Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்

மகசூல்

ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

மகசூல்

Published:Updated:
அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். 25.02.2016 தேதியிட்ட இதழில், “15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் லாபம்” என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஏற்கெனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பாகல் சாகுபடி குறித்த தன் அனுபவத்தை அதில் பதிவு செய்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்துள்ள அழகிவிளை நாட்டு ரக முருங்கை அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இங்குதான் பாலகிருஷ்ணனின் முருங்கை தோட்டம் உள்ளது. நாம் சென்றபோது சுறுசுறுப்பாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல்
முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல்

‘‘சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல நல்ல வளமான செம்மண் நிலம் அதிகம். இங்கவுள்ள விவசாயிங்கள்ல பெரும்பாலானவங்க, நீண்ட காலமா முருங்கை சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. இந்த மண் வாகுக்கு முருங்கை ரொம்ப நல்லா விளையுது. நான் சாகுபடி செய்றது ‘அழகிவிளை’ங்கிற நாட்டு ரகம். இதோட காய்கள் நல்ல திரட்சியா சதை பத்தா இருக்கும். சந்தையில இந்த ரக முருங்கை காய்களுக்கு எப்பவுமே நல்ல வரவேற்பு இருக்கு’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘எனக்கு இதுதான் சொந்த ஊர். நாங்க விவசாயக் குடும்பம். நான் எட்டாம் வகுப்பு வரை படிச்சிட்டு, சென்னையில ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போயிட் டேன். பத்து வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டேன். எங்க குடும்பத்துல சொத்து பிரிச்சு எனக்குனு சொந்தமா மூணு ஏக்கர் நிலம் கொடுத்தாங்க. விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ரசாயன முறையில செவ்வாழை சாகுபடி செஞ்சேன். குலை தள்ளுற சமயத்துல தண்ணி பத்தாம போய்ப் பாதி வாழை மரங்கள் பட்டுப்போச்சு. அதனால மனசு விரக்தி அடைஞ்சு விவசாயத் தைக் கைவிட்டுட்டு, துணி வியாபாரம், ஃபோட்டோகிராஃபினு பிற தொழில்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

முருங்கைத் தோட்டம்
முருங்கைத் தோட்டம்

இந்தச் சூழல்லதான் 2011-ம் வருஷம் ஒரு நாள் வெளியூர் போறதுக்காக பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு இருந்தப்ப, அங்கவுள்ள கடையில செவ்வாழை படம் போட்டு ஒரு புத்தகம் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. அதை வாங்கிப் படிச்சிப் பார்க்கணும்னு என்னையும் அறியாமல் ஆர்வம் ஏற்பட்டுச்சு. அந்தப் புத்தகம் பசுமை விகடன். இயற்கை முறையில செவ்வாழை சாகுபடி செஞ்சு நிறைவான லாபம் பார்க்கக் கூடிய ஒரு விவசாயியோட பேட்டி அதுல விரிவா வெளியாகி இருந்துச்சு. அதைப் படிச்சதும் பசுமை விகடன் மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. தொடர்ச்சியா வாங்கிப் படிச்சிக்கிட்டே இருந்தேன். இயற்கை விவசாயம் மூலம் கண்டிப்பா சாதிக்க முடியும்ங்கற நம்பிக்கையும் ஏற்பட்டுச்சு. அதோட நிறைய தொழில் நுட்பங்களையும் தெரிஞ்சிக்கிட்டேன்.

2012-ம் வருஷம் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். கால் ஏக்கர் கனகாம்பரம் பயிர் பண்ணினேன். நல்ல மகசூல் கிடைச்சது. பூக்களும் நல்ல தரமா இருந்துச்சு. ஆனா, பறிப்புக்கு ஆள் கிடைக்கலை. அதனால கனகாம்பரம் சாகுபடியை கை விட்டுட்டு, முருங்கை சாகுபடியில இறங்கினேன். ஒரு ஏக்கர்ல அழகிவிளைங்கற நாட்டு ரக முருங்கையைப் பயிர் பண்ணினேன். கடந்த அஞ்சி வருஷமா நிறைவான மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு. என்னோட அனுபவத்துல இதுவோர் அருமையான ரகம்.

அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்
அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்

இதோ பாருங்க... மழை நேரத்துலயும் கூட, காய்கள்ல அடர்பச்சை நிறம் மாறாம அப்படியே இருக்கு. இதுதான் இந்த ரகத்தோட தனிச் சிறப்புனு சொல்லலாம். காய்களோட தோல் சற்றுக் கடினமாக இருக்குறதுனால, சீக்கிரத்துல வதங்கிப் போகாது. நுனிப்பகுதி பெரும்பாலும் வளைஞ்சிருக்காது, நீட்டுப்போக்கா இருக்கும். இதுமாதிரியான முருங்கைக் காய்களைத்தான் மக்கள் விரும்பி வாங்குவாங்க.

காய்ப்புத்திறன் அதிகம்

உப்புத்தன்மை அதிகம் உள்ள தண்ணி யைப் பாய்ச்சினாலும் இது நல்லா விளையும். அழகிவிளை ரக முருங்கை யோட இன்னொரு முக்கியச் சிறப்பு, இதுல காய்ப்புத்திறன் அதிகம். கிளைகள் முழுக்கக் காய்கள் காய்ச்சி தொங்கும். இதுக்குப் பராமரிப்பு செலவுகளும் அதிகம் கிடையாது. இதுவரைக்கும் ஒரு ஏக்கர்ல தான் இந்த நாட்டு முருங்கையைச் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். உத்தரவாதமான லாபம் கிடைச்சதுனால, கூடுதலா ரெண்டு ஏக்கருக்கு இதை விரிவுபடுத்துறதுக்காக, மூணு மாசத்துக்கு முன்னாடி குச்சி (முருங்கை போத்து) நட்டேன். அந்த ரெண்டு ஏக்கர்ல இன்னும் நாலஞ்சு மாசங்கள் கழிச்சு மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும்’’ என்று சொன்ன பாலகிருஷ்ணன், ஏற்கெனவே மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஏக்கர் பரப்பிலான நாட்டு முருங்கையின் வருமானம் குறித்து விவரித்தார்.

செலவு, வரவு அட்டவணை
செலவு, வரவு அட்டவணை

“ஒரு ஏக்கர்ல தலா 20 அடி இடைவெளியில 100 மரங்கள் இருக்கு. இதுல 75 மரங்கள் ஆரோக்கியமா வளர்ந்து நிறைய காய்கள் கொடுத்துக்கிட்டு இருக்கு. ஒரு மரத்துல இருந்து ஆண்டுக்கு சராசரியா 120 கிலோ காய்கள் கிடைக்குது. 75 மரங்கள் மூலம் 9,000 கிலோ காய்கள் கிடைக்குது. சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகள்ல உள்ள மண்டிகள்ல என்னோட முருங்கைகாய்களை விற்பனை செய்யுறேன். ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 8 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 80 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். கடந்த வருஷம் ஒரு கிலோவுக்குச் சராசரி விலையா 15 ரூபாய் வீதம், 9,000 கிலோ காய்களுக்கு மொத்தமா சேர்த்து, 1,35,000 வரை வருமானம் கிடைச்சது. அதுல காய் பறிப்பு, பராமரிப்புச் செலவுகள் 49,000 ரூபாய் போக, 86,000 நிகர லாபமா கிடைச்சது. என்னைப் பொறுத்தவரைக்கு இது நிறை வான லாபம்’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, பாலகிருஷ்ணன்,

செல்போன்: 94425 53279

முருங்கைத் தோட்டம்
முருங்கைத் தோட்டம்

இப்படித்தான் முருங்கை சாகுபடி

ஒரு ஏக்கரில் அழகிவிளை ரக முருங்கை சாகுபடி செய்ய பாலகிருஷ்ணன் சொல்லியவை இங்குப் பாடமாக...

முருங்கை சாகுபடிக்குச் செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. இதைப் பயிர் செய்வதற்கெனத் தனிப்பட்டம் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனாலும் மழைக் காலத்தில் இதைப் பயிர் செய்தால், வளர்ச்சி வேகமாக இருக்கும்.

தேர்வு செய்த நிலத்தில், ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு ஓட்ட வேண்டும். வரிசைக்கு வரிசை 20 அடி, மரத்துக்கு மரம் 20 அடி இடைவெளி விட்டு, 1 அடி ஆழம், 1 அடி சுற்றளவு கொண்ட குழிகள் எடுக்க வேண்டும். 100 குழிகள் எடுக்கலாம். அடுத்த நான்கு நாள்களுக்குக் குழிகளை ஆறவிட்டு, ஒரு குழிக்கு 10 கிலோ வீதம் எரு நிரப்பி, முருங்கை விதைக் குச்சிகளை (முருங்கை போத்து) நடவு செய்து, மண் அணைத்துத் தண்ணீர் விட வேண்டும்.

முருங்கை அறுவடை
முருங்கை அறுவடை

தரமான விதைக் குச்சி தேர்வு

மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அதிக காய்ப்புள்ள, பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாத மரங்களிலிருந்து விதைக் குச்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும். கை மணிக்கட்டு தடிமனுக்குச் சுற்றளவு கொண்டதாகவும், இரண்டரை அடி உயரம் கொண்டதாகவும் விதைக் குச்சி இருக்க வேண்டும். அதிக காய்ப்பு, காய்கள் திரட்சியின் அடிப்படையில் தாய் மரத்தை தேர்வு செய்து குச்சிகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். நடவுக்கு முன்பு குச்சியின் ஒரு முனையை ஜீவாமிர்தத்தில் நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் கறையான் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கப்படும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல்

அடுத்த சில நாள்களில் குச்சிகளில் துளிர் விடத் தொடங்கும். இலைப்புழுக்களின் தாக்குதலைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்று நட்ட 10-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை இதுபோல் தெளிக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வேர் பகுதியில் எரு இட வேண்டும்.

90 நாள்களுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். 120-130 நாள்களில் காய்கள் பறிப்புக்கு வர தொடங்கும். முருங்கை சாகுபடியை பொறுத்தவரையில் பூ பூக்கும் தருணம் மழைக்காலமாக இருந்தால், நூற்புழுக்களின் தாக்குதல்களை எதிர்கொள்வது சவாலானது. இலை, பூ, காம்புகள் என அனைத்தையும் சாப்பிடும். இதைத் தவிர்க்க பூ பூப்பதற்கு முன்பாகவே 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்கலாம். இரண்டாம் ஆண்டிலிருந்துதான் காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை காய்கள் பறிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காய்ப்பு இருக்காது. 3 மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளுக்குக் காய்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

அதிக மகசூலுக்குக்
கவாத்து அவசியம்!

ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்தால் காய்ப்புத் தன்மை அதிகரிக்கும். கவாத்து செய்யும்போது மரத்தின் புறக்கிளைகளை மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். பிரதான தண்டு பகுதியில் பிளவு ஏற்படக் கூடாது. அவ்வாறு பிளவுபட்டால், அப்பகுதியில் பூச்சித்தாக்குதல் ஏற்படும். எனவே, கவாத்து செய்வதில் அதிக கவனம் தேவை.

நாட்டு ரக முருங்கையில் பலவிதம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதி களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலவிதமான நாட்டு ரக முருங்கை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் யாழ்ப்பாணம், வலையப்பட்டி, அழகிவிளை, சாகவச்சேரி, குருஷ், கோபால், டேனியல் ஆகிய ரகங்களைப் பரவலாகச் சாகுபடி செய்கிறார்கள்.

முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல்
முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல்

ஊடுபயிர் சாகுபடி

முருங்கை பயிர் செய்ததிலிருந்து காய்ப்புக்கு வரும் வரையிலும், ஊடுபயிராக... பாகல், புடலை, வெள்ளரி, வெண்பூசணி, மஞ்சள் பூசணி, தர்பூசணி ஆகிய கொடி வகைகளைச் சாகுபடி செய்து வருமானம் பார்க்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல் தயாரிப்பு

200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் தலா 4 கிலோ கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, 2 கிலோ நாட்டுச்சர்க்கரை, 50 மி.லி வேஸ்ட் டி கம்போஸர் ஆகியவற்றைக் கலந்து டிரம்மின் விளிம்பு வரை தண்ணீர் நிரப்பி மூடி வைக்க வேண்டும். தினமும் கலக்கி விட்டு 10 நாள்கள் வரை வைத்திருந்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

வெள்ளைப்பூண்டு கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டி

ஒரு பெரிய பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர் நிரப்பி, அதில் தலா 5 கிலோ வீதம் ஆடாதொடை, துளசி, எருக்கன், புங்கன், வேம்பு, நொச்சி இலைகளை நறுக்கிப் போட்டு, அடுப்பில் வைத்து நன்கு சூடேற்ற வேண்டும். இக்கரைசல் 50 சதவிதமாகக் குறையும் அளவுக்குக் கொதிக்க விட வேண்டும். சற்று ஆறியதும், இக்கரைசலுடன்... 4 கிலோ வேப்பங்கொட்டைத்தூள், 2 கிலோ வெள்ளைப்பூண்டு விழுது ஆகியவற்றைக் கலந்து நன்கு கலக்கி விட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த நான்கு நாள்களுக்குத் தினமும் கலக்கி விட வேண்டும். அதன் பிறகு மூலிகைப் பூச்சிவிரட்டி தயார்.