Published:Updated:

மாதம் ரூ.56,000 வளமான வருமானம் கொடுக்கும் வான்கோழி, நாட்டுக்கோழி, வாத்து!

நாட்டுக்கோழிகளுடன் சாலமன்
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழிகளுடன் சாலமன்

கால்நடை

மாதம் ரூ.56,000 வளமான வருமானம் கொடுக்கும் வான்கோழி, நாட்டுக்கோழி, வாத்து!

கால்நடை

Published:Updated:
நாட்டுக்கோழிகளுடன் சாலமன்
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழிகளுடன் சாலமன்

‘‘இந்தக் கோழிப் பண்ணையை ஆரம்பிச் சதுக்குக் காரணமே பசுமை விகடன்தான். சென்னையில ‘கிராபிக் டிசைனரா’ வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்ப, தொடர்ச்சியா பசுமை விகடன் வாங்கிப் படிப்பேன். அதுல கோழி வளர்ப்பு பத்தின கட்டுரைகள்தான் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அந்தக் கட்டுரைகள் மூலமா தெரிஞ்சுகிட்டது போக, மாதவரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில ஒருநாள் பயிற்சிக்குப் போயிருந்தேன். அங்க பல பண்ணையாளர்களைச் சந்திச்சேன். அதன் மூலமா கிடைச்ச அனுபவத்தை வெச்சு, ‘கிராபிக் டிசைனர்’ வேலையை விட்டுட்டு சொந்தமா கோழிப் பண்ணைய ஆரம்பிச்சேன். இப்ப, இந்தத் தொழில்ல நஷ்டமில்லாம லாபத்தைப் பார்த்துக்கிட்டு வர்றேன்” மகிழ்ச்சி யோடு சொல்கிறார் சாலமன்.

திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் உள்ளது நாடழகானந்தல். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெங்கப் பட்டுக் கிராமத்தில் இருக்கிறது சாலமன் பண்ணை. கோழிப்பண்ணை பணிகளில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், உற்சாகம் அடைந்தவர், மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.

நாட்டுக்கோழிகளுடன் சாலமன்
நாட்டுக்கோழிகளுடன் சாலமன்

“எந்தத் தொழிலா இருந்தாலும் அர்ப்பணிப்போடு, சரியான திட்டமிடலோடு செஞ்சா ஜெயிக்கலாம். அதுக்குக் கோழிப் பண்ணையும் விதிவிலக்கல்ல. 2017-ம் வருஷம் வான்கோழிக்கு நல்ல டிமாண்டு இருந்துச்சு. அதனால அடுத்த வருஷம் எங்க பக்கம் நிறைய பேர் வான்கோழி பண்ணை அமைச்சாங்க. பல விவசாயிங்க தோட்டத்துல 10, 20 வான்கோழிகன்னு வளர்க்க ஆரம்பிச்சாங்க. அதனால அந்த வருஷம் வரத்து அதிகமாகி, நிறைய பேருக்கு நஷ்டமாகிப் போச்சு. ஆனா, நான் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப்னு சமூக வலைதளங்கள் மூலமா விற்பனை பண்ணினேன். எனக்கும் பெருசா லாபம் கிடைக்கல. அதே நேரம் நஷ்டமும் இல்ல. அந்த வருஷம் நஷ்ட மானதால பலபேர் வான்கோழி வளர்ப்பை விட்டுட்டாங்க. அதோட தீவன விலையும் அதிகமானதால வளர்க்குறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போச்சு. ஆனா, நான் தொடர்ந்து வளர்த்தேன். அந்த வருஷம் நல்ல டிமாண்டு இருந்துச்சு. நல்ல லாபம் கிடைச்சது. எந்தத் தொழிலா இருந்தாலும் அவசரப்படக் கூடாது. பொறுமை அவசியம். அதை நான் கடைப்பிடிக்கிறதாலதான் ஜெயிக்க முடியுது’’ என்று முன்னுரை கொடுத்தவர், பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்து பேசினார்.

கோழிகள்
கோழிகள்

‘‘இது மொத்தம் நாலரை ஏக்கர் நிலம். மானாவாரி பூமி. மழைக்காலத்துல மட்டும் கம்பு, உளுந்து, நிலக்கடலை போடுவோம். மத்தபடி வேற வெள்ளாமை எதுவும் இல்ல. அதனாலதான் கோழிப் பண்ணை ஆரம்பிக் கலாம்னு முடிவு பண்ணினேன். முதல்ல வான்கோழியிலதான் ஆரம்பிச்சேன். அடுத்து, வாத்து, நாட்டுக்கோழிகள்னு சேர்த்துக்கிட்டேன். பண்ணை அமைச்சது, போர்வெல், மின்சாரம், பக்கத்துல நான் தங்குறதுக்கு ஒரு வீடு கட்டினதுக்கெல்லாம் சேர்த்து 4 லட்சம் ரூபாய் செலவாச்சு. எனக்கு இந்தத் தொழில் பத்தின முழுமையான புரிதல் இருந்துச்சு. என்னுடைய தொழில் இதுதான்னு உறுதியா இருந்தேன். அதனால தைரியமா முதலீடு செஞ்சேன். சிலபேர் சும்மா ஆரம்பிச்சுப் பார்ப்போம்... வருமானம் வந்தா தொடர்ந்து செய்யலாம்... இல்லைன்னா விட்டுடலாம்னு நினைக்கிறவங்க ஆரம்பத்துல பெருசா முதலீடு போட வேண்டாம். அது நிச்சயம் நஷ்டமாகிடும். அப்படி நினைக் கிறவங்க, முதல்ல குறைஞ்ச முதலீட்டுல ஆரம்பிச்சு, பிறகு அதிகமாக்கலாம்’’ என்றவர் வான்கோழி கொட்டகைக்கு அருகே நின்று, மேலும் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இந்த கொட்டகையோட அகலம் 21 அடி. நீளம் தேவைக்கு ஏத்தமாதிரி அமைச்சிருக்கேன். வான்கோழிக்கு 100 அடி நீளம், 21 அடி அகலம், நாட்டுக்கோழிக்கு 50 அடி நீளம், 21 அடி அகலம், வாத்துக்கு 50 அடி நீளம், 21 அடி அகலம்னு மூணு கொட்டகை அமைச் சிருக்கேன். ஒவ்வொரு கொட்டகையிலயும், வயசு, ரகத்துக்கு ஏற்ப தனித்தனியா பிரிச்சு வளர்ப்போம்’’ என்றவர், வான்கோழி வளர்ப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

‘‘என்கிட்ட 100 வான்கோழிகள் இருக்கு. இதுக்கு நவம்பர், டிசம்பர்தான் நல்ல சீஸன். தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அதிகமா விற்பனையாகும். ஒரு மாசத்துக்கு 210 முட்டைகள் கிடைக்கும். முட்டைகளை இன்குபேட்டர் மூலம் பொரிக்க வைக்கிறோம். அதுல 50 முதல் 60 முட்டைக வீணாகிடும். சராசரியா 150 குஞ்சுக கிடைக்கும். ஒரு நாள் குஞ்சு 100 ரூபாய். ஒரு மாச குஞ்சு 225 ரூபாய். நான் பெரும்பாலும் ஒருநாள் குஞ்சுகளைக் கொடுக்குறது இல்ல. ஒரு மாச குஞ்சுகளைத் தான் விற்பனைக்குக் கொடுப்பேன். அந்த வகையில 150 குஞ்சுகளுக்கு 33,750 ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 12,800 ரூபாய். அதுபோக லாபம் 20,950 ரூபாய்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

நாட்டுக்கோழி

நிகோபாரி ரகத்துல 150, சிறுவிடையில 50 கோழிகள் இருக்குது. ஒரு மாசத்துக்கு 600 முட்டைகள் கிடைக்குது. முட்டைகளை இன்குபேட்டர்லதான் பொரிக்க வைக்கிறோம். 150 முட்டைக வீணாகிடும். சராசரியா 450 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு நாள் குஞ்சு 65 ரூபாய். ஒரு மாச குஞ்சு 135 ரூபாய். 200 ஒரு நாள் குஞ்சுகள், 250 ஒரு மாச குஞ்சுகளை விற்பனை செய்வேன். அது மூலமா 46,750 ரூபாய் கிடைக்கும். மொத்த செலவு 13,500 ரூபாய். அதைக் கழிச்சுட்டா 33,250 ரூபாய் லாபமாக் கிடைக்கும்.

வாத்துகள்
வாத்துகள்

வாத்து

கூஸ் வாத்து மொத்தம் 20 ஜோடிகள் இருக்கு. மாசம் 20 முட்டைகள் கிடைக்கிது. எல்லா முட்டைகளையும் சிறுவிடைக் கோழிக மூலமாதான் பொரிக்க வைக்கிறேன். அதுல 10 முட்டைகள் வீணாகிடும். ஒரு மாத குஞ்சு 300 ரூபாய். மாசம் 10 குஞ்சுகள் விற்பனை செய்வேன். அது மூலமா 3,000 ரூபாய் கிடைக்கும். இதுல செலவு 750 ரூபாய். அது போக மாசம் 2,250 ரூபாய் லாபமாக் கிடைக்கும்.

ஒரு மாசத்துக்கு வான்கோழி மூலமா 20,950 ரூபாய், நாட்டுக்கோழி மூலம் 33,250 ரூபாய், வாத்து மூலமா 2,500 ரூபாய். மொத்தம் 56,700 ரூபாய் லாபமாக் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘என்னோட அனுபவத்துல கோழி வளர்ப்பு வெற்றிகரமான தொழில். பண்ணை ஆரம்பிக்குறவங்கதான், விற்பனை பகுதிக்கு ஏற்ற மாதிரியான ரகங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கணும். நோய், தீவன மேலாண்மையில கவனமா இருந்தாப் போதும். கோழிப் பண்ணையில ஜெயிச்சிடலாம்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சாலமன்,

செல்போன்: 89394 39480

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

கோழிகளுக்கான தீவனம்!

‘‘அந்தந்த சீஸன்ல விளையுற தானியங்களைச் சேமிச்சு வெச்சுகிறோம். அசோலாவையும் உற்பத்தி பண்றோம். மீன் கடையில கழிவுகள சேகரிச்சு, வேகவெச்சு கோழிகளுக்குக் கொடுக்குறோம். ஒரு மாசம் வரைக்கும், கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், புரோட்டின் சத்தும் அதிகமா தேவைப்படுறதுனால கம்பெனி தீவனங்களைப் பயன்படுத்துறோம். எல்லாக் கோழிகளுக்கும் ஒண்ணா தீவனம் போடாம ஒவ்வொரு ரகத்துக்கும் தனித்தனியா தீவனம் போடணும். அப்பதான் எல்லாக் கோழிகளுக்கும் போதுமான தீவனம் கிடைக்கும்.

வான்கோழிகள்
வான்கோழிகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயம்!

கோழிகளுக்கு எல்லாக் காலத்திலும் நோய் வரும். முக்கியமா சளி, அம்மை, வெள்ளைக்கழிச்சல்தான் அதிகமா கோழிகளைத் தாக்கும். அம்மை, வெள்ளைப்படுதல் பொறுத்தவரைக்கும் குஞ்சுல இருந்தே 3 மாசத்துக்கு ஒரு தடவை முறையான தடுப்பூசி போட்டா வராது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க பண்ணையில வந்தது. அதுக்கப்புறம் வரல. முக்கியமா சளித் தொல்லை அடிக்கடி வரும். ஒரு பண்ணையில 100 கோழிகளுக்கு மேல வளர்க்கும்போது இந்த பிரச்னை வரும். இதுக்கு வெற்றிலை, தூதுவளை, தும்பை, மஞ்சள், சீரகம் இவையெல்லாம் தண்ணில போட்டுக் கஷாயம் பதத்தில் ரெடி பண்ணி 10 நாள்களுக்கு ஒரு தடவை கொடுத்துக்கிட்டு வர்றோம். கோழிகளுக்கு நோய் தாக்கம் வந்துருச்சுன்னா அலோபதிக்குப் போகலாம். நோய் வராமல் தடுக்க இயற்கை முறையில மருந்து கொடுக்கலாம். பண்ணையைச் சுத்தமா வெச்சுக்கிட்டாலே நோய் வராமத் தடுக்கலாம்’’ என்கிறார் சாலமன்.

புதிதாகப் பண்ணை அமைப்போருக்கு...

பண்ணை அமைப்பதற்கு முன்பே பண்ணையாளர்களையும் பண்ணையையும் சந்தித்து வளர்ப்பு முறை, தீவனம், பண்ணை அமைப்பு முறை போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் நடத்தும் கோழி வளர்ப்பு பயிற்சிக்குச் சென்று அனுபவம் பெறலாம். உங்கள் பகுதியில் எந்தக் கோழி ரகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதை அறிந்து அந்த ரகத்தை வளர்க்கலாம். எப்பொழுதும் கால்நடை மருத்துவரிடம் தொடர்பில் இருப்பது மிக நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism