Published:Updated:

போலீஸ் கேப், மலேசியன் சராமா, தாய்லாந்து சில்வர் பேலஸ்... அசத்தலான லாபம் தரும் அலங்கார கோழி வளர்ப்பு!

அலங்கார கோழிகள்
பிரீமியம் ஸ்டோரி
அலங்கார கோழிகள்

கோழி வளர்ப்பு

போலீஸ் கேப், மலேசியன் சராமா, தாய்லாந்து சில்வர் பேலஸ்... அசத்தலான லாபம் தரும் அலங்கார கோழி வளர்ப்பு!

கோழி வளர்ப்பு

Published:Updated:
அலங்கார கோழிகள்
பிரீமியம் ஸ்டோரி
அலங்கார கோழிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் சிலர் கைநிறைய லாபம் பார்த்து வரும் சூழலில், வித்தியாசமாக வெளிநாட்டு வகை அலங்கார கோழிகளை வளர்த்து மாதம் 50,000 ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிசால் கான்.

ராமநாதபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்தார்கோட்டையில் உள்ளது அவருடைய பண்ணை. பண்ணையில் கோழிகளுக்குத் தீவனமிட்டுக்கொண்டிருந்த ரிசால்கானைச் சந்தித்தோம். மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்ற வர், உற்சாகத்துடன் அவருடைய அலங்கார கோழி வளர்ப்பு குறித்துப் பேசத் தொடங்கினார்.

‘‘நான் ‘பி.டெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்’ படிச்சிருக்கேன். சென்னை, மும்பையில வேலை பார்த்தேன். அப்புறம் 2008-ம் வருஷம் புரூனே போயிட்டேன். ‘சிசிடிவி’, சென்சார் கதவுகள் பொருத்துற வேலை பார்த்துக் கிட்டு இருந்தேன். 2018-ம் வருஷம் சொந்த ஊருக்கு வந்தேன். 2019-ம் வருஷம் மறுபடியும் வெளிநாட்டுக்குப் புறப்படத் தயாரானப்ப பல நாடுகள்ல கொரோனா பரவ ஆரம்பிச்சிடுச்சு.

கோழிகளுடன் ரிசால் கான்
கோழிகளுடன் ரிசால் கான்

அதனால சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்யலாம்னு நினைச்சேன். நான் புரூனேயில இருந்தப்ப அங்க அழகான ‘பேன்சி’ கோழிகள் வளர்க்குறதைப் பார்த்திருக்கேன். அதேபோல ‘பேன்சி’ கோழிகள் வளர்த்து விற்பனை செய்ய முடிவு செஞ்சேன். என்னோட தாத்தா, அப்பா கோழி வளர்த்து விற்பனை செய்துகிட்டு இருந்தாங்க. அந்த வகையில எனக்கும் கோழி வளர்ப்புல அனுபவம் உண்டு. இந்தத் தொழில் கண்டிப்பாக நமக்கு கைகொடுக்கும்னு நம்பினேன். இந்தியாவுல அலங்கார கோழிகள் விற்பனை செய்யப்படுற இடத்தைப் பற்றி விசாரிச்சேன். கேரளாவுல விற்பனை செய்யப்படுற தகவல் கிடைச்சது.

கேரளாவுல பாலக்காடு, கொல்லம், இடுக்கி, திருவனந்தபுரம் மாவட்டங்கள்ல அலங்கார கோழி வளர்ப்புப் பண்ணைகள் இருக்கு. ஒவ்வொரு பண்ணைக்கும் போய்ப் பார்த்தேன். வித்தியாசமான ‘பேன்சி’ கோழிகளை வாங்கிட்டு வந்து வீட்டுக்குப் பின்னாடி பண்ணை அமைச்சு வளர்த்துக் கிட்டு வந்தேன். ஆரம்பத்தில சளி, அம்மை, வெள்ளைப்படுதல் நோய் தாக்குதல்களால கோழிகள் இறந்து பெரிய நஷ்டம் ஆகிடுச்சு. மறுபடியும் போய்க் கோழிகளை வாங்கிட்டு வந்து, நோய்கள் தாக்காத வகையில ஒவ்வொரு கோழிக்கும் தனித்தனி கூண்டு அமைச்சு வளர்த்துக்கிட்டு வர்றேன்.

அலங்கார கோழிகள்
அலங்கார கோழிகள்


முதன்முதல்ல இந்தக் கோழிகளை வாங்கிட்டு வந்து வளர்க்கும்போது, கூண்டை தரைத்தளத்தையொட்டி அமைச்சு, அதுல எல்லாக் கோழிகளையும் ஒண்ணா விட்டிருந்தேன். இதனால மழைக்காலத்துல கூண்டுக்குள்ள தண்ணி பட்டுக் கோழிகளுக்கு நோய்த் தாக்கி இறந்துபோயிடுச்சு.

அடுத்த முறை கோழிகளை வாங்கிட்டு வந்தப்ப கூண்டுகளைத் தரையிலிருந்து உயரமா தூக்கி அமைச்சு, மழைத் தண்ணி உள்ளே போகாம மேல தகர ‘செட்’ போட்டேன். கோழிங்க தண்ணிக் குடிக்க வசதியாகவும், அதேநேரம் கூண்டுக்குள்ள தண்ணி சிந்தாத வகையில, நானே எனக்குத் தெரிஞ்ச அளவுக்குக் கூண்டுகளுக்கு பைப்லைன் அமைச்சேன். கோழிங்க வாய் வெச்சா மட்டும் தண்ணி விழுகுற வகையில வடிவமைச்சேன். இதனால கோழிங்க கூண்டுக்குள்ள சுதந்திரமாக சுத்தி வருது’’ என்றவர், கோழிகளின் வகைகள் குறித்து பேசினார்.

அலங்கார கோழிகள்
அலங்கார கோழிகள்


‘‘என்கிட்ட போலந்து நாட்டைச் சேர்ந்த போலீஸ்கேப்ல கோல்டன், சில்வர், ஒயிட், பிளாக் அண்டு ஒயிட்னு நாலு வகை இருக்கு. அமெரிக்காவைச் சேர்ந்த சில்க்கி, பேண்டம், மலேசியன் சராமா; தாய்லாந்தைச் சேர்ந்த சில்வர்பேலஸ், எகிப்து நாட்டைச் சேர்ந்த எகிப்தியன் பயோமினு 20 வகையான அலங்காரக் கோழிகள் இருக்கு. கம்பெனி தீவனங்களைத்தான் கொடுத்துக்கிட்டு வர்றேன். மாசம் நாலு மூட்டைத் தீவனம் தேவைப்படும். அதே போல கால்நடைத் துறையிலிருந்து மருந்து களை வாங்கி, கோழிகளுக்குக் கொடுக்கிறேன். வாரம் ஒருமுறை கோழிங்க மேல மஞ்சள் தண்ணி தெளிப்பேன். வேப்பங்கொழுந்தை தீவனத்துல கொடுப்பேன். அதுபோக 6 மாசத்துக்கு ஒரு தடவை, குடற்புழு மருந்து கொடுப்பேன்’’ என்றவர், விற்பனை குறித்துப் பேசினார்.

‘‘எகிப்தியன்பயோமி வகைக் கோழி ஒருநாள் குஞ்சு 160 முதல் 180 ரூபாய் வரை கொடுக்கிறேன். ஒரு மாச குஞ்சு 300 முதல் 450 ரூபாய். போலீஸ் கேப் ஒரு நாள் குஞ்சு 350 முதல் 450 ரூபாய். ஒருமாச குஞ்சு 700 முதல் 950 ரூபாய். மலேசியன் சராமா கோழி தான் அதிக விலைக்குப் போற கோழி. இது பார்க்க ரொம்ப அழகா இருக்கும். இது 3 மாசத்துக்கு ஒரு தடவை 5 முட்டைதான் போடும். 2 இல்லைன்னா 3 முட்டைதான் பொரிக்கும். அதனால இதோட விலை அதிகம். இது ஒரு நாள் குஞ்சா கொடுக்குறதில்ல. 3 மாச குஞ்சா மட்டுமே கொடுக்கிறேன். ஒரு கோழிக்குஞ்சு 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்றேன்.

அலங்கார கோழிகள்
அலங்கார கோழிகள்

என்கிட்ட இருக்க மத்த அலங்கார கோழிங்க வருஷத்துக்கு 160 முதல் 280 முட்டைகள் போடும். அதுல 50 சதவிகிதத் துக்கும் குறைவாகத்தான் குஞ்சு பொரிக்கும். இன்குபேட்டர்ல முட்டைகளைக் பொரிக்க வைக்கிறேன். முட்டையா விற்பனை செய்றதில்ல. குஞ்சுகளா மட்டுமே கொடுக்கிறேன். குஞ்சுகளோட தரத்துக்கு ஏற்ப விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எனக்கு எல்லாச் செலவும் போக மாசம் 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

நண்பர்கள், தெரிஞ்சவங்க மூலமாதான் கோழிக்குஞ்சுகளை விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இந்த மாசம் என்ன வகைக் கோழி முட்டை போட்டுருக்கு. குஞ்சுகளா எப்ப வாங்கிக்கலாம்னு ‘வாட்ஸ் ஆப்’ல தகவல் அனுப்பிடுவேன். அதைப் பார்த்துட்டு ஆர்டர்கள் வரும். பெரும்பாலும் நம்ம ஊர்கள்ல இந்த வகை அலங்கார கோழிகள் வளர்க்க ஆர்வம் காட்டுறதில்ல. மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களிலிருந்துதான் கோழிக்குஞ்சு ஆர்டர் வந்துகிட்டு இருக்கு. இப்போதான் தமிழ்நாட்டுல அலங்கார கோழி வளர்ப்பு பத்தி விழிப்புணர்வு உருவாகிட்டு இருக்கு’’ என்று சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, ரிசால் கான்,

செல்போன்: 78678 71656

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism