Published:Updated:

மாதம் ரூ.35,000 இயற்கை சோப்புத் தயாரிப்பில் அசத்தும் விவசாயி!

பயிற்சியளிக்கும் சோமசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சியளிக்கும் சோமசுந்தரம்

முயற்சி

குறைந்தளவு நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் நாட்டு மாடுகளை வைத்து வருமானம் எடுக்க முடியுமா? என்று கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகள் மூலமாகக் கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள் விவசாயிகள். இன்றைக்கு நாட்டு மாடுகள் மூலமாக கிடைக்கும் சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி வருமானம் பார்த்து வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம்..

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, சிந்தக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். அங்கு போய் ‘சோப்பு சோமசுந்தரம்’ என்றால் சின்ன குழந்தைக்குக் கூட அடையாளம் தெரிகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தோட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களுடன்
சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களுடன்

சுற்றிலும் விவசாயம் நடக்கும்
அருமையான இடம்


காங்கேயம் மாடுகள்மூலம் கிடைக் கும் சாணம், சிறுநீரைக் கொண்டு சோப்பு தயாரிக்கிறார். திருச்சி, ஸ்ரீரங்கம் நான்கு மாட வீதிகளிலும் இவரது சோப்பு மிக நன்றாக விற்பனையாகிறது. அந்தக் கோயிலைச் சுற்றி இருக்கக்கூடிய அக்ர ஹாரத்தில் இருக்கும் பெரும்பான்மையோர் இவருடைய வாடிக்கையாளர்கள்.

அவரிடம் இருக்கும் காங்கேயம் மாடு களிலிருந்து கிடைக்கும் சிறுநீர் மற்றும் சாணம் இரண்டையும் சேகரித்துச் சோப்பு தயாரிப்பில் முக்கியப் பொருள்களாகப் பயன் படுத்துகிறார். இவற்றுடன் வேப்பிலை, நல்லெண்ணெய், கற்பூரம் மற்றும் சில மூலிகைகளைச் சேர்த்துச் சோப்பு தயாரித்து விடுகிறார். ஒரே நாளில் சில நூறு சோப்புக் கட்டிகள் தயாரித்து, அதைக் கொண்டு போய் ஸ்ரீரங்கத்து வீதிகளில் விற்பனை செய்கிறார்.

பயிற்சியளிக்கும் சோமசுந்தரம்
பயிற்சியளிக்கும் சோமசுந்தரம்

ஒவ்வொரு மாதமும் சோப்பு விற்பனைமூலம் அவர் சுமார் 35,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த சோப்பை, ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு மட்டும் வாங்கிக் கொள்ளாமல் உறவினர்களுக்கும் வாங்கிக் கொடுக்கிறார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் ‘கூரியர்’ மூலம் அனுப்பி வைக்கிறார்கள். பற்பசை, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், வலி நிவாரணத் தைலம், முகப்பவுடர், ஊதுபத்தி மற்றும் சோப்பு உள்ளிட்ட பத்து விதமான பொருள் களைத் தயாரிக்கிறார். ஈரோட்டில் உள்ள இயற்கை வேளாண் கூட்டமைப்பு அங்காடி மூலமாகவும் விற்பனை செய்கிறார்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

இது தொடர்பாகப் பேசும் சோமசுந்தரம், “நான் ஜீரோ பட்ஜெட் முறையில் இயற்கை விவசாயப் பயிற்சி எடுத்துகிட்டு விவசாயம் செஞ்சிட்டு வந்தேன். இயற்கை விவசாயத்துக்கு மாடுகள் அவசியம்ங்கிறதால, நாட்டு மாடுகள வாங்கினேன். ஒரு கட்டத்துல விவசாய வேலைகள் போக என்ன செய்யறதுன்னு யோசிச்சேன். நாட்டு மாட்டுச் சாணத்தை வச்சு ஏதாவது செய்யலாம்னு சேலத்துல இருக்கிற ஆத்மானந்தா கோசாலையில பயிற்சி எடுத்துக்கிட்டேன். பிறகு, நாக்பூர்ல இருக்கக் ‘கோ விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா’ தொழில் பயிற்சி நிறுவனத்துக்கு போயும் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அங்கதான் சோப்பு, பல்பொடி, அர்க், சித்த மருத்துவத்துல நாட்டு மாட்டுச்சிறுநீரோட பங்கு, விபூதினு பல பொருள்கள் தயார் செய்றத கத்துக்கிட்டேன். சோப்புத் தயாரிக்கிறது ரொம்பச் சுலபம். சாணத்தையும் மாட்டுச் சிறுநீரையும் சேகரிச்சு சாணிப்பால் தயாரிச்சுக்கணும். அதோட நல்லெண்ணெய், வேப்பிலை கலந்துக்கணும். பிறகு ‘கேக்’ மாதிரி ஆயிடும். அத காயவெச்சுச் சோப்புத் தயாரிக்கலாம். 60 கிராம் எடையுள்ள கட்டிகளாக வெட்டிக்கணும். 60 கிராம் எடையுள்ள சோப்பு 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். நல்ல பயிற்சியும் அனுபவமும் உள்ள ஒரு நபர் மாசத்துக்குச் சோப்பு மூலமா 30,000 முதல் 35,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். நான் சோப்பு மட்டுமல்லாம, அர்க், விபூதினு பல பொருள்களைத் தயாரிக்கிறேன். என்னோட முயற்சிக்கு மைராடா வேளாண் அறிவியல் நிலையமும் அதன் ஒருங்கிணைப் பாளர் அழகேசனும் நிறைய உதவி பண்ணி யிருக்காங்க.

அழகேசன்
அழகேசன்

நாட்டு மாட்டுச் சிறுநீர்ல சித்த மருந்து களைக் கலந்து கொடுக்கும்போது அது பலமடங்கு நல்ல விளைவுகள கொடுக்குது. இன்னைக்கு விவசாயத்தவிட இந்தப் பொருள்கள் தயாரிக்கிறதுலதான் முழுமையா ஈடுபடுறேன். ஒரு மாட்டுல இருந்து கிடைக்குற சிறுநீர் மூலமா ‘அர்க்’ தயாரிச்சா மாசம் 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம். எங்கிட்ட 8 பெரிய மாடுகள், 4 கன்றுகள் இருக்கு. மாட்டுல இருந்து கிடைக்குற அத்தனையும் பொக்கிஷம். இன்னைக்கு மாட்டுச் சிறுநீர்ல இருந்து கிடைக்குற அர்க் ஒரு லிட்டர் 500 ரூபாய்க்கு விற்பனையாயிட்டு இருக்கு. சோப்பு, அர்க் தயாரிக்கிறதுக்குப் பெரிய பெரிய இயந்திரங்கள் தேவையே இல்ல. சாதாரணமாகச் சிறிய இயந்திரங்களைக் கொண்டு கைகளாலேயே தயாரிச்சுடலாம். விற்பனைக்கும் பெரிய பிரச்னை இல்ல. விவசாயத்தவிட நாட்டு மாடுகள்தான் என்னைக் காப்பாத்திட்டு இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சோமசுந்தரம்,

செல்போன்: 94429 31794.

- எம்.ஜே.பிரபு