலவு வரும்’ என்பார் ஐயா. மழைக்காலம் முடிஞ்தும் காய்ஞ்ச மட்டையை விவசாயிகள் கழிப்பாங்க. அதுக்குப் பிறகு மரம் பார்க்குறதுக்கு அழகாத்தான் தெரியும். ஆனா, சில நாள்கள்ல பச்சை மட்டையே காய்ஞ்சு கீழே விழுந்துடும். மட்டை எண்ணிக்கை குறைஞ்சுட்டா காய்ப்பு எண்ணிக்கையும் குறைஞ்சுடும்’’ என்கிறார் இசைமணி.