Published:Updated:

1 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.2,66,000 லாபம்! கெண்டை மீன் வளர்ப்பு...

மீன்களுடன் விஜயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்களுடன் விஜயகுமார்

மீன் வளர்ப்பு

ஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு-வடுவூர் சாலையில் அமைந்துள்ளது குலமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி கிராமம். சுற்றிலும் பச்சைப் பட்டுடுத்திய நெல் வயல்கள், ஆங்காங்கே தென்னை மரங்கள் எனப் பசுமை பரவிக் கிடக்கும் செழிப்பான பகுதி. நெல், கடலை, உளுந்து என ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் பூமி. பெரும்பாலும் நெல் விவசாயமே நடைபெறும் பகுதியில், ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அசத்தி வருகிறார் விஜயகுமார் என்ற விவசாயி.

மழை தூறலிட்டுக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் விஜயகுமாரைச் சந்திக்கச் சென்றோம். குளத்துக்குள் இறங்கி மீன்களுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்தவர், நம்மைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றுப் பேசினார்.

“தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் செய்றோம். எங்களுக்குச் சொந்தமா 20 ஏக்கர் நிலம் இருக்கு. நெல், தென்னை, கடலை, உளுந்து, கத்திரிக்காய், வாழைச் சாகுபடி செய்வோம். நான் விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, கெண்டை மீன் வளர்க் கலாம்னு நினைச்சேன். அந்த நேரத்துல மீன் வளர்க்க, மீன்வளத்துறை சார்பா ஒரு பயிற்சி நடத்துனாங்க. அதுல கலந்துகிட்டேன்.

மீன்களுடன் விஜயகுமார்
மீன்களுடன் விஜயகுமார்

இயற்கை தீவனம்

பயிற்சிக்குப் பிறகு, மானிய கடன் வாங்கி, 2001-ம் வருஷம், 50 சென்ட் இடத்தில குளம் அமைச்சேன். அதுல கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை ரக மீன் குஞ்சுகளை வாங்கி விட்டேன். ஆரம்பத்துல மீன்களுக்குக் கடையில விக்குற ரசாயன பொருள்கள் கலந்த தீவனத்தைக் கொடுத்தேன். 8 மாசத் துக்குப் பிறகு, மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இதே முறையில ரெண்டு தடவை மீன் வளர்த்தோம். கையில கால் காசு நிக்கல. செலவுக்கும் வரவுக்கும் சரியா இருந்துச்சு. ரசாயன தீவனம் கொடுத்ததால விற்பனையும் மந்தமாவே இருந்துச்சு. அதனால இயற்கை முறையில மீன் வளர்க்கலாம்கிற முடிவுக்கு வந்தேன். ஏற்கெனவே இயற்கை முறை மீன் வளர்ப்புல ஈடுபட்டிருந்த சிலபேர்கிட்ட ஆலோசனை கேட்டேன். அதுக்குப் பிறகு, முழுக்க முழுக்க இயற்கை தீவனம் கொடுத்து மீன் வளர்க்க ஆரம்பிச்சேன்’’ என்று இயற்கை முறை மீன் வளர்ப்பு முறைக்கு மாறியதைப் பற்றிப் பேசியவர் தொடர்ந்தார்.

இழப்பைக் குறைக்கும் 20 நாள் குஞ்சுகள்

“குளத்துல இருந்த தண்ணியை முழுக்க வெளியேத்திட்டு, 20 நாள்கள் குளத்தைக் காய போட்டேன். பிறகு குளத்துல தண்ணியை நிரப்பினேன். அதுல ஏற்கெனவே வளர்த்த அதே ரகங்கள்ல 20 நாள்கள் ஆன 1,200 மீன் குஞ்சுகள வாங்கி விட்டேன். 10, 15 நாள்கள் ஆன குஞ்சுகளை வாங்கி விட்டா, தவளை தின்னுடும். 3 இன்ச் அளவுல இருக்க 20 நாள்கள் ஆன குஞ்சுகளை வாங்கி விட்டா, அந்தப் பிரச்னை இருக்காது.

மீன்களுடன் விஜயகுமார்
மீன்களுடன் விஜயகுமார்

மீன்களுக்கான உணவுல கவனமா இருக்கணும். சோளம், கோதுமை வாங்கி மாவு மாதிரி அரைச்சுடுவேன். இதைத்தவிர தவிடு, கடலைப் புண்ணாக்கும் வாங்கி வச்சுடுவேன். தேவையான அளவு கடலைப் புண்ணாக்கைப் பாத்திரத்தில எடுத்து அதுல தண்ணி ஊத்தி முதல் நாளே ஊற வச்சுடுவேன். அடுத்த நாள் நல்லா ஊறுன கடலைப் புண்ணாக்கோடு கோதுமை மாவு, சோள மாவு, தவிடு எல்லாத்தையும் சேர்த்துக் கலந்து நல்லா பிசைஞ்சுடுவேன். சணல் சாக்கை எடுத்துப் பிரிச்சு, அதோட நாலு மூலையிலயும் மரக்குச்சிகளைக் கட்டி விடுவேன். அதைக் குளத்துக்குள்ள ரெண்டு இடத்துல வச்சிடுவேன். தண்ணிக்குள்ள ஓர் அடி மூழ்கி இருக்கின்ற மாதிரிக் குச்சியை நல்லா ஊன்றி வச்சுடுவேன்.

பிறகு, பிசைஞ்ச தீவனத்தைக் கட்டியிருக்க சாக்கோட நடுப்பகுதியில வச்சிடுவேன். நல்லா பிசைஞ் சுடுறதுனால அவ்வளவு சீக்கிரம் தண்ணியில கரையாது. அப்படியே கொஞ்சம் கரைஞ்சாலும் அதை மீனுங்க சாப்பிட்டுடும். மீனுக்கு உணவு தேவைப் படும்போது அதைச் சாப்பிட்டுக்கும். தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் இதே மாதிரி வச்சுடுவேன்’’ என்றவர், குளத்தில் இருந்த சாக்கைக் காட்டினார்.

50 சென்ட்... 750 கிலோ

“இதுக்கு நல்ல பலன் கிடைச்சது. மீன்கள் விறுவிறுன்னு வளர்ந்துச்சு. 8 மாசத்துக்குப் பிறகு, மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். சராசரியா 750 கிலோ மீன்கள் கிடைச்சது. அந்தச் சமயத்துல ஒரு கிலோ 80 ரூபாய்னு விற்பனையாச்சு. அது மூலமா 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அந்த வருமானம் கொடுத்த நம்பிக்கையில தொடர்ந்து மீன் வளர்க்க ஆரம்பிச்சேன்.

ரசாயன தீவனம், கோழிக் கழிவுகளைத் தீவனமாக் கொடுத்து வளர்க்குற மீன்களைச் சாப்பிடுறப்ப, லேசான கசப்புத்தன்மை இருக்கும். இயற்கையான உணவுக் கொடுத்து வளர்க்குற மீனுங்க நல்ல சுவையா இருக்கும். இயற்கையில மீன் வளர்க்குறது தெரிஞ்சு, சுத்துப்பட்டுல இருக்க மக்கள் தேடி வந்து மீன் வாங்குறாங்க. நான் மீனுங்களை விற்பனை செய்ய அலையிறதே இல்ல. உள்ளூர்லயே வித்துடுவேன். விற்பனை சூடுபிடிச்சதும் இன்னொரு 50 சென்ட் நிலத்துல 70,000 ரூபாய் செலவுல ஒரு குளம் அமைச்சு, அதுலயும் மீன்கள் வளர்க்க ஆரம்பிச்சேன். குளத்தோட கரைகள் பலமாக இருக்க, ரெண்டு கரையிலயும் தென்னையை நட்டேன். அது இப்போ வளர்ந்து நிக்குது’’ என்றவர் கீழே கிடந்த காய்ந்த தென்னை மட்டையைத் தூக்கி குளத்திற்குள் போட்டு விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.

மீன் அறுவடை
மீன் அறுவடை

புல், இலைகளையும் தீவனமாகப் போடலாம்

“ரெண்டு குளங்கள்லயும் வழக்கமா நான் கொடுக்குற உணவோடு சேர்த்து, தென்னை மரத்திலிருந்து காய்ஞ்சு விழுகுற தென்னை மட்டைகளையும் குளத்துக்குள்ள போட்டுடு வேன். அதையும் மீன்கள் சாப்பிடும். அதே மாதிரி வாழைத் தோப்புல இலை வெட்டும்போது வீணாகுற இலைகளையும் குளத்துக்குள்ள போடுவேன். அதையும் மீன்கள் சாப்பிடும். அதுமட்டுமல்லாம ஆமணக்கு இலைகளையும் பறிச்சு போடுவேன். அதையும் மீன்கள் விரும்பிச் சாப்பிடும். குறிப்பா, புல் கெண்டை ரக மீன்கள் ஆமணக்கு இலையை விரும்பிச் சாப்பிடும். ஆமணக்கு இலைகளைச் சாப்பிடுறதால மீனோட வளர்ச்சி வேகமாக இருக்கும். நோய்கள் அதிகம் தாக்காது.

நெல் வயல்ல எடுக்குற களைகள், திருமண மண்டபத்தில சாப்பிட்ட இலைகளையும் வாங்கியாந்து தேவைக்கேற்ப போடுவேன். குழந்தையைக் கவனிக்கிற மாதிரி பராமரிச்சு, சாப்பாடு கொடுத்தால் போதும் நல்ல உருவமைப்பில மீன்கள் வளரும்’’ என்றவர் வருமானம் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

“மீன் குஞ்சுகள விட்ட 8 மாசத்துக்குப் பிறகு, மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்வேன். கிட்டத்தட்ட 10 தடவை மீன் பிடிப்பேன். விடுமுறை நாளான ஞாயிறு, விசேஷ தினங்கள்ல மீன் விற்பனை நடக்கும். இப்ப ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். மொத்தமா கேட்டா 170 ரூபாய்க் குக் கொடுப்பேன். ஒரு குளத்துல சராசரியா 750 கிலோ மீன்கள் கிடைக்கும்.

மீன்களுக்குத் தீவனம்
மீன்களுக்குத் தீவனம்

மொத்த விற்பனையில் 300 கிலோவை 170 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில 450 கிலோவை 200 ரூபாய்க்கும் விற்பனை செய்வேன். அது மூலமா 1,41,000 ரூபாய் வருமானம் வரும். மீன் குஞ்சு 8,000 ரூபாய், தீவனச் செலவு 24,000 ரூபாய், மீன் பிடிக் கூலி 7,500 ரூபாய்னு மொத்தம் 39,500 ரூபாய் செலவாகும். பீன் பிடி வலை சொந்தமா வச்சிருக்கேன். அதனால அதுக்கான வாடகை மிச்சம். செலவு போக 1,01,500 ரூபாய் லாபம் கிடைச்சது. 50 சென்ட்ல இருக்க ஒரு குளத்துல மட்டும் இந்த லாபம். 2 குளத்தையும் சேர்த்து 2,03,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

மீன் குளத்தைச் சுத்தியிருக்கிற தென்னை மூலமா 63,000 ரூபாய் லாபம் கிடைக்குது. மீன் லாபத்தோடு தென்னை கிடைக்கிற லாபத்தையும் சேர்த்தா 2,66,000 ரூபாய் வருஷத்துக்குக் கிடைக்குது. இந்த லாபம் பெரும் மன நிறைவை தருது’’ என்றார்.

தொடர்புக்கு, விஜயகுமார்,
செல்போன்: 94433 43726

மீன் குளத்தில் தென்னை வருமானம்

மீன் குளத்தின் கரையிலுள்ள தென்னை மரங்கள் குறித்துப் பேசிய விஜயகுமார், “50 சென்ட் இடத்தில எத்தனை தென்னை மரங்கள் வளர்ப்பாங்களோ, கிட்டத்தட்ட அதே அளவுக்குத் தென்னை மரங்களைக் குளத்தோட 4 பக்கத்திலயும் வச்சிருக்கேன். 10 அடிக்கு ஒரு தென்னை மரம்னு 30 தென்னை மரங்கள் இருக்கு. இதனால கரைகள் பலமாக இருப்பதோடு தென்னை மகசூலும் கிடைக்குது. 100 சென்ட் குளத்து கரையில மொத்தம் 60 தென்னை மரங்கள் இருக்கு.

மீன் குளத்தைச் சுற்றி தென்னை
மீன் குளத்தைச் சுற்றி தென்னை

45 நாளுக்கு ஒரு தடவைன்னு வருஷம் 6 தடவை தேங்காய் வெட்டுவோம். ஒரு மரத்துக்கு 120 தேங்காய் கிடைக்கும். ஒரு காய் 10 ரூபாய்னு விற்பனை செய்றேன். 60 மரத்தில இருந்து கிடைக்குற 7,200 தேங்காய் மூலம் 72,000 ரூபாய் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ஒரு தடவைக்கான வெட்டுக்கூலி 25 ரூபாய். அந்த வகையில 6 வெட்டுக்குமான வெட்டுக்கூலி 9,000 ரூபாய். அந்தச் செலவு போக 63,000 ரூபாய் லாபமா நிக்கும். மீன் மூலமா கிடைக்குற 2,03,000 ரூபாயோடு சேர்த்து 2,66,000 ரூபாய் லாபமா கிடைக்குது’’ என்றார்.

நோயிலிருந்து காக்கும் சுண்ணாம்பு

மீன் குளம் பராமரிப்பு பற்றிப் பேசிய விஜயகுமார், “மீன் வளர்ப்புக்குனு தனியா மெனக்கெடத் தேவையில்ல. மத்த விவசாய வேலைக்கு இடையேதான் மீன் வளர்ப்பு வேலையைச் செய்றேன். 20 வருஷமா தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். ஒவ்வொரு முறையும் மீன் பிடிச்சு முடிச்ச பிறகு, குளத்துல இருக்க தண்ணியை வெளியேத்திட்டு 20 நாள்கள் வரைக்கும் காயப்போட்டுடுவேன். பிறகு தண்ணியை நிரப்பி, ஒரு குளத்துக்கு ஒரு மூட்டை வீதம் சுண்ணாம்புத் தூளைப் பரவலாகத் தூவி விடுவேன். அதுக்குப் பிறகுதான் மீன் குஞ்சுகளை வாங்கி விடுவேன். மீன்களை நோய் தாக்குதல்ல இருந்து காக்கவும், தண்ணி சுத்தமாக இருக்கவும் சுண்ணாம்பு உதவியா இருக்குது.

மழைநீர் சேமிப்பு தொட்டி

மழைக் காலங்கள்ல மழைநீர் சேகரிப்பு தொட்டியாகவும், மீன் குளம் செயல்படுது. மேடான பகுதிகள்ல பெய்யுற மழைநீர் குளத்துக்குள் வந்து சேர்ற வகையில குழாய் அமைச்சு மழை நீரையும் சேகரிக்கிறேன்” என்றார்.