Published:Updated:

1,000 நாட்டுக்கோழிகள்... மாதம் ரூ.50,000 லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தென்னந்தோப்புக்குள் கோழிகள் வளர்க்கும் சாந்தகுமார்
தென்னந்தோப்புக்குள் கோழிகள் வளர்க்கும் சாந்தகுமார்

கால்நடை

பிரீமியம் ஸ்டோரி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாட்டுமங்கலம் கிராமத்தில் இருக்கிறது சாந்தகுமாரின் நாட்டுக்கோழிப் பண்ணை. இயற்கை எழில் சூழ தென்னைமரங்களுக்கிடையே வளர்கின்றன நாட்டுக்கோழிகள். தென்னைமரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே கோழிகளைக் கவனித்துக்கொண்டிருந்த இயற்கை விவசாயி சாந்தகுமாரைக் காலைப் பொழுதில் சந்தித்தோம்.

“எனக்கு பூர்வீகமே நாட்டுமங்கலம்தான். பாரம்பர்ய விவசாயக் குடும்பம். அப்பாதான் விவசாயத்தைப் பார்த்துக்குவாரு. ஒரு ஏக்கர் நிலம் இருந்துச்சு. எருமை மாடு, பசுமாடு வெச்சிருந்தோம். நான் 6-ம் வகுப்புவரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிப்பைத் தொடர முடியல. மருந்தடிக்கிறது, உழுவுறதுன்னு விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப எல்லாம் ரசாயன விவசாயம்தான். எனக்கு இயற்கை விவசாயம் செய்றதோடு கோழி வளர்க்கணும்ங்கிற ஆசை அப்பவே இருந்துச்சு. ஆனா, அந்த நேரத்துல, அந்த அளவுக்கு வசதி இல்ல. இங்க இருந்தா கண்டிப்பா அதை நிறைவேத்த முடியாதுன்னு நெனச்சு, சிங்கப்பூர்க்கு வேலைக்குப் போனேன்’’ என்றவர், தண்ணீர் பாய்ச்சும் பணியை முடித்து விட்டுத் தொடர்ந்தார்.

‘‘8 வருஷம் அங்க வேலைபார்த்தேன். அங்க உழைச்சு சம்பாதிச்ச பணத்தை அனுப்பி, ஊர்ல 5 ஏக்கர் இடத்தை வாங்கிப் போட்டேன். ஊருக்கு வந்தவுடனே 2 ஏக்கர்ல தென்னை மரங்களை நடவு செஞ்சேன். பிறகு, கோழி வளர்ப்பைத் தொடங்கினேன். 15 வருஷமாச்சு. கோழிவளர்ப்பை விடாம செஞ்சிக் கிட்டு இருக்கேன். அதுதான் என்னை வாழ வெச்சுக்கிட்டு இருக்கு’’ என்றவர், கோழிகள் மேய்ச்சலிலிருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

தென்னந்தோப்புக்குள் கோழிகள் வளர்க்கும் சாந்தகுமார்
தென்னந்தோப்புக்குள் கோழிகள் வளர்க்கும் சாந்தகுமார்

பொறுமை அவசியம்

‘‘கோழி வளர்ப்புல முதல் வருமானம் பார்க்கக் குறைஞ்சது 4 முதல் 6 மாசம் ஆகும். இது புரியாம பலரும் பண்ணை ஆரம்பிச்சோம். வருமானம் கிடைக்கலைன்னு சொல்லி 2 மாசம், 3 மாசத்திலேயே மூடிடுறாங்க. ஆரம்பத்துல அதிக இறப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கு. எனக்கு அப்படித்தான் நடந்துச்சு. ஆரம்பிக்கும்போது அனுபவம் இல்ல. ஆர்வம் மட்டும் இருந்துச்சு. மேய்ச்சல் முறையில் வளர்க்கிற பண்ணைகளைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பிறகு, பெரிய நாட்டுக்கோழிப் பண்ணைக்குப் போய் 500 ஒருநாள் குஞ்சுகளை வாங்கியாந்து இறக்கினேன். அந்த நேரம் மழைக்காலம். கோழிகளுக்குச் சளி பிடிச்சதோடு கழிச்சல் நோயும் வந்து 2 மாசத்துக்குள்ள 300 குஞ்சுகள் செத்துப்போச்சு.

போட்ட முதலீடு போச்சு. ஆனா, நான் தளர்ந்துபோகல. சில நாள்கள் கழிச்சு, மறுபடியும் 500 கோழிக்குஞ்சுகளை வாங்கியாந்து இறக்கினேன். அதுலயும் 100 குஞ்சுகள்தான் மிஞ்சிச்சு. ஆனா, முயற்சியைக் கைவிடல. கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்.

நம்பிக்கை கொடுத்த நாட்டு மருந்து

பண்ணையில இருந்த 100 கோழிகள்ல 50 கோழிகளைத் தாய்க்கோழிகளாகவும், 10 சேவல்களாகவும் வெச்சிகிட்டேன். தாய்க் கோழியிலயிருந்து அடுத்த சில மாசங்கள்ல முட்டைகள் கிடைச்சது. முட்டைகளை அடை வெச்சு குஞ்சுகளாகப் பெருக்கினேன். 500 கோழிகள் உருவாச்சு. கோழிகளை நோயிலிருந்து பாதுகாக்குற வழிமுறைகளைத் தேடி ஒவ்வொரு பண்ணையாப் போக ஆரம்பிச்சேன். அங்க கிடைச்ச ஆலோசனை படி நாட்டு மருந்தைக் கோழிகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். இறப்பு விகிதம் கொறஞ்சது. ஆனாலும், முட்டையைப் பொரிக்க வெச்சு கோழியைப் பெருசாக்கி விற்பனை செய்யுறதுக்கு ஒரு வருஷம் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. அதனால, மறுபடியும் ஒரு நாள் குஞ்சுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். நோய் மேலாண்மை யைப் பத்தி கத்துக்கிட்டதால, பெரிய அளவுல இறப்பு வரல. 6 மாசத்துக்கு ஒரு தடவை கோழியிலிருந்து நல்ல லாபம் கிடைக்குது’’ என்றவர், தனது கொட்டகை அமைப்பைப் பற்றிப் பேசினார்.

கோழிகள் அமரும் கொட்டகை
கோழிகள் அமரும் கொட்டகை

குஞ்சுகளுக்குக் கொட்டகை

‘‘நான் முழுக்க இயற்கை முறையிலதான் கோழிகளை வளர்க்கிறேன். கோழிகளுக்காக ஒரு சின்னக் கொட்டகை போட்டிருக்கேன். ஒரு மாசம் வரைக்கும் கோழிகள் அந்தக் கொட்டகைக்குள்ள வளரும். கொட்டகையில கீழ்பக்கம் (தரைமட்டத்துக்கு) 2 அடிக்குத் துவாரம் இருக்கு. அதுல பெரிய பலகை வெச்சி அடைச்சிருக்கேன். பலகையை இழுத்துவிட்டா, குஞ்சுகள் வெளியே வர்ற மாதிரி அமைப்பு ஏற்படுத்தியிருக்கேன்.

கொட்டகையோட பக்கவாட்டுல தென்னைமரங்கள்ல ரெண்டு ஆள் உயரத்துக்குச் சுத்தியும் வளைச்சு, வலை அடிச்சிருக்கேன். காகம், பருந்து குஞ்சுகளைத் தூக்காம இருக்க மேலயும் மீன் வலையைக் கட்டிடுவோம். மழை வரும்போது கம்பு வெச்சு விரட்டுவோம். எல்லாக் குஞ்சுகளும் கொட்டகைக்குள்ள போயிடும். அப்புறம் பலகை வெச்சு அடைச்சிடுவோம். 45 நாளுக்குப் பிறகுதான் மேய்ச்சலுக்காகத் தென்னந்தோப்புக்குள்ள திறந்துவிடுவேன். அதற்கப்புறம் கிட்டத்தட்ட 5 மாசம் வரைக்கும் தென்னந் தோப்புக்குள்ளதான் மேய்ச்சல். 4 மாசத்துலயிருந்து 6 மாசத்துக் குள்ள கறிக்காக எல்லாக் கோழியையும் விற்பனை செஞ்சிடுவேன். கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்ததிலிருந்து முதல் ஒரு மாசம் மட்டும் நாம பக்கத் துலயே இருந்து பார்த்துக்கிற மாதிரி இருக்கும்.

கொட்டகையில் முதலீடு அதிகம் போடக் கூடாது

மேய்ச்சலுக்குத் திறந்துவிடுற கோழிகள் இரவு தங்கி அடையுறதுக்குக் கம்புகளை வெச்சு, ரேக் மாதிரி கட்டி வெச்சிருக்கேன். வீட்டுல கான்கிரீட் போடும்போது பயன் படுத்துற கம்பிகள்ல நல்ல தடிமனான 4 கம்பிகள் வாங்கினேன். 4 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்துல இடத்தைத் தேர்வு பண்ணினேன். 4 மூலையிலயும் ஒவ்வொரு கம்புகளை வெச்சு, கூடவே மரக்கட்டை களையும் வெச்சு 6 அடி உயரத்துக்குக் கட்டினேன். பிறகு, கொட்டகைக்குக் கட்டுகிற மாதிரி கீழே இருந்து கம்புகளை வெச்சு கட்டினேன். உள்ளே 4 அடுக்கா, கம்புகளை ‘ரேக்’ மாதிரி அமைச்சேன். மழை, வெயிலுக் காகச் சுற்றிலும் தார்ப்பாய் போட்டு மூடியிருக்கேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் வெளியே விடுற கோழிகள் எல்லாம் இதுலதான் அடையும். என்னோட 1,000 கோழிகளும் இதுலதான் அடைஞ்சது. பலபேர் கொட்டகை போடுறதுலயே பெரும்பாலான பணத்தை முதலீடு பண்ணிடுறாங்க. ஆனா, மேய்ச்சல் முறை நாட்டுக்கோழிகளுக்கு அதிக செலவுல கொட்டகை தேவையில்லை. நம்ம தோட்டத்துல இருக்க மட்டை, கட்டைகளை வெச்சு, நம்ம வசதிக்கு ஏத்தமாதிரி இப்படியொரு அமைப்பை ஏற்படுத்திகிட்டால் போதும்.

முதல் ஒரு வாரத்துக்குக் கோழிகளைக் கம்புல ஏத்தி பழக்கணும். இருக்கிறதுலயே இதுதான் கொஞ்சம் சிரமமான வேலை. ஒருவாரத்துக்கு அப்புறம் அந்த இடத்துல அதுவாகவே வந்து அடைய ஆரம்பிச்சிடும். கோழியோட கழிவுகள் எல்லாம் கீழே மண்ணுக்குள்ள நேரடியா விழுகுற வகையில அமைச்சிருக்கோம். கம்புகள்ல இருக்கிற கழிவுகளைத் தினமும் தட்டி விட்டுடுவோம். அதை அப்படியே அள்ளிப் பக்கத்துல இருக்கத் தென்னை மரத்துக்கு உரமா போட்டுடுவோம்’’ என்றவர் நிறைவாக, வருமானம் குறித்துப் பேச ஆரம்பித்தார்,

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

ஒரு கோழி 500 ரூபாய்

சிறுவிடை, பெருவிடை கோழிகளைத்தான் வளர்க்கிறேன். அஞ்சுலயிருந்து ஆறு மாச கோழிகளைக் கறிக்காக விற்பனை செய்றேன். ஒரு கோழி 500 ரூபாய். நான் சந்தைகளையோ, வியாபாரிகளையோ தேடிப் போறதில்லை. அறந்தாங்கி-கட்டுமாவடி மெயின்ரோட்டுல போர்டு வெச்சிருக்கேன். எங்க பகுதியில நான் கோழி வளர்ப்பில் கொஞ்சம் பிரபலமா இருக்கறதால, பண்ணைக்கே நேரடியா வந்து வாங்கிட்டுப் போறாங்க. இதுவரைக்கும் விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

சிறுவிடை, பெருவிடைன்னு சேர்த்து 1,000 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் இறக்கினால் 800 பெட்டை, 200 சேவல்களாக இருக்கும். ரெண்டிலேயும் சேர்த்து 150 கோழிகள் வரைக்கும் இறந்துபோயிடும். 6 மாசம் வரைக்கும் வளர்த்தா ஒரு கோழி சுமார் ஒண்ணேகால் கிலோ (1,250 கிராம்) எடை வரும். ஒரு கோழி 500 ரூபாய் விலையில கொடுப்பேன். சராசரியா 800 கோழிகளுக்கு 4 லட்சம் ரூபாய் கிடைக்குது. இதுல தீவனம், வேலையாள் சம்பளம், பராமரிப்பு எல்லாம் சேர்த்தா மொத்தம் 1 லட்சம் ரூபாய் செலவாகிடும். மீதி 3 லட்சம் லாபமாகக் கிடைக்கும். அடுத்த 6 மாசமும் இதே அளவு வருமானம் கிடைக்கும். ஆக, மாசத்துக்குன்னு கணக்குப் பார்த்தால் 50,000 ரூபாய் குறையாம லாபம் கிடைக்குது” என்றார்.


தொடர்புக்கு, சாந்தகுமார்,

செல்போன்: 88384 08160

கழிச்சல் கவனம்

கோழிகளுக்கான நோய்கள் பற்றிப் பேசிய சாந்தகுமார், ‘‘ஒருநாள் குஞ்சு வாங்கிட்டு வந்த பிறகு, 7, 21 மற்றும் 55-ம் நாள் கண்டிப்பா தடுப்பூசி போடணும். அதுக்கு பிறகு ஊசி எதுவும் தேவையில்ல. கோழி சுணக்கம் ஆச்சுன்னா, நாட்டு மருந்துகளைக் கொடுக்கலாம். சளிப்பிடிக்கும், கழிச்சல் நோய்களும் வரும். குறிப்பா, வெடக்கோழியா இருக்கும்போதுதான் இந்த மாதிரி பிரச்னை வரும். அப்படி வரும்போது, கீழாநெல்லி, துளசி இலைகளுடன், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சத்தூள், மிளகு, கசகசா, கருஞ்சீரகம் எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு தீவனத்துல கலந்து கொடுப்பேன். சளி பிரச்னைக்கும் இந்த வைத்தியம்தான்” என்றார்.

மேய்ச்சல் முறைதான் லாபம் கொடுக்கும்

‘‘தீவனத்தைப் பொறுத்தவரை கோழிக்குஞ்சுகளுக்கு 30 நாள் வரைக்கும் நாட்டுக்கோழிக்கான கம்பெனி தீவனம் கொடுத்திடுவேன். பிராய்லர் கோழி தீவனம் கண்டிப்பாகக் கொடுத்திடக் கூடாது. வெடக்கோழியா வளர்ந்ததுக்கு அப்புறம், நெல் தவிடு, குருணையைக் கொஞ்ச நாளைக்குக் கலந்து கொடுப்பேன். அதோட, கடலைப் பிண்ணாக்கை தண்ணியில கலந்து வெச்சிடுவேன். பிறகு, முழுசா மேய்ச்சல்தான். இடையில அசோலா போட்டு வெச்சிருவேன். கோழிகள் தென்னந்தோப்புக்குள் மேய்ஞ்சு, மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைச் சாப்பிட்டுக்கும். செடி, கொடிகள்ல இருந்து தேவைப்படுற இலைகளையும் கொத்தி சாப்பிட்டுக்கும். தொடர்ச்சியா தீவனமே வெச்சுக்கிட்டு இருந்தா நமக்கு நஷ்டம் தான் வரும்’’ என்கிறார் சாந்தகுமார்.

பெரிய கொட்டகை தேவையில்லை

கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை மேய்ச்சல் முறைதான் சிறந்தது. தீவனச் செலவுகளை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு வருமானம் கிடைக்கும். அதே நேரம் கோழிகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். பெரிய கொட்டகைப் போட்டுச் செலவு பண்றதைத் தவிர்த்திடலாம். தீவன மேலாண்மை, நோய் மேலாண்மையைப் பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டுக் களத்தில் இறங்கிட்டாலே இந்தத் தொழிலில் வெற்றிதான்.

கோழிக்கழிவுகளே உரம்

‘‘5 ஏக்கர்லயும் தென்னை மரங்கள் இருக்குது. அதுல 15 வருஷ மரங்கள் 2 ஏக்கர்லயும், இப்ப நடவு செஞ்ச மரங்கள் 3 ஏக்கர்லயும் இருக்குது. காய்ப்புல இருக்குற தென்னைமர நடவுக்கு இதுவரைக்கும் ரசாயன உரங்களே வெச்சதில்ல. ஆனா, எப்போதும்போல காய்ப்பு இருந்துகிட்டு இருக்கு.

பஞ்சகவ்யா, மீன் அமிலம் தயாரிச்சு, 1 ஏக்கருக்கு 2 லிட்டர் வீதம் பாசன தண்ணியிலக் கலந்து விடுறேன். அதுதான் தென்னைகளுக்கு ஊட்டச்சத்து. கோழிக்கழிவுகள் எல்லாம் தென்னந்தோப்புக்குள்ளே மரத்துக்கு உரமா மாறிடுது. அதனால, இங்க மண்புழு அதிகமாக இருக்கும்” என்கிறார் சாந்தகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு