Published:Updated:

கழுதை வளர்ப்பு... சந்தையைக் கணித்தால் கணிசமான லாபம்!

பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்

கால்நடை

கழுதை வளர்ப்பு... சந்தையைக் கணித்தால் கணிசமான லாபம்!

கால்நடை

Published:Updated:
பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கழுதைப் பண்ணையை நடத்தி வருகிறார் பாபு. ‘தி டாங்கி பேலஸ்’ என்ற இந்தக் கழுதைப் பண்ணையை, மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்த பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் கழுதை வளர்ப்புக்காகத் தொடங்கப்பட்டுள்ள பெரிய பண்ணை இது.

கழுதைகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாபுவைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டைதான் என்னோட சொந்த ஊரு. பதினோராம் வகுப்பு வரைதான் படிச்சேன். ‘லிப்ட்’ கம்பெனியில நாலு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் நண்பர்கள் கூட சேர்ந்து சொந்தமா ‘லிப்ட்’ கம்பெனி வச்சிருந்தேன். பெங்களூர்ல வேலை செய்யுறப்ப ஏதாவது தொழில் செய்யலாம்னு தோணுச்சு. நானும் என்னோட சில நண்பர்களும் பங்குதாரர்களாகச் சேர்ந்து கழுதைப்பாலிலிருந்து அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கிற கம்பெனியை ஆரம்பிச்சோம். அங்கேயே 10 கழுதைகளை வச்சு, அதுக்கான வேலைகளை முன்னெடுத்தோம்.

அந்த 10 கழுதைகள்ல இருந்து கிடைக்கிற பால் மற்றும் வெளியில கழுதை வளர்க்கிற வங்ககிட்ட வாங்குற பாலை வச்சுத் தயாரிப்பைத் தொடங்கினோம். 10 வருஷத் துக்கு முன்னயெல்லாம் சலவைத் தொழிலாளர்கள் அழுக்குத் துணியைப் பொதியா ஏத்திக்கிட்டுப் போவாங்க. கழுதைகள், கரைகள்ல நிற்கும். தாமிரபரணி ஆத்தோரம் போனாலே நூத்துக்கணக்கான கழுதைகளைப் பார்க்க முடியும். இப்போ ஒரு கழுதையைப் பார்க்குறதே அத்திப்பூத்த மாதிரி இருக்கு. அந்த அளவுக்குக் கழுதை களோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு.

கழுதைகளுடன் பாபு
கழுதைகளுடன் பாபு

கழுதைகளை அழிவின் விளிம்புல இருந்து காப்பாத்துறதுக்காகவும், அழகு சாதனப் பொருள் தயாரிப்புக்கான பால் தேவைக் காகவும் சொந்த ஊர்லயே தனியா ஒரு கழுதைப் பண்ணை ஆரம்பிக்கலாம்னு எனக்குள்ள ஒரு யோசனை வந்துச்சு. பொதுவா கழுதைகள் வெப்பமான சீதோஷ்ண நிலையைத்தான் விரும்பும். திருநெல்வேலி தவிர தூத்துக்குடி, வேலூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங் கள்ல இருந்து தமிழ்நாட்டு இனமான ‘நாட்டி டாங்கிஸ்’ கழுதைகளையும், ஓசூர், பெங்களூரு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகள்ல ‘கத்தியவாடி’ இனக் கழுதைகளையும் தேர்வு செஞ்சு வாங்கினேன். 90 பெண் கழுதைகள், 10 ஆண் கழுதைகள் என மொத்தம் 100 கழுதைகள் இருக்கு. 28 கழுதைகள் பால் கறக்குற நிலையில இருக்கு. இதுல 13 மத்திய வாடி இனத்தைச் சேர்ந்தது.

காலை மேய்ச்சல்; இரவில் கொட்டகை!

100 அடி நீளம், 20 அடி அகலம், 15 அடி உயரத்தில கொட்டகை அமைச்சிருக்கேன். தினமும் காலையில 6 மணிக்குக் கழுதைகளை உள் மேய்ச்சலுக்காகத் திறந்துவிடுவோம். மேய்ச்சலுக்காகவே ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருக்கோம். மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு, கொட்டகையைச் சுத்தம் செய்வோம். காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றில் தினமும் ஏதாவது ஒரு தானியத் தைப் பெரிய, பால் தரும் கழுதைகளுக்கு 2 கிலோவும், சிறிய, குட்டிகளுக்கு அரைக்கிலோ முதல் 1 கிலோ வரையிலும் தீவனமாக வைப்போம்.

10 மணிக்குப் பால் கறக்க ஆரம்பிப்போம். 11 மணிக்கெல்லாம் பால் கறக்கும் வேலை முடிஞ்சிடும். மதியம் 12 முதல் 1 மணிக்குள் கோ-29 ரகத் தீவனப் புல்லைத் தட்டுகள்ல வைப்போம். மாலை 5 மணிக்குத் தவிடு, குச்சிப்புண்ணாக்கு, கொண்டைக்கடலை தொழி கலந்து உலர் தீவனமா பெரிய, பால் தரும் கழுதைகளுக்கு 2 கிலோவும், சிறிய, குட்டிகளுக்கு அரைக்கிலோ முதல் 1 கிலோ வரையிலும் தீவனமாக வைப்போம். 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை தண்ணியை மாற்றி விடுவோம். இரவு 7 மணிக்குக் கொட்டகைக்குள் அடைஞ்சிடும்.

பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்
பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்

சளித்தொல்லை கவனம்!

வாரத்தில் ஒரு நாள், நல்ல வெயில் நேரத்தில் கழுதைகளைக் குளிப்பாட்டுவோம். ஆண் கழுதைகள், பெண் கழுதைகள், சினை பிடித்த கழுதைகள், வளர்ந்த குட்டிகள், பால் தரும் கழுதைகள் அதன் குட்டிகள் எனத் தனித்தனியா அடைச்சுடுவோம். சளித் தொந்தரவுதான் அதிகம் வரும். ஒரு கழுதைக்குச் சளி அறிகுறி தெரிஞ்சா அதைத் தனிமைப்படுத்தி மருந்து கொடுக்கணும். இல்லாவிட்டால், தண்ணீர் தொட்டியில தண்ணீர் குடிப்பதன் மூலமா அடுத்தடுத்த கழுதைகளுக்கும் பரவிவிடும். ‘ரேபிஸ், டெட்டன்னஸ்’ தடுப்பூசிகளையும் தவறாமல் போடணும்.

வருமானம்பற்றிப் பேசிய பாபு, “கழுதைகள், பசுமாடு மாதிரி மூணு, நாலு லிட்டர் பால் தராது. ஒரு கழுதை 300 மி.லி முதல் அதிக பட்சமா 350 மி.லி வரைதான் பால் தரும். மத்தியவாடி இனம் கூடுதலா 400 மி.லி தரும். மூணு நேரம்கூடப் பால் எடுக்கலாம். ஆனா, காலையில ஒரு நேரம் மட்டும்தான் பால் எடுக்குறோம். மீதி ரெண்டு நேரமும் குட்டி களைக் குடிக்க விடுறோம். அப்பத்தான் பால் சுரப்பு நல்லாயிருக்கும். கழுதையும் ஆரோக்கியமா வளரும். குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுக்குறதா இருந்தா பால் கறந்த அன்னிக்கே கொடுக்கணும். அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்புக்காக இருப்பு வைக்குறதா இருந்தா, 10 லிட்டர் பாலில் ஒரு கிராம் குங்குமப்பூ கலந்து ‘பிரீஷர்’ல வைக்கலாம். 6 மாசம் வரைக்கும் கெடாது. கழுதைப் பால்ல சோப், பேஸ் க்ரீம், மசாஜ் க்ரீம் உள்ளிட்ட 40 பொருள்கள் தயாரிக்கப்படுது.

பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்
பண்ணையில் உற்சாகமாக தண்ணீர் எடுக்கும் கழுதைகள்

பால் கறக்குற நிலையில இருக்க 28 பெண் கழுதைகள் மூலம் தினமும் 10 லிட்டர் பால் வீதம் மாசம், 300 லிட்டர் பால் கிடைக்கிது. இப்போதைக்கு அழகு சாதனப் பொருள் தயாரிக்க 200 லிட்டர் பால் வரைக்கும்தான் விற்பனையாகுது. 100 லிட்டர் பால் இருப்பு வைக்க வேண்டிய நிலை இருக்கு. கூடிய சீக்கிரம், இருப்பு வைக்காத அளவுக்கு விற்பனை வாய்ப்பு இருக்கும்னு நம்புறேன்.

இந்தக் கணக்கில ஒரு லிட்டர் பால் 3,000 ரூபாய் வீதம், மாசம் 6,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. கழுதைகளைப் பராமரிக்க விழுப்புரம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 குடும்பங்களைப் பண்ணையிலேயே தங்க வச்சிருக்கோம். மொத்தக் கழுதைகளோட தீவனச் செலவு, பராமரிப்பு, வேலையாள்கள் கூலி 3,50,000 ரூபாய் வரை செலவாகிடுது. மீதமுள்ள 2,50,000 ரூபாய் எனக்கு லாபம்தான். ஆனா, இந்தத் தொகையில பாதியைக் கழுதைகள் வாங்குறதுக்காகவே செலவிடுறேன்” என்றவர், மீண்டும் தொடர்ந்தார்.

பண்ணையில் கழுதைகள்
பண்ணையில் கழுதைகள்

“இந்தியாவுல என்னை மாதிரி நிறைய பேர் கழுதை வளர்ப்பை செய்றாங்க. ஆனா, நூறு எண்ணிக்கையில வச்சிருக்குற பண்ணை தமிழ்நாட்டுல என்னோட பண்ணை மட்டும் தான். சில இடங்கள்ல கழுதைகளைச் செங்கல் சூளைகள்ல செங்கல் சுமக்கப் பயன்படுத்துறாங்க. வட இந்தியாவுல கட்டடங்கள் கட்ட ஆத்துல இருந்து மணல், கற்கள் எடுத்துட்டுப் போகுறதுக்கும் பயன் படுத்துறாங்க. புதுடெல்லியில சில பகுதிகள்ல உணவுப் பொருள்களைச் சுமந்துட்டுப் போகப் பயன்படுத்துறாங்க. வெளிநாடுகளைப் பொறுத்தவரைக்கும் கழுதைகளுக்கு நிறைய பண்ணைகள் இருக்கு. குறிப்பா இங்கிலாந்து, இலங்கை நாடுகள்ல கழுதைப் பண்ணை களோட எண்ணிக்கை அதிகம்.

வெளிநாடுகள்ல கழுதைகளைப் பயன்படுத்தி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகங்க, முதியோர்களுக்கு (தெரபி) சிகிச்சைக் கொடுக்கிறாங்க. அதாவது செல்லப்பிராணி போல, கழுதைகளோட நேரத்தைச் செலவிடும்போது மன நிம்மதியும், மன மாற்றமும் ஏற்படுறதாச் சொல்றாங்க.

கொட்டகை
கொட்டகை

இந்தியாவைப் பொறுத்த வரையிலும், ஹலாரி கழுதைகள் மட்டும் அரசுப் பதிவு பெற்ற கழுதைகளா இருக்குது. அதே மாதிரி கத்தியவாடி இனக் கழுதைகளை ‘கட்ச் டாங்கிஸ்’னு பதிவு செய்யப் போறாங்க. தமிழ்நாட்டுக் கழுதைகளுக்கு அரசுப் பதிவை வழங்கல. என்னை மாதிரி வருங்காலத்துல நிறைய பேரு கழுதைப் பண்ணையை ஆர்வத்தோட தொடங்கினா அங்கீகாரம் கிடைக்கலாம். அழியுற நிலையில இருக்குற கழுதைகளை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. அடுத்த ஒரு வருஷத்துல நூறு எண்ணிகையில இருக்குற கழுதைகளை ஆயிரம் எண்ணிக்கையா அதிகரிக்கணும்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, பாபு,

செல்போன்: 80565 07548.

சந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.குமாரவேலிடம் பேசினோம், “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத்துறையின் மூலம், தேசிய கால்நடை முகமையின் மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக விஞ்ஞான முறையில் கழுதை வளர்ப்பது குறித்து, கடந்த ஓராண்டாகத் தமிழகத்தில் 8 மாவட்டங் களைச் சேர்ந்த 160 பயனாளிகளுக்குப் பயிற்சி அளித்தோம்.

பா.குமாரவேல்
பா.குமாரவேல்

தமிழகத்தில் கழுதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக் கணக்கின்படி வெறும் 1,428 கழுதைகளே உள்ளன. நாகரிக வளர்ச்சியும் கழுதைகளின் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு காரணம். கழுதை என்றாலே சலவைத் தொழில் செய்யும் சமூகத்தினர் வளர்க்கும் ஒரு விலங்கு என்றே பார்க்கப்பட்டது. இச்சமூக மக்கள் துணிகளை மூட்டையாகக் கட்டி பொதி ஏற்றிச் செல்வதற்காக அதிக அளவில் வளர்த்தனர். பைக், கார்களின் வருகையால் கழுதை மீது பொதி ஏற்றிச் செல்லுதல் இல்லாமலே போனது. மலையடிவாரப் பகுதிகளிலும் மலைமீது பொதி ஏற்றிச் செல்வதற்காகவும் வளர்க்கப்பட்டது.

பால் கறக்கும் பணி
பால் கறக்கும் பணி

ஒவ்வொரு கழுதையும் 40 கிலோ வரை எடையைச் சுமந்து செல்லும் திறன் உடையது. பொதி சுமப்பதற்கு என்பதையும் தாண்டிப் பாலுக்காகக் கழுதைகளை வளர்க்கும் நிலை உருவாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, கழுதைப் பால் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழுதைப் பாலில் உள்ள புரதம், பசுமாட்டுப் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்குச் சிறந்தது. தாய்ப்பாலைப் போன்ற சத்துகள் நிறைந்தது. குறைவான புரதமும் கொழுப்பும் கொண்டது’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கழுதைப் பால் குறித்துப் போதுமான அளவுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், வெளிநாடுகளில் குறிப்பாக, ஐரோப்பாவில் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புக்காக, அங்கு விற்பனை வாய்ப்புகள் உள்ளன.

நமது நாட்டில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காகக் கழுதைப்பால் கொடுப்பது நீண்ட காலமாக உள்ளது. ஆனால், கழுதைப் பாலிலிருந்து அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புக்கான சந்தை வாய்ப்புத் தற்போதுதான் வேகம் எடுத்துள்ளது. கேரளாவில் அபிபாப் என்பவர் 20 கழுதைகளை வளர்த்து வருகிறார். அவற்றிலிருந்து கிடைக்கும் பாலின் மூலம் அவரே சில அழகுசாதனப் பொருள்களைத் தயாரித்து உள்ளூரில் கடை அமைத்தே விற்பனை செய்து வருகிறார். அவரைப் போன்றவர்களுக்குக் கழுதைப்பாலின் தேவை அதிகம் உள்ளது. ஆனால், கழுதை வளர்ப்பைத் தொழில் ரீதியாகச் செய்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் மிகக்குறைவுதான்.

பால் வடிகட்டுதல்
பால் வடிகட்டுதல்

ஒரு கழுதை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 மி.லி முதல் 350 மி.லி வரைதான் பால் தரும். 100 மி.லி பாலை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி பாபு ஒரு லிட்டர் ரூ.3,000 வரை விற்பனையாவதாகச் சொல்கிறார். அழகுசாதனப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுக்கும் போதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும் மட்டுமே இந்த விலை சாத்தியம். ஆகையால், கழுதை வளர்ப்பை நினைப்பவர்கள் கழுதைப் பாலுக்கான சந்தை வாய்ப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு இறங்குவது நல்லது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism